Tamil Bayan Points

போர் நெறியை போதித்த இஸ்லாம் – 4

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on May 1, 2017 by Trichy Farook

நான்காவது கொந்தளிப்பு –  சுஹைலின் நிபந்தனை

மேலும் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’ என்று நிபந்தனையிட்டார்.

ஒப்பந்தத்தில் அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு விதியும் முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு அடி அல்ல, இடியாகவே விழுகின்றது. இதனால் அவர்கள் கொந்தளிப்பில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை சுஹைல் தொடர்ந்து சூடாக்கிக் கொண்டிருந்தார். நபித்தோழர்கள் உணர்ச்சிக் கொதிப்பில் தகித்தனர்.

முஸ்லிம்கள், “சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?” என்று வியப்புடன் கேட்டார்கள்.

நபித்தோழர்கள் தங்கள் சூட்டை இப்படி வியப்புடன் கூறி தணித்துக் கொண்டனர்.

ஐந்தாவது கொந்தளிப்பு

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார். அவர் மக்காவின் கீழ்ப்பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார். உடனே (அவரது தந்தையான) சுஹைல், “முஹம்மதே! (ஒப்பந்தப்படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே” என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், “அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் அனுமதியளிக்கப் போவதில்லை” என்று கூறினார். மிக்ரஸ் என்பவர், “நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்” என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், “முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டார். அவர் இறைவழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபூஜன்தல் அவர்கள் இணை வைப்பாளர்களிடமே திருப்பி அனுப்பப்படுகின்றார். இதை நபித்தோழர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் கெஞ்சிக் கேட்ட பிறகும் குறைஷிகள் ஒப்புக் கொள்ளாததால், இரத்தம் தோய்ந்தவராக இருந்த அபூ ஜன்தல் இணை வைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றார்.

“முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக வந்திருக்க என்னை இணைவைப்பாளர்களிடம் திருப்பி அனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் பார்க்க மாட்டீர்களா?” என்று அபூஜன்தல் கேட்டது முஸ்லிம்களின் இதயங்களை நொறுங்கச் செய்து விட்டது.

அதுவரை கொதிப்பிலும் கொந்தளிப்பிலும் இருந்த நபித்தோழர்கள் அக்கினிப் பிழம்பாக மாறிவிட்டார்கள். அவர்கள் சார்பாக உமர் (ரலி) அவர்கள் வெடித்துச் சிதறுகிறார்கள். அசத்தியத்திற்கு எதிராக அடங்கிக் போவதா? இறை நிராகரிப்பு எகிறிக் குதிப்பதா? அது இறை நம்பிக்கையாளர்களை ஏறி மிதிக்க நாம் அனுமதிப்பதா? என்று கேட்டு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் கொப்பளித்த வார்த்தைகள் இதோ:

அப்போது (நடந்ததை) உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதர் தான்” என்று பதிலளித்தார்கள். நான், “நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “ஆம் (சத்திய மார்க்கத்தில் தான் நாம் இருக்கின்றோம். அவர்கள் அசத்திய மார்க்கத்தில் தான் இருக்கிறார்கள்.)” என்று பதிலளித்தார்கள்.

“அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன்” என்று பதிலளித்தார்கள். நான், ” “விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் தவாஃப் செய்வோம்’ என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?” எனக் கேட்டார்கள். நான், “இல்லை” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அமைதியான, அதே சமயம் அழுத்தமான பதிலில் அடங்காத உமர் (ரலி), அடுத்தக்கட்டத் தலைவரான அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தமது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள். அதற்கு அபூபக்ரும் நபியவர்களின் பதிலை அப்படியே அச்சுப் பிசகாமல் அழுத்தம் திருத்தமாய் சமர்ப்பிக்கின்றார்கள். அந்த சூடான விவாதத்தையும் உமர் (ரலி) அவர்களின் வார்த்தையில் சுவைப்போம்.

பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, “அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான்” என்று கூறினார்கள். நான், “நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள். நான், “அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.

“அவர்கள் நம்மிடம், “நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம்’ என்று சொல்லவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், “நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்’ என்று உங்களிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை (அவர்கள் அவ்வாறு சொல்லவில்லை)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத் தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள்.

துயரத்தில் மூழ்கிய தோழர்கள்

ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் தடுத்து நிறுத்தப்பட்டு விட்டால் அவர் தடுக்கப்பட்ட அந்த இடத்திலேயே பலிப்பிராணிகளை அறுத்து, தலைமுடியைக் களைய வேண்டும்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, “எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள்.

தோழர்கள் ஒருபோதும் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மீற மாட்டார்கள். ஆனால் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு விதியும் தங்கள் மீது விழுந்த அடியாக அல்ல, இடியாக இருந்ததால் அவர்களிடம் இந்தத் தயக்கம் ஏற்பட்டது.

அருமை மனைவியின் அற்புத யோசனை

அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியைச் சொன்னார்கள். உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி கûளையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்” என்று (ஆலோசனை) கூறினார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப்பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

உரிய நேரத்தில் உரிய ஆலோசனையை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வழங்கினார்கள். அது உடனே எடுபடவும் ஆரம்பித்தது. அந்த சோக மயமான கட்டத்தில் நபி (ஸல்) அவர்களின் வாய்மொழி உத்தரவில் நபித்தோழர்கள் சிறிது தயக்கம் காட்டியிருக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் செயலில் இறங்கிய பிறகு அதைப் பின்பற்றுவதை விட்டுக் கொஞ்சமும் தயக்கம் காட்டவில்லை. அதில் அவர்கள் கொஞ்சம் கூடப் பின்தங்கவில்லை. உடனே செயல்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

நெருக்கியடித்து ஒருவரையொருவர் கொன்று விடுவார்கள் என்ற அளவுக்கு நபியவர்களின் செயலை, செயல்படுத்த முனைந்துவிட்டனர். அந்த அளவுக்கு அவர்களது கட்டுப்பாடு அவர்களின் இந்தச் செயலில் பிரதிபலித்தது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், நபி (ஸல்) அவர்கள் ஒரு போரைத் தவிர்ப்பதற்காகக் கடைப்பிடித்த சமாதான நடவடிக்கையையும், அதில் அவர்கள் கொண்ட பிடிமானத்தையும் தான்.

மக்காவின் மீதும் குறைஷிகள் மீதும் போர் தொடுப்பதற்கான அத்தனை நியாயங்களும் சரியான காரணங்களும் அவர்களுக்கு முன்னால் இருந்தன. ஏற்கனவே உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதாக வதந்தி கிளம்பிய போது, நபித்தோழர் தங்கள் உயிரை அர்ப்பணிப்பதாக உறுதிப்பிரமாணமும் செய்திருந்தனர். போர் என்ற கார்மேகம் சூல் கொண்ட கருவாக போர் மழையைக் கொட்டுவதற்குத் தயாராக இருந்தது. போருக்கான சூழ்நிலைகள் அத்தனையும் நபியவர்களுக்கு சாதகமாக இருந்தன. ஆனால் அத்தனையையும் தட்டிக் கழித்து, நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தையே நிலைநாட்டினார்கள். அதை அல்லாஹ்வும் அங்கீகரிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவிலிருந்து திரும்பும் போது “அல் ஃபத்ஹ் – அந்த வெற்றி’ என்ற அத்தியாயத்தின் 1 முதல் 5 வரையிலான வசனங்கள் இறங்கின.

நபித்தோழர்கள் கவலையிலும் வேதனையிலும் மூழ்கியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தியாகப் பிராணியை ஹுதைபிய்யாவில் அறுத்துப் பலியிட்டனர். அப்போது இந்த உலகம் அனைத்தை விடவும் எனக்கு மிக விருப்பமான ஓர் வசனம் அருளப்பட்டது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 3341

(முஹம்மதே!) தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இவ்வெற்றியை அளித்தான்.) தமது நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையை அதிகமாக்கிக் கொள்வதற்காக அவனே நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்களில் நிம்மதியை அருளினான். வானங்கள் மற்றும் பூமியின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களின் பாவங்களை அவர்களை விட்டும் அவன் நீக்குவான். இது அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக இருக்கிறது.

அல்குர்ஆன் 48:1-5

கவலையில் மூழ்கியிருந்து நபித்தோழர்களுக்கு ஆறுதலாக இந்த வசனங்கள் இறங்கின. வெற்றி என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுவது ஹுதைபிய்யா உடன்படிக்கையைத் தான். இதற்குப் பிறகு நடந்த மக்கா வெற்றியைப் பற்றி இந்த வசனம் பேசவில்லை.

