Tamil Bayan Points

06) மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்கள்

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1907

இந்த நபிமொழியும் தலைப்பிறையைத் தீர்மானிப்பதற்குரிய ஆதாரங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது.

இந்த நபிமொழியின் கருத்துப்படி எந்த மாதத்துக்கும் 28 நாட்களோ அல்லது 31நாட்களோ இருக்க முடியாது. மாதத்தின் குறைந்த பட்ச அளவு 29 நாட்கள்; அதிகபட்ச அளவு 30 நாட்கள்; இதைத் தவிர வேறில்லை.

நோன்பின் எண்ணிக்கை 29ஐ விடக் குறைவாகவோ, 30ஐ விட அதிகமாகவோ இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி கூறுகிறது.

ரமளான் மாதம் 28 நோன்பு என்று யாரும் கூறுவது கிடையாதே என்று சிலர் கேட்கலாம். நேரடியாக இவ்வாறு யாருமே கூறுவதில்லை. ஆனால் சிலர் எடுக்கும் முடிவு 28 நோன்பு என்ற நிலையை உருவாக்குகிறது. ஒருவர் எடுக்கும் ஒரு முடிவின் காரணமாக ரமளான் மாதத்துக்கு 28 நோன்பு என்ற நிலை வருமானால் அல்லது 31 நோன்பு என்ற நிலை ஏற்படுமானால்

நிச்சயமாக அந்த முடிவு தவறான முடிவாகத் தான் இருக்க முடியும்.

மாதத்துக்கு 28 நோன்பு என்ற நிலையை ஏற்படுத்தும் ஒரு முடிவை யாரேனும் நியாயப்படுத்தினால் அவர் மேற்கண்ட ஆதரப்பூர்வமான நபிமொழியை மறுத்தவராவார். 

உலகமெல்லாம் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தான் மாதம் பிறக்கிறது என்று சிலர் வாதிடுவதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இவர்களது வாதப்படி சில பகுதிகளுக்கு 28நோன்பு என்ற நிலை ஏற்படும்.

உதாரணமாக சவூதியில் ஜனவரி முதல் தேதியன்று மாலை 7 மணிக்கு தலைப்பிறையைப் பார்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். உலகம் முழுவதற்கும் அது தான் தலைப்பிறை என்ற வாதத்தின் படி ஏற்படும் விளைவைப் பார்ப்போம்.

சவூதியில் 7 மணியாக இருக்கும் போது லண்டனில் மாலை நான்கு மணியாக இருக்கும். அதாவது லண்டனில் மாலை நான்கு மணிக்கு ரமளான் துவங்குகிறது.

இவர்களின் வாதப்படி ரமளான் மாதத்தின் பகல் நேரத்தை லண்டன் மக்கள் அடைந்து விட்டதால் நான்கு மணி முதல் சூரியன் மறையும் வரை நோன்பு நோற்க வேண்டும் என்று தான் கூறியாக வேண்டும். ஆனால் உலகமெல்லாம் ஒரே நேரத்தில் தலைப்பிறை ஆரம்பமாகும் என்று வாதிடக் கூடியவர்கள் கூட இவ்வாறு கூற மாட்டார்கள்.

மேலும் அவ்வாறு கூறுவதற்கு ஹதீஸ்களிலும் தடை உள்ளது.
நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)

நூல்: நஸயீ

எனவே லண்டனில் நான்கு மணியை அடைந்தவர் பிறை தோன்றுமா தோன்றாதா என்பது தெரியாத நிலையில் கடந்த இரவே நோன்பு நோற்பதாகத் தீர்மானம் செய்திருக்க முடியாது.

இவர்களின் வாதப்படி நான்கு மணிக்கு லண்டன்வாசி ரமளானை அடைந்து விட்டார். ஆனாலும் இந்த நோன்பை அவர் நோற்கத் தேவையில்லை என்ற முடிவைத் தான் கூற வேண்டி வரும். அதாவது ரமளானை அவர் அடைந்தும் நோன்பு நோற்காத நிலை அவருக்கு ஏற்படுகிறது. இதனால் யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற திருக்குர்ஆன் வசனம் மீறப்படுகிறது.

