Tamil Bayan Points

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்-3

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

மாநபி மீது பொய்யுரைக்கும் மத்ஹபு நூற்கள்

அனைத்து வகை விளைச்சலிலும் பத்தில் ஒரு பங்கு ஜகாத்?

ஹனபி மத்ஹபின் சட்ட விளக்க நூலான ஹிதாயாவில் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பல்வேறு செய்திகள் இடம்பெற்றுள்ளதைப் பார்த்து வருகிறோம்.

அனைத்து வகை விளைச்சலிலும் பத்தில் ஒன்று?

பூமி தரும் விளைச்சல் குறைவாகவோ, அதிகமாகவோ, மழை நீரில் விளைந்ததாகவோ, நாம் தண்ணீர் பாய்ச்சியதாகவோ எப்படி இருந்தாலும் அவற்றில் பத்தில் ஒரு பங்கை ஜகாத்தாக வழங்க வேண்டும் என்று அபூஹனிபா கூறியதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

அபூஹனிபா பெயரில் ஒன்றைச் சொன்னால் அதைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. அவர் அப்படிச் சொன்னாரா இல்லையா என்றெல்லாம் ஆய்வு செய்யத் தேவையுமில்லை.

ஆனால் அபூஹனிபாவைத் தாங்கிப் பிடிக்கிறேன் பேர்வழி என நபிகள் நாயகத்தின் மீது இல்லாததை எல்லாம் அள்ளிவிட்டால்? ஆம்! அபூஹனிபாவின் இந்தக் கருத்திற்கு நபிகள் நாயகம் கூற்றில் ஆதாரம் உள்ளதாம்.

இதோ அவர் சொல்வதை பாருங்கள்

الهداية شرح البداية – (1 / 109)

ولأبي حنيفة رحمه الله قوله عليه الصلاة والسلام ما أخرجت الأرض ففيه العشر

பூமி தரும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் உண்டு என்ற நபிகள் நாயகம் கூற்று அபூஹனிபாவுக்கு ஆதாரமாக உள்ளது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 109

இவர் குறிப்பிட்ட வாசகத்தில் எந்த நபிமொழியும் இல்லை.

நபிகள் நாயகம் அழகாக, தெளிவாகப் பிரித்து சொன்ன வேறு நபிமொழியை இவர் தன் கருத்திற்குத் தோதுவாக வாசகங்களை வளைத்துச் சொல்கிறார். அபூஹனிபாவின் பெயரில் சொல்லப்பட்ட உளறலுக்கு, இல்லாத நபிமொழியை (?) ஆதாரம் என்கிறார்.

நபிகள் நாயகம் விளைச்சலை இரண்டாக வகைப்படுத்தி, தானாக விளைபவற்றில் பத்தில் ஒன்று என்றும், நீர் பாய்ச்சி விளைபவற்றில் இருபதில் ஒன்று எனவும் பிரித்துச் சொன்னதாகவே நபிமொழி கூறுகின்றது.

‘மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-1483

இதற்கு மாற்றமாக பொத்தாம் பொதுவாக எல்லா விளைச்சலுக்கும் பத்தில் ஒரு பங்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல் அதை நபியின் பெயரில் முஸ்லிம்களிடம் திணிக்க முற்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். வாயில் வந்ததைச் சொல்வேன் என்ற நிலைப்பாட்டை எடுத்த பிறகு, அதை வேறு யார் பெயரிலாவது சொல்லி விட்டு போகட்டும்.

தன் மீது எதையும் பொய்யாகச் சொல்லி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் எச்சரித்திருக்க அதைக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இப்படி நபி மீது அள்ளிவிட அவசியம் என்ன?

இதையும் ஒரு கூட்டம் ஆமோதித்துக் கொண்டும் வாய் பொத்திக் கொண்டும் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு நபிகள் நாயகத்தின் மீதான நேசத்தை விட தங்கள் மத்ஹபு இமாம்களின் மீதான பாசமே வானளாவிய அளவில் மேலாங்கி இருக்கின்றது என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தவாஃபுல் குதூம்

கிரான் மற்றும் இஃப்ராத் முறையில் ஹஜ் செய்வோர் மக்கா வந்ததும் தவாஃப் செய்ய வேண்டும். இதற்கு தவாஃபுல் குதூம் என்று சொல்லப்படும்.

தவாஃபுல் குதூம் பற்றி ஹிதாயாவில் பேசப்படும் போது நபிகள் நாயகம் சொல்லாததைச் சொன்னதாக ஓர் அபாண்டமான செய்தி அள்ளி வீசப்படுகிறது.

وقال مالك رحمه الله إنه واجب لقوله عليه الصلاة والسلام من أتى البيت فليحيه بالطواف

யார் கஃபாவுக்குள்ளே வருகிறாரோ அவர் தவாஃபின் மூலம் அதற்கு வாழ்த்துச் சொல்லட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே மாலிக் இமாம் அவர்கள் தவாஃபுல் குதூம் கடமை என்று கூறுகிறார்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 141

இது தான் அந்த அபாண்டமான செய்தி.

