Tamil Bayan Points

மக்களை நேசித்த மாமனிதர்.!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 30, 2023 by Trichy Farook

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!

1400 ஆண்டுகள் கடந்த பிறகும், மக்கள் போற்றும் தலைவராக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திகழ்கிறார்கள். அவர்களை உலகம் முழுவதும் கோடான கோடி மக்கள் பின்பற்றுகிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், மக்களால் நேசிக்கப்படும் தலைவர் என்பதற்கும் மேலாக, மக்களை நேசிப்பவராக, மக்களுக்காகவே வாழ்ந்த தலைவராக முஹம்மது நபி திகழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் மக்களை எவ்வாறுரெல்லாம் நேசித்தார்கள் என்பாதை இந்த உரையில் காண்போம்.

மக்களை நேசித்த மாமனிதர்

لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ‏

உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.

(அல்குர்ஆன்: 9:128)

يَاْمُرُهُمْ بِالْمَعْرُوْفِ وَيَنْهٰٮهُمْ عَنِ الْمُنْكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبٰتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبٰۤٮِٕثَ وَيَضَعُ عَنْهُمْ اِصْرَهُمْ وَالْاَغْلٰلَ الَّتِىْ كَانَتْ عَلَيْهِمْ‌ ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ‌ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்குத் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும் அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரை கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 7:157)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள், மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார்கள். மக்கள் சிரமப்படுவது நபிகளாருக்குப் பெரும் துன்பத்தையும் துயரத்தையும் கொடுத்தது. ஆகவே, அல்லாஹ்வின் வழிகாட்டுதலின்படி மனிதகுலத்தை வாட்டி வதைக்கும் தீமைகளை ஒழித்து, நல்லறங்களைப் போதித்தார்கள். ஈருலகிலும் வெற்றி பெறுவதற்குரிய வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தார்கள். அதைப் புறக்கணித்து மறுமை வாழ்வை நாசப்படுத்திக் கொள்ளும் மக்களுக்காக வருத்தப்பட்டார்கள்.

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا‏

இச்செய்தியை அவர்கள் நம்பாவிட்டால் அவர்களுக்காகக் கவலைப்பட்டு, உம்மையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்.

(அல்குர்ஆன்: 18:6)

لَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏

அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்.

(அல்குர்ஆன்: 26:3)

நபிகளார் மக்களை அரவணைக்கும் குணமுடையவராவே இருந்தார்கள் 

தூதராகத் தேர்வான பிறகுதான் முஹம்மது நபியவர்கள், இப்படி மக்கள் மீது அக்கறை கொண்டவராக நடந்து கொண்டதாகக் கருதிவிடக் கூடாது. அதற்கு முன்பும் அண்ணலாரிடம் சமூக சிந்தனை மேலோங்கி இருந்தது. எல்லா வகையிலும் மக்களுக்கு உதவிக் கரம் நீட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தி மூலம் அறியலாம்.
(ஹிரா குகையில் முதன் முதலில் வானவர் ஜிப்ரீல் மூலம் நபிகள் நாயகத்திற்குக் குர்ஆன் வசனம் அருளப்பட்டது.) 

…فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُفُ فُؤَادُهُ، فَدَخَلَ عَلَى خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ: «زَمِّلُونِي زَمِّلُونِي» فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ، فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الخَبَرَ: «لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي» فَقَالَتْ خَدِيجَةُ: كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَكْسِبُ المَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، فَانْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ العُزَّى ابْنَ عَمِّ خَدِيجَةَ وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الجَاهِلِيَّةِ،…

…பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)யிடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.

அப்போது கதீஜா (ரலி) அவர்கள், ‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்;

வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் ‘வராக’விடம் அழைத்துச் சென்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி-3 

•உற்றார் உறவினருடன் இணக்கம்

•மற்றவர் சிரமத்தை நீக்குவது

•வறியவர்களுக்கு உதவுவது

•விருந்தினரை உபசரிப்பது,

•துன்பத்தில் இருப்போரை மீட்டெடுப்பது

இப்படி மனிதநேயத்தின் மகுடமாக முஹம்மது நபி வாழ்ந்தார்கள். மார்க்க விஷயத்திலும் கூட மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடக் கூடாதென நினைத்தார்கள். எனவே, முஸ்லிம்கள் ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய தொழுகையின் என்ணிக்கையைக் குறைத்துத் தருமாறு அல்லாஹ்விடம் கோரினார்கள். அல்லாஹ்வும் அருள் புரிந்தான்.

