Tamil Bayan Points

பொய்யும் மெய்யும்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on September 26, 2020 by

பொய்யும் மெய்யும்

சமூக ஊடகங்கள் என்று சொல்லப்படும் வாட்சப், பேஸ்புக் போன்றவைகளில் இஸ்லாத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் பலர் பலவிதமான கதைகளையும் கப்ஸாக்களையும் பரப்பி வருவதைப் பார்க்கிறோம்.

யார் எதை வலைத்தளங்களில் பதிவிட்டாலும் அது உண்மையா? பொய்யா என்று கூடப் பார்க்காமல் உடனே அதை அடுத்தவர்களுக்கு அனுப்பி விடுகின்றார்கள்.

அதிகமான சகோதரர்கள் தனக்கு வந்த செய்தியைப் படித்துப் பார்ப்பது கூட இல்லை. தனக்கு வருகின்ற செய்திகளைச் சிறிதும் சிந்திக்காமல், அடுத்தவருக்கு அனுப்புவது இஸ்லாத்தின் கட்டாயக் கடமை என்பது போல் எண்ணிச் சிலர் செயல்படுகின்றனர். பொதுவாக எந்தச் செய்தியாக இருந்தாலும் அது சரியா? தவறா என்று சரி பார்த்த பின்னர், அது சரியா இருந்தால் தான் அடுத்தவருக்கு அனுப்ப வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்:49:6.)

கேட்டதையெல்லாம் (ஆராயாமல்) அறிவிப்பது ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதிய சான்றாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்-6

எந்தச் செய்தியாக இருந்தாலும் கேட்டவற்றை எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே பரப்புபவன் பொய்யன் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

உலகச் செய்திகளைப் பரப்பும் போதே இவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம், மார்க்க விஷயத்தைப் பரப்பும் போது எவ்வளவு கவனமாக இருக்கச் சொல்லும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஹதீஸ் என்ற பெயரில் யார் எதைச் சொன்னாலும் அதை அப்படியே பரப்பி விடுகிறோம். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? அல்லது பலவீனமான ஹதீஸா என்பதைப் பார்ப்பதில்லை.

இதை விடக் கொடுமை, சிலர் கதைகளையெல்லாம் ஹதீஸ் என்று பரப்புகிறார்கள். அதையும் ஹதீஸ் என்று நினைத்து அடுத்தவர்களுக்கு நாம் அனுப்பி விடுகிறோம்.

நாம் மிகப் பெரிய நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு பெரும் தவறைச் செய்து கொண்டிருக்கிறோம். பிற மதத்தவர்கள்தான் பொய்களைச் சொல்லியே தங்கள் மதத்தை வளர்ப்பார்கள். இஸ்லாத்திற்கு அப்படி ஒரு நிலை ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

இத்தனை ஆண்டுகாலமாக உலகில் இஸ்லாம் வளர்கின்றது என்றால் உண்மையை மட்டும் சொல்லித் தான். பொய்களையும், கப்ஸாக்களையும் சொல்லியிருந்தால் இந்த மார்க்கம் என்றைக்கோ அழிந்து போயிருக்கும்.

________________________________________________

இந்தப் பொய்ச் செய்திகளின் வரிசையில் சமீபத்தில் வலைத்தளங்களில் பரவி வரும் ஒரு செய்தியைப் பார்ப்போம்.

சிரிக்கக் கூடாத இடங்கள்:

  1. தொழுகை
  2. மஸ்ஜித்
  3. கப்ருக்கு அருகில்
  4. மய்யித்தின் அருகில்
  5. பாங்கு சொல்லும் போது…
  6. குர்ஆன் ஓதும் போது…
  7. பயான் செய்யும் போது..

இந்த ஏழு இடங்களில் சிரிப்பவர்களை அல்லாஹ் அவர்களது உருவத்தை மாற்றி மறுமையில் தண்டிப்பான்.

ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

இப்படி ஒரு செய்தியைப் பரப்புகின்றனர்.

இந்தச் செய்தியை புகாரியிலோ, முஸ்லிமிலோ எடுத்துக் காட்ட முடியுமா? புகாரி, முஸ்லிம் என்று சொன்னால் மக்கள் உடனே நம்பி ஏற்றுக் கொண்டு விடுவார்கள் என்ற எண்ணத்தில் துணிந்து இந்தப் பொய்யைப் பரப்புகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

இதை அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 106, 107, 1291

நபி மீது பொய் சொல்லிப் பரப்பும் இந்தச் செயல், இவ்வாறு பரப்புபவர்களை நரகத்தில் தள்ளி விடும் என்று இந்த ஹதீஸ் கடுமையாக எச்சரிக்கின்றது.

நபியவர்கள் சொல்லாததைச் சொன்னதாக, பொய்யான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதைப் போலவே, நபியவர்கள் சொன்ன ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் பொய்யான ஹதீஸை இணைத்துப் பரப்புவதையும் நாம் காண முடிகின்றது.

இதனால் எது பலவீனம்? எது சரியான ஹதீஸ் என்று மக்கள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குக் குழம்பி விடுகின்றார்கள்.

________________________________________________

இப்னு ஹிப்பானில் இடம் பெறும் செய்தி

நபிகள் நாயகத்தின் மிக நெருங்கிய நண்பர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு மிகுந்த வயிற்றுப் பசி. ஏதாவது உணவு இருக்கிறதா என மனைவியிடம் கேட்கிறார்கள். தண்ணீரைத் தவிர எதுவும் இல்லை என்கிறார் அவரது மனைவி! ‘‘சரி உமருடைய வீட்டிற்கு சென்று வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள்.

பாதி வழியில் உமர் (ரலி) எதிரே வருகிறார்கள். என்னவென்று கேட்கிறார் அபூபக்கர் சித்தீக் (ரலி). ‘‘வீட்டில் தண்ணீரைத் தவிர உண்பதற்கு எதுவும் இல்லை. எனவே தான் உங்களைப் பார்க்க வருகிறேன்’’ என்கிறார்கள். உமர் ரலி, ‘‘சரி! என் வீட்டிலும் இதே நிலைதான்; அதனால் தான் நான் உங்களை பார்க்க வந்தேன் என கூறிவிட்டு இருவரும் நபிகளைச் சென்று பார்க்கலாம்’’ என நபிகளாரின் வீட்டிற்குச் செல்கின்றனர்.

எதிரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். அருமைத் தோழர்களின் நிலை அறிந்து வேதனையுடன் தனது வீட்டின் நிலையும் இதுதான் என்று சொல்லி, என்ன செய்வது எங்கே செல்லலாம் என யோசித்து கொண்டிருக்கும்போது அபூ அய்யூப் அல் அன்ஸாரியின் வீட்டிற்குச் செல்லலாம் என முடிவு செய்து மூவரும் செல்கின்றனர்

இவர்கள் மூவரும் வருவதைப் பார்த்த நபித்தோழர் அபூ அய்யூப் அல் அன்ஸாரி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்று தனது இல்லத்தில் அமரவைத்து அவர்களுக்கு பேரீத்தம் பழங்களைக் கொடுத்துப் பரிமாறுகிறார்கள்.

கொஞ்சம் பேரீத்தம் பழங்களைத் தின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல் அன்சாரியிடம், ‘‘அபூ அய்யூப் அவர்களே! நான் இவற்றில் இருந்து கொஞ்சம் பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொள்ளலாமா?’’ என கேட்கிறார்கள்.

அதை கேட்ட நபித்தோழர் அபூ அய்யூப் (ரலி) அவர்கள், ‘‘என்ன யா ரசூலுல்லாஹ்! இப்படிக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்’’ என்கிறார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘இல்லை எனக்குச் சிறிதளவு போதும், என் அருமை மகள் ஃபாத்திமா கடந்த மூன்று நாட்களாக எதுவும் சாப்பிடவே இல்லை’’ என கூறுகிறார்கள்.

இதை கேட்ட உடனே அபூ அய்யூப் அல் அன்ஸாரி அவர்கள், தமது பணியாளர் ஒருவரிடம் அண்ணல் நபிகளின் வீட்டிற்கு பேரீத்தம்பழங்களை கொடுத்து அனுப்புகிறார்கள்.

ஹதீஸ் எண் – 5328

இந்தச் செய்தியை உண்மை என நம்பி பரப்புகின்றனர். இப்படி ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும் இது ஆதாரப்பூர்வமானது அல்ல.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் கைஸான் என்பவர் இடம்பெறுகின்றார். இவர் ஹதீஸ் கலை அறிஞர்களால் நிராகரிக்கப்பட்டவர். எனவே இவர் அறிவிக்கும் இந்த ஹதீஸ் பலவீனமானது.

இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருப்பதுடன் இதனுடைய கருத்தும் சரியானதாக இல்லை.

“என் அருமை மகள் பாத்திமா கடந்த மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அபூ அய்யூப் அல் அன்சாரி அவர்கள் தமது பணியாளரிடம் ஃபாத்திமாவின் வீட்டுக்குப் பழங்களைக் கொடுத்தனுப்பினார் என்று இந்தச் செய்தி கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் வீட்டில் எப்போதும் வறுமை தான் நிறைந்து இருந்த்து.

நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மூன்று நாட்கள் அல்ல! சில ஹதீஸ்களில் மூன்று மாதங்கள் கூட அடுப்பெரிக்காமல் இருந்தனர் என்று சரியான ஹதீஸ் கூறுகின்றது.

இப்படிப்பட்ட நிலையிலும் நபி (ஸல்) அவர்கள் யாரிடமாவது கையேந்தி இருப்பார்களா? தன் வறுமையைப் பற்றி மற்ற தோழர்களிடம் பேசியாவது இருப்பார்களா? தன்மானம் காத்த உத்தம நபியை இந்தச் செய்தி, தன் மகளுக்காக யாசகம் கேட்டது போன்ற தோற்றத்தைத் தந்து மாநபியைக் கொச்சைப்படுத்துகின்றது.

நபியின் பெருமையைப் பேசுகிறோம் என்ற பெயரில் நபியவர்கள் மீது சேற்றை வாரி இறைத்திருக்கின்றார்கள். நபியின் தன்மானத்தின் மீதே கல்லெறிந்திருக்கிறார்கள் இந்தக் கயவர்கள். இதைத் தான் ஹதீஸ் என்று சொல்லி சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தன் மகளுக்காக மட்டும் நபியவர்கள் கருணை காட்டினார்கள் என்றால், தம்முடைய அன்பு மனைவிமார்களுக்கு எதைக் கொடுத்தார்கள்? அவர்களும் பசியோடும் பட்டினியோடும் தானே இருந்தார்கள்?

தன் மகள் ஃபாத்திமா மூன்று நாட்கள் சாப்பிடவில்லை என்று சொல்லி அவர்களுக்கு பேரீத்தம்பழம் கொடுக்க நபியவர்கள் ஏற்பாடு செய்தார்கள் என இந்த ஹதீஸ் கூறுகின்றது.

அப்படியானால் நபியவர்களின் குடும்பத்தில் ஃபாத்திமாவைத் தவிர மற்ற அனைவரும் நன்கு புசித்துக் கொண்டிருந்தார்களா? நபியவர்களின் குடும்பத்தில் அனைவரும் பட்டினியாகத் தான் இருந்தார்கள் என்றால் பாத்திமாவிற்கு மட்டும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்தது அநியாயம் இல்லையா?

ஒரு காலத்திலும் நபியவர்கள் இப்படிப்பட்ட பாரபட்சத்தைச் செய்யவே மாட்டார்கள். மேற்கூறப்பட்ட பலவீனமான ஹதீஸில் தான் இந்தக் கதைகளும் கப்ஸாக்களும் உள்ளன.

ஆனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸில் இதுபோன்ற கதைகள் இல்லை.

________________________________________________

முஸ்லிமில் இடம்பெறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இதோ:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘ஒரு பகல்’ அல்லது ‘ஓர் இரவு’ வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?’’ என்று கேட்டார்கள். அதற்கு, “பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!’’ என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள் ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் தான். உங்கள் இருவரையும் வெளியே வரச் செய்ததே என்னையும் வெளியே வரச் செய்தது’’ என்று கூறி விட்டு, “எழுங்கள்’’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், “வாழ்த்துகள்! வருக’’ என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், “அவர் எங்கே?’’ என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், “எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்’’ என்று பதிலளித்தார்.

அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை’’ என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார்.

அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும், கனிந்த பழங்களும், செங்காய்களும் இருந்தன. அவர், “இதை உண்ணுங்கள்’’ என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-4143

இதுதான் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். இது போன்ற ஆதாரப்பூர்வமான செய்திகளை மட்டும் பரப்பி நன்மைகளை அடைவோம்.