Tamil Bayan Points

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on December 31, 2016 by Trichy Farook

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா?

ரமலான் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொழுகையைப் பின்பற்றி பெண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாமா?

இம்தியாஸ்

நேரடி ஒளிபரப்பாக எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டாலும் அது ஒரு செய்தியாக ஆகுமே தவிர அதில் நம்மையும் இணைக்காது. இதை அறிய பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.

மக்காவில் தொழுகை நடக்கும் போது அங்கே மழை பெய்தால் இங்கும் அந்த மழை இருந்தால் அதில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.

அங்கே தீவிபத்து நடக்கும் போது மக்கள் ஓட்டம் பிடித்தால் அதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நீங்களும் ஓட்டம் பிடிக்க மாட்டீர்கள். காரணம் அதற்கும், நமக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்று நம்முடைய அறிவு தீர்ப்பளிக்கிறது.

உலகில் எங்கோ மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. அதைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு ஒருவர் சென்னையில் ஓடினால் அவர் தனியாக ஓடினார் என்றுதான் நம்முடைய அறிவு தீர்ப்பளிக்கும். அவர் அந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார் என்று எந்த மனிதனின் அறிவும் தீர்ப்பு அளிக்காது.

ஏனெனில் ஒன்றைப் பின்பற்றுவது என்றால் அதற்கும், உங்களுக்கும் தொடர்ச்சியும் தொடர்பும் இருக்க வேண்டும். தொலைக்காட்சியில் இது இல்லை.

இமாம் பிழையாக ஓதினால் தஸ்பீஹ் கூறி இமாமின் தவறை அவருக்கு உணர்த்த வேண்டும். நீங்கள் இங்க்கிருந்து கொண்டு அவரது தவறைச் சுட்டிக்காட்ட முடியுமா? முடியாது. அப்படியானால் அவருக்கும் நமக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

அந்த சபையில் உள்ளவர்கள் உங்களுடன் தொடர்பில் இல்லை. நீங்கள் அவர்களுடன் தொடர்பில் இல்லை. நீங்கள் இங்கே தொழும்போது மதம் கொண்ட யானை ஒன்று வருவதைக் காண்கிறீர்கள், உடனே தொழுகையை விட்டுவிட்டு மற்றவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்து ஓடச் சொல்வீர்கள். இவ்வாறு நீங்கள் கூறும் போது மக்காவில் தொழுது கொண்டு இருப்பவர்கள் தமது தொழுகையில் நீடிப்பார்கள். உங்கள் எச்சரிக்கை அவர்களைக் கட்டுப்படுத்தாது. இந்த யானை அவர்களைப் பாதிக்காது.

இதிலிருந்து தெரிய வருவது என்ன? அவருக்கும் உங்களுக்கும் எந்த தொடர்பும் இணைப்பும் பின்பற்றுதலும் இல்லை என்ற உண்மை தெளிவாக தெரிகிறது.

தொலைக்காட்சியில் காட்டப்படுவது எங்கோ நடப்பதைத் தகவலாக சொல்வது தானே தவிர அதில் நம்மையும் இணைப்பது அல்ல. நாம் அதில் இணையவில்லை; இணைய முடியாது என்பதால் தொலைக்காட்சியைப் பின்பற்றி தொழக் கூடாது.