தன சமுதாயத்திற்காக அல்லாஹ்விடத்தில் மன்றாடினார்கள் 

(மிஃராஜ் பயணத்தின் போது நபிகளாரை ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் சென்றார்கள்.) அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்தவற்றில், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் உங்கள் சமுதாயத்தார் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது’ என்பதும் அடங்கும். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அங்கிருந்து) இறங்கி மூஸா (அலை) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்திய மூஸா (அலை) அவர்கள், ‘முஹம்மதே! உங்களுடைய இறைவன் உங்களிடம் என்ன உறுதிமொழி வாங்கினான்?’ என்று கேட்டான்.

நபி (ஸல்) அவர்கள், ‘நாள் ஒன்றுக்கு ஐம்பது நேரத் தொழுகைகளை (நான் கட்டாயம் தொழ வேண்டுமென) அவன் என்னிடம் உறுதிமொழி வாங்கினான்’ என்று பதிலளித்தார்கள். மூஸா(அலை) அவர்கள், ‘உங்கள் சமுதாயத்தாரால் அதை நிறைவேற்ற முடியாது. எனவே, நீங்கள் திரும்பிச் சென்று, உங்களுடைய இறைவனிடம் உங்களுக்கும் அவர்களுக்கும் (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைக்குமாறு கேளுங்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது தொடர்பாக ஆலோசனை கேட்பதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.

‘நீர் விரும்பினால் ஆகட்டும்’ என்று கூறுவதைப் போன்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சைகை செய்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சர்வ வல்லமை படைத்த(வனான இறைவ)னிடம் உயர்ந்தார்கள். அதே இடத்தில் நின்றவாறு நபி (ஸல்) அவர்கள், ‘என் இறைவா! எங்களுக்காக (தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்திடுவாயாக! ஏனெனில், என் சமுதாயத்தாரால் இதை நிறைவேற்ற இயலாது’ என்றார்கள். அப்போது அல்லாஹ் அவர்களுக்குப் பத்து தொழுகைகளைக் குறைத்தான்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். மீண்டும் அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவ்வாறே மீண்டும் மீண்டும் நபி (ஸல்) அவர்களை இறைவனிடம் மூஸா (அலை) அவர்கள் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தார்கள். முடிவில் அந்த (ஐம்பது) தொழுகை (நாள் ஒன்றுக்கு) ஐந்து தொழுகைகளாக மாறியது.

ஐந்துக்கு வந்த போதும் மூஸா (அலை) அவர்கள், நபி (ஸல்) அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘முஹம்மதே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் என் சமுதாயத்தாரான பனூஇஸ்ராயீல்களுக்கு இதைவிடக் குறைந்த அளவிலான தொழுகையையே கோரிப்பெற்றேன்.

ஆனால் அவர்கள் (அதைக் கூட நிறைவேற்றாது) பலவீனமடைந்து கைவிட்டுவிட்டார்கள். உங்கள் சமுதாயத்தாரோ உடலாலும் உள்ளத்தாலும் மேனியாலும் பார்வையாலும் கேள்வியாலும் பலவீனமானவர்கள். எனவே, திரும்பச் சென்று உங்களுக்காக (உங்கள் ஐவேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையை) குறைத்துக் கேளுங்கள்’ என்று கூறினார்கள்.

ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் யோசனை பெறுவதற்காக அவர் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவரும் அதை வெறுக்கவில்லை. ஐந்தாவது முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளாரை மேலே அழைத்துச் சென்றபோது நபி (ஸல்) அவர்கள், ‘என் இறைவா! என் சமுதாயத்தார் உடலாலும், உள்ளத்தாலும், கேள்வியாலும், பார்வையாலும், மேனியாலும் பலவீனமானவர்கள். எனவே, (தொழுகைகளை) குறைத்திடுவாயாக!’ என்று கோரினார்கள்.

