Tamil Bayan Points

மஃமூம் இமாமாக ஆகலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on January 21, 2017 by Trichy Farook

மஃமூம் இமாமாக ஆகலாமா?

கேள்வி : ஒருவர் தாமதமாக ஜமாஅத்தில் வந்து சேருகின்றார். இமாம் ஸலாம் கொடுத்ததும் தமக்குத் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுகின்றார். அதற்குப் பிறகு வரும் ஒருவர் தவறிய ரக்அத்துகளைத் தொழும் இவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவது கூடுமா? ஒரே தொழுகையில் ஒருவர் பின்பற்றித் தொழுபவராகவும், இமாமாகவும் ஆக முடியுமா?

பதில்

இமாமைப் பின்பற்றித் தொழுகின்ற வரைதான் ஒருவர் பின்பற்றித் தொழுபவராகக் கருதப்படுவார். இமாம் ஸலாம் கொடுத்துவிட்டால் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுபவர் தனியாகத் தொழுபவராகத்தான் கருதப்படுவார்.

தனியாகத் தொழுபவரை இமாமாக ஆக்கிக் கொள்வதில் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன.

தனியாகத் தொழுது கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களுடன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இணைந்து ஜமாஅத்தாகத் தொழுதுள்ளார்கள்.

 

حَدَّثَنَا أَحْمَدُ قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنَا عَمْرٌو عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ فَتَوَضَّأَ ثُمَّ قَامَ يُصَلِّي فَقُمْتُ عَلَى يَسَارِهِ فَأَخَذَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ فَصَلَّى ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ وَكَانَ إِذَا نَامَ نَفَخَ ثُمَّ أَتَاهُ الْمُؤَذِّنُ فَخَرَجَ فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷாத் தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப்பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டிருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு அவர்களது (மிதமான) குறட்டைச் சப்தத்தை அல்லது லேசான குறட்டைச் சப்தத்தை நான் கேட்குமளவிற்கு உறங்கினார்கள். பின்னர் (சுப்ஹுத்) தொழுகைக்கு புறப்பட்டுச் சென்றார்கள்

நூல் : புகாரி 697

தனியாகத் தொழுது கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களுடன் ஸஹாபாக்கள் ஒவ்வொருவராக இணைந்து ஒரு கூட்டமாகவே தொழுதுள்ளார்கள்.

 

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا سُلَيْمَانُ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي رَمَضَانَ فَجِئْتُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ وَجَاءَ رَجُلٌ آخَرُ فَقَامَ أَيْضًا حَتَّى كُنَّا رَهْطًا

அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்று கொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்று கொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம்……….. (நீண்ட ஹதீசின் சுருக்கம்)

நூல் : முஸ்லிம் 2014

தாமதமாக வருபவர்கள் தனியாகத் தொழும் ஒருவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

எனவே முந்தைய ஜமாஅத்துடன் இணைந்து தொழுது எஞ்சிய ரக்அத்துகளை எழுந்து தனியாகத் தொழும் ஒருவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவதற்கு மார்க்கத்தில் தடை கிடையாது .

மேலும் சில குறிப்பிட்ட நிலைகளில் இமாமாக நின்று தொழுபவர் மஃமூமாக ஆவதும், மஃமூமாக நின்று தொழுபவர் இமாமாக ஆவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே.

இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ فَحَانَتْ الصَّلَاةُ فَجَاءَ الْمُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ قَالَ نَعَمْ فَصَلَّى أَبُو بَكْرٍ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ فِي الصَّلَاةِ فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ فَصَفَّقَ النَّاسُ وَكَانَ أَبُو بَكْرٍ لَا يَلْتَفِتُ فِي صَلَاتِهِ فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ الْتَفَتَ فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ امْكُثْ مَكَانَكَ فَرَفَعَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدَيْهِ فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى فَلَمَّا انْصَرَفَ قَالَ يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ فَقَالَ أَبُو بَكْرٍ مَا كَانَ لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمْ التَّصْفِيقَ مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ الْتُفِتَ إِلَيْهِ وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் ; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூஅம்ர் பின் அவ்ஃப் குலத்தாரை நோக்கி அவர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காகச் சென்றார்கள். அப்போது (அஸ்ர்) தொழுகையின் நேரம் வந்துவிட்டது. (நபி (ஸல்) அவர்கள் வரத் தாமதமாகவே) தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்) அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி வந்து, நீங்கள் மக்களுக்குத் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்துகிறீர்களா, நான் இகாமத் சொல்கிறேன்? என்று கூறினார்கள் ஆம் (அவ்வாறே செய்வோம் என்று கூறிவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து (தொழுகை வரிசைகளை) விலக்கிக் கொண்டு (முதல்) வரிசையில் வந்து நின்றார்கள். இதைக் கண்ட மக்கள் (அபூபக்ர் அவர்களுக்கு நபி (ஸல்) வந்து விட்டதைத் தெரிவிக்க) கைத்தட்டினார்கள். (பொதுவாக) அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் கை தட்டுவது அதிகரித்த போது திரும்பிப் பார்த்தார்கள். (அங்கே முதல் வரிசையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி அங்கேயே இருங்கள்’ என்று சைகை செய்தார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு தம்மை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணித்ததற்காக (இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக) தமது கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (திரும்பாமல் அப்படியே முதல்) வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே சென்று (நின்று) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும். அபூபக்ரே! நான் உங்களை நான் (அங்கேயே நின்று தொழுவிக்குமாறு) பணித்தும் நீங்கள் ஏன் அங்கேயே நிற்கவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுவிப்பதற்கு அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து), உங்களை ஏன் அதிகமாகக் கைதட்டக் கண்டேன்? ஒருவருக்கு அவரது தொழுகையில் ஏதேனும் ஐயம் (ஆட்சேபம்) ஏற்பட்டுவிட்டால் அவர் (அதை உணர்த்தும் முகமாக) இறைவனை (சுப்ஹானல்லாஹ்’ அல்லாஹ் தூயவன் எனக் கூறி)த் துதிக்கட்டும். ஏனெனில் அவர் இறைவனைத் துதிக்கும் போது அவரளவில் கவனம் செலுத்தப்படும். கைத்தட்டும் முறை பெண்களுக்குரியதாகும் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 684

இமாமாக நின்ற அபூபக்கர் (ரலி) அவர்கள் நபியவர்கள் வந்ததும் மஃமூமாக நின்று தொழுதுள்ளார்கள்.

ஒரே தொழுகைக்குள் இமாமாக நின்றவர் மஃமூமாக ஆக முடியும் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

எனவே ஒரு இமாமைத் பின்பற்றித் தொழுதவர் அந்த இமாம் ஸலாம் கொடுத்த பிறகு தனியாகத் தொழும் நேரத்தில் மற்றவர்களுக்கு இமாமாக நின்று தொழுவிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது.

மேலும் முதல் ஜமாஅத் முடிந்தவுடன் தாமதமாக வருபவர்கள் தனியாக ஜமாஅத்தாகத் தொழுது கொள்வதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே.