Tamil Bayan Points

மனைவியுடன் எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்?

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on January 1, 2021 by

மனைவியுடன் எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்?

கேள்வி :

என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார்; இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா? எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்?

பதில்:

அவர் என்ன இகழ்ந்து பேசினார்?

அவரை நீங்கள் இகழ்ந்து பேசியதால் அவர் உங்களை இகழ்ந்து பேசினாரா?

நீங்கள் ஒன்றுமே செய்யாமலும், சொல்லாமலும் இருக்கும் போது இகழ்ந்து பேசினாரா?

அவர் இகழ்ந்து பேசியது பெருந்தன்மையுடன் உங்களால் அலட்சியப்படுத்தத் தக்கதா?

அல்லது எவ்வளவு முயன்றாலும் அலட்சியப்படுத்தவே முடியாது என்ற அளவுக்கு இருந்ததா? இப்படி பல விஷயங்கள் இதில் உள்ளன.

பொதுவாக ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தங்களிடம் உள்ள குறையை உணராமல் அடுத்தவரின் குறையை மட்டும் பேசுவார்கள். உங்கள் குற்றச்சாட்டு அது போன்றதா என்று நீங்கள் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மன்னிப்பு கேட்டால் தான் மன்னிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. விரும்பினால் மன்னிப்பு கேட்காவிட்டாலும் மன்னிக்க முடியும்.

பல நாட்கள் அவரும் உங்களுடன் பேசவில்லை; நீங்களும் அவருடன் பேசவில்லை என்பது உங்கள் கேள்வியில் இருந்து தெரிகிறது. இல்வாழ்க்கை அற்றுப் போன வயது என்றால் அது பிரச்சனை இல்லை.

ஒருவருக்கொருவர் தேவைப்படும் வயதில் இருவருமே இருக்கும் போது ஒருவருக்கொருவர் தேவையில்லை என்பது போல் நடந்து கொண்டால் அதில் வேறு பிரச்சனை இருக்கலாம். அதன் பிறகும் அப்படி இருந்தால் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு கவுன்சிலிங் எடுக்க வேண்டும்.

பேசுவதைப் பொருத்தவரை மார்க்கம் சம்மந்தமான விஷயமாக இல்லாமல் உலக விஷயத்துக்காக என்றால் அதிகபட்சம் மூன்று நாட்கள் தான் பேசாமல் இருக்க வேண்டும்.

صحيح البخاري

6076 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تَبَاغَضُوا، وَلاَ تَحَاسَدُوا، وَلاَ تَدَابَرُوا، وَكُونُوا عِبَادَ اللَّهِ إِخْوَانًا، وَلاَ يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ»

எந்த முஸ்லிமும் தன் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் பகையாக இருக்கக் கூடாது என்பது நபிமொழி.

பார்க்க : புகாரி-6076

صحيح البخاري

6077 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لاَ يَحِلُّ لِرَجُلٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلاَثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ: فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلاَمِ “

அவனைப் பார்த்து இவன் புறக்கணிப்பதும், இவனைப் பார்த்து அவன் புறக்கணிப்பதும் கூடாது. அவர்களில் சிறந்தவர் ஸலாம் கூறி பேச்சை ஆரம்பிப்பவர் தான் என்றும் நபியவர்கள் கூறியுள்ளனர்.

பார்க்க : புகாரி-6077

இது பேசுவதற்கான எல்லையாகும்.

கணவன் மனைவிக்கு இடையே அதையும் கடந்த உறவு உள்ளது.

உடல் ரீதியான தேவைகள் இருவருக்கும் உள்ளது. அதற்கு அதிக பட்சமாக நான்கு மாதம் எல்லை தான் உள்ளது. அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்தால் கூட அதை முறித்து விட்டு இருவரும் இணைந்து கொள்ள வேண்டும்.

தமது மனைவியருடன் கூடுவதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாத அவகாசம் உள்ளது. அவர்கள் (சத்தியத்தை) திரும்பப் பெற்றால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். விவாகரத்துச் செய்வதில் அவர்கள் உறுதியாக இருந்தால் அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன்:2:226, 227.)

மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன் என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வாறு சத்தியம் செய்தவர் இதற்காக மனைவியைப் பிரியத் தேவையில்லை. நான்குமாத அவகாசத்துக்குள் சத்தியத்தை முறித்து விட்டு மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம்.

காலமெல்லாம் மனைவியுடன் சேர மாட்டேன் என்று ஒருவர் குறிப்பிட்டாலும் அவருக்குரிய கெடு நான்கு மாதங்கள் தாம். நான்கு மாதம் கழித்துத்தான் சேர வேண்டும் என்று இவ்வசனத்திற்கு (2:226) அர்த்தம் இல்லை. நான்கு மாதத்திற்குள் சேர வேண்டும் என்றே பொருள்.

இன்றைக்குச் சத்தியம் செய்து விட்டு நாளைக்குக் கூட அதை முறிக்கலாம். நான்கு மாதம் கடந்த பின்னும் சேராவிட்டால் விவாகரத்துச் செய்து விட வேண்டும் என்று அடுத்த வசனம் கூறுகிறது.

சிலர், மனைவியுடன் வெறுப்புக் கொண்டு அவளுடன் வாழ்க்கை நடத்தாமலும், அவளை விவாகரத்துச் செய்யாமலும் கொடுமைப்படுத்துவர். வருடக் கணக்கில் பெண்களை இவ்வாறு நடத்தும் கொடியவர்களை ஜமாஅத்துகள் கண்டு கொள்வதில்லை.

நான்கு மாதத்துக்குள் வாழ்வு கொடுக்காவிட்டால், அதையே விவாகரத்தாக அறிவிக்கும் கடமை ஜமாஅத்துகளுக்கு உண்டு. அந்த அதிகாரம் இவ்வசனத்தின் மூலம் சமுதாயத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.