அதற்கு சர்வ வல்லமை படைத்தவன் ‘முஹம்மதே!’ என்று அழைத்தான். அதற்கு ‘இதோ இறைவா! நான் காத்திருக்கிறேன்; கட்டளையிடு’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ், ‘(ஒரு முறை சொல்லப்பட்ட) சொல் என்னிடம் மாற்றப் படுவதில்லை; அதை (ஐவேளைத் தொழுகையை) நான் உங்களின் மீது ‘லவ்ஹுல் மஹ்ஃபூல்’ எனும் பாதுகாக்கப்பெற்ற பதிவேட்டில் கடமையாக(ப் பதிவு) ஆக்கிவிட்டேன்.

மேலும், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகள் உண்டு. எனவே, அவை உங்களுக்கு ஐந்து நேரத் தொழுகைகளாக இருப்பினும், பாதுகாக்கப் பெற்ற பதிவேட்டில் அவை ஐம்பது நேரத் தொழுகைகள் (உடைய நன்மைக்கு நிகர்) ஆகும்’ என்று சொன்னான். பின்னர் நபி (ஸல்) அவர்கள், மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். அப்போது ‘என்ன செய்தீர்?’ என்று மூஸா(அலை) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (ஐம்பதாயிருந்த தொழுகைகளின் எண்ணிக்கையை ஐந்தாக) அவன் குறைத்தான். ஒவ்வொரு நற்செயலுக்கும் அதைப்போன்ற பத்து மடங்கு நன்மைகளை வழங்கினான்’ என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி-7517 

ஐம்பது நேரம் தொழுவது மக்களுக்கு மிகவும் கடினம். ஆகையால், தொழுகையைக் குறைத்து வழங்குவாயாக என அல்லாஹ்விடம் மக்களுக்காக நபியவர்கள் மன்றாடினார்கள். இந்தச் செய்தி நபிகளார் சமூக அக்கறைக் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதற்குச் சான்று. இதுபோன்று இன்னொரு நிகழ்வைப் பாருங்கள்.

أَعْتَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً بِالعِشَاءِ، حَتَّى رَقَدَ النَّاسُ وَاسْتَيْقَظُوا، وَرَقَدُوا وَاسْتَيْقَظُوا، فَقَامَ عُمَرُ بْنُ الخَطَّابِ فَقَالَ: الصَّلاَةَ – قَالَ عَطَاءٌ: قَالَ ابْنُ عَبَّاسٍ -: فَخَرَجَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ الآنَ، يَقْطُرُ رَأْسُهُ مَاءً، وَاضِعًا يَدَهُ عَلَى رَأْسِهِ، فَقَالَ: «لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي، لَأَمَرْتُهُمْ أَنْ يُصَلُّوهَا هَكَذَا»

நபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். மக்கள் எல்லாம் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) எழுந்து ‘தொழுகை’ எனக் கூறினார்கள். உடன் நபி (ஸல்) அவர்கள் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையைத் தலையில் வைத்தவர்களாகப் புறப்பட்டதை இன்று பார்ப்பது போலுள்ளது. ‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகாது என்றால் அவர்களை இந்த நேரத்தில் தொழுமாறு கட்டளையிட்டிருப்பேன்’ என்று அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-571 , முஸ்லிம்-1121 

வணக்க வழிபாடுகளிலும் மக்களின் நலன் 

மார்க்கத்தில் ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்பம் நேரம், இறுதி நேரம் சொல்லப்பட்டுள்ளது. தொழுகைகளை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதுதான் சிறந்தது. ஆனால், இஷா தொழுகையை அதன் இறுதி நேரத்தில் தொழுவதே சிறந்தது. ஆகவே அந்த நேரத்தில் இஷாவை ஜமாஅத்தாகத் தொழுமாறு மக்களுக்கு ஏவலாம் என்று எண்ணுகிறார்கள். மக்களுக்குக் கஷ்டம் ஏற்பட்டுவிடும் என்பதால் அவ்வாறு கட்டளையிடும் முடிவை மாற்றிக் கொள்கிறார்கள்.

இங்கு, அனைத்து ஆன்மீகத் தலைவர்களுக்கும் சிறந்தவொரு பாடம் இருக்கிறது. வணக்க வழிபாடுகள் எனும் பெயரில் மக்களின் செல்வங்களை, சொத்துக்களை அபகரிக்கிற ஆன்மீகத் தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் மக்களின் அறியாமையை ஆதாயமாக்கிக் கொள்கிறார்கள்.

