Tamil Bayan Points

மஹ்ரமான உறவுகள்

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on July 29, 2021 by

மஹ்ரமான உறவுகள்

விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்கக்கூடாது என்று மார்க்கம் கட்டளையிடுவதைப் நாம் அறிவோம். 

இறைவன் முஃமின்களைப் பற்றிப் பேசும் போது சில பண்புகளைச் சொல்லிக் கொண்டே வந்து தங்களது கற்புக்களையும் பேணுவார்கள் என்று சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.

(அல்குர்ஆன்:23:1-7.)

கணவன், மனைவி மூலமாகவும் மனைவி, கணவன் மூலமாகவுமே தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வார்கள். இதுவல்லாத வேறு வழிகளைத் தேடமாட்டார்கள். அப்படித் தேடினால் அவர்கள் வரம்புகளை மீறியவர்கள், பாவிகள் என்று கடுமையாக எச்சரிக்கிறான்.

நாம் என்ன நிலைக்குச் சென்றாலும் குடும்ப அமைப்பில் இல்லறம் என்கிற முறையில் மாத்திரமே நம்முடைய உடல் சுகத்தை அனுபவிக்க வேண்டும். அதைத் தவிர வேறெந்த வழிமுறைகளிலும் முயற்சி செய்யவே கூடாது. இன்னும் இதில் விரிவாகச் சொல்வதாக இருந்தால், ஒழுக்கக் கேட்டைச் செய்யக் கூடாது என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அதன் பக்கம் கூட நெருங்கவே கூடாது என்று மார்க்கம் சொல்லித் தருகிறது.

நெருங்குதல் என்பது எப்படியெல்லாம் ஏற்படும் என்றும், அந்த நிலைகளில் நம்மை நாம் எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே மனித சமூகத்திற்கு இஸ்லாம் சொல்லித் தருகிறது. கணவன் மனைவி என்ற உறவு இல்லாத ஆண்களும் பெண்களும் தனித்திருப்பதை இஸ்லாம் இரு வகைகளில் பிரித்துப் பார்க்கிறது.

ஒரு ஆணோ பெண்ணோ யாரைத் திருமணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மஹ்ரம் என்ற உறவினர்கள் எனவும், மற்றவர்கள் மஹ்ரம் அல்லாத உறவினர்கள் எனவும் இஸ்லாம் பிரித்துப் பார்க்கிறது. யாரைத் திருமணம் செய்வதற்குத் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுடன் தனியாக இருக்கலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்:4:23.)

உங்கள் அன்னையர் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் தன் தாயைத் திருமணம் முடிக்க முடியாது. அப்படியெனில் தாயும் மகனும் தனியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதேபோன்று ஒருவன் தனது மகளைத் திருமணம் முடிக்க முடியாது.

“உங்களது சகோதரிகள்’ என்றால் உடன் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி, தந்தை இன்னொரு மனைவியைத் திருமணம் செய்து அந்த மனைவியின் மூலம் பிறந்த பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி. தாய் இன்னொரு கணவனைத் திருமணம் முடித்து அவர் மூலமாகப் பிறந்த சகோதரிகளாக இருந்தாலும் சரி! இவர்கள் மூன்று பேருமே சகோதரிகளாவார்கள். இதுபோன்ற சகோதரிகளுடன் ஒரு ஆண் தனியாக இருந்து கொள்வது அந்த ஆணுக்குக் குற்றமில்லை.

தகப்பனுடைய சகோதரிகள் என்றால் மாமிகள், அத்தை என்றெல்லாம் சொல்கின்ற உறவு. யாரையாவது மாமி என்று சொல்லிக் கொண்டு அவர்களுடன் தனிமையில் அமரக் கூடாது. இங்கே சொல்லப்படுகிற மாமி என்பவர்கள் தந்தையுடன் பிறந்த அக்கா தங்கைகளைத் தான் குறிக்கும்.

