Tamil Bayan Points

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-5

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-4

நபி (ஸல்) அவர்களோடு தொடர்புபடுத்தி ஒரு செய்தியைப் பதிவிடுவதாக இருந்தால் அதற்குத் தகுந்த அறிவிப்பாளர் தொடர் இருந்தாக வேண்டும். நபி மீது பொய்யுரைப்பது கொளுந்து விட்டெரியும் நரக நெருப்பை முன்பதிவு செய்யும் செயலேயாகும்.

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

திருமணமே அந்த ரகசியம்

இத்தா இருக்கும் பெண்களிடம் திருமணம் குறித்து சாடையாகப் பேசலாம் என்றாலும்  வேறு எதையும் ரகசியமாக வாக்களித்து விடக்கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்:2:235.)

இத்தா மேற்கொள்ளும் பெண்களுக்கு ரகசியமாக வாக்களித்து விடக்கூடாது என்று கூறப்படுவது திருமணம் குறித்துத் தான் என்பதை இந்த வசனத்தை மேலோட்டமாக வாசித்தாலே இலகுவாகப் புரியலாம். ஆனால் ஹிதாயாவில் இவ்வசனத்தில் சொல்லப்பட்ட ரகசியம் என்றால் எது? என்பதை விவரிக்க முற்படுகிறார்.

வேறென்ன? வழக்கம் போல நபிகள் நாயகம் பெயரில் பொய்ச் செய்தியைத் தான் வெளியிடுகிறார்.

இதோ:

الهداية شرح البداية (2/ 32)

{ ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا } وقال عليه الصلاة والسلام السر النكاح

திருமணமே அந்த ரகசியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹிதாயா, பாகம் 2, பக்கம் 32

விளக்கமளிக்கத் தேவையில்லை என்கிற அளவில் படித்தாலே வசனத்தின் கருத்து புரிந்து விடும் எனும் நிலையில் நபி மீது பொய்யுரைக்கப்படுகிறது.

இந்த வார்த்தைக்கு நபிகளார் இப்படியொரு விளக்கம் அளித்தார்கள் என்று எந்த ஹதீஸ் நூலிலும் இல்லை. ஏன் விரிவுரை நூலிலும் கூட இப்படி ஒரு செய்தி அறிவிப்பாளர் வரிசையுடன் இடம் பெற்றிருக்கவில்லை. பலவீனமான செய்தி கூட இல்லை. அப்படியிருக்க ஏன் நபி பெயரில் பொய் சொல்ல வேண்டும்?

சாதாரணமாக விளங்கும் விஷயத்தினை விளக்கக் கூட நபிகள் நாயகம் பெயரைப் பொய்யாகப் பயன்படுத்துவது எத்தகைய போக்கு என்பதை சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நான்கு விஷயம் ஆட்சியாளர்கள் வசமுள்ளது

இஸ்லாமியச் சட்டதிட்டங்கள் இரு வகைகளாக உள்ளன.

ஒன்று ஆட்சியாளர்கள் நிறைவேற்றத்தக்கது. இதை தனிமனிதர்கள் செய்ய இயலாது. விபச்சாரம், திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்குத் தண்டனை வழங்குவது போன்று. மற்றொன்று தனிமனிதர்கள் நிறைவேற்றத்தக்கது. இவற்றுக்கு ஆட்சியாளர்கள் உதவி தேவையில்லை. அவர்களின் உதவியில்லாமலேயே நிறைவேற்றிவிட முடியும். இறைவனை வணங்குவது, நோன்பு உள்ளிட்டவை போன்று.

இப்படி இருவகை சட்டதிட்டங்கள் இஸ்லாத்தில் இருப்பதை யாரும் மறுக்க மாட்டார். இதற்கு குர்ஆன் பல சான்றுகளை அளிக்கின்றது. ஆனால் ஹிதாயாவில் இது தொடர்பாக நபிகள் நாயகம் சொல்லாதது நபியின் பெயரால் பொய்யுரைக்கப்படுகிறது. இதோ அந்த பொய் செய்தி

الهداية شرح البداية (2/ 98)

ولنا قوله عليه الصلاة والسلام أربع إلى الولاة

நான்கு விஷயங்கள் ஆட்சியாளர்கள் கையில் உள்ளது என்ற நபிகளாரின் கூற்று நமக்கு ஆதாரமாகும்.

ஹிதாயா, பாகம் 2, பக்கம் 98

ஏதோ ஒரு நான்கு விஷயங்களை குறிப்பிட்டு இவை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்றும் அதுவே நமக்கு ஆதாரம் என்றும் கூறுகிறார்.

இவர் குறிப்பிடும் செய்தி எந்த ஹதீஸ் நூலிலும் இல்லை. அநியாயமாக நபி மீது பொய்யுரைக்கப்படுகிறது. துணிவிருந்தால் இப்படி ஒரு செய்தியை நபி கூறினார்கள் என்பதற்குரிய ஆதாரத்தை ஹதீஸ் நூல்களிலிருந்து எடுத்துக் காட்டட்டும்.

ஒப்பந்தம் மீறாதே!

