Tamil Bayan Points

போர் நெறியை போதித்த இஸ்லாம் – 2

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on May 1, 2017 by Trichy Farook

கொள்கையைப் பரப்புவதற்காகப் போர் இல்லை

இஸ்லாம் என்பது ஏக இறைவன் கொடுத்த வாழ்க்கை வழிமுறை. இந்த மார்க்கத்தை முழுமையாக ஏற்று, முறையாக வாழ்பவர்களுக்கு மட்டுமே மறுமையில் வெற்றி இருக்கிறது. இத்தகைய மார்க்கத்தில் இருப்பவர்கள், அதன் பக்கம் மற்ற மக்களையும் அழைக்க வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றித் தெளிவாக எடுத்துரைத்து, பிறமத மக்களை அழைப்பது மட்டுமே முஸ்லிம்கள் மீது கடமையே தவிர, அவர்களைக் கட்டாயம் செய்வதற்கு, நிர்ப்பந்தப்படுத்தி இஸ்லாத்தைத் திணிப்பதற்கு மார்க்கத்தில் கடுகளவும் அனுமதி இல்லை.

இப்படி இருக்கும்போது, இஸ்லாத்தைப் பரப்புவதற்காக, அதன் கொள்கையை, கருத்துக்களைப் பிற மக்கள் மீது திணிப்பதற்காகப் போர் செய்ய இஸ்லாம் தூண்டுமா? இதை ஆதரிக்குமா? என்று யோசித்துப் பாருங்கள். அடுத்த நொடியே இதை இஸ்லாம் அறவே அனுமதிக்காது என்று நமது மனதும் நாவும் சொல்லும். இதுவே நிதர்சனம்.

இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.

(திருக்குர்ஆன் 2:256)

(முஹம்மதே!) உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் நிர்பந்திக்கிறீரா?

(திருக்குர்ஆன் 10:99)

“ஏக இறைவனை) மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 109; 1-6)

முன்சென்ற இறை வசனங்களை மெய்ப்படுத்தும் வகையில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆட்சி செய்தார்கள். அதனால்தான் யூதர்கள், கிறித்தவர்கள் என்று ஏராளமான பிறமத மக்களும் நபிகளாரின் ஆட்சிக்கு உடன்பட்டு இஸ்லாமிய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.

போரில் வரம்பு மீறக் கூடாது

போரின் போது எதிரிகளை, எதிரிகளைச் சார்ந்தவர்களை, எதிரிகள் இருக்கும் இடங்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாத அளவிற்கு எவரையும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீதியில் எதிரிகளிடம் நடந்து கொள்கிறார்கள். காட்டு மிராண்டித்தனமான செயல்களைச் செய்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய மார்க்கம் போர்க்களத்திலும் வரம்பு மீறக் கூடாது என்று சொல்கிறது. போர் செய்வதற்கு வந்த எதிரிகளைத் தவிர்த்து பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் போன்ற போரில் பங்கெடுக்காமல் இருப்பவர்களைக் கொல்லக் கூடாது என்று சொல்கிறது. இன்னும் ஏன்? எதிரிகள் நாட்டில் இருக்கும் மத குருமார்களைக் கொல்லக் கூடாது என்றும் சொல்கிறது. எதிரிகளைச் சந்திக்கும் போர்க்களங்களின் போதுகூட வரம்பு மீறிவிடக்கூடாது என்று போதிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட அறப்போர்கள் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள்.

(நூல்கள்: புகாரி, 3014. முஸ்லிம், 3587)

“பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்”

(புகாரி, 3015. முஸ்லிம், 3588. திர்மிதீ, அபுதாவூத், அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளன)

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும் மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: புரைதா (ரலி),

நூல்: முஸ்லிம்.

அங்க சிதைவு கூடாது

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரது அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின் போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

(நூல்: புஹாரி 2474)

புரைதா பின் அல்ஹசீப் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படைக்கோ, அல்லது படைப் பிரிவுக்கோ தளபதி ஒருவரை நியமித்தால், தனியாக அவரை அழைத்து இறைவனை அஞ்சுமாறும் அவருடன் இருக்கும் முஸ்லிம்களின் நலனைப் பேணுமாறும் அறிவுறுத்துவார்கள். பிறகு, பின்வருமாறு அறிவுரை கூறுவார்கள்: இறைவனின் பெயரால், இறைவனின் பாதையில் போரிடுங்கள். இறைவனை மறு(த்து உண்மைக்கு எதிராக நட)ப்பவர்களுடன் போராடுங்கள்; அறப்போர் புரியுங்கள்; போர்ச் செல்வங்களில் கையாடல் செய்யாதீர்கள்; ஒப்பந்தங்களை முறிக்காதீர்கள்; அங்ககீனம் செய்யாதீர்கள்; குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.

