Tamil Bayan Points

மக்களுக்கு நெருக்கமான மாபெரும் தலைவர்.!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

Last Updated on September 30, 2023 by Trichy Farook

மக்களுக்கு நெருக்கமான மாபெரும் தலைவர்

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

சமூகத்தில் பல்வேறு விதமான கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளைச் சார்ந்த மக்களால் போற்றப்படும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது நடை, உடை, பாவனை போன்ற வெளிப்படைத் தோற்றமே அவர்களின் அந்தஸ்தை காட்டிக் கொடுத்துவிடும். அவர்கள் தகுதிக்கும் பொறுப்புக்கும் ஏற்ப இருக்கிறார்கள் என்று அதற்குக் காரணத்தைச் சொல்லக் கூடும்.

அதுகூடப் பரவாயில்லை! அவர்கள் மக்களோடு கலந்து வாழ்வதில்லை. சமூக நீரோட்டத்தில் இணையாமல், சுற்றியிருக்கும் நபர்களை விட்டும் விலகியே இருக்கிறார்கள். மற்றவர்களை விடவும் கூடுதல் தகுதியும் உயர்வும் பெற்றவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள்.
இத்தகைய நபர்களை பார்த்துப் பழகிப்போன சமூகத்திற்கு, இப்படித் தான் எங்கும் தலைவர்கள் இருக்க வேண்டும்; இருப்பார்கள் என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டது.

ஆனால், இந்த மாயத் தோற்றத்தை உடைத்தெறியும் வகையில் முஹம்மது நபியின் வாழ்க்கை இருந்தது. இன்றைய காலத்தில் ஒரு தலைவர் வந்தால், ‘வழிவிடுங்கள், வழிவிடுங்கள்’ என்று கூவிக் கொண்டு, மக்களை அகற்றிச் செல்லும் பாதுகாவலர்கள் இருபக்கமும் இருப்பார்கள். பின்புறம், தொண்டர்கள் மூலம் அவரின் அருமை பெருமைகள் கோஷமாய் ஒலித்துத் கொண்டிருக்கும்.

இதுதான் ஊரறிந்த தலைவர்களின் நிலையாய் இருக்கிறது. இத்தகைய ஆரவாரத்தைத் தலைவர்களும் விரும்புகிறார்கள். ஆனால், இதற்கு மாற்றமாக முஹம்மது நபி திகழ்ந்தார்கள். அவர்கள் எவ்வாறு மக்களிடம் நெருக்கமாக திகழ்ந்தார்கள் என்பதை இந்த உரையில் காண்போம்..

ஆட்சித் தலைவர், ஆன்மீகத் தலைவர்

«مَا رُئِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ مُتَّكِئًا قَطُّ، وَلَا يَطَأُ عَقِبَهُ رَجُلَانِ»

நபி (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ, அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூற்கள்: அபூதாவூத்-3770 (3278), அஹ்மத் (6262)

ஆட்சித் தலைவர், ஆன்மீகத் தலைவர் என்ற இரு அதிகாரத்தில் இருந்தாலும் முஹம்மது நபி எளிமையாக நடந்து கொள்வார்கள். வெளியூரில் இருந்து எவரேனும் வந்தால் எளிதில் அறிய முடியாத அளவுக்கு மக்களோடு கலந்து வாழ்வது நபியின் இயல்பாக இருந்தது. இதோ ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

மக்களோடு மக்களாக இருந்தார்கள் 

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியினுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் ‘உங்களில் முஹம்மத் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள்.

‘இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத் நபி)’ என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை ‘அப்துல் முத்தலிபின் பேரரே!’ என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் ‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் ‘நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன்.

அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாது’ என்றார். அதற்கவர்கள் ‘நீர் விரும்பியதைக் கேளும்’ என்றார்கள். உடனே அம்மனிதர் ‘உம்முடையதும் உமக்கு முன்னிருந்தோரதும் இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு அவர்கள் ‘அல்லாஹ் சாட்சியாக ஆம்!’ என்றார்கள்.

அடுத்து அவர் ‘அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கவர்கள் ‘ஆம்! அல்லாஹ் சாட்சியாக’ என்றார்கள்.

அடுத்து அவர் ‘இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கவர்கள் ‘ஆம்! அல்லாஹ் சாட்சியாக’ என்றார்கள்.

