Tamil Bayan Points

27) மக்காவைப் புறக்கணிக்கலாமா?

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

மக்காவைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் உம்முல் குரா கிராமங்களின் தாய் என்று வர்ணித்துக் கூறுகின்றான். அந்த மக்காவில் தான் இறை வணக்கத்திற்காக முதன் முதலில் கட்டப்பட்ட கஃபா அமைந்துள்ளது. ஹஜ் செய்வதற்காக உலகம் முழுவதிலிருந்தும் அங்கு தான் மக்கள் செல்ல வேண்டும். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் கஃபாவை நோக்கியே தொழ வேண்டியிருக்கிறது.

இப்படி எல்லா வகையிலும் மக்காவிற்கு அல்லாஹ் ஒரு மகத்துவத்தை வழங்கியிருக்கிறான். பூகோள ரீதியாகவும் மக்கா நடு நாயகமாக அமைந்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு மக்காவில் காணப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
மக்கா என்பது உம்முல் குரா என்பதிலும் கஃபா தான் உலகம் முழுவதற்கும் கிப்லா என்பதிலும் ஹஜ் செய்வதற்கு அங்கு தான் செல்ல வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏன் கஃபாவை கிப்லாவாக ஏற்றுக் கொண்டுள்ளோம்?ஏன் ஹஜ் செய்வதற்கு கஃபாவிற்குச் செல்கிறோம்? அல்லாஹ் அவ்வாறு கட்டளையிட்டுள்ளான். அதனால் அதை ஏற்று நாம் செயல்படுத்துகிறோம்.

இதையெல்லாம் கூறிய அல்லாஹ் இவர்கள் கேட்பது போல் மக்காவில் பார்க்கப்பட்ட பிறையை உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தால் அதையும் கூறியிருப்பான். உம்முடைய இறைவன் எதையும் மறப்பவன் அல்ல என்று குர்ஆன் கூறுகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த போதெல்லாம் மக்காவில் பிறை பார்த்து விட்டார்களா என்று பார்த்து தங்களுடைய நோன்பு மற்றும் பெருநாளைத் தீர்மானிக்கவில்லை.

அல்லாஹ்வோ அவனது தூதரோ கட்டளையிடாத ஒரு விஷயத்தை நாமாக ஏற்படுத்துவது அல்லாஹ்வையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் குறை கூறுவதாகும்.

இவர்கள் கூறிய சிறப்பெல்லாம் மக்காவிற்கு இருக்கிறது என்பதால் மக்காவில் கஃபாவில் அஸர் தொழும் போது தான் நாமும் அஸர் தொழ வேண்டும் என்று யாரும் கூற மாட்டார்கள். நமது ஊரில் எப்போது அஸர் தொழுகையின் நேரம் வருகின்றதோ அப்போது தான் தொழ வேண்டும். இதே அளவுகோல் தான் பிறைக்கும்.

மக்காவில் பிறை தென்படும் நாள் வேறு. நமது ஊரில் பிறை தென்படும் நான் வேறு. கஃபாவை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். மக்காவில் என்றைக்குப் பிறை பார்க்கின்றார்களோ அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனத்திற்கும் நாம் எடுத்துக்காட்டிய நபிமொழிகளுக்கும் மாற்றமானதாகும்.

மக்கா உலகின் மையமாக இருக்கிறது என்று கூறுவது அறிவியலுக்கு முரணானது;அடிப்படையில்லாதது. உருண்டையான பூமியில் எது மையப்பகுதி என்று யாராலும் கூற முடியாது. அப்படியே மையப்பகுதி என்று கூறுவதாக இருந்தால் பூமத்திய ரேகைப் பகுதியைச் சொல்லலாம். பூமத்திய ரேகை ஓடும் பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஊர் மட்டும் இல்லை. பல நாடுகள் உள்ளன. இந்த பூமத்திய ரேகை ஓடும் நாடுகளை எடுத்துப் பார்த்தால் அதிலும் மக்கா இல்லை. அப்படியே மக்கா அதில் அமைந்திருந்தாலும் அதன் காரணமாக மக்காவைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்ற வாதமாகும்.