Tamil Bayan Points

07) பேச்சாளர் சந்திக்கும் பிரச்சனைகள்

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

Last Updated on February 24, 2022 by

பேச்சாளர் சந்திக்கும் பிரச்சனைகள்.

புதிதாக எந்த வேலையை செய்ய ஆரம்பித்தாலும் அதில் சிரமங்கள் வருவது இயற்கை. பிரச்சாரம் இதற்கு விதிவிலக்கல்ல. அல்லாஹ்வுக்காக, சொந்த வேலைகளை விட்டுவிட்டு, நேரத்தை ஒதுக்கி பயானுக்கு குறிப்பெடுத்து, பேசவரும்போது, இதெல்லாம் பயானா? சொதப்பீடிங்க. என்று யாராவது கூறினால், மிகப்பெரும் இடி விழுந்தது போல் இருக்கும். இதுபோன்ற பேச்சாளர் சந்திக்கும் ஒருசில பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும் காண்போம்.

 

v ஏற்கனவே கேட்டவர் இருப்பதை பெரிதுபடுத்தாதீர்கள்.

நீங்கள் ஒரு இடத்தில் பேசிய பேச்சை, மீண்டும் வேறு இடத்தில் பேசுகிறீர்கள், என்றால், பெரும்பாலும், அதே கோணத்தில் தான் அந்த செய்தியை பேசுவீர்கள். ஏற்கனவே உங்களின் இந்த பேச்சை கேட்டவர், மீண்டும் இப்போது, இந்த பயானிலும் அமர்ந்திருப்பார். இதுபோன்ற நேரங்களில், ”ஒரே மேட்டரை மக்அப் பன்னிட்டு, எல்லா இடத்திலேயும் அதையே தான் பேசுறாரு” என்று நினைப்பார்களோ, என்ற உறுத்தல் ஏற்படும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கொஞ்சம் கூட அசரவே செய்யாதீர்கள். ”ஆமாம். அதையே தான் பேசுறேன். அது அந்த மக்களுக்கு. இது இந்த மக்களுக்கு” என்று தைரியமாக பேசுங்கள். நீங்கள் பேசிய ஹதீஸ்கள் அனைத்தும் தெரிந்தவர் ஒருவரோ, இருவரோ பத்துபேரோ கூட இருக்கலாம். ”இங்கு இருக்கும் தெரியாத மக்களுக்குக்காகத்தான் பேசுகிறேன்” என்று நிதானமாக பேசுங்கள். ஏற்கனவே உங்களது அதே பயானை கேட்டவர் இருப்பதை பொருட்படுத்தாதீர்கள்.

          அதே நேரத்தில், பொதுவாகவே எந்த பயானையும் மீண்டும் பேசும்போது, வேறுகோணத்தில் பேசுவது உங்களது திறமையை வளர்க்கும். அதுமட்டுமின்றி, பேசிக்கொண்டு இருக்கும் போது, வேறுவேறு புது செய்திகள், சம்பவங்கள் நினைவிற்கு வரும். அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேறுகோணம், புதுபுது உதாரணங்கள், தற்போதைய நாட்டுநடப்புகள் என எந்த பழைய பயானுக்கும் புது வடிவம் தரமுடியும்.
v மக்கள் பேசிக்கொண்டிருந்தால் என்ன செய்வது?

பேச ஆரம்பிக்கும் போது மைக், ஸ்பீக்கர் சரியில்லாமல் போகும். புரொஜெக்டரை சரியாக செட் செய்திருக்கமாட்டார்கள், ஏற்பாடு செய்த நிர்வாகிகளே பயானை கவனிக்கமாட்டார்கள். இது போன்று எந்த பிரச்சனை வேண்டுமானாலும் வரலாம். இவற்றையெல்லாம், மென்மையான முறையில் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

குறிப்பாக, பேச்சாளருக்கு எரிச்சல் ஏற்படுத்தும் விஷயங்களில் மிக முக்கியமான ஒன்று, அவர் உரை நிகழ்த்தும் போது, மற்றவர்கள் பேசிக்கொண்டிருப்பது. சில நேரங்களில், கோபம் மிகைத்து, நான் பேசட்டுமா? நீங்கள் பேசுகிறீர்களா? என்று கேட்பவர்களும் உண்டு. நிதானத்தை கைகொள்ளுங்கள். கோபப்பட்டு ஏதேனும் பேசிவிட்டால், மக்கள் வெறுப்போடு உங்கள் பேச்சை கேட்கும் நிலை ஏற்படும். நமக்கும் அடுத்தடுத்து ஆர்வத்தோடு பேசத்தோன்றாது.

எனவே மக்கள் கவனிக்கும் வகையில் நம் பேச்சு இல்லை என்பதை விளங்கி, திடீரென ஒரு உணர்வுப்பூர்வமான செய்தியை, காரசாரமாக பேசி கவனத்தை உங்கள் பக்கம் திருப்புங்கள். அல்லது எதுவும் பேசாமல், ஒருசில நொடிகள், பேசிக்கொண்டிருக்கும் மக்களை ஒரு நிதானப்பார்வை பார்த்தாலும், கூச்சல் பேச்சு குறைந்துவிடும். பேசிக்கொண்டிருக்கும் மக்களையும், தூங்கி வழியும் மக்களையும் சரிசெய்வதற்கு, சில பேச்சாளர்கள், அவ்வப்போது நகைச்சுவையை பயன்படுத்துவதையும், நினைவில் வைத்து தேவைப்பட்டால் பயன்படுத்துங்கள்.    

 

v அனைவரையும் திருப்திப்படுத்துவது சாத்தியமற்றது.

நாம் பேசும் எல்லா விஷயங்களும், எல்லாருக்கும் பிடித்திருப்பதில்லை. சில விஷயங்கள் சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. இதற்காக நாம் அதிகமாக கவலைப்பட வேண்டியதில்லை.

உதாரணமாக) தேவையான காலகட்டத்தில், ”இயேசு இறைவனுடைய மகன் இல்லை” என்பதை தலைப்பாக எடுத்து பேசும் போது, அதை விரும்பாத மக்கள் சில பேர் இருக்கத்தான் செய்வார்கள். ”கிருஸ்தவர்கள் எப்படியோ போறாங்க. அதெல்லாம் நமக்கெதுக்குங்க. ரஸுலுல்லாஹ்வை பத்தி சொல்லுங்க. சஹாபாக்களை பத்தி மட்டும் பேசுங்க” என்று பேசும் மக்கள் நிச்சயமாக ஒருசிலராவது  இருப்பார்கள்.

நல்ல கணவனைக் கொண்ட பெண், கணவனின் சிரமங்களைப் பற்றி பேசியதை, ”அருமை!” என்பார், கணவனிடம் அடிவாங்கிவிட்டு பயானுக்கு வந்த பெண் அதே செய்தியை ”வேஸ்ட்” என்பார். எனவே இதுவெல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் சூழ்நிலை மற்றும் மனநிலைப் பொறுத்தது.

இது போன்ற விமர்சனம் உங்கள் காதுக்கு வரலாம். வராமலும் போகலாம். எப்படி இருந்தாலும், பேசும் செய்தி, காலத்திற்கு தகுந்த செய்தியாக, சரியான கருத்துடைய செய்தியாக இருந்தால், ஒருசிலர் விரும்பாததை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாதீர்கள். இப்படி இரண்டு பேர் எல்லா இடத்திலேயும் இருக்கத்தான் செய்வார்கள் என்று விட்டுவிடுங்கள். இரண்டு காதுகள் இருப்பது, சிலநேரங்களில், ஒன்றில் வாங்கி மற்றொன்றில் விடுவதற்குத்தான், என்று நினைத்து விட்டுவிடுங்கள்.

 

v பேசியதையே மீண்டும் பேசுவதற்கு சலிப்பு ஏற்படுகிறதே.