இத்தகைய ஆட்கள் அல்லாஹ்வின் தூதரைப் பார்த்து ஆன்மீகத் தலைவருக்குரிய தகுதியைத் தெரிந்து கொள்ளட்டும். ஏன் தெரியுமா? பத்து நிமிடத் தொழுகையிலும் கூட மக்களுக்குத் தொல்லை ஏற்பட்டு விடக் கூடாதென நினைக்கும் மகானாக முஹம்மது நபி திகழ்ந்தார்கள்.

أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلاَةِ وَأَنَا أُرِيدُ إِطَالَتَهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ»

‘நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’. என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி-709 

தொழுகைக்குத் தூய்மை அவசியம். முஹம்மது நபியவர்கள் தூய்மையை அதிகம் விரும்புவார்கள். மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய இயற்கை மரபுகளில் ஒவ்வொரு நாளும் பல்துலக்குவதையும் முக்கிய ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்கள். பல் துலக்குவதை அதிகம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு கடமையான தொழுகைக்கு முன்பும் பல்துலக்குவதை நபியவர்கள் கட்டாயம் ஆக்க நினைக்கிறார்கள். ஆனாலும் ஆக்கவில்லை. ஏன் தெரியுமா? அதற்குரிய பதிலை நபியவர்களே கூறியிருக்கிறார்கள்.

 أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ»

‘‘இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லது என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சாமலிருந்தால் ஒவ்வொரு தொழுகையின்போதும் பல் துலக்குமாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-7240 , முஸ்லிம்-422 

இப்படி, மக்கள் நலன் நாடும் ஆன்மீகத் தலைவரையே முஸ்லிம்கள் வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பின்வரும் செய்தியும் முஹம்மது நபியின் சிறப்பைப் பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.

 أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ ذَاتَ لَيْلَةٍ مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي المَسْجِدِ، فَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ، فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ، فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ، فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ المَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ المَسْجِدُ عَنْ أَهْلِهِ حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، لَكِنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ، فَتَعْجِزُوا عَنْهَا» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர்.

(மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர்.

நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை. (அன்று இரவு நபியவர்கள் பள்ளிக்கு வரவில்லை.) சுப்ஹுத் தொழுகைக்குத் தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் “அம்மா பஅத்’ (இறைவாழ்த்துக்குப் பின்…) எனக் கூறிவிட்டு, ‘‘நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன். (ஆகவே தான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக்காக பள்ளிக்கு வரவில்லை)’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி-924 

ஐவேளைத் தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறந்த தொழுகை இரவில் தொழுவதாகும். அதைத் தொழுவது முஹம்மது நபிக்குக் கட்டாயமாக இருந்தது. அத்தொழுகை மக்களுக்கும் கடமையாக ஆக்கப்பட்டிருந்தால் பெரும் பாரமாக இருந்திருக்கும். அந்த நிலை ஏற்பட்டு விடாதவாறு நபியவர்கள் நடந்து கொண்டார்கள். இன்னொரு நிகழ்வைப் பாருங்கள்.

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«إِيَّاكُمْ وَالوِصَالَ» مَرَّتَيْنِ قِيلَ: إِنَّكَ تُوَاصِلُ، قَالَ: «إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِ، فَاكْلَفُوا مِنَ العَمَلِ مَا تُطِيقُونَ»

‘தொடர் நோன்பு வைப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள். ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ‘என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரக்கூடிய நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்; எனவே நீங்கள் அமல்களில் உங்கள் சக்திக்கு உட்பட்டுச் சிரமம் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-1966 

இதுபோன்ற ஆன்மீக குருவை இன்று காண முடியுமா? ஆன்மீகத்தின் பெயரால் பொய்யான சடங்குகள், பரிகாரங்கள் சொல்லி மக்களை அலைய விடும் ஆன்மீகவாதிகளின் பின்னே போகும் மக்கள் சிந்திக்க வேண்டும். பொய்யான கொள்கைகள், மூடநம்பிக்கைகளை விட்டும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? முஹம்மது நபி பற்றித் தெரிந்து கொள்ள முன்வாருங்கள். எதிலும் மக்கள் துயர் அடைந்து விடக் கூடாதென நினைக்கும் அற்புதத் தலைவரைப் பாருங்கள்.