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பாக்கியத்திற்காக நபித்தோழர்கள் வாழ்த்துத் தெரிவிக்கின்றார்கள். அதே சமயம் இதனால் எங்களுக்கு என்ன பயன் என்றும் கேட்கின்றார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் கீழ்க்காணும் இந்த ஹதீஸ் அமைகின்றது.

“தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்” என்னும் (48:1) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும்” என்று நான் கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், “(நபியவர்களே!) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (இந்த வெற்றியினால்) எங்களுக்கு என்ன (பயன்)?” என்று கேட்டனர். அப்போது, “நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வதற்காக (நிம்மதி அளித்தான்). அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்” என்னும் (48:5) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 4172

உண்மையில் ஹுதைபிய்யா உடன்படிக்கை இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. ஒரு போர் தொடுத்தால் கூட இந்த அளவுக்கு வெற்றி கிடைத்திருக்காது. மக்காவில் இருந்தவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி, ஒட்டுமொத்த மக்காவும் இஸ்லாத்தின் கீழ் வந்தது. அந்த அளவுக்கு இந்த உடன்படிக்கை மாபெரும் வெற்றியாக அமைந்தது.

மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்தவர்களை திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற விதியை கொஞ்ச காலம் கழித்துத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். மக்காவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆண், பெண் என அனைவரும் மக்கா வெற்றிக்கு முன்பே இஸ்லாத்தில் இணைய ஆரம்பித்து விட்டனர்.

இஸ்லாத்தின் முதல் எதிரியாகவும், குறைஷிகளின் முன்னணித் தலைவராகவும் திகழ்ந்த உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்சூம் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து மதீனாவுக்கு வந்து விட்டார்.

அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி. (அவரையும் மக்காவிற்குத் திருப்பியனுப்பி விடுவார்கள்.) முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்தூம் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். ஆகவே, அவரது வீட்டார் நபி (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை. அவர்கள் விஷயத்தில் அல்லாஹ், “விசுவாசிகளான பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (அவர்கள் விசுவாசிகள் தாம் என்று) சோதித்துப் பாருங்கள். அவர் களுடைய இறை நம்பிக்கையை(க் குறித்து) அல்லாஹ்வே நன்கறிந்தவன் ஆவான். அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாம் என்று நீங்கள் கருதினால் அவர்களை நிராகரிப்பவர்களிடம் திருப்பியனுப்பாதீர்கள். அப்பெண்கள் அவர்களுக்கு (நிராகரிப்பாளர்களான அந்த ஆண்களுக்கு) அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்த (நிராகரிப்பாளர்களான) ஆண்களும் அப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களல்லர் (60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.

நூல்: புகாரி 2713

இதே போன்று ஆண்கள், பெண்கள் என்று பலர் இஸ்லாத்தை நோக்கிப் படையெடுத்து வந்தனர். இம்மாபெரிய பயன்கள் இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையால் விளைந்தன. ஹுதைபிய்யா உடன்படிக்கையை ஆரம்பத்தில் எதிர்த்த உமர் (ரலி) அவர்கள் இதையெல்லாம் பின்னால் உணர்ந்து, நான் இவ்வாறு அதிருப்தியுடன் பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்கள் புரிந்தேன் என்று கூறுகின்றார்கள்.

சண்டையா? சமாதானமா? போரா? அமைதியா? என்றால் நபி (ஸல்) அவர்கள் சமாதானத்தையும் அமைதியையும் தான் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள் என்பதற்கு இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வரலாற்றுப் பதிவாகும். இஸ்லாமிய மார்க்கம் சாந்தி, சமாதான மார்க்கம் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஹுதைபிய்யா உடன்படிக்கை தொடர்பான இந்தச் செய்தி புகாரி 2734, முஸ்னத் அஹ்மத் 18166 ஆகிய ஹதீஸ்களிலிருந்து தொகுக்கப்பட்டது.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை செயல்படுத்தியதிலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களிலும் நபி (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு சமாதானப் போக்கை மேற்கொண்டார்கள் என்பதை பாருங்கள்.