நூல்: முஸ்லிம் 3566

குழந்தைகளைக் கொல்லாதீர்!

யஸீத் பின் ஹுர்முஸ் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த) நஜ்தா பின் ஆமிர் என்பவர் ஐந்து விஷயங்களைப் பற்றிக் கேட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “நான் ஒரு கல்வியை மறைத்த குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவருக்கு நான் பதில் கடிதம் எழுத மாட்டேன்” என்று கூறி பின்வருமாறு அவருக்குப் பதில் எழுதினார்கள்): நீர் என்னிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெண்களும் அறப்போர்களில் கலந்து கொண்டார்களா?” எனக் கேட்டிருந்தீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறப்போர்களில் பெண்களும் கலந்து கொண்டார்கள். போரில் காயமடைந்தவர்களுக்கு மருந்திட்டு சிகிச்சை அளித்தார்கள். போர்ச் செல்வத்திலிருந்து சிறிதளவு அவர்களுக்கு (ஊக்கத் தொகையாக) வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போர்ச் செல்வத்தில் பெண்களுக்கு (குறிப்பிட்ட) பங்கு எதையும் நிர்ணயிக்கவில்லை. போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள். எனவே, நீரும் குழந்தைகளைக் கொல்லாதீர்.

நூல்: முஸ்லிம் 3700

பொதுவாக இஸ்லாம், எந்த இக்கட்டான நேரத்திலும் எடுத்த எடுப்பிலேயே போரைத் தீர்வாக முன்வைக்கவில்லை. இறுதி முடிவாகத்தான் அனுமதி கொடுக்கிறது.

இஸ்லாம் கூறும் போர் நெறிமுறைகளுக்கும், இன்று நடக்கும் போர் நடைமுறைகளுக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கிறது. இன்று நடக்கும் போர்களில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்று பலரும் கொத்து கொத்தாகக் கொல்லப்படுகிறார்கள். பொருளாதாரம் சுருட்டப்படுகின்றன; வளங்கள் சூறையாடப்படுகின்றன. நாடும் சமுதாயமும் ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கப்படுகிறது. இதன் மோசமான, கோரமான விளைவுகள் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்கும் தொடர்கின்றன.

இன்று நடக்கும் போர் முறைகளையும் நோக்கங்களையும் இஸ்லாம் அறவே ஆதரிக்கவில்லை. இத்தகைய காரியங்களை முஸ்லிம் சமுதாயத்தில் இருப்பவர்கள் செய்தாலும் சரியே. இதற்குக் காரணம், இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை, மாறாக அதை எப்போதும் எதிர்க்கிறது என்பதே! இதை முஸ்லிம்களும் பிற மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர்

பொதுவாக இஸ்லாம் என்றால் வன்முறையைத் தூண்டும் மார்க்கம், மற்றவர்களை வலிய வம்புக்கு இழுக்கும் மார்க்கம், சண்டைக்கும், சச்சரவுக்கும் பெயர் போன மார்க்கம் என்ற தப்பும் தவறுமான ஒரு முத்திரை திட்டமிட்டு இஸ்லாத்திற்கு எதிராகக் குத்தப்படுகின்றது. திட்டமிட்டே, வேண்டுமென்றே இஸ்லாத்திற்கு எதிராக இந்தப் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

உண்மையில் சண்டையா? சமாதானமா? என்ற நிலை ஏற்படுகின்ற போது இஸ்லாம் அமைதிக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இது வெறும் ஊகமல்ல! உண்மை நிகழ்வும் நிலவரமும் ஆகும். இதற்கான ஆதாரங்களைப் பல்வேறு தலைப்புகளில் இந்த இதழில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மேலும் ஒரு செய்தியைப் பார்ப்போம்.