ஆன்மிகத்திலும் மக்களுக்கு நலன் நாடிய இறைத்தூதர்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَ أَضَاةِ بَنِي غِفَارٍ، قَالَ: فَأَتَاهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: إِنَّ اللهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى حَرْفٍ، فَقَالَ: «أَسْأَلُ اللهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ»، ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ، فَقَالَ: «إِنَّ اللهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى حَرْفَيْنِ»، فَقَالَ: «أَسْأَلُ اللهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ»، ثُمَّ جَاءَهُ الثَّالِثَةَ، فَقَالَ: إِنَّ اللهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى ثَلَاثَةِ أَحْرُفٍ، فَقَالَ: «أَسْأَلُ اللهَ مُعَافَاتَهُ وَمَغْفِرَتَهُ، وَإِنَّ أُمَّتِي لَا تُطِيقُ ذَلِكَ»، ثُمَّ جَاءَهُ الرَّابِعَةَ، فَقَالَ: إِنَّ اللهَ يَأْمُرُكَ أَنْ تَقْرَأَ أُمَّتُكَ الْقُرْآنَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَأَيُّمَا حَرْفٍ قَرَءُوا عَلَيْهِ فَقَدْ أَصَابُوا.

நபி (ஸல்) அவர்கள் பனூ ஃகிஃபார் குலத்தாரின் நீர்நிலை அருகே இருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஒரேயொரு ஓதல் முறைப்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன்.

(பல்வேறு மொழிவழக்குகள் கொண்ட) என் சமுதாயத்தார் இதற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி) நபியவர்களிடம் வந்து, “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் இரண்டு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்” என்று கூறினார்கள். (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் “நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன்.

என் சமுதாயத்தார் இ(வ்வாறு ஓதல் முறையை இரு முறைகளுக்குள் அடக்குவ)தற்குச் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூறினார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்றாவது முறை (இறைவனிடம் சென்று விட்டுத் திரும்பி)வந்து, “உங்கள் சமுதாயத்தார் குர்ஆனை மூன்று ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்” என்று கூறினார்கள்.

(மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பையும் பிழை பொறுத்தலையும் வேண்டுகிறேன். இ(வ்வாறு ஓதல் முறையை மூன்று முறைகளுக்குள் அடக்குவ)தற்கு என் சமுதாயத்தார் சக்தி பெறமாட்டார்கள்” என்று கூறினார்கள். பிறகு நான்காவது முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் (இறைவனிடம் சென்றுவிட்டுத் திரும்பி)வந்து, “குர்ஆனை உங்கள் சமுதாயத்தார் ஏழு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அவர்கள் (இந்த ஏழு முறைகளில்) எந்த முறைப்படி ஓதினாலும் அவர்கள் சரியாகவே ஓதினார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி),
நூல்: முஸ்லிம்-1492 

திருக்குர்ஆனை ஓதுவது மக்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்தார்கள். அல்லாஹ்வும் அதை ஏற்றுக் கொண்டான். இப்படி ஆன்மீகம், அரசியல் என்று எல்லா விஷயத்திலும் மக்களுக்கு நலன் நாடும் நாயகராக விளங்கினார்கள்.
ஒரு சமயம், மக்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. உடனே அல்லாஹ்வின் அருளால் அந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வை முன்வைத்தார்கள். இதோ பாருங்கள்.

மக்களின் பசியைப் போக்கிய நபிகளார் 

 عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ ضَحَّى مِنْكُمْ فَلاَ يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَبَقِيَ فِي بَيْتِهِ مِنْهُ شَيْءٌ» فَلَمَّا كَانَ العَامُ المُقْبِلُ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ المَاضِي؟ قَالَ: «كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا، فَإِنَّ ذَلِكَ العَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ، فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا»

நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்‘ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸலமா இப்னு அக்வஃ (ரலி),
நூல்: புகாரி-5569 

இன்றிருக்கும் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள்? நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அன்றாடம் ஒருவேளை உணவுக்காகத் தவிக்கும் மக்களின் பசியைப் போக்காமல், தங்களின் முன்னாள் தலைவர்களுக்காகப் பல்லாயிரம் கோடி செலவில் சிலைகளையும் மணி மண்டபங்களையும் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்காக அது செய்வேன், இது செய்வேன் என்று வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, கடமைகளை மறந்து சொகுசாக சுற்றித் திரிகிறார்கள். அரசுப் பணத்தை அள்ளி வைத்துக் கொண்டு மக்களுக்கு சேவை செய்வதாகப் பொய் சொல்லும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள் ஏராளம்!