அதேபோன்று அம்மாவுடைய சகோதரிகளுடன் தனியாக இருக்கலாம். அதாவது சிறிய தாயார், பெரிய தாயார் என்று அர்த்தம். அண்ணன் தம்பியின் பெண் பிள்ளைகள், அக்கா தங்கையின் பெண் பிள்ளைகளுடன் தனிமையில் அமரலாம், பேசலாம். நம் பிள்ளைகளைப் போன்று அவர்களைப் பார்த்து வரலாம். இவர்கள் அனைவரும் மஹ்ரமானவர்கள் தான்.

பாலூட்டிய தாயையும் திருமணம் முடிக்க முடியாது. அவர்களுடனும் தனிமையில் இருக்கலாம். பேசலாம். பாலூட்டிய தாய் என்பதை புரிந்து கொள்வதாக இருந்தால், பால்குடிச் சட்டத்தைத் தெரிய வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்தில் பால்குடிச் சட்டம் என்பது, இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு, அக்குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அல்லாத வேறொரு பெண் பால் கொடுத்தால் அந்தக் குழந்தை பெரியவனாக மாறி திருமண வயதை அடைந்தால் அப்போது பால் கொடுத்த இந்தத் தாயைத் திருமண முடிக்க முடியாது.

பால் கொடுத்த இந்தத் தாய் அவளைப் பெற்றெடுத்த தாயின் அந்தஸ்தில் வைத்து பார்க்கப்படுகிறாள். அதே நேரத்தில் ஒரு தடவை இரண்டு தடவை அல்ல, குறைந்தது 5 தடவையாவது பால் அருந்திருக்க வேண்டும். அதேபோன்று பால்குடிச் சகோதரிகள் என்றால், எந்தத் தாயாரிடம் பால் குடிக்கிறோமோ அந்தத் தாய்க்குப் பிறந்த பெண் பிள்ளைகள் நமக்கு பால்குடிச் சகோதரிகள் ஆவர்.

அவர்களிடமும் சர்வ சாதாரணமாக இருந்து கொள்ளலாம். அதேபோன்று மனைவியின் தாயாராகிய மாமியார்கள் மஹ்ரமாவார்கள். மாமியார் வீட்டில் மருமகன் சாதாரணமாக இருக்கலாம். மாமியாருடன் தனிமையில் இருந்தாலும் தவறு என சொல்ல முடியாது.

ஆனால் நடைமுறையில் பெண்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்ட இந்தச் சட்டத்தை விளங்காமல் யார் யாரையெல்லாமோ அனுமதித்து விட்டு, மருமகனை அந்நியராகப் பார்க்கிற பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இது தவறான நடைமுறையாகும். மாமியாருக்கு மருமகன் என்பவர் பெற்றெடுத்த பிள்ளை போன்று பார்க்க வேண்டும்.

உங்கள் மனைவியின் மகளும் உங்களுக்கு மஹ்ரம் தான். உங்கள் மனைவியரின் மகள் என்றால், உங்களது மனைவி ஏற்கனவே ஒருவரைத் திருமணம் முடித்து மனைவியாக வாழ்ந்து அவர் மூலம் பெற்றெடுத்த பெண் பிள்ளை உங்களுக்கும் பிள்ளை அந்தஸ்து தான். அதேபோன்று மகனுடைய மனைவியும் மஹ்ரமானவள் தான். அதாவது மருமகள். இவர்களிடமும் தனியாக இருக்கலாம். பேசலாம். பழகலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கிறது.

எனவே மேற்சொல்லப்பட்ட உறவு முறைகளைத் தவிர்த்து வேறெந்த பெண் தனியாக இருந்தாலும் அவர்களிடத்தில் செல்ல முடியாது. பேசமுடியாது. பழக முடியாது. இதுதான் மஹ்ரம் என்பதற்கான சட்டமாகும். இந்த வசனத்தில் ஆண்களை மையமாக வைத்துத் தான் சட்டம் சொல்லப்படுகிறது. இதில் சொல்லப்பட்ட அதே உறவு முறைகளில் பெண்களுக்கும் இந்தச் சட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பெண் மகனுடன் தனிமையில் பேசலாம், பழகலாம். அதேபோன்று பெண் தனது தகப்பனாருடன் தனிமையில் இருக்கலாம், பேசலாம், பழகலாம். ஒரு பெண் தன்னுடைய அண்ணண் தம்பியுடன் தனிமையில் இருக்கலாம். அதேபோன்று பெண்ணுக்கு அவளது சகோதரர்களுடைய மகன்களுடன் தனிமையில் இருக்கலாம். அக்காள் தங்கையின் மகன்களும் மஹ்ரமாவார்கள்.

ஒரு பெண், தன் தந்தையுடன் பிறந்தவர்களான சித்தப்பா பெரியப்பா உடன் சாதாரணமாக இருந்து கொள்ளலாம். அதேபோன்று தன் தாயாருக்கு அண்ணன் தம்பிகளான மாமாவுடன் பேசிக் கொள்ளலாம்; தனிமையில் இருந்து கொள்ளலாம். அதேபோன்று பால்குடிச் சகோதரனுடனும் தனிமையில் இருக்கலாம்.

ஒரே தாயிடம் பால் குடித்த ஒரு பெண்ணும் ஒரு ஆணும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளைப் போன்றவர்களாவர். இவர்களுக்குள் திருமண உறவு கூடாது. இப்படி பால் குடிப்பது வெவ்வேறு காலகட்டமாக இருந்தாலும் சரி தான். பால்குடிச் சகோதரன் என்கிற அடிப்படை மாறாது.

தாயுடைய கணவனிடத்திலும் சாதாரணமாக நடந்து கொள்ளலாம். தாயுடைய கணவன் என்றால் முதல் கணவன் மூலம் பெற்றெடுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்குத் தாயாராக இருப்பவள் இன்னொரு கணவரைத் திருமணம் முடித்தால் அந்தக் கணவர் இந்தப் பெண்ணுக்கு தந்தை என்கிற அந்தஸ்தில் வந்து விடுவதினால் இவரிடத்திலும் சாதாரணமாக நடந்து கொள்ளலாம். தவறில்லை. அந்நிய உறவு என்று கருதக்கூடாது. அதேபோன்று கணவனின் தகப்பனராகிய மாமனாரிடத்திலும் அந்நிய உறவு என நினைக்கத் தேவையில்லை.

மேலே சொல்லப்பட்ட இந்த உறவு முறைகள் தான் ஓர் ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ திருமணத்திற்குத் தடைசெய்யப்பட்டவர்கள். இவர்களல்லாத மற்ற எந்த உறவு முறைகளாக இருந்தாலும் அவர்கள் அந்நியர்களாவர். அவர்களுடன் தனிமையில் பேசவோ, அமரவோ, பழகவோ கூடாது என இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கின்றது.

ஏனெனில் குடும்ப அமைப்பு சிதைந்து நாசமாவதற்கும் ஒழுக்கங்கெட்டு இந்தச் சமூகம் மாறுவதற்கும் அந்நிய ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பது தான் காரணம் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே எச்சரித்துள்ளது. தனிமையில் இருப்பது சம்பந்தமான எல்லைக் கோடு தான் திருக்குர்ஆனின் இந்த (4:23.) வசனமாகும்.

அலங்காரத்தைக் காட்டுவதன் அளவுகோல்

ஒரு பெண், மஹ்ரமான ஆணைச் சந்திக்க நேரிட்டால் அவள் தனது அலங்காரத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது குறித்து திருக்குர்ஆன் சில சட்டங்களைக் கூறுகின்றது. ஒரு பெண் அந்நிய ஆடவர் ஒருவரைச் சந்திக்கும் போது, பெண்ணுக்கு நெருக்கமான, திருமனத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவினர் பெண்ணுடன் இருந்தாலும் அந்த நேரத்தில் சில விதிமுறைகளைப் பேண வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன்:24:31.)

நகை அணிவதும், பவுடர் போடுவதும், தலைக்குப் பூ வைத்துக் கொள்வதும், இன்னபிற சாயங்களைப் பூசிக் கொள்வதும் (மேக்கப் செட்), தலைமுடியை விரும்பியவாறெல்லாம் வடிவமைத்துக் கொள்வதும் அலங்காரம் எனலாம். விரும்பினால் உடலுக்குக் கேடு தராது எனில் உதட்டுச் சாயம் கூட ஒரு பெண் பூசிக் கொள்ளலாம். ஒரு பெண் தனது உடலில் அழகு சாதனங்களால் செயற்கை முறையில் அலங்கரித்துக் கொள்வதும் அழகை மெருகேற்றிக் கொள்வதுமே அலங்காரம் எனப்படுகின்றது.