கஃபாவுக்குள்ளே வருபவர் தஃவாபின் மூலம் வாழ்த்துச் சொல்லட்டும் என்று நபி சொன்னதாகப் புழுகியுள்ளனர். இப்படி ஒரு செய்தி எந்த ஹதீஸ் நூல்களிலும் இல்லை. அறவே ஆதாரமில்லாத அடிப்படையற்ற செய்தியாகும். இதுபோன்ற எண்ணற்ற பொய்ச் செய்திகளை நபி மீது அள்ளி வீச எப்படித்தான் மனம் வருகிறதோ! அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

முதலில் இது, பிறகு அது…

ஹஜ் தொடர்பான சட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டிருக்கும் வேளையில் துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளில் செய்ய வேண்டியது பற்றி நபியின் பெயரால் ஒரு செய்தியைப் பதிவிடுகிறார்.

الهداية شرح البداية – (1 / 147)

روى عن رسول الله عليه الصلاة والسلام أنه قال إن أول نسكنا في يومنا هذا أن نرمي ثم نذبح ثم نحلق

இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் முதலாவது கல்லெறிவதாகும். பிறகு அறுத்துப் பலியிடுவதாகும். அதன் பிறகே தலையை மழிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 147

ஹஜ்ஜின் வணக்கங்களை நிறைவேற்றிடும் போது இந்த வரிசை முறையில் தான் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் கூறியதாக ஹிதாயா நூலாசிரியர் பதிவிடுகிறார். ஆனால் அப்படி ஒரு செய்தி ஹதீஸ் நூல்கள் எவற்றிலும் இல்லை. நபிகள் நாயகம் இப்படிச் சொன்னார்கள் என்பதற்குப் பலவீனமான செய்தி கூட கிடையாது. இந்த வரிசைப்படி நபிகள் செய்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது. இப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டதாக ஹதீஸ் இல்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜில்) மினாவிற்குச் சென்ற போது, (முதலில்) ஜம்ர(த்துல் அகபா)விற்குச் சென்று கற்களை எறிந்தார்கள். பின்னர் மினாவிலிருந்த தமது கூடாரத்திற்கு வந்து அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் வலப் பக்கத்தையும் பின்னர் இடப் பக்கத்தையும் காட்டி, ‘எடு’ என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் 2510

நாம் என்ன கேட்கிறோம். ஹதீஸ்களில் என்ன இருக்கின்றதோ அதை அப்படியே சொல்வதில் இவருக்கு என்ன பிரச்சனை?

முதலில் கல்லெறிந்து, பலி கொடுத்து, பிறகு தலை மழித்துள்ளார்கள் என்று நபியின் செயலாக உள்ளதை, முதலில் கல்லெறிய வேண்டும், பிறகு பலி கொடுக்க வேண்டும், அதன் பிறகே தலையை மழிக்க வேண்டும் என்று நபியின் சொல்லாக ஏன் மாற்றிப் பதிவிட வேண்டும்?

இப்படி ஒன்றிரண்டு அல்ல! பலநூறு செய்திகளை நபி சொல்லாதவற்றை நபியின் சொல்லாக இணைக்கும் கொடுமையை அரங்கேற்றுகிறார். இதன் மூலம் ஹிதாயா நூலாசிரியர் அலட்சியத்தின் மொத்த வடிவமாகப் பரிணமிக்கின்றார்.

கிரான் என்பது சலுகையே என்று ஹதீஸ் உண்டா?

பல தலைப்புக்களிலும் உள் நுழைந்து தங்கள் கைச்சரக்குகளை ஹதீஸ்களாக அள்ளி வீசிய மத்ஹபினர் ஹஜ் கிரான் பற்றியும் ஒரு அவதூறை நபி மீது வாரியிறைத்துள்ளனர்.

அதற்கு முன் கிரான் என்றால் என்ன என்பதை அறிவோம்.

கிரான் என்றால் சேர்த்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்தில் ஒருவர் இஹ்ராம் கட்டும் போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன் என்று கூறி இஹ்ராம் கட்டினால் இதுவே கிரான் ஆகும்.

ஒரு இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் (உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது.

இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? குர்ஆன், ஹதீஸை மட்டும் படிக்கும் போது எந்தப் பிரச்சனையுமில்லை தான். ஆனால் மத்ஹபு என்ற பெயரில் மனிதர்களின் கருத்துக்கள் நுழையும் போது பிரச்சனை தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.

இப்போது மத்ஹபினர் அள்ளி வீசிய பொய்ச் செய்தி என்ன என்பதைப் பார்ப்போம்.

الهداية شرح البداية – (1 / 153)

 وللشافعي رحمه الله قوله عليه الصلاة والسلام القران رخصة

கிரான் என்பது சலுகையே என்று நபி கூறியுள்ளார்கள். இது ஷாபி இமாமுக்கு ஆதாரமாகும்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 153

ஷாபி இமாமின் கருத்திற்கு வலுசேர்க்க இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதாக சரடு விடுகிறார்.

