Tamil Bayan Points

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்.! அமெரிக்க ஆய்வில் தகவல்

பயான் குறிப்புகள்: குர்ஆன் கூறும் அறிவியல்

Last Updated on June 15, 2019 by

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்.! அமெரிக்க ஆய்வில் தகவல்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின்,  இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார்.

கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தம் நோயின் தாக்கம்,எந்த வகையிலும் குறையவில்லை. 

ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், “கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்னையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆய்வின் முக்கிய அம்சம். இந்த ஆய்வு, இனி வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார். 

தற்காலத்தில் மனஅழுத்தம் தான் மனிதனை ஆட்கொள்ளும் பெரிய நோயாகக் கருதப்படுகின்றது. உலகில் 75 சதவீதத்தினர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

உலகில் நடைபெறும் தற்கொலைகளில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை மனஅழுத்ததின் காரணமாக நடைபெறுபவை என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

இவர்கள் தற்போது கண்டுபிடித்துச் சொல்லும் இந்தச் செய்தியை 1400ஆண்டுகளுக்கு முன்பாகவே வல்ல இறைவன் தனது திருமறையில் சொல்லிக்காட்டியுள்ளான். 

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.       

(அல்குர் ஆன் 13 : 28) 

உள்ளத்தில் அமைதியின்மை ஏற்படுவதுதான் மன அழுத்தத்திற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ளது. இறைவனை நினைவு கூர்வதின் மூலம் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்றும், இறைவனை நினைவு கூர்வதால்தான் உள்ளங்கள் அமைதியுறும் என்றும் இறைவன் மேற்கண்ட வசனத்தில் திட்டவட்டமாகச் சொல்லிக் காட்டுகின்றான். 

இறைவனை ஒருவர் நம்ப வேண்டிய விதத்தில் நம்பினால் அவருக்கு மனஅழுத்தம் கிஞ்சிற்றும் இருக்காது என்பது உறுதி. அந்த வகையில் இந்த ஆய்வு இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Source :http://nallurdawa.blogspot.com/2013/11/blog-post_3008.html#more