இதுபோன்ற இயற்கை அழகை மெருகேற்றி, அலங்காரம் செய்து கொண்டால் அந்த அலங்காரத்தை யார் யார் முன்னால் காட்டிக் கொள்ளலாம் என்றும் யார் முன்னால் காட்டக் கூடாது என்றும் விதிமுறைகளை அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் சொல்லிக் காட்டுகிறான்.

அலங்காரத்தைக் காட்ட அனுமதிக்கப்பட்டவர்கள்

  • முதலாவதாக, ஒரு பெண் தனது அலங்காரத்தை கணவனுக்குக் காட்டலாம். இதற்குத் தான் திருமணமே நடைபெறுகிறது.
  • பிறகு, ஒரு பெண் தனது தந்தைக்கு முன்னால் அலங்காரமாக இருந்து கொள்ளலாம். தனது மகளின் எந்த மாதிரியான அலங்காரத்தைப் பார்த்தாலும் தந்தைக்குக் கெட்ட எண்ணங்கள் ஏற்படாது. அந்தப் பெண்ணுக்கும் வராது.
  • ஒரு பெண் தனது தந்தைக்கு முன்னால் அலங்காரத்தைக் காட்டிக் கொண்டிருப்பது போன்று தனது கணவனின் தந்தை, அதாவது மாமனார் முன்னாலும் வெளிப்படுத்திக் கொள்ளலாம். அது மார்க்கத்தில் தவறில்லை.
  • அடுத்து, தனது மகனுக்கு முன்னால் அலங்காரம் தெரியும் வகையில் ஒரு பெண் இருந்தாலும் அவள் மீது குற்றமில்லை. மகன் தன் முன்னால் இருக்கிறான் என்று ஒரு தாய் வெட்கப்படத் தேவையில்லை.

மகனும் தனது தாயைப் பற்றி, இவ்வளவு பெரிய வயதில் அலங்காரமெல்லாம் எதற்கு? என்று கேள்வி கேட்கக் கூடாது. அதைத் தவறாகவும் நினைத்துவிடக் கூடாது. என்னதான் தனக்குத் தாயாக இருந்தாலும் நம் தந்தைக்கு மனைவி எனும் போது, ஒரு மனைவி தனது கணவன் நினைப்பது போன்று நடந்தால் தான் கணவனின் அன்பைப் பெறமுடியும். அப்படிப் பெறுவது தான் மார்க்க அடிப்படையில் சரியானதாக இருக்கும். யாருக்கு முன்னிலையில் அலங்காரம் என்பது தான் முக்கியமே தவிர, அலங்காரமே கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடல்ல என்பதைப் புரிய வேண்டும்.

  • ஒரு பெண்ணின் கணவருக்கு ஏற்கனவே முதலில் திருமணம் நடந்து அந்த மனைவியின் மூலமாக ஒரு ஆண் மகன் இருந்தால் அந்த ஆண் மகன் முன்னிலையிலும் ஒரு பெண் அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது குற்றமில்லை.
  • ஒரு பெண், தனது சகோதரர்கள் முன்னிலையில் அலங்காரத்துடன் இருப்பது குற்றமில்லை. சகோதரர்கள் என்றால் மூன்று வகையில் வருவார்கள். ஒன்று தன்னுடன் பிறந்தவர்கள், அல்லது தனது தாயின் வகையில் பிறந்தவர்கள், அல்லது தகப்பனார் வழியில் பிறந்தவர்கள். எந்த வகையில் சகோதரர்களாக இருந்தாலும் அவர்கள் முன்னிலையில் அலங்காரத்தை வெளிக்காட்டிக் கொள்வதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது.
  • தனது சகோதரர்களுடைய மகன் முன்னிலையில் ஒரு பெண் அலங்காரம் வெளிப்படுவது குற்றமல்ல. சகோதரிகளின் மகன்கள் முன்னிலையிலும் ஒரு பெண்ணின் அலங்காரம் வெளிப்படலாம்.