ஆண்டுகள் பல ஓடினாலும் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாமல் இருக்கின்றன. சாலை, போக்குவரத்து, குடிநீர் போன்ற பல அடிப்படை வசதிகள் இன்னும் பலருக்குக் கிடைக்கவில்லை. எங்கும் எதிலும் ஊழல் சப்தம் அதிகமாய் ஒலிக்கிறது. இப்படி மக்களுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புகளை மறந்து, அவர்களை வாட்டி வதைக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக முஹம்மது நபியவர்கள் அல்லாஹ்விடம் கையேந்தி இருக்கிறார்கள்.

சமூதாயப் பற்றிலும் அக்கறை காட்டிய நபிகளார்

…أَنْ أُخْبِرَكَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي بَيْتِي هَذَا: «اللهُمَّ، مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ، فَاشْقُقْ عَلَيْهِ، وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ، فَارْفُقْ بِهِ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்கு உள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: முஸ்லிம்-3732 

இந்தப் பிரார்த்தனை நபிகளாருக்குள் இருந்த மக்கள் மீதான பாசத்தின் நேசத்தின் வெளிப்பாடு. மக்கள் துன்பம் அடைந்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தின் அடையாளம். மக்களுக்குரிய உரிமைகளைக் கொடுக்காமல், கடமைகளை சரிவரச் செய்யாமல், சமூகத்தைச் சீரழிப்போர் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் கேட்ட பிரார்த்தனைக்கு அஞ்சிக் கொள்ளட்டும்.

தலைவர்களாக இருப்பவர்கள் தங்களின் பொறுப்புக்குக் கீழிருக்கும் மக்கள் மீது எந்தளவுக்கு அக்கறை காட்ட வேண்டும் என்பதற்கு முஹம்மது நபி முன்மாதிரியாக இருக்கிறார்கள். இதைப் பின்வரும் செய்தி மூலமும் அறிய முடிகிறது.

…وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ عَامَّةٍ، وَأَنْ لَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ، فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ، وَإِنَّ رَبِّي قَالَ: يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ، وَإِنِّي أَعْطَيْتُكَ لِأُمَّتِكَ أَنْ لَا أُهْلِكَهُمْ بِسَنَةٍ عَامَّةٍ، وَأَنْ لَا أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ، يَسْتَبِيحُ بَيْضَتَهُمْ، وَلَوِ اجْتَمَعَ عَلَيْهِمْ مَنْ بِأَقْطَارِهَا – أَوْ قَالَ مَنْ بَيْنَ أَقْطَارِهَا – حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا، وَيَسْبِي بَعْضُهُمْ بَعْضًا

நான் என் இறைவனிடம் ‘‘என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே’’ எனப் பிரார்த்தித்தேன். மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே. அவ்வாறு நீ சாட்டினால், அவர்களது ஆட்சியும் கண்ணியமும் முற்றாக அழிந்து விடும்’’ என்றும் பிரார்த்தித்தேன். என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன்.

மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்க மாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள்” என்று கூறினான். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி),
நூல்: முஸ்லிம்-5538 

அடுத்த தலைமுறைகள் மீதும் அக்கறை காட்டிய நபி 

மக்களுக்கு அழிவு ஏற்படுவதை, அவர்களின் வாழ்வுக்கு ஆபத்து வருவதை முஹம்மது நபியவர்கள் வெறுத்தார்கள். இன்றைய பல தலைவர்கள் எப்படி அவர்களின் சுயநலத்திற்காக, உலக ஆதாயத்திற்காக, சமூகத்தில் வேண்டுமென்றே கலவரங்களை, குண்டு வெடிப்புகளை, வகுப்பு வாதப் பிரச்சனைகளை உண்டாக்குவதை மறுக்க முடியுமா?