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஓர் உன்னத நிகழ்வாகும். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தமது தோழர்களுடன் மக்காவிற்கு வருகின்றார்கள். மக்கா மீது போர் தொடுக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு அறவே கிடையாது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புனிதப் பயணத்தை மக்காவாசிகள் ஒரு போர்ப்பயணமாகவே பார்த்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தம்முடன் புனித ஆலயத்தில் அறுத்துப் பலியிடுகின்ற ஒட்டகங்களை அழைத்து வருகின்றார்கள். அவர்களது எண்ணிக்கை 700 பேர் என அஹ்மத் 18152வது ஹதீஸிலும், 1400 பேர் என புகாரி 4153வது ஹதீஸிலும் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை மக்காவாசிகளை மிரட்டும்படியாக இருந்தது.

தோழர்களுடனான நபி (ஸல்) அவர்களது வருகை மண்ணில் புழுதியைக் கிளப்பியது போன்று மக்களிடம் போர்ப் பீதியைக் கிளப்பி விட்டிருந்தது. அந்தப் பீதியைப் போக்கும் விதமாக தமது பயணத்தின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கிராஷ் பின் உமைய்யா அல்குஸாயீயை மக்காவிற்கு ஸஃலப் என்ற ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பினார்கள். அவர் மக்காவில் நுழைந்ததும் அவரது ஒட்டகத்தைக் குறைஷிகள் அறுத்து விட்டனர். கிராஷையும் கொலை செய்ய முனைந்தனர். அங்கிருந்த பல்வேறு கிளையினர் அவர்களைத் தடுத்து விட்டனர். முடிவில் நபி (ஸல்) அவர்களிடமே அவர் திரும்ப வந்துவிட்டார்.

உடனே நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களை மக்காவுக்கு அனுப்புவதற்காக அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைத் தாக்கி விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். என்னைத் தாக்குவதை விட்டும் தடுத்து எனக்கு உதவுகின்ற பனூ அதீ கிளையார்களில் யாருமே அங்கு இல்லை. நான் குறைஷிகளின் மீது கொண்டிருக்கின்ற விரோதத்தையும் அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் கடினப் போக்கையும் தாங்கள் அறிந்திருக்கிறீர்கள். என்னை விட குறைஷிகளிடம் மரியாதை மிக்க மனிதரான உஸ்மான் (ரலி) அவர்களை நான் தங்களுக்குக் காட்டுகிறேன்” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்தார். “நாங்கள் போர் செய்வதற்கு வரவில்லை. அல்லாஹ்வின் ஆலயத்தின் கண்ணியத்தை மதித்து அதில் வணங்குவதற்காகத் தான் வருகின்றோம்’ என்று குறைஷிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்று உஸ்மானிடம் சொல்லி அனுப்புகின்றார்கள்.

உஸ்மான் (ரலி) புறப்பட்டு அபூசுஃப்யானையும் குறைஷிகளின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, நபி (ஸல்) அவர்கள் தன்னை அனுப்பி வைத்த செய்தியையும் அவர்களிடம் தெரிவித்தார். அதற்குக் குறைஷிகள், “நீ தவாஃப் செய்ய விரும்பினால் தவாஃப் செய்து கொள்” என்று உஸ்மான் (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்கின்ற வரை நான் தவாஃப் செய்யப் போவதில்லை” என்று பதிலளித்தார். குறைஷிகள் உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்ப விடாமல் தங்களிடமே நிறுத்தி வைத்துக் கொண்டனர்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 18152

உஸ்மானை, குறைஷிகள் தடுத்து வைத்த செய்தி நபி (ஸல்) அவர்களிடம் வேறு மாதிரியான தகவலாகச் சென்றடைகின்றது. உஸ்மான் கொல்லப்பட்டு விட்டதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தகவல் கிடைக்கிறது. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் கடுமையான கோபத்திற்கும் கொந்தளிப்பிற்கும் உள்ளாகின்றார்கள்.

பொதுவாகவே அன்றைய காலத்தில் தூது செல்பவர்களைக் கொலை செய்யும் வழக்கம் இல்லை. அதை ஒரு மரபாகக் கடைப்பிடித்து வந்தனர். இந்த மரபுக்கு மாற்றமாக மக்கா குறைஷிகள் நடந்து விட்டார்கள் என்பது முஸ்லிம்களிடம் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் அவர்கள் தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்து போரிடுவதற்கு ஆயத்தமானார்கள். தங்கள் உயிர்களை அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கவும் முன்வந்தார்கள்.

பைஅத் ரிள்வான்

நபித்தோழர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணிப்பதாக நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கையும் செய்தனர்.

“ஹுதைபிய்யா தினத்தில் என்ன விவகாரத்தின் மீது நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்தீர்கள்?’ என்று ஸலமா பின் அக்வஃ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “மரணத்தின் மீது உடன்படிக்கை செய்தோம்’ என்று பதில் அளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஸீத் பின் அபீஉபைத், நூல்: முஸ்லிம் 3462

உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டதாக வந்த விவகாரத்தில் தங்களுடைய உயிர்களை அர்ப்பணம் செய்ய முன்வந்த தியாகத்தை இந்தச் செய்தி தெரிவிக்கின்றது. அல்லாஹ்வும் நபித்தோழர்களின் இந்த தியாகத்தையும், தங்களது உயிர்களை அர்ப்பணிப்பதாகச் செய்த உடன்படிக்கையையும் மிகச் சிறப்பாகப் பாராட்டுகின்றான்.

உம்மிடத்தில் உறுதிமொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதிமொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் அல்லாஹ்விடம் எடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான். (அல்குர்ஆன் 48:10)

தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செய்த அந்த உடன்படிக்கையை, தன்னிடம் செய்த உடன்படிக்கை என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். இவ்வாறு உடன்படிக்கை செய்து கொண்டவர்களைத் தான் திருப்திப்பட்டுக் கொண்டதாகவும் இறைவன் கூறுகின்றான். அதனால் இந்த உடன்படிக்கைக்கு பைஅத்துர் ரிள்வான் (இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்ற உடன்படிக்கை) என்று பெயர் வழங்கப்படுகின்றது.

மக்காவிற்கு உம்ரா செய்வதற்காகத் தான் முஸ்லிம்கள் வந்தனர். ஆனால் இடையில் அவர்களது பயணத்தில் இப்படி ஒரு இனம்புரியாத திருப்பம் ஏற்பட்டு அது ஒரு போராக மூளப் பார்த்தது. ஆனால் பின்னர் உஸ்மான் (ரலி) கொல்லப்படவில்லை என்ற சரியான தகவல் முஸ்லிம்களுக்குத் தெரிய வந்ததும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சமாதான முயற்சிகளை முழு மூச்சுடன் மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகளை இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

குறைஷிகளின் முதல் நல்லெண்ணத் தூதராக வந்த பிஷ்ர் பின் சுஃப்யான் அல்கஃபி என்பார் உஸ்ஃபான் என்ற இடத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, “குறைஷிகள் நீங்கள் வருவதைத் தெரிந்து கொண்டு தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் வெளியே கிளம்பி வந்துவிட்டார்கள். வலுக்கட்டாயமாக, முஹம்மது மக்காவிற்கு வருவதை என்ன விலை கொடுத்தேனும் தடுத்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கிறார்கள். குராவுல் கமீம் என்ற இடத்தில் காலித் பின் வலீத் தனது குதிரைப் படையுடன் முன்னரே வந்து விட்டார்” என்று கூறினார். காலித் பின் வலீத் அப்போது இஸ்லாத்தைத் தழுவியிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகப் படை திரட்டி வந்திருந்தார்.

போர்ப் பயணம் அல்ல! புனிதப் பயணமே!

நபி (ஸல்) அவர்களுக்குப் போர் செய்வது தான் நோக்கம் என்றிருக்குமானால் குதிரைப் படையுடன் நின்றிருந்த காலித் பின் வலீதிடம் தமது கைவரிசையைக் காட்டியிருப்பார்கள். ஆனால் அவர்களின் நடவடிக்கையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள், “காலித் பின் வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன் “கமீம்’ என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர் கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் பின் வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக் குழுப் படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார்.

நபி (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் (“மிரார்’ என்னும் இடத்தில்) அவர்களுடைய வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) “ஹல்ஹல்’ என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், ” “கஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது, “கஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்த போது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கின்றான்” என்று கூறினார்கள். பிறகு, “என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது பயணம் போருக்கான பயணம் அல்ல! உம்ராவுக்கான புனிதப் பயணம் என்பதை நிரூபிக்கும் விதமாக மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து ஹுதைபிய்யாவில் முகாமிடுகின்றார்கள்.

இப்போது இங்கு குறைஷிகளின் இரண்டாவது நல்லெண்ணத் தூதர் புதைல் பின் வரக்கா என்பார் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கிறார்கள்.

அடுத்த உரையில்….

நம்பிக்கையாளர் புதைலின் வரவு பற்றியும், அதையடுத்து நடந்த பல சுவையான சம்பவங்களையும், திருப்பங்களையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்.