Tamil Bayan Points

போர் நெறியை போதித்த இஸ்லாம் – 3

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on May 1, 2017 by Trichy Farook

நம்பிக்கையாளர் புதைலின் வரவு 

இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி (ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், “(முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவசுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களை விட்டு விட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்” என்று கூறினார்கள்.

புதைல் அவர்களின் இந்தச் செய்தி, முதல் தூதரான பிஷ்ர் என்பாரின் செய்தியை உறுதிப்படுத்துகின்றது.

“தாய் ஒட்டகங்கள், குட்டிகளுடன் வந்துள்ளனர்’ என்ற புதைலின் வார்த்தைகள் அரபியர்களின் முக்கியமான நடைமுறைகளைத் தெளிவுபடுத்துகின்றன. நீண்ட நாட்கள் ஓரிடத்தில் முகாமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அரபிகள் இப்படி பால் கொடுக்கும் ஒட்டகங்களை அவற்றின் குட்டிகளுடன் ஓட்டிச் செல்வார்கள். தங்களுடைய உணவுக்கு ஒட்டகத்தின் பாலைக் கறந்து குடித்துக் கொள்வார்கள் என்பது தான் அந்த நடைமுறை. இதையே புகைலின் வார்த்தைகள் விளக்குகின்றன.

தங்களுடைய மனைவி, மக்களுடன் வந்து முகாமிடுவதையும் இந்த வார்த்தைகள் குறிக்கின்றன. பயந்து, போரிலிருந்து பின்வாங்கி ஓடக்கூடாது என்பதற்காக மனைவி, மக்கள், பிள்ளை குட்டிகளுடன் போர்க்களங்களுக்கு வருவது அரபுக் குலத்தவரின் வழக்கத்தில் இருந்தது. இந்தக் கருத்தும் புகைலின் இந்த வார்த்தைகளில் அடங்கியிருப்பதை நாம் அறியலாம்.

மொத்தத்தில் குறைஷியர்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் ஒரு கடினப் போக்கைக் கடைப்பிடித்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ நிதானம், நீக்குப்போக்குத் தன்மையையும், சாந்தி, சமாதானத்தையும் கடைப்பிடிக்கின்றார்கள்.

இதோ அந்த சமாதானத் தூதர் தெரிவிக்கின்ற சாந்தி வார்த்தைகளைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே தடையாக இருக்க வேண்டாம். நான் வெற்றி பெற்று விட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்து விட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட புதைல் அவர்கள் கூறுகிறார்கள்:

“நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்” என்று கூறிவிட்டு புதைல் பின் வரகா குறைஷிகளிடம் சென்று, “நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்” என்று சொன்னார். அப்போது அவர்களிலிருந்த அறிவிலிகள், “அவரைக் குறித்து எங்களுக்கு எதனையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினர். அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள், “அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்” என்று கூறினர். புதைல், “அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

உர்வாவின் வருகை

புதைலின் இந்த சமாதானப் பேச்சை குறைஷிகள், குறிப்பாக அவர்களிலுள்ள அறிவிலிகள் காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. இப்போது உர்வா என்பவர் எழுந்து குறைஷிகளிடம் அனுமதி கேட்கின்றார்.

உடனே, (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ, “முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்ல விடுங்கள்” என்று கூறினார். அதற்கு அவர்கள், “அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்” என்று கூறினர்.

சூடான சூழல்

அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, “முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறுவிதமான முடிவு ஏற்பட்டாலும்… குறைஷிகள் வென்று விட்டாலும்…(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கின்றேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடியவர்களாகவே (இவர்களை) நான் பார்க்கின்றேன்” என்று கூறினார்.

உர்வா நபித்தோழர்களிடம் ஏடாகூடமாகப் பேசி அவர்களை சூடாக்கி விடுகின்றார். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் சூழலை சூடாக்காமல் விவகாரத்தை சாதுரியமாகக் கையாள்கிறார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆக்ரோஷம்

(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, “நாங்கள் இறைத்தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா?” என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, “இவர் யார்?” என்று கேட்டார். மக்கள் “அபூபக்ர்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, “நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்” என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார்; நபி (ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களுடைய தாடியைப் பிடித்தபடி இருந்தார்.

அப்போது முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி (ஸல்) அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே உர்வா, நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா (ரலி) அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, “உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்து” என்று கூறிய வண்ணமிருந்தார்கள். அப்போது உர்வா தனது தலையை உயர்த்தி, “இவர் யார்?” என்று கேட்க மக்கள், “இவர் முகீரா பின் ஷுஅபா” என்று கூறினார்கள். உடனே உர்வா, “மோசடிக்காரரே! நீர் மோசடி செய்த போது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?” என்று கேட்டார். முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா (ரலி) அவர்களைப் பழிவாங்க முனைந்த போது அவரது தந்தையின் சகோதரரான உர்வா தான், அவர்களை உயிரீட்டுத் தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.) பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்கள்.