சலிப்பு ஏற்படாவிட்டால் தான் ஆச்சர்யப்பட வேண்டும்! சிந்திக்கும் திறன் உள்ள அனைவருக்குமே ஒரே வேலையை திருப்பத்திரும்ப செய்வதற்கு சலிப்பு ஏற்படத்தான் செய்யும். எனினும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள சில உளவியல் ரீதியான தீர்வுகள் உண்டு.

  • ”எதிர்காலத்தில் இன்னும் எத்தனை தடவை பேசவேண்டுமோ!” என்று தூக்காத சுமையை நினைத்து கவலைப்படாதீர்கள்.
  • அவ்வப்போது கிடைக்கும் புதுப்புது உலகசம்பவங்கள், உணர்வுப்பூர்வமான ஜமாத் செய்திகளைக் கொண்டு பேசுங்கள். உங்களுக்கே உற்சாகம் பிறக்கும்.
  • முன்னரே குறிப்பிட்டபடி அவ்வப்போது சிலசெய்திகளை புதிய கோணத்தில் பேசுங்கள். பேசும் உங்களுக்கும் சலிப்புத்தட்டாது, கேட்கும் மக்களுக்கும் சலிப்புத்தட்டாது.
  • ”பேசியதையே பேசுவதற்கு நமக்கு சலிப்பு ஏற்படக்கூடாது” என்று பிறருக்கு அறிவுரை சொல்லுங்கள்.
  • நூஹ் நபி 950 வருடம் பிரச்சாரம் செய்ததை எண்ணிப்பார்த்தால், நாம் செய்யும் இருபது, முப்பது வருடங்கள் எம்மாத்திரம்? மிகமிக குறுகிய காலமே பிரச்சாரம் செய்கிறோம். என்று நம்மைவிட பெரிய சுமையை சுமந்தவரை எண்ணிப்பார்த்தால் நமது சுமை சிறியதாக தெரியும்.
  • அனைத்தையும் விட, ”நினைவுபடுத்துவீராக! நினைவுபடுத்துதல் முஃமின்களுக்கு பயன் தரும் (51:55)” என்று அல்லாஹ் நமக்கு கட்டளையிடுகிறான். நினைவுபடுத்து என்றால் முன்னர் பேசியதைத்தான் நினைவுபடுத்த முடியும். எனவே, ”இறைவனது கட்டளைக்காக, என் வாழ்நாள் முழுவதும் ஒரே தலைப்பையே கொடுத்தாலும் பேசுவேன்” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சலிப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 

v சில நேரங்களில் பயான் முடித்தபிறகு தொண்டை கட்டிவிடுகிறதே!

உடல்ரீதியாக பேச்சாளருக்கு மிகவும் சிரமம் தரும் விஷயம் பயான் முடித்த பல நேரங்களில் தொண்டையில் வலி ஏற்படுவது மற்றும் தொண்டை பிடித்துக் கொள்வது. எனவே, அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளையும், தொண்டை பராமரிப்பு சம்பந்தமாக சில பயனுள்ள அறிவுரைகளையும், பிரபல மருத்துவரான டாக்டர். முகமது கிஸார் (Dr.Mohamed Kizhar) அவர்கள் தருகிறார்கள்.

 

பயான் செய்வதற்கு நாம் பயன்படுத்தும் மிக முக்கிய உறுப்பு vocal cord என்னும் குரல் நாண். பிரச்சாகர்களின் மூலதானமே இந்த குரல் நாண் தான். எனவே பிரச்சாகர்கள் தங்கள் குரல்நாண்களை கவனமாக பாதுகாப்பது அவசியம்.

? தொண்டையிலிருந்து பேசாதீர்கள் : பொதுவாக எப்போதுமே, குரல் நாண் (Vocal Cord) பாதிப்படையும் வகையில் அதிகமாக கத்திப் பேசாதீர்கள். பேசும்போது, அடிவயிற்றிலிருந்து (காற்று வெளிப்பட) குரல் எழுப்பிப் பேசவேண்டும். அதுவே பேசுவதில் சரியான முறை. கண்டிப்பாக தொண்டையிலிருந்து (சக்தியை வெளிக்கொணர்ந்து) ஒலி எழுப்பி பேசக்கூடாது.

