Tamil Bayan Points

போர்களால் ஆண்டுக்கு இலட்சம் குழந்தைகள் பலி

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

Last Updated on July 12, 2019 by

போர்களால் ஆண்டுக்கு இலட்சம் குழந்தைகள் பலி 

போர் மூலமாக பொதுமக்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கு தான் சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் போர் தடுப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. எல்லைப் பிரச்சனை கொண்ட நாடுகள் தங்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வைத்துள்ளன. ஆனால் அதையும் மீறி தார்மீக நெறிகளுக்கு எதிராக பல நாடுகள் இடையே வெளிப்படையாகவும் மறைவாகவும் போர் நடக்கின்றன. இதனால் மக்கள் கொன்று அழிக்கப்படுகிறார்கள். குறிப்பாக ஏதும் அறியாத குழந்தைகளும் சிறுவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள்.

அமெரிக்க, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகள் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்காக சில நாடுகளுக்கு மத்தியில் நிலவும் சின்னப் பிரச்சனைகளைக் கூட ஊதிப் பெரிதாக்கி விடுகின்றன. இதுபோன்ற நாடுகள் ஆதிக்க வெறியாலும் அடுத்த நாடுகளின் வளங்களை சுரண்டவும் பொய்யான காரணங்களைச் சொல்லிக் கொண்டு போரில் இறங்கிவிடுகின்றன. இத்தகைய போர்களின் நேரடியான காரணங்களால், 2013 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 5 இலட்சத்து 50 ஆயிரம் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக, குழந்தைகளைப் பாதுகாப்போம் எனும் அறக்கட்டளை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் ஜெர்மனியின் முனீச் நகரில் இந்த அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில் இன்னும் அதிர்ச்சியான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா, நைஜீரியா, காங்கோ, சூடான், ஏமன் போன்ற நாடுகள் போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது. இந்நாடுகள் இன்னும் போரினால் ஏற்பட்ட இழப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. அதுமட்டுமல்ல, மேற்கூறிய 5 ஆண்டுகளில் போரின் மறைமுகமான விளைவுகள் பாதிப்புகள் காரணமாக 8 இலட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள் இறந்து இருப்பதாகவும் அந்த அறக்கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்கால தலைமுறை போரால் அழித்து ஒழிக்கப்படும் அவலம் இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த மாதிரியான நிலை இனியும் தொடரக் கூடாது. தனது நாட்டுப் பொருளார தேவைக்காக அடுத்த நாட்டுக்குள் மூக்கை நுழைத்து பகைமையை தூண்டி ஆயுதங்களை விற்கும் நாடுகளை அந்தந்த நாட்டு மக்களே எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

மற்றத் தேவைகளை விடவும் போர் ஆயுதங்களை வாங்குவதற்கு அதிக நிதி ஒதுக்குவதை குடிமக்கள் ஆட்சேபிக்க வேண்டும். ஐநா சபை உலக நாடுகள் குறிந்து வெறும் அறிக்கை வெளியிடுவதோடு ஒதுங்கிக் கொள்ளாமல், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு பயப்படாமல் போர் குறிந்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அப்போதுதான் போரில் கொடுமையில் இருந்து நிகழ்கால தலைமுறை மட்டுமின்றி எதிர்கால தலைமுறையையும் பாதுகாக்க இயலும்.

Source:unarvu ( 12/04/2019 )