குறைஷிகளிடம் திரும்பிய உர்வா, “முஹம்மது ஒரு நேரிய திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார்; அதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று என்று கூறினார். ஆனால் அதைக் குறைஷிகள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

தாக்க வரவில்லை, தவாஃபுக்கே வருகின்றோம்

உடனே பனூகினானா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், “என்னை அவரிடம் செல்ல விடுங்கள்” என்று சொன்னார். அதற்கு அவர்கள், “சரி, செல்லுங்கள்” என்று கூறினர். அவர் நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களைக் கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் தியாகப் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்கள். உடனே, அவரிடம் ஒரு தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. மக்கள் “தல்பியா’ கூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், “சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையே” என்று (தமக்குள்) கூறிக் கொண்டார். தம் தோழர்களிடம் திரும்பிச் சென்ற போது, “தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றைக் கீறி காயப்படுத்தி அடையாளமிடப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆகவே, இறையில்லத்திற்கு வரவிடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லை” என்று கூறினார்.

இதற்கு அடுத்து, பனூ கினானா குலத்தைச் சார்ந்த ஒருவர் நான்காவது தூதராக வருகின்றார். இவரது ஆலோசனையையும் குறைஷிகள் ஏற்க முன்வரவில்லை. பலிப் பிராணிகள் அழைத்து வந்ததன் மூலம் நாங்கள் போர் தொடுப்பதற்கு வரவில்லை, புனிதத் தலத்தில் வலம் வந்து, பலி கொடுக்கவே வந்துள்ளோம் என்ற முஸ்லிம்களின் உண்மை நிலையை குறைஷிகள் ஒத்துக்கொள்ளவில்லை.

இதுவரை நபி (ஸல்) அவர்களிடம் சென்று வந்த அத்தனை பிரதிநிதிகளும் நபி (ஸல்) அவர்களைத் தடுப்பது நியாயமில்லை என்ற கருத்தையே குறைஷிகளிடம் பதிவு செய்தனர். ஆரம்பத்தில் காட்டமாகப் பேசிய உர்வாவும் முஹம்மது (ஸல்) அவர்கள் பக்கம் நியாயம் இருப்பதையே பிரதிபலிக்கின்றார். ஆனால் குறைஷிகள் அசைந்து கொடுக்கவில்லை.

மிக்ரஸின் வருகை

அவர்களில் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் எழுந்து, “என்னை அவரிடம் போக விடுங்கள்” என்று கூறினார். மக்காவாசிகள், “சரி, நீங்கள் அவரிடம் செல்லுங்கள்” என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்ற போது நபி (ஸல்) அவர்கள், “இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்” என்று கூறினார்கள். அவன் (வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

ஐந்தாவது பிரதிநிதியாக சுஹைல் பின் அம்ரீ வருகையளிக்கின்றார்.

மிக்ரஸ் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் பின் அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார். சுஹைல் பின் அம்ர் வந்த போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டது” என்று கூறினார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, “(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்” என்று கூறினார்.

முஸ்லிம்களின் முதல் கொந்தளிப்பு

நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், “அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…’ என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள். சுஹைல், “ரஹ்மான் – அளவற்ற அருளாளன்’ என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், “இறைவா! உன் திருப்பெயரால்…’ என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்” என்றார். முஸ்லிம்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் – அளவற்ற அருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்று தான் இதை எழுதுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ” “பிஸ்மிக்க அல்லாஹும்ம – இறைவா! உன் திருப்பெயரால்’ என்றே எழுதுங்கள்” என்று சொன்னார்கள்.

அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பெயர் குறைஷிகளுக்கு ஒருவிதமான குமட்டலை ஏற்படுத்துகின்றது. இதையே அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.

“அளவற்ற அருளாளனுக்கு ஸஜ்தாச் செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்படும் போது “அது என்ன அளவற்ற அருளாளன்? நீர் கட்டளையிடுபவருக்கு நாங்கள் ஸஜ்தாச் செய்வோமா?” என்று கேட்கின்றனர். இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்கியது.

அல்குர்ஆன் 25:60

இணை வைப்பாளர்களின் இந்த வெறுப்பு முஸ்லிம்களைக் கொதிப்பிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்துகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நபித்தோழர்களின் இந்த வெறுப்பையும் தாண்டி சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்கிறார்கள்.

இரண்டாவது கொந்தளிப்பு

பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்’ என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, “முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் நான் பொய் சொல்வதாகக் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் பின் அப்தில்லாஹ் – அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்றே எழுதுங்கள்” என்று கூறினார்கள்.

ஒப்பந்தத்தின் இந்த இரண்டாவது விதியும் முஸ்லிம்களைக் கொதிநிலைக்குக் கொண்டு போய்விடுகின்றது. இறைத்தூதருக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் கசப்பு மருந்தை வேண்டா வெறுப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் தகாரறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய்விட்டதற்குக் காரணம் அவர்கள், “அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட(மக்கா நகரத்)தை கண்ணியப்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்” என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத் தான்.

மூன்றாவது கொந்தளிப்பு

பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், “எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது’ என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) “நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்’ என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்” என்று கூறினார்; அவ்வாறே எழுதினார்.

ஒப்பந்தத்தின் இந்த விதியும் நபித்தோழர்களிடம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அதையும் அவர்கள் அமைதியாக சகித்துக் கொண்டனர்.

அடுத்த உரையில்….

இதையும் தாண்டி, சுஹைல் ஒரு நிபந்தனையிட்டார். அதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்.