? தேவையில்லாமல் கத்தாதீர்கள் : தேவையான நேரத்தில் மட்டுமே பேச்சின் தொனியை அதிகரிக்க வேண்டும். அவசியம் இல்லாமல் முழு பேச்சின் போதும், உயர்ந்த தொனியில் பேசுவதால், பிரச்சாரத்தின் மெருகும் குறைவதோடு, மிக சீக்கிரமே குரல்நாண் பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகம். சராசரியான தொனியில் பிரசாரம் செய்தாலே, அது கேட்பவர்களை ஈர்ப்பதாக அமையும். தேவையில்லாத இடத்திலெல்லாம் குரலை மிக உயர்த்திப் பிரச்சாரம் செய்யும் பொது, உளவியல் ரீதியாகவே, கேட்பவர்களுக்கு ஒருவித எரிச்சலே தோன்றும். எனவே இயல்பான தொனியில் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்.

? பயானுக்கு முன் ஓய்வு நல்லது : பயானுக்கு முன்பு முடிந்த அளவு, தேவை இல்லாமல் குரல் நாணை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம், குரலுக்கு ஒய்வு கொடுப்பதாக அமைவதால், பயான் செய்யும்போது ஏற்படும் (குரல் கவ்வுதல் போன்ற) குரல் சம்பந்தமான பிரச்சினைகள் தவிர்க்கப்படலாம் அல்லது குறைந்த பட்சம் தள்ளிப்போகலாம்.

? நீர்ச்சத்து மிகவும் அவசியம் : குரல் நாண் சீராக இயங்குவதற்கு உடலின் நீர்ச்சத்து மிகவும் அவசியம். எனவே, தினமும் பல தடவை நீர் அருந்துங்கள். குறிப்பாக, பயானுக்கு முன்னதாக 1 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். குடிக்கும் தண்ணீர் சுத்தமாக, நோய் தொற்றுக் கிருமிகள் இல்லாத தண்ணீராக இருக்கவேண்டும். அதற்காக அதிக விலையுள்ள, கேன் தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் தான் குடிக்கவேண்டும் என்று அவசியமில்லை. முடிந்த அளவு, கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை குடிக்க பழகிக்கொள்ளவும். இதனால், தண்ணீர் மூலம் பரவும் கிருமியின் தாக்கம் காரணமாக, தொண்டை உட்பட உடல் உறுப்புகள் பாதிப்படைவதை தடுக்க முடியும். மேலும் இது தொண்டைக்கு மிருதுவாகவும், கதகதப்பாகவும் அமையும். இதுதவிர, எப்போதுமே மிகவும் சூடான அல்லது மிகவும் குளிச்சியான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

? மூச்சுப்பயிற்சி (Breath Practice): சீரான மூச்சுப் பயிற்சியின் மூலம் குரல்வளத்தை பாதுகாக்கமுடியும். அதாவது மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து, ஜந்து வினாடி தாமதித்து, மெதுவாக மூச்சை வெளியே விடுவது. மூச்சை உள்ளே இழுக்கும்போது நம் அடிவயிறு வெளித்தள்ளியும், மூச்சை வெளியே விடும்போது, நம் அடிவயிறு உள்ளிழுத்தும் இருக்க வேண்டும். இது மூக்கு மற்றும் தொண்டைக்கு நல்ல பயன்தரும் பயிற்சி.

? ஆண்டிபயாடிக்ஸ் வேண்டாம் : சாதாரண தொண்டை கரகரப்பு, லேசான தொண்டை வலிகளையெல்லாம், தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று அல்லது நோய்க்கிருமியின் தாக்குதல் என நினைத்து, மருத்துவர் பரிந்துரை இல்லாமல், ஆங்கில மருந்துகளை நீங்களாகவே எடுக்க வேண்டாம். தேவையில்லாமல் antibiotics எடுப்பதன் மூலம், பின்னர் நிஜமாகவே, antibiotics தேவைப்பட்டு எடுக்கும் போது, அது வேலை செய்யாமல் போய்விடலாம். உண்மையிலேயே தொண்டையில் நோய்த்தொற்று என்று சந்தேகம் ஏற்பட்டால், மருத்துவரை ஆலோசித்து மருந்து எடுக்கவும்.