கிரான் பற்றி நபி கூறியதாக ஹிதாயாவில் குறிப்பிடும் இப்படியொரு செய்தி அறவே கிடையாது. எந்த இமாமும் இப்படி ஒரு செய்தி இருப்பதாகத் தங்கள் நூல்களில் பதிவு செய்யவில்லை.

இதில் இந்த ஹதீஸ் (?) ஷாபி இமாமுக்கு ஆதாரமாம்.

இல்லாத ஹதீஸ் ஷாபி இமாமுக்கு எப்படி ஆதாரமாக அமையும் என்கிற விந்தையை மத்ஹபினர்கள் தான் விளக்க வேண்டும்.

பலிப்பிராணி

பலிப்பிராணி பற்றிய பாடத்தில் இருப்பதிலேயே ஆடு தான் குறைந்த பட்ச பலிப்பிராணி என்ற கருத்தைப் பதிவிட்டு விட்டு, வழக்கம் போல நபியின் பெயரைப் பயன்படுத்தி புதுச் செய்தியை உருவாக்கி, பரப்பிச் செல்கிறார் நூலாசிரியர்.

الهداية شرح البداية – (1 / 185)

أنه عليه الصلاة والسلام سئل عن الهدي فقال أدناه شاة

நபி (ஸல்) அவர்கள் பலிப்பிராணி பற்றி வினவப்பட்டார்கள். அப்போது நபியவர்கள் ஆடு தான் குறைந்த பட்ச பலிப்பிராணி என்று பதிலளித்தார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 185

இந்தக் கதை பதாயிஉ ஸனாயிஃ என்ற மற்றுமொரு ஹனபி மத்ஹப் நூலிலும் வார்த்தை மாறாமல் இடம் பெற்றுள்ளது.

பார்க்க: பாகம் 5 பக்கம் 287

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தையும் தான் செய்து விட்டு டைட்டில் கார்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைப் பயன்படுத்துகிறார். நபி இப்படி கேட்கப்பட்டார்கள்; அதற்கு நபி இப்படி பதிலளித்தார்கள் என நடக்காத ஒரு சம்பவத்தை நடந்ததாகக் கற்பனை செய்து அதை ஹதீஸ் என மக்களிடையே பரப்புவது எந்த வகையான செயல்?

இவர் குறிப்பிடும்படியான செய்தி எந்த ஹதீஸ் நூலிலும் இல்லாத நிலையில் நபி இப்படிக் கூறியதாகக் கதை கட்டுகிறார். எந்த அறிஞர்களுக்கும் கிடைத்திராத இந்தச் செய்தி இவருக்கு மட்டும் கிடைத்த மர்மம் என்ன? எப்படிக் கண்டுணர்ந்தார்? மத்ஹபை ஆதரிப்போரே மர்மத்தை விலக்க வேண்டும்.

நீ மறுமையை நம்பினால்…

உடன் பிறந்த சகோதரிகள் இருவரை சமகாலத்தில் திருமணம் செய்ய கூடாது எனும் இஸ்லாமியச் சட்டம் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

ஹிதாயாவில் இச்சட்டம் சொல்லப்படும் போது அதற்குரிய ஆதாரமாக குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுகிறார்.

இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது).

(அல்குர்ஆன்:4:23.)

இதில் மறுப்பேதும் சொல்ல ஒன்றுமில்லை. சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதைச் சுற்றிவளைத்து என்றில்லாமல் நேரடியாகவே இவ்வசனம் சொல்லிவிடுகிறது. அவ்வப்போது குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் குறிப்பிடும் மத்ஹபின் போக்கு மெய்சிலிர்க்க செய்கின்றது. அடுத்து ஹதீஸ்? என்று ஒன்றை ஆதாரமாகக் காட்டுகிறார். இந்த ஹதீஸ்தான் எங்கே உள்ளது என்று கேட்கிறோம்.

الهداية شرح البداية – (1 / 191)

ولقوله عليه الصلاة والسلام من كان يؤمن بالله واليوم الآخر فلا يجمعن ماءه في رحم أختين

யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் தமது இந்திரியத்தை இரு சகோதரிகளின் கருவறையில் ஒன்றிணைத்திட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஹிதாயா, பாகம் 1, பக்கம் 191

சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்யலாகாது என்பதை அல்லாஹ்வின் தூதர் இவ்வளவு கடுமையுடன் எச்சரித்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

நபியின் பெயரால் மக்களை எச்சரித்திடும் போது அதற்குரிய ஆதாரத்தைக் குறிப்பிட வேண்டாமா? அதுவும் புதிது புதிதான, யாரும் கேட்டிராத செய்திகளை ரிலீஸ் செய்யும் போது அது எங்கே, எந்த நூலில் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் கடமை இவர்களுக்கில்லையா?

உண்மை என்னவென்றால் சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்வது குறித்து நபி கூறியதாக இவர் குறிப்பிடும் செய்தி எந்த ஹதீஸ் நூலிலும் இல்லை.

இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட வஹிச் செய்தியல்ல இது! முழுக்க முழுக்க நூலாசிரியரின் கற்பனையில் கருவாகி, நூலில் பிரசவமான  கள்ளக் குழந்தையே இது என்பதை உரத்துச் சொல்கிறோம்.