மக்களை அழித்தாவது ஆட்சிக் கட்டிலில் ஏறவும் அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் துடிக்கும் அவலம் நேரிடுகிறது. ஆனால், முஹம்மது நபியவர்கள் அப்போது இருந்த மக்கள் மட்டுமல்ல! இனிமேல் வரப்போகும் தலைமுறைகள் கூட நன்றாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

أَنَّهَا قَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: هَلْ أَتَى عَلَيْكَ يَوْمٌ كَانَ أَشَدَّ مِنْ يَوْمِ أُحُدٍ، قَالَ: ” لَقَدْ لَقِيتُ مِنْ قَوْمِكِ مَا لَقِيتُ، وَكَانَ أَشَدَّ مَا لَقِيتُ مِنْهُمْ يَوْمَ العَقَبَةِ، إِذْ عَرَضْتُ نَفْسِي عَلَى ابْنِ عَبْدِ يَالِيلَ بْنِ عَبْدِ كُلاَلٍ، فَلَمْ يُجِبْنِي إِلَى مَا أَرَدْتُ، فَانْطَلَقْتُ وَأَنَا مَهْمُومٌ عَلَى وَجْهِي، فَلَمْ أَسْتَفِقْ إِلَّا وَأَنَا بِقَرْنِ الثَّعَالِبِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا أَنَا بِسَحَابَةٍ قَدْ أَظَلَّتْنِي، فَنَظَرْتُ فَإِذَا فِيهَا جِبْرِيلُ، فَنَادَانِي فَقَالَ: إِنَّ اللَّهَ قَدْ سَمِعَ قَوْلَ قَوْمِكَ لَكَ، وَمَا رَدُّوا عَلَيْكَ، وَقَدْ بَعَثَ إِلَيْكَ مَلَكَ الجِبَالِ لِتَأْمُرَهُ بِمَا شِئْتَ فِيهِمْ، فَنَادَانِي مَلَكُ الجِبَالِ فَسَلَّمَ عَلَيَّ، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ، فَقَالَ، ذَلِكَ فِيمَا شِئْتَ، إِنْ شِئْتَ أَنْ أُطْبِقَ عَلَيْهِمُ الأَخْشَبَيْنِ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بَلْ أَرْجُو أَنْ يُخْرِجَ اللَّهُ مِنْ أَصْلاَبِهِمْ مَنْ يَعْبُدُ اللَّهَ وَحْدَهُ، لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا

நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறைய துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன்.

‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம்.

(இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார். உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)’ என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: புகாரி-3231 

நபிகளாரின் ஆசை 

உலக வாழ்வில் மட்டுமல்ல! அழியா மறுமை வாழ்விலும் மக்கள் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள், முஹம்மது நபி. இங்கு மட்டுமல்ல! வாய்ப்புக் கிடைத்தால் மறுமையிலும் மக்களுக்காக உதவி செய்ய முடிந்தளவு முயற்சிப்பார்கள். இது குறித்த முன்னறிவிப்பு நபிமொழியில் இடம் பெற்றுள்ளது.

«لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ مُسْتَجَابَةٌ، فَتَعَجَّلَ كُلُّ نَبِيٍّ دَعْوَتَهُ، وَإِنِّي اخْتَبَأْتُ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ، فَهِيَ نَائِلَةٌ إِنْ شَاءَ اللهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا»

‘‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு; எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்-338 , புகாரி-6304 

முஹம்மது நபியவர்கள் மறுமையிலும் மக்களுக்கு உதவக் காத்திருப்பார்கள் என்பதை அறிந்து கொண்டோம். அதுமட்டுமல்ல! நிரந்தரமான மறுமை வாழ்வின் போது, மக்கள் சொர்க்கத்தில் நிறைந்து இருக்க வேண்டும் என்பதும் அவர்களின் ஆசையாக இருந்தது என்பதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகிறது.

…فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ، وَمِنْكُمْ وَاحِدٌ، ثُمَّ أَنْتُمْ فِي النَّاسِ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جَنْبِ الثَّوْرِ الأَبْيَضِ – أَوْ كَالشَّعْرَةِ البَيْضَاءِ فِي جَنْبِ الثَّوْرِ الأَسْوَدِ – وَإِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الجَنَّةِ» فَكَبَّرْنَا، ثُمَّ قَالَ: «ثُلُثَ أَهْلِ الجَنَّةِ» فَكَبَّرْنَا، ثُمَّ قَالَ: «شَطْرَ أَهْلِ الجَنَّةِ» فَكَبَّرْنَا

…நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவருக்கு யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் இருப்பார்கள்’ என்று கூறிவிட்டு பிறகு, ‘நீங்கள் (மறுமை நாளில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போன்றுதான்’ அல்லது ‘கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போன்றுதான்’ (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்’ என்று கூறினார்கள்.