அடுத்து அவர், ‘இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் (இறைவன் மீது சாட்சியாக)’ என்றார்கள்.

உடனே அம்மனிதர் ‘நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்’ என்று கூறிவிட்டு ‘நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சகோதரன்’ என்றும் கூறினார்.

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி),
நூல்: புகாரி-63 

சாமானிய மக்களிடமும் அன்பு காட்டிய இறைதூதர்

மிடுக்கான ஆடையும், விரைப்பான காவலர்களும் முஹம்மது நபிக்கு இருந்திருந்தால் அங்கு வந்தவர், உங்களில் முஹம்மத் யார்? என்ற கேள்வியேக் கேட்டிருக்க மாட்டார். அந்தளவுக்கு, சர்வ சாதாரணமாக தமது தோழர்களோடு முஹம்மது நபி இருந்தார்கள்.

عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ
قُلْتُ لِجَابِرِ بْنِ سَمُرَةَ: أَكُنْتَ تُجَالِسُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ كَثِيرًا، «كَانَ لَا يَقُومُ مِنْ مُصَلَّاهُ الَّذِي يُصَلِّي فِيهِ الصُّبْحَ، أَوِ الْغَدَاةَ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، فَإِذَا طَلَعَتِ الشَّمْسُ قَامَ، وَكَانُوا يَتَحَدَّثُونَ فَيَأْخُذُونَ فِي أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَيَضْحَكُونَ وَيَتَبَسَّمُ»

“நீங்கள் நபி (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்ததுண்டா?’’ என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) என்ற நபித்தோழரிடம் கேட்டேன். அதற்கவர் “ஆம்’’ என்றார். மேலும் தொடர்ந்து “வைகறைத் தொழுகை முடிந்ததும் சூரியன் உதிக்கும் வரை நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். சூரியன் உதித்த பின்னர் எழுவது தான் அவர்களின் வழக்கம்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்களும் அமர்ந்திருப்பார்கள். அப்போது அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்காத காலத்தில்) தமது நடவடிக்கைகள் குறித்து நபித்தோழர்கள் பேசுவார்கள். அதை நினைத்துச் சிரிப்பார்கள். இதைப் பார்க்கும் நபி (ஸல்) அவர்கள் புன்னகைப்பார்கள்’’ என்று கூறினார்.

அறிவிப்பவர்: ஸிமாக் பின் ஹர்பு,
நூல்: முஸ்லிம்-1188 

இதுபோன்ற தலைவர்களை இன்று காண முடியுமா? தொண்டர்கள் தமக்கு அருகே அமர்வது, தமக்குக் குறுக்கே செல்வது கூடத் தனது கவுரவத்திற்கு இழுக்கு எனக் கதறும் தலைவர்கள் ஏராளம்! சாமானிய மக்களை மட்டமாய் நினைத்து மதிப்பில்லாமல் நடப்பவர்களும், அவர்களைக் கேவலமாக நடத்துபவர்களும் உள்ளனர். இதுபோன்ற ஆட்களுக்கு முஹம்மது நபியின் வாழ்வில் தக்க பாடம் உள்ளது.

மிகவும் யதார்த்தமாக இருந்த நபிகளார் 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ تَبْكِي عِنْدَ قَبْرٍ، فَقَالَ: «اتَّقِي اللَّهَ وَاصْبِرِي» قَالَتْ: إِلَيْكَ عَنِّي، فَإِنَّكَ لَمْ تُصَبْ بِمُصِيبَتِي، وَلَمْ تَعْرِفْهُ، فَقِيلَ لَهَا: إِنَّهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَتْ بَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ تَجِدْ عِنْدَهُ بَوَّابِينَ، فَقَالَتْ: لَمْ أَعْرِفْكَ، فَقَالَ: «إِنَّمَا الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى»

ஒரு அடக்கத்தலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) கடந்து சென்றார்கள். “இறைவனை அஞ்சிக் கொள்! பொறுமையைக் கடைப்பிடி!’’ என்று அப்பெண்ணுக்கு அவர்கள் அறிவுரை கூறினார்கள். அப்பெண் நபியவர்களை அறியாததால் “உமது வேலையைப் பார்த்துக் கொண்டு செல்லும்! எனக்கேற்பட்ட துன்பம் உமக்கு ஏற்படவில்லை’’ எனக் கூறினார்.

பின்னர், தமக்கு அறிவுரை கூறியவர் நபி (ஸல்) என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பெண் நபியவர்களின் வீட்டுக்கு வந்தார். வாசலில் எந்தக் காவலர்களையும் அவர் காணவில்லை. உள்ளே வந்து “உங்களைப் பற்றி அறியாமல் பேசி விட்டேன்’’ எனக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “துன்பத்தின் துவக்கத்தில் ஏற்படுவது தான் பொறுமை’’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: புகாரி-1283 , 7154

பார்த்த உடனே நாட்டின் தலைவர் என்று தெரிந்து கொள்ளும் வகையில், படை பரிவாரங்கள் சூழப்பவனி வருபவராக நபிகளார் இருக்கவில்லை. மிகவும் யதார்த்தமாக இருந்தார்கள்.
மேலே சொன்ன சம்பவத்தைப் போன்று அறியாமல் கூட ஒரு தலைவரை, அதிகாரியை இன்று திட்டிவிட முடியுமா? அதற்குப் பிறகு திட்டியவரின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

ஆனால், நபியின் செயல்பாடு எப்படி இருந்தது தெரியுமா? உள்ளத்தை நெகிழச் செய்யும் ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ تَرْعَدُ فَرَائِصُهُ قَالَ: فَقَالَ لَهُ: «هَوِّنْ عَلَيْكَ فَإِنَّمَا أَنَا ابْنُ امْرَأَةٍ مِنْ قُرَيْشٍ كَانَتْ تَأْكُلُ الْقَدِيدَ فِي هَذِهِ الْبَطْحَاءِ»

ஒரு மனிதர் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபி (ஸல்) அவர்களையும் அதுபோல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார். “சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைப் சாப்பிட்டு வந்த குறைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்’’ என்று அவரிடம் கூறி சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ்,
நூல்: ஹாகிம்-3733 

மன்னர் முன்பு கூனிக் குறுகிதான் நிற்க வேண்டும்; குனிந்து கொண்டு பேச வேண்டும். இதுவே அன்றைய கால நடைமுறை. அப்படித் தான் அல்லாஹ்வின் தூதருக்கும் எதிர்பார்ப்பு இருக்குமென்று ஒருவர் நடுங்கிக் கொண்டே வந்து நிற்கிறார். ஆனால், நடந்தது என்ன?

நானும் சாதாரண மனிதன் தான்; என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம் என்று அவரை அமைதிப்படுத்தினார்கள். அவருக்கு இருந்த பயத்தைக் களைந்தார்கள். இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்தாலும், மக்களோடு இறங்கிப் பழகும் பெருந்தன்மை மிக்கவராக நபியவர்கள் திகழ்ந்தார்கள்.

மக்களை அரவணைத்துச் செல்லும் அன்பாளராக நபிகளார் திகழ்ந்தார்கள் 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ، قَالَ
كَانَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَصْعَةٌ يُقَالُ لَهَا الْغَرَّاءُ يَحْمِلُهَا أَرْبَعَةُ رِجَالٍ، فَلَمَّا أَضْحَوْا وَسَجَدُوا الضُّحَى أُتِيَ بِتِلْكَ الْقَصْعَةِ – يَعْنِي وَقَدْ ثُرِدَ فِيهَا – فَالْتَفُّوا عَلَيْهَا، فَلَمَّا كَثَرُوا جَثَا رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم فَقَالَ أَعْرَابِيٌّ: مَا هَذِهِ الْجِلْسَةُ؟ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِنَّ اللَّهَ جَعَلَنِي عَبْدًا كَرِيمًا، وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا عَنِيدًا» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا مِنْ حَوَالَيْهَا، وَدَعُوا ذِرْوَتَهَا، يُبَارَكْ فِيهَا»

நபி (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் “இந்த ஆட்டைச் சமையுங்கள்’’ என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர்.

உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபி (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் “என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மைமிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி),
நூற்கள்: அபூதாவூத்-3773 , பைஹகீ (14430)

மக்களை அரவணைத்துச் செல்லும் அன்பாளராக அல்லாஹ் என்னை அனுப்பி இருக்கிறானே தவிர, பெருமையடித்து அடக்குமுறை செய்பவராக இல்லை என்று தமது தன்மையை தெளிவாக எடுத்துச் சொல்கிறார்கள், நபியவர்கள்.