மற்ற பெண்களிடத்தில் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது குற்றமில்லை. இதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். இதைத் தவறு என்று கூற முடியாது. இருப்பினும் பிற பெண்களை மட்டம் தட்டக் கூடாது. அப்படிச் செய்தால் அது பெருமையடிப்பது என்ற குற்றத்தில் சேர்ந்துவிடும்.

பெண்கள் சபையில் அந்நிய ஆண்கள் இருந்தால் அதில் அலங்காரத்தைக் காட்டுவதற்கு மார்க்கம் தடை செய்கிறது. இதற்கு உதாரணமாகச் சொல்வதென்றால், கல்யாண வீடுகளைச் சொல்லலாம். இங்கு அதுபோன்ற நிலை இருப்பதால்தான் அதைத் தவறு என்கிறோம்.  பெண்கள் மட்டுமே இருக்கிற ஒரு சபையில் ஒரு பெண் தன்னைப் போன்ற சக பெண்களிடம் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்வது தவறில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.

பெண்களின் மீது நாட்டமில்லாத நிலையை அடைந்த, தள்ளாத வயதுடைய ஆண்களின் முன்னால் ஒரு பெண் தனது அலங்காரத்துடன் நின்றுகொள்வது குற்றமில்லை. அந்நிய ஆணாக இருந்தாலும் தள்ளாத வயதுடையவர்கள் என்றால் கொள்ளுத் தாத்தா வயதுடையவர்கள் என்று பொருள். இதில் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, வயது முக்கியம் என்பதை விட நிலை தான் கவனத்தில் கொள்ள வேண்டியது.

ஏனெனில் சிலர் எண்பது வயதிலும் வலுவானவர்களாகவும் பெண்கள் மீது நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களை இந்தச் செய்தி குறிக்காது. பெண்கள் மீது நாட்டமில்லாத நிலை என்றால் இல்லறத்திற்குத் தகுதியில்லாதவர், அதன் மீது நாட்டம் ஏற்படாத அளவுக்கு முதிர்ந்தவர் என்ற பொருள் தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய செய்தியாகும்.

பெண்களின் மறைவிடங்களைப் பற்றிய அறிவு இல்லாத சிறுவர்களின் முன்னிலையில் ஒரு பெண் தனது அலங்காரத்துடன் நிற்பது குற்றமில்லை. இது காலத்திற்குக் காலம் மாறுபடக் கூடியதாகவும் இருக்கிறது. இந்தக் காலத்தில் 5 வயதிலேயே எல்லாம் தெரிகிற அளவுக்கு மாறிவிட்டது.

50 வருடங்களுக்கு முன்னால் 15 வயது ஆணுக்குக் கூட மறைவிட விவரங்கள் தெரியாமல் இருந்தது. கல்யாண மாப்பிள்ளைக்குக் கூட திருமணம் முடித்தவர்கள் “எதற்கு கல்யாணம் முடிக்கிறோம்’ என்பதை சொல்லிக் கொடுக்கிற அளவுக்குத்தான் இருந்தது.

குடும்ப விவகாரங்களும் கணவன் மனைவி விவகாரங்களும் புரியாத சிறுவயது குழந்தைகளிடத்தில் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்ளலாம். ஒரு கணவனும் மனைவியும் தனியாக அமர்ந்திருப்பது எதற்கு? என்ற காரணம் புரியுமானால் அந்த ஆண் பிள்ளை வளர்ந்து ஆளாகிவிட்டான் என்று பொருள்.

அப்படிப் புரியாதவனாக இருந்தால் அவன் குழந்தை என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்ற அந்நியச் சிறுவர்களிடம் ஒரு பெண் தனது அலங்காரத்தைக் காட்டிக் கொள்ளலாம். ஏனெனில் புரியாத வயதில் இருப்பவர்களுக்கு அந்தரங்க விஷயங்கள் ஈர்க்காது என்பதுதான் காரணமாகும்.

தங்களது கணவருடன் இருக்கும் போதோ, அல்லது திருமணத்திற்குத் தடை செய்யப்பட்ட உறவினருடன் இருக்கும் போதோ ஒரு பெண் அலங்காரத்துடன் இருக்கும் போது ஒரு அந்நிய ஆண் அவர்களைப் பார்க்க நேர்ந்தால் அப்போது அவரிடம் அலங்காரத்தைக் காட்டக் கூடாது.