இப்படியே 29 நாட்கள் கழிகின்றன. 29ல் மாதம் முடிந்து அன்று இரவு சவூதியில் ஷவ்வால் பிறை தோன்றி விட்டது. இந்த நேரத்தில் லண்டன் மக்கள் மாலை நான்கு மணியை அடைந்திருப்பார்கள்.

இவர்கள் வாதப்படி மாலை நான்கு மணிக்கு ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறையை லண்டன் மக்கள் அடைந்து விட்டார்கள். அதாவது நோன்புப் பெருநாள் தினத்தை அவர்கள் அடைந்து விட்டார்கள். நோன்புப் பெருநாளில் நோன்பு நோற்பது ஹராம் என்பதை அனைவரும் அறிவோம்.
எனவே அவர்கள் நான்கு மணிக்கு நோன்பை முறித்து விட வேண்டும். அதாவது29வது நோன்பை முறித்து விட வேண்டும். இந்தக் கணக்குப்படி 28 நோன்பு தான் இவர்கள் நோற்றுள்ளனர்.

லண்டனை உதாரணம் காட்டுவதை விட சவூதியில் மாலை ஏழு மணியாக இருக்கும் போது காலை ஏழு மணியாக உள்ள ஊரை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் இதன் விபரீதம் இன்னும் தெளிவாக இருக்கும். 

மாலை 7 மணிக்கு சவூதியில் ரமளான் பிறை பார்த்து அறிவித்து விட்டார்கள். இவர்களின் வாதப்படி அந்த நேரத்தில் முழு உலகுக்கும் ரமளான் பிறந்து விட்டது.

சவூதியில் மாலை 7 மணியாக இருக்கும் போது அங்காரா (அமெரிக்கா) பிரதேசத்தார் காலை ஏழு மணியை அடைந்திருப்பார்கள். அதாவது இவர்கள் ரமளானின் முதல் நாள் பகலை அடைந்து விட்டனர். மேலே நாம் குறிப்பிட்ட சுப்ஹுக்கு முன்னர் நிய்யத் அவசியம் என்ற ஹதீஸின் படி இவர்கள் அன்று நோன்பு நோற்க முடியாது. சுப்ஹுக்குப் பின்னர் தான் அவர்கள் ரமளானை அடைகிறார்கள்.

இவர்களின் வாதப்படி, ரமளான் பிறந்திருந்தும் உண்டு, பருகி இவர்கள் மகிழ்வார்கள். யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தை அப்பட்டமாக மீறிக் கொண்டிருக்கும் மாபெரும் குற்றத்தைச் செய்து கொண்டிருப்பார்கள்.

இப்படியே 29ம் நாள் முடிந்து 30ம் இரவு வருகிறது. அந்த இரவு ஏழு மணிக்கு தலைப்பிறை சவூதியில் தெரிந்து விடுகிறது. சவூதிக்காரர்களுக்கு பிரச்சனை இல்லை. அமெரிக்காவின் நிலை என்ன? அவர்கள் இந்த நேரத்தில் 29ம் நாள் நோன்பைப் பிடித்து சுப்ஹு தொழுதுவிட்டு வெளியே வருவார்கள். இப்போது அரை மணி நேரத்துடன் நோன்பை விட்டு விட்டு பெருநாள் தொழுகைக்குச் சென்றுவிட வேண்டும். 28 நோன்பை முடித்தவுடன் இவர்களுக்குப் பெருநாள் வந்து விட்டது.

குறைந்த பட்சம் 29 நோன்புகள் நோற்க வேண்டும் என்ற நபிமொழிக்கு மாற்றமான நிலை இங்கே ஏற்படுகிறது நாம் பார்த்த பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று கூறினால் உலகின் பல பகுதியினர் 28 நோன்பு தான் பிடிக்க முடியும். ஏதோ தவறுதலாக எப்போதோ 28 நோன்பு பிடிப்பது போன்றதாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. எந்த மாதம் 29 நாட்களுடன் முடிகின்றதோ அந்த மாதங்களில் காலமெல்லாம் இந்தத் தவறை உலகில் பாதிப்பேர் செய்து கொண்டிருப்பார்கள்.