ஒப்பந்தங்கள், வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் சான்றுகள் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் நிறையவே உள்ளன. இருந்தும் என்ன பயன்? இருப்பதை ஆதாரமாகக் குறிப்பிடுவதை விட இல்லாததை நபி மீது இட்டுக்கட்டி இருப்பதைப் போன்று காட்டுவது தானே மத்ஹபின் ஸ்பெஷல். அது தானே அவர்களின் அன்றாடம்.

இதோ இப்போது அதே பாணியில் எதிரிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கு ஒரு ஹதீஸை ஆதாரம் காட்டுகிறார்கள் பாருங்கள்.

الهداية شرح البداية (2/ 138)

وقد قال عليه الصلاة والسلام في العهود وفاء لا غدر

ஒப்பந்தங்கள் குறித்து நபிகள் நாயகம் சொல்லும் போது மோசடியில்லாது நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

ஒப்பந்தங்கள் என்றால் அது நிறைவேற்றப்பட வேண்டும். அதில் மோசடி கூடாது என்று நபி சொன்னதாக ஒரு ஹதீஸை (?) அள்ளிவிடுகிறார்கள்.

இந்தச் செய்தி எந்த நூலில் உள்ளது?

ஒரு கருத்தை நிலைநாட்ட குர்ஆன் – ஹதீஸில் எவ்வளவோ சான்றுகள் இருந்தும் அவற்றைக் குறிப்பிடுவதை விட்டு விட்டு, பொய்யாக நபி மீது புனைந்து அதை ஆதாரம் என்று குறிப்பிடுவதில் மத்ஹபினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி போலும்.

இப்படி மத்ஹபில் நபி மீது பல பொய்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிறகாவது, ஆம்! இவைகள் எல்லாம் பொய் தான். இப்படி நபி சொன்னதாக எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை என்று திருந்தி, தங்களை திருத்திக் கொள்ள முன்வர வேண்டும் அல்லவா?

அதுவுமில்லை. எங்கள் இமாம்கள் சொன்னால் எதையும் ஏற்போம் என்ற குருட்டுப் பார்வையில் தான் தாங்களும் இருக்கிறார்கள். அதை நோக்கியே மக்களையும் அழைக்கிறார்கள். என்று தணியுமோ இந்த மத்ஹபு வெறி. அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

ஆட்டை அறுக்காதே!

சாப்பிடுவதற்காக மட்டுமே ஆட்டை அறுக்க வேண்டும் எனவும், அதைத் தவிர்த்து மற்ற நோக்கத்திற்கு அறுக்க கூடாது எனவும் ஒரு கருத்தை நபி பெயரில் பதிவிடுகிறார் நூலாசிரியர்.

பொதுவாக உண்ணத் தகுந்த பிராணிகள் எதை அறுத்தாலும் அதன் தோல் பயன்பாடு, இதர தேவைகளுக்காக அறுத்தாலும் கூட உண்ணுதல் என்பது அதில் பிரதான நோக்கமாகத் திகழும். ஆடு உண்ணத் தகுந்த பிராணி எனும் போது அதைப் பிற நோக்கங்களுக்காக மட்டுமே யாரும் அறுக்க மாட்டார்கள். அவற்றை அறுக்கும் போது அதன் இறைச்சியையும் உண்ண பயன்படுத்தவே செய்வார்கள்.

ஆனால் ஹிதாயா நூலாசிரியர் என்ன சொல்கிறார் எனில் ஆட்டை உண்பதற்காக மட்டுமே அறுக்க வேண்டும் என்று கூறிவிட்டு வழக்கம் போல அந்தப் பழியை நபி மீது சுமத்தி விடுகிறார்.

ஆம் நபிகள் நாயகம் இதை சொன்னார்களாம்.

الهداية شرح البداية (2/ 142)

لأنه عليه الصلاة والسلام نهى عن ذبح الشاة إلا لمأكلة

உண்பதற்காகவே தவிர வேறு எதற்காகவும் ஆட்டை அறுக்க நபிகள் நாயகம் தடை விதித்தார்கள்.

ஹிதாயா, பாகம்  2, பக்கம் 142

இச்செய்தியின் தரம் என்ன நாம் சொல்ல வேண்டியதில்லை.

ஹனபி மத்ஹபு நூல்களில் ஒன்றே பின்வருமாறு குறிப்பிடுகிறது.

فتح القدير لكمال بن الهمام (12/ 471)

{ نَهَى عَنْ ذَبْحِ الشَّاةِ إلَّا لِمَأْكَلَةٍ } ) قُلْنَا : هَذَا غَرِيبٌ لَمْ يُعْرَفْ عَنْهُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ نَعَمْ رُوِيَ مِنْ قَوْلِ أَبِي بَكْرٍ نَفْسِهِ

இச்செய்தி நபி (ஸல்) கூறியதாக அறியப்படவில்லை. ஆம். இது அபூபக்கர் (ரலி) அவர்களின் சொல்லாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கமால் அவர்களின் பத்ஹூல் கதீர்

பாகம் 12, பக்கம் 471

நபி சொன்னதாக இப்படி ஒரு செய்தி இல்லை என்று மத்ஹபு நூலே கூறும் நிலையில் தான் ஹிதாயாவில் பதிவாகியுள்ள செய்திகளின் தரம் இருக்கிறது என்பதை இதிலிருந்து புரியலாம்.