கணவன் உடன் இருந்தாலும் அந்நிய ஆணிடம் அலங்காரத்தை ஒரு பெண் காட்டக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது. அதாவது நகை நட்டுக்கள் அணிந்திருந்தால் அல்லது மேக்கப் என்கிற அலங்காரச் சாயங்கள் பூசியிருந்தால் மஹ்ரமான உறவு தன்னுடன் இருந்தாலும் அந்நிய ஆணிடம் இவைகளைக் காட்டக் கூடாது என்று மேற்சொன்ன வசனம் நமக்குக் கட்டளையிடுகிறது.

அலங்காரத்தில் ஒரு பெண் தனது தகப்பனுடன் இருந்தாலும் எதிரில் இருக்கிற அந்நிய ஆணிடம் ஷைத்தான் கெட்ட எண்ணங்களை விதைத்து விடுவான். அதனால் தான் இறைவன் இவ்வசனத்தில் அலங்காரத்தைக் காட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களை பட்டியலிட்டுத் தந்துவிடுகிறான். இந்த பட்டியலில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களிடம் அலங்காரத்தைக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்குரிய சட்டமாகும்.

இவை தவிர, இந்த வசனத்தில் இன்னும் சில செய்திகளை பெண்களுக்கு அறிவுறுத்துகிறான். ஒரு பெண் சலங்கைக் கொலுசு அணிவதைத் தடை செய்கிறது. சலங்கை இல்லாத, சத்தம் வராத முத்துக்கள் பதிக்காத கொலுசு அணிவதைத் தடை செய்யவில்லை. நடக்கிற போது சத்தம் வந்தால் அந்த சத்தம் அந்நிய ஆணை ஈர்த்திழுக்கும் ஒரு அபாயக் குரல் என்பதை பெண்கள் உணர வேண்டும்.

கொலுசு அணிவது பெண்களுக்கு உரியது என்று ஆகிவிடுகின்ற போது, சத்தம் வருகின்ற கொலுசு அணிந்தால் பிற ஆண்கள் அவர்களைப் பார்ப்பதற்குத் திரும்புவதைக் காண்கிறோம். பிறர் திரும்ப வேண்டும் என்பதற்காகவே கால்களை அடித்து நடக்கும் பெண்களையும் பார்க்கிறோம். இதைத்தான் அல்லாஹ் தடுக்கிறான்.

“அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.” (அல்குர்ஆன்:24:31.)

எனவே அலங்காரத்தைப் பெண்கள் யார் யாரிடம் காட்ட வேண்டும் என்பதற்கும் எப்படியெல்லாம் காட்டக் கூடாது என்பதற்கும் வரம்புகளை நிர்ணயம் செய்துள்ளான் இறைவன். அவற்றைப் பேணுவதுதான் ஒரு முஸ்லிமின் கடமையாகும். குடும்ப வாழ்வு குறித்த தலைப்புக்குள் விரிவாக உள்ளே செல்வதற்கு முன்னால் அடிப்படையாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இதுவரை கண்டோம்.

முதலாவது, நேரடியாக தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது, தவறைத் தூண்டக்கூடிய வகையில், அந்தச் சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலுள்ள எல்லா வகையான வாய்ப்புக்களையும் விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அதாவது பெண்ணோடு ஆணும், ஆணோடு பெண்ணும் தனித்திருப்பது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். குடும்பத்தில் சந்தேகமோ, சஞ்சலமோ, குழப்பமோ ஏற்படாமல் நல்ல முறையில் குடும்ப உறவுகள் மேம்படுவதற்கு மார்க்கம் இந்த வழிமுறைகளைக் கற்றுத் தந்துள்ளது.

அதில் நாம் கண்ட அடிப்படையான விஷயங்கள், திருமணத்தின் மூலம் மட்டும்தான் குடும்ப அமைப்பு ஏற்படும்; இதைத் தவிர்த்து வேறு எந்த வகையிலும்  குடும்ப அமைப்பு ஏற்படாது. குடும்ப அமைப்பைச் சிதைக்கக் கூடிய காரியங்களை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும்.