Tamil Bayan Points

மனைவியை அடிக்கலாமா?

கேள்வி-பதில்: இல்லறம்

Last Updated on August 1, 2022 by Trichy Farook

மனைவியை அடிக்கலாமா?

கேள்வி :

எனது கணவர் சிறு பிரச்சனைக்கு என்னை அடிக்கிறார். இஸ்லாத்தில் கணவன் மனைவியை அடிக்க அனுமதி உண்டா? அது போன்று மனைவி கணவனை அடிக்கலாமா?

ரிஸானா

பதில் :

மனைவியிடம் கணவனுக்குப் பிடிக்காத செயல்பாடுகளைக் காணும் போது விவாகரத்து வரை சென்று விடக் கூடாது என்பதற்காக சில வழிமுறைகளை கணவன்மார்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ளான்.

முதலில் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். அதிலும் மாற்றம் ஏற்படவில்லையன்றால் படுக்கையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அதிலும் மாற்றம் ஏற்படவில்லையென்றால் அவர்களை அடிப்பதற்கு மார்க்கம் அனுமதிக்கின்றது.

وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا [النساء/34]

 

பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்.

(திருக்குர்ஆன்:4:34.)

கணவன்மார்கள் மனைவியரை அடிப்பதற்கு இவ்வசனத்தில் அல்லாஹ் அனுமதிக்கிறான். எதற்கெடுத்தாலும் மனைவியரை அடித்து உதைக்கும் சிலர் அடிப்பதற்கு அனுமதி உள்ளது என்பதற்கு மட்டும் இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டுவார்கள்.

எதற்கெடுத்தாலும் அடிக்க அனுமதி இல்லை என்று தான் இவ்வசனம் சொல்கிறது. சரியாகச் சமைக்கவில்லை என்பதற்கோ, மாமியாரை எதிர்த்துப் பேசினார் என்பதற்கோ இது போன்ற மற்ற தவறுகளுக்கோ அடிக்கக் கூடாது என்று தான் இவ்வசனம் சொல்கிறது.

இனிமேல் பிரிவு தான் என்ற நிலை சிலருக்கு ஏற்படும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் தான் அடிக்க அனுமதி உண்டு. பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் என்ற சொற்றொடரில் இக்கருத்து உள்ளடங்கி இருக்கிறது.

இனிமேல் பிரிந்து போவது தான் வழி என்று ஒருவன் நினைக்கும் அளவுக்கு மனைவி நடந்து கொண்டால் கூட உடனே அடித்து விட அனுமதி இல்லை. முதலில் அறிவுரை தான் சொல்ல வேண்டும். இப்படி நீ நடந்து கொண்டால் நாம் பிரிந்து போகும் நிலை ஏற்படும் என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இதன் பின்னர் உடனே அடித்து விட முடியுமா என்றால் அப்போதும் அடிக்க அனுமதி இல்லை. மனைவியுடன் சேராமல் தனித்தனியாக படுத்து உறங்க வேண்டும். நாம் இல்லாவிட்டாலும் அது கணவனைப் பாதிக்காது என்று இதன் மூலம் மனைவிக்கு உணர்த்தப்பட்டால் பிரிவு ஏற்பட தான் காரணமாக இருக்கக் கூடாது என்று அவள் புரிந்து கொள்வாள்.

இதன் பின்னர் தான் அடிக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்க்கும் போது அவளுக்குக் கெட்டது போல் தோன்றினாலும் அதுதான் அவளுக்கு நல்லது. இல்லாவிட்டால் அடுத்த நிலைக்கு அவன் சென்று விடுவான். விவாகரத்து அளவுக்குச் செல்லாமல் தடுக்கவே பிரச்சனை உச்சகட்டத்தை அடையும் போது எல்லா நடவடிக்கைகளும் பயனற்றுப் போன பிறகு அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது.

அடித்தல் என்று சொன்னால், பலவீனமான பெண் மீது தனது பலத்தைப் பிரயோகிப்பதோ, அல்லது மிருகங்களை அடிப்பது போன்றோ அடிப்பது என்று அர்த்தமில்லை. ஏனெனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள்.

5204 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَجْلِدُ أَحَدُكُمْ امْرَأَتَهُ جَلْدَ الْعَبْدِ ثُمَّ يُجَامِعُهَا فِي آخِرِ الْيَوْمِ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)

நூல் : புகாரி-5204 

எதற்கெடுத்தாலும் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இந்த அனுமதியைப் புரிந்து கொள்ளக் கூடாது. அடிப்பது தான் சிறந்தது என்றும் இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

19190 عَنْ جَدِّي قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ نِسَاؤُنَا مَا نَأْتِي مِنْهُنَّ وَمَا نَذَرُ قَالَ حَرْثُكَ ائْتِ حَرْثَكَ أَنَّى شِئْتَ فِي أَنْ لَا تَضْرِبَ الْوَجْهَ وَلَا تُقَبِّحْ وَأَطْعِمْ إِذَا أُطْعِمْتَ وَاكْسُ إِذَا اكْتَسَيْتَ وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ كَيْفَ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ إِلَّا بِمَا حَلَّ عَلَيْهِنَّ رواه احمد

ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் (உமது மனைவி) உமது விளைநிலமாகும். உமது விளைநிலங்களுக்கு நீ விரும்பியவாறு சென்று கொள்.

(அவளைக் கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே! அவளை அசிங்கமாகத் திட்டாதே! நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்! நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு! வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே. நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத்-20045

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَاتَلَ أَحَدُكُمْ فَلْيَجْتَنِبْ الْوَجْهَ . روه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (எவரையாவது தக்க காரணத்துடன்) தாக்கினால் முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி-2559