மக்களைக் கவர இவ்வாறு சொன்னதாக நினைத்து விடக் கூடாது. உண்மையாகவே மக்களோடு நெருங்கிப் பழகும் பண்பாளராக வாழ்ந்தார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. அதுவே அவர்களின் ஆசையாக இருந்தது. இதை இன்னொரு சம்பவம் மூலமும் புரிந்து கொள்ளலாம்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ إِلَى السِّقَايَةِ فَاسْتَسْقَى، فَقَالَ العَبَّاسُ: يَا فَضْلُ، اذْهَبْ إِلَى أُمِّكَ فَأْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَرَابٍ مِنْ عِنْدِهَا، فَقَالَ: «اسْقِنِي»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُمْ يَجْعَلُونَ أَيْدِيَهُمْ فِيهِ، قَالَ: «اسْقِنِي»، فَشَرِبَ مِنْهُ، ثُمَّ أَتَى زَمْزَمَ وَهُمْ يَسْقُونَ وَيَعْمَلُونَ فِيهَا، فَقَالَ: «اعْمَلُوا فَإِنَّكُمْ عَلَى عَمَلٍ صَالِحٍ» ثُمَّ قَالَ: «لَوْلاَ أَنْ تُغْلَبُوا لَنَزَلْتُ، حَتَّى أَضَعَ الحَبْلَ عَلَى هَذِهِ» يَعْنِي: عَاتِقَهُ، وَأَشَارَ إِلَى عَاتِقِهِ

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து, “வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபியவர்களுக்காகக் குடிதண்ணீர் வாங்கி வா’’ என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் “இந்தத் தண்ணீரையே தாருங்கள்’’ எனக் கேட்டார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே’’ என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்’’ எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான கிணறாகக் கருதப்படும் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி “இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்!

நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி-1635 

தலைவர் என்றால் அறை, உணவு, இருக்கை, வாகனம் என்று அனைத்திலும் தனித்துவமான வசதியை விரும்பும் தலைவர்களே அதிகம். இப்படியான தேடல் முஹம்மது நபிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது. அதனால் தான் மக்கள் கை பட்டு, கலங்கிப் போன நீரையும் சங்கடப்படாமல் வாங்கிப் பருகினார்கள்.

சில நேரங்களில் தம்மீதுள்ள பாசம் காரணமாகத் தோழர்கள் அளவு கடந்த மரியாதையை வெளிப்படுத்தும் போது அதைத் தவிர்த்து இருக்கிறார்கள். அதுவும் கூட அவர்களை அவமதித்து அல்ல. அந்த மரியாதை எல்லை மீறிவிடக் கூடாது என்பதற்காக! ஏனெனில், மக்களில் ஒருவராக இருப்பதையே விரும்பினார்கள். எனவே, தனக்கென தனி மரியாதையைக் கொடுக்க தோழர்கள் முன்வந்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

 عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
قَالَ الْعَبَّاسُ، قُلْتُ: لَا أَدْرِي مَا بَقَاءُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِينَا، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لَوِ اتَّخَذْتَ عَرِيشًا يُظِلُّكَ، قَالَ: «لَا أَزَالُ بَيْنَ أَظْهُرِهِمْ يَطَؤُونَ عَقِبِي، وَيُنَازِعُونِي رِدَائِي حَتَّى يَكُونَ اللَّهُ يُرِيحُنِي مِنْهُمْ»

“நபி (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் மக்களிடம் கூறினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே’’ என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்’’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: பஸ்ஸார்-1293

மக்களில் ஒருவராகக் கலந்து வாழ வேண்டுமென முஹம்மது நபி விரும்பினார்கள். இப்படியான இயல்பான நடத்தையை மற்ற தலைவர்களிடம் காண்பது அரிதுதான். இதைக் கீழுள்ள சம்பவங்கள் மூலமும் புரிந்து கொள்ளலாம்.