உலகமெங்கும் ஒரே நாளில் தான் நோன்பு எனவும், ஓர் ஊரிலிருந்து பிறை பார்த்த தகவல் கிடைத்தால் எல்லா ஊர்களுக்கும் பிறை பிறந்து விட்டதாகப் பொருள் எனவும் வாதம் புரிவோர் தங்கள் வாதத்தின் காரணமாக 28 நோன்பு என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.
இவர்கள் செய்திருக்கும் இந்த முடிவு நாம் எடுத்துக் காட்டிய நபிமொழிக்கு மட்டும் தானா முரணாக இருக்கிறது? வேறு பல சட்டச் சிக்கல்களையும் இவர்களது முடிவு ஏற்படுத்தி விடுகின்றது.

அங்காராவில் காலை ஏழு மணியை அடையும் மக்கள் சவூதியில் ரமளான் பிறை தென்பட்டதால் ஏழு மணி முதல் நோன்பைத் துவக்குவதா?

சுபுஹுக்கு முன்பே ரமளானைத் தீர்மானிக்காதவருக்கு நோன்பு இல்லை என்பதால் நோன்பை விட்டுவிடுவதா?

இது விடுபட்ட நோன்பா? அல்லவா?

அப்படியானால் அதைக் களாச் செய்ய வேண்டுமா?

களாச் செய்ய வேண்டும் என்றால் அவர்கள் தான் சுபுஹ் நேரத்தில் ரமளானை அடையவில்லையே? அவர் ஏன் களாச் செய்ய வேண்டும்?

என்றெல்லாம் குழப்பத்துக்கு மேல் குழப்பம்.

அதே போல் ரமளான் இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு அங்காராவில் வாழ்பவர் நோன்பு நோற்கிறார். காலை ஏழு மணியை இவர் அடையும் போது பெருநாள் பிறை பிறந்து விட்டது என்று சவூதியில் அறிவிக்கப்பட்டால் இப்போதும் அதே குழப்பம்.

எனவே ஒரு பகுதியில் பிறை பார்த்தால் அந்த நிமிடமே உலகம் முழுவதும் ரமலான் ஆரம்பமாகி விடும் என்ற கருத்து மேற்கண்ட நபிமொழியின் கருத்துக்கு எதிரானதாகும்.

இன்னொரு அடிப்படையான விஷயத்தையும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.

ஒரு நாள் என்று சொன்னால் அதற்கு ஆரம்ப நேரம் ஒன்று இருக்க வேண்டும்;முடிவு நேரம் ஒன்று இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஆங்கில நாள் என்பது நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் ஆரம்பமாகிறது. நமது ஊரில் நள்ளிரவு 12 மணியைத் தாண்டியவுடன் உலக மக்கள் அனைவரும் மறு நாளில் நுழைந்து விட்டார்கள் என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் ஒவ்வொருவருக்கும் நாளின் துவக்கம் வெவ்வேறாக அமைந்து விடும்.

ஒரு நாளுக்கு 24 மணி நேரம் என்பதும் இல்லாமல் போய் விடும்.

எனவே சவூதியில் பிறை பார்த்தவுடன் அவர்களுக்கு நாள் மாறி விட்டது என்பது உண்மை! இதன் காரணமாக அமெரிக்காவிலும் நாள் மாறி விட்டது என்று கூறினால் அவர்களுக்குக் காலையிலிருந்து நாள் ஆரம்பமாகும் நிலை ஏற்படும். மேலும் முதல் நாளில் அவர்களுக்கு 12 மணி நேரம் தான் கிடைக்கும்.

எனவே எந்த ஊரில் பிறை பார்க்கப்பட்டதோ அவர்களுக்குத் தான் நாள் துவங்குகிறது என்று கூறினால் அந்தக் குழப்பம் ஏற்படாது.