? இயற்கை வைத்தியம் நல்லது : சில இயற்கை உணவுகள் தொண்டை சம்பந்தமான சில பிரச்சினைகளுக்கு உடனடியான தற்காலிக நிவாரணம் தரலாம். குறிப்பாக, நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிமதுரம் அல்லது ”சித்தரத்தை”யை வாயில் மெல்லலாம். இதற்கு பொதுவாக மருத்துவர்களின் பரிந்துரை தேவையில்லை. இது பிரச்சாரகர்கள் பலரும் கையாளும் மிக இலகுவான வைத்திய முறை. பனங்கற்கண்டுடன் ஒரு கிராம்பை சேர்த்து மெல்லலாம். அல்லது சூடான பாலில் சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத் தூள், சிறு துண்டு வெல்லம் சேர்த்துக் கலந்து, இரவு படுப்பதற்கு முன் குடிக்கலாம். ஒரு டம்ளர் நீரில் துளசி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து, அரை டம்ளராக வற்றியதும், சிறிதளவு தேன் கலந்து பருகலாம். காய்கறி சூப் செய்து, மிளகுத்தூள் கலந்து குடிப்பதும் பயனளிக்கும். 

? எலுமிச்சை சாப்பிடலாமா?: நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வைட்டமின் சி உள்ள பப்பாளி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள். ஆனால் இது போன்ற citrus பழங்கள் சாப்பிடுவதால், அழற்சி ஏற்படும் தன்மை கொண்டவர்களுக்கு, இது தொண்டை பிரச்சினைகளை அதிகப்படுத்த வாய்ப்பு இருப்பதால், அத்தகையவர்கள் மட்டும் ஆரஞ்சு, எலுமிச்சைப்பழம் போன்றவற்றை தவிர்க்கவும்.

? வெதுஉப்புநீர் வாய்கொப்பளித்தல் (Hotsalt water Gargling) : பொதுவாக குரல் லோசாக கரகரத்தாலோ, அல்லது எப்போதுமோ காலையிலும் இரவிலும் லேசான வெண்ணீரில் உப்பு கலந்து தொண்டை நனையும்படி கொப்பளிப்பது மிகவும் நல்லது. இருமல் இருந்தால், மேற்குறிப்பிட்ட நீரில் சிறிது மஞ்சள்தூள் கலந்து, தொண்டையில் படும்படி கொப்பளித்துத் துப்பவும்.

? உணவுக் கட்டுப்பாடு அவசியம் :  பொதுவான மருத்துவ பிரச்சனைகளான நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், மூச்சு திணறல் போன்ற நீண்டநாள் நோய்கள் உள்ள பிரச்சாரகர்கள், தகுந்த மருத்துவ ஆலோசனைகளுடன் அந்த நோய்களை மிகவும் கட்டுக்குள் வைப்பது நல்லது. அந்த நோய்க்கான உணவு கட்டுப்பாடு அவசியம். அநேக பிரச்சாரகர்கள், வெளியூர் பிரச்சாரம் செய்ய செல்வதால், ஹோட்டல்களில் சப்பிடும் நிலை ஏற்படும்போதோ அல்லது தங்களுக்கு பிரசாரம் செய்யும் ஊரில் தரப்படும் விருந்தின் போதோ, அடிக்கடி உணவு கட்டுப்பாட்டை மீறி, தங்களின் நோய் கட்டுபாட்டை இழந்து விடுகிறார்கள். எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவும். கட்டுப்பாடற்ற நீண்டகால நோய்களால், தொண்டை பாதிக்கப்படுவதுடன், பிரசாரகர்களின் பிரச்சாரத்தின் வீரியம், பிரசாரