Tamil Bayan Points

மனத் தூய்மையும் மகத்தான கூலியும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 18, 2023 by Trichy Farook

மனத் தூய்மையும் மகத்தான கூலியும்

மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்தால் அந்த வணக்கத்தை இறைவன் தூக்கி எறிந்து விடுகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى ، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا ، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ

செயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யாருடைய (நாட்டை விட்டு வெளியேறும்) பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைகின்றதோ அவரது பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைந்து விடுகிறது.

எவரது பயணம் உலகத்தை அடைவதற்காகவோ அல்லது பெண்களை மணம் முடிப்பதற்காகவோ அமையுமெனில் அவரது பயணம், அவர் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்தாரோ அதற்காகவே அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறி : உமர் (ரலி)
நூல்: புகாரி-1 

சுத்தமான அமல் சோதனையின் போது அரண்

خَرَجَ ثَلاَثَةٌ يَمْشُونَ فَأَصَابَهُمُ الْمَطَرُ فَدَخَلُوا فِي غَارٍ فِي جَبَلٍ فَانْحَطَّتْ عَلَيْهِمْ صَخْرَةٌ قَالَ فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ ادْعُوا اللَّهَ بِأَفْضَلِ عَمَلٍ عَمِلْتُمُوهُ فَقَالَ أَحَدُهُمُ اللَّهُمَّ إِنِّي كَانَ لِي أَبَوَانِ شَيْخَانِ كَبِيرَانِ فَكُنْتُ أَخْرُجُ فَأَرْعَى ثُمَّ أَجِيءُ فَأَحْلُبُ فَأَجِيءُ بِالْحِلاَبِ فَآتِي بِهِ أَبَوَيَّ فَيَشْرَبَانِ ثُمَّ أَسْقِي الصِّبْيَةَ وَأَهْلِي وَامْرَأَتِي فَاحْتَبَسْتُ لَيْلَةً فَجِئْتُ فَإِذَا هُمَا نَائِمَانِ قَالَ : فَكَرِهْتُ أَنْ أَوْقِظَهُمَا وَالصِّبِيْةُ يَتَضَاغَوْنَ عِنْدَ رِجْلَيَّ فَلَمْ يَزَلْ ذَلِكَ دَأْبِي وَدَأْبَهُمَا حَتَّى طَلَعَ الْفَجْرُ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنِّيفَعَلْتُ ذَلِكَ ابْتِغَاءَ وَجْهِكَ فَافْرُجْ عَنَّا فُرْجَةً نَرَى مِنْهَا السَّمَاءَ قَالَ فَفُرِجَ عَنْهُمْ…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
“(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், “நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றனர்.

அவர்களில் ஒருவர், “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து!” என்று கூறினார்.

மற்றொருவர், “இறைவா! எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, “அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!” என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு!” என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.

மற்றொருவர், “இறைவா! நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன்.

பிறகு அவர் வந்து, “அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!” என்று கூறினார். “இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்” என்று கூறினேன். அதற்கவர், “என்னைக் கேலி செய்கின்றீரா?” என்று கேட்டார். “நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்” எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு” என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது. 

அறி : இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி-2215 

எண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூலி

عَائِشَةُ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنَ الأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ ، وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِم

“ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை பூமிக்குள் புதையுண்டு போவார்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்” என்று கூறினார்கள்.

அறி : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-2118

ஊரில் இருந்தாலும் போரில் கலந்த நன்மை

عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي غَزَاةٍ فَقَالَ إِنَّ أَقْوَامًا بِالْمَدِينَةِ خَلْفَنَا مَا سَلَكْنَا شِعْبًا ، وَلاَ وَادِيًا إِلاَّ وَهُمْ مَعَنَا فِيهِ حَبَسَهُمُ الْعُذْرُ

நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், “மதீனாவில் (போருக்கு வர வேண்டும் என்ற எண்ணமிருந்தும் வர முடியாமல் ஆகிவிட்ட) சிலர் இருக்கிறார்கள். நாம் எந்த மலைக் கணவாயையும், பள்ளத்தாக்கையும் அவர்கள் நம்முடன் இருக்கும் நிலையிலேயே தவிர நாம் கடக்கவில்லை. சில காரணங்களே அவர்களை (போரில் கலந்து கொள்ள முடியாமல்) தடுத்து விட்டன” என்று கூறினார்கள். 

அறி : அனஸ் (ரலி)
நூல்: புகாரி-2839 

தபூக் யுத்தத்திலிருந்து திரும்பி வரும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மணி மொழிகளை உதிர்க்கின்றார்கள். போரில் கலந்து கொண்டு போராட எண்ணம் இருந்தது. ஆனால் நோய் வாய்ப்பட்டிருந்ததால் போரில் கலந்து கொண்டு பங்கெடுக்க இயலவில்லை. இந்த எண்ணத்திற்காகவே அல்லாஹ் அவர்களுக்குப் போரில் பங்கெடுத்த கூலிகளை, ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் கடந்து சென்ற நன்மையைப் பரிசாக அளிக்கின்றான்.

கை மாறினாலும் கூலி மாறாது

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
قَالَ رَجُلٌ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ ، فَقَالَ : اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ زَانِيَةٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ ، فَقَالَ : اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَيْ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ ، فَقَالَ : اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى سَارِقٍ ، وَعَلَى زَانِيَةٍ ، وَعَلَى غَنِيٍّ فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ عَلَى سَارِقٍ فَلَعَلَّهُ أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ وَأَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا وَأَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ

ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் என கூறிக்கொண்டு இரவில் தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு திருடனுக்கு தர்மம் வழங்கப் பட்டுள்ளது” என்று கூறினர். (இதைக் கேட்ட) அவர் “அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும் (நாளை) நான் தர்மம் செய்வேன்” என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் வெளியே வந்து ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார்.

மறுநாள் காலை மக்கள் “இன்றிரவு விபச்சாரிக்கு தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது” என பேசிக் கொண்டனர். அதற்கு அவர் “அல்லாஹ்வே! விபச்சாரிக்கு தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்” என்று கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளியே வந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்து விட்டார். காலையில் மக்கள் “பணக்காரருக்கு தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது” என பேசிக் கொண்டனர். உடனே அவர் “அல்லாஹ்வே! திருடனிடமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்” எனக் கூறினார்.

அப்போது ஒருவர் அவரிடம் வந்து “நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதை விட்டுத் திருந்தக் காரணமாகலாம். நீர் விபச்சாரிக்குக் கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகலாம். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்” என்று கூறினார்.  

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-1421 

وَكَانَ أَبِي يَزِيدُ أَخْرَجَ دَنَانِيرَ يَتَصَدَّقُ بِهَا فَوَضَعَهَا عِنْدَ رَجُلٍ فِي الْمَسْجِدِ فَجِئْتُ فَأَخَذْتُهَا فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ وَاللَّهِ مَا إِيَّاكَ أَرَدْتُ فَخَاصَمْتُهُ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ لَكَ مَا نَوَيْتَ يَا يَزِيدُ وَلَكَ مَا أَخَذْتَ يَا مَعْنُ

என்னுடைய தந்தை யஸீது, தர்மம் செய்வதற்காக தீனார்களை எடுத்துச் சென்று பள்ளியில் ஒருவருக்கு அருகில் வைப்பது வழக்கம். நான் (பள்ளிக்கு) வந்து அந்த தீனார்களை எடுத்துக் கொண்டு (வீட்டுக்கு) வந்து விட்டேன். என்னுடைய தந்தை (இந்த தர்மத்தை) உன்னை நாடி நான் வழங்கவில்லை என்று சொன்னார்.

இந்த வழக்கை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் என் தந்தையை நோக்கி, “யஸீதே! நீ எண்ணிய நன்மை உனக்கு கிடைக்கும். மஃனே! நீ எடுத்த தீனார்கள் உனக்குத் தான்” என்று பதிலளித்தார்கள். 

அறி : அபூயஸீது பின் மஃன் (ரலி)
நூல் : புகாரி-1422 

நன்மை செய்ய நினைப்பதே நன்மை

عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ : قَالَ
إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِئَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً

நபி (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பற்றி அறிவிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் எழுதி விட்டான். பிறகு அவன் அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என்று (மனதில்) எண்ணி விட்டாலே  அவர் அதைச் செய்யாவிட்டாலும்  அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாகப் பதிவு செய்கின்றான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக பதிவு செய்கின்றான்.

ஆனால் ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகின்றான்.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி-6491 

எம். ஷம்சுல்லுஹா