Tamil Bayan Points

மனைவியின் பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளலாமா?

கேள்வி-பதில்: இல்லறம்

Last Updated on November 22, 2016 by Trichy Farook

மனைவியின் பின்துவாரத்தில் உடலுறவு கொள்ளலாமா?

கூடாது.

மனைவியின் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளக் கூடாது என்று நபிமொழிகள் உள்ளதாக அறிகின்றோம். ஆனால் குர்ஆன் 2:223 வசனமும் புகாரி 4528 ஹதீசும் பின் துவாரம் வழியாக உடலுறவு கொள்ளலாம் என்ற கருத்தில் அமைந்துள்ளதாகத் தெரிகின்றதே?

எஸ். முஹம்மத் ஸலீம், ஈரோடு

நீங்கள் சுட்டிக்காட்டும் புகாரியின் 4528வது ஹதீஸில் மலத் துவாரத்தில் உடலுறவு கொள்வது பற்றிப் பேசவில்லை. அதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் இந்தக் கேள்வி எழுகின்றது.

ஒருவர் தம் மனைவியிடம் பின்னாலிருந்து (பெண்ணுறுப்பில்) உடலுறவு கொண்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே “உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். ஆகவே உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்!” என்ற (2:223வது) வசனம் இறங்கியது. அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

நூல் : புகாரி 4528

இந்த ஹதீஸில் பின் பக்கத்திலிருந்து என்பதைக் குறிக்க “மின் வராயிஹா” என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது மலத் துவாரத்தைக் குறிப்பதல்ல. மாறாக பின் பக்கம் என்பதையே குறிக்கும்.

மனைவியின் பின் புறத்தில் இருந்து கொண்டு பெண்ணுறுப்பில் புணரக் கூடாது என்றும், அவ்வாறு புணர்ந்தால் பிறக்கும் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்றும் யூதர்கள் நம்பி வந்தனர். இதை மறுக்கும் விதமாக 2:223 வசனம் அருளப்பட்டது.

மலத் துவாரத்தில் உறவு கொண்டால் பிள்ளை பிறக்காது. என்பதில் இருந்து இதை அறியலாம்.

எனவே பின்புறத்தில் இருந்து வழக்கமான பாதையில் உறவு கொள்வதைத் தான் இது குறிக்கிறது. இதைத்தான் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றதே தவிர மலத் துவாரத்தில் புணர்வதை இந்த ஹதீஸ் அனுமதிக்கவில்லை. பல ஹதீஸ்களில் இதற்குத் தடை உள்ளது.

யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி).

நூல் : அபூதாவூத் 1847, அஹ்மத் 3356

 

மலத் துவாரத்தில் உடலுறவு கொள்வதை இந்த ஹதீஸ்கள் கடுமையாகக் கண்டிக்கின்றன. இது தடை செய்யப்பட்ட செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.