குடிமக்களிடம் தோழமையோடு இருந்த தலைவர்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِغُلَامٍ يَسْلُخُ شَاةً، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَنَحَّ، حَتَّى أُرِيَكَ» فَأَدْخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ، فَدَحَسَ بِهَا، حَتَّى تَوَارَتْ إِلَى الْإِبِطِ وَقَالَ: «يَا غُلَامُ هَكَذَا فَاسْلُخْ» ثُمَّ مَضَى وَصَلَّى لِلنَّاسِ، وَلَمْ يَتَوَضَّأْ

ஒரு இளைஞர் அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் “ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்’’ என்றார்கள். தமது கையை அக்குள் வரை தோலுக்கும் இறைச்சிக்குமிடையே விட்டு உரித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸமீத் (ரலி)
நூல்கள்: இப்னு மாஜா-3179 (3170) அபூதாவுத் (157)

மக்களின் நல்வாழ்வுக்கு, முன்னேற்றத்திற்கு உரிய வழிகாட்டாமல் உறங்கிக் கிடக்கும் தலைவர்கள் இருக்கையில், சின்னஞ்சிறு விஷயத்தையும் சிறப்பாகச் செய்வதற்குத் துணைபுரியும் முஹம்மது நபியின் பண்பு நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. இப்படி, குடிமக்களிடம் தோழமையோடு நடக்கும் தலைவரை இன்று காண முடிகிறதா?

مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَفَرٍ مِنْ أَسْلَمَ يَنْتَضِلُونَ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” ارْمُوا بَنِي إِسْمَاعِيلَ ؛ فَإِنَّ أَبَاكُمْ كَانَ رَامِيًا، ارْمُوا وَأَنَا مَعَ بَنِي فُلَانٍ “. قَالَ : فَأَمْسَكَ أَحَدُ الْفَرِيقَيْنِ بِأَيْدِيهِمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” مَا لَكُمْ لَا تَرْمُونَ ؟ ” قَالُوا : كَيْفَ نَرْمِي وَأَنْتَ مَعَهُمْ. قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” ارْمُوا فَأَنَا مَعَكُمْ كُلِّكُمْ

நபி (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) “இஸ்மாயீலின் வழித்தோன்றல்களே! அம்பெய்யுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்’’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

மற்றொரு அணியினர் அம்பெய்வதை உடனே நிறுத்திக் கொண்டனர். ஏன் நிறுத்திவிட்டீர்கள்? என்று அவர்களிடம் நபி (ஸல்) கேட்டனர். “நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?’’ என்று அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்’’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸலமா பின் அக்வஃ (ரலி),
நூல்: புகாரி-2899 , 3373

தலைவராக இருப்பவர் தமக்கு நிகரான தலைவர்கள், பிரபலங்கள், செல்வாக்கு கொண்டவர்களோடு மட்டும் தான் இயல்பாகப் பழகுவார்கள் எனும் நிலைக்கு விதிவிலக்காக நபிகளார் வாழ்க்கை இருந்தது.

أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ،

என்னுடைய பாட்டியார் முலைக்கா, நபி (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பின்னர் ‘எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள். நான் புழக்கத்தினால் கருத்திருந்த எங்களின் ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன்.

அப்பாயில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்திவிட்டுச் சென்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),
நூல்: புகாரி-380 , 860

சாதாரண மக்களையும் கூட அறிந்து வைத்திருந்தார்கள் 

கிராமவாசிகள், அடிமைகள், ஊழியர்கள் என்று எல்லோரிடமும் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள்.

أَنَّ رَجُلًا أَسْوَدَ أَوِ امْرَأَةً سَوْدَاءَ كَانَ يَقُمُّ المَسْجِدَ فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَقَالُوا: مَاتَ، قَالَ: «أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ – أَوْ قَالَ قَبْرِهَا – فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا»

பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். ‘இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத்தலத்தை எனக்குக் காட்டுங்கள்! என்று நபி (ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி-458 , 460, 1337

தம்மைச் சுற்றியிருந்த சாதாரண மக்களையும் கூட அறிந்து வைத்து, அவர்கள் மீது அன்புகொண்ட நபியவர்கள், குடிமக்களின் விஷயத்தில் அதிக அக்கறை காட்டினார்கள். நபி (ஸல்) அவர்களை அணுகுவது அனைத்து மக்களுக்கும் எளிதாக இருந்தது. தாமும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதை எல்லா நேரத்திலும் பிரதிபலித்தார்கள்.

இதனால் தான் இன்றளவும் கோடான கோடி மக்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இனியும் நபியை நேசிக்கும் மக்கள் பெருகிக் கொண்டே இருப்பார்கள். அத்தகைய மக்களின் பட்டியலில் நாமும் தொடர்ந்து இருப்போமாக! எந்நாளும் நபிவழியில் நடந்து வெற்றி பெறுவோமாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.