பின்னர் ‘(என் சமுதாயத்தினராகிய) நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த நற்செய்தி கேட்டு) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்களில், ‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள். நாங்கள் (மகிழ்ச்சியால் மீண்டும்) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம். பிறகு நபியவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்கவேண்டும்’ என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறினோம்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி),
நூல்: புகாரி-4741 

சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இம்மையிலும் மறுமையிலும் மக்கள் வெற்றி பெற வேண்டும், ஈடேற்றம் பெற வேண்டும் என்பதற்காக முஹம்மது நபி தமது வாழ்வையே அர்ப்பணம் செய்தார்கள். அசத்திய அழிவிலிருந்து மனித குலத்தைக் காப்பாற்றுவது தான் அவர்களின் பணியாக இருந்தது.

إِنَّ مَثَلِي وَمَثَلَ مَا بَعَثَنِيَ اللهُ بِهِ كَمَثَلِ رَجُلٍ أَتَى قَوْمَهُ، فَقَالَ: يَا قَوْمِ إِنِّي رَأَيْتُ الْجَيْشَ بِعَيْنَيَّ، وَإِنِّي أَنَا النَّذِيرُ الْعُرْيَانُ، فَالنَّجَاءَ، فَأَطَاعَهُ طَائِفَةٌ مِنْ قَوْمِهِ، فَأَدْلَجُوا فَانْطَلَقُوا عَلَى مُهْلَتِهِمْ، وَكَذَّبَتْ طَائِفَةٌ مِنْهُمْ فَأَصْبَحُوا مَكَانَهُمْ، فَصَبَّحَهُمُ الْجَيْشُ فَأَهْلَكَهُمْ وَاجْتَاحَهُمْ، فَذَلِكَ مَثَلُ مَنْ أَطَاعَنِي وَاتَّبَعَ مَا جِئْتُ بِهِ، وَمَثَلُ مَنْ عَصَانِي وَكَذَّبَ مَا جِئْتُ بِهِ مِنَ الْحَقِّ

எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் தம் சமூகத்தாரிடம் சென்று, “என் சமுதாயமே! நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (அப்படை எந்நேரமும் உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான் நிர்வாணமாக (ஓடி)வந்து எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன். ஆகவே, தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

அப்போது அவருடைய சமூகத்தாரில் ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல நடந்து தப்பிவிட்டனர். ஆனால், அவர்களில் மற்றொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்து காலையிலும் அங்கேயே தங்கியிருந்தனர். ஆகவே, அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.

இதுதான் எனக்குக் கீழ்ப்படிந்து, நான் கொண்டுவந்த (மார்க்கத்)தைப் பின்பற்றி நடந்தவருக்கும், எனக்கு மாறுசெய்து, நான் கொண்டுவந்த சத்தியத்தை ஏற்க மறுத்தவருக்கும் உதாரணமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),
நூல்: முஸ்லிம்-4588 

 عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنَّمَا مَثَلِي وَمَثَلُ أُمَّتِي كَمَثَلِ رَجُلٍ اسْتَوْقَدَ نَارًا، فَجَعَلَتِ الدَّوَابُّ وَالْفَرَاشُ يَقَعْنَ فِيهِ، فَأَنَا آخِذٌ بِحُجَزِكُمْ وَأَنْتُمْ تَقَحَّمُونَ فِيهِ»

‘‘எனது நிலையும் என் சமுதாயத்தாரின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். விட்டில் பூச்சிகளும் இதர பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. (நரக நெருப்பில் விழுவதிலிருந்து உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்), நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: முஸ்லிம்-4589 

இதுவரை பார்த்த செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன? இப்படி மக்களை நேசித்த, மக்களுக்காகவே வாழ்ந்த மாபெரும் தலைவராக முஹம்மது நபி இருந்தார்கள். ஆகையால் தான் முஸ்லிம் அல்லாத மக்களும் கூட முஹம்மது நபியின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு, குடிமக்களாக வாழ்ந்தார்கள்.

இத்தகைய தலைவரையே மனித குலத்திற்கு வாழ்க்கை நெறியைக் கற்றுத் தரும் இறுதித் தூதராக ஏக இறைவன் அனுப்பியுள்ளான். இதை மனதில் கொண்டு எல்லா விஷயத்திலும் நபிவழிப்படி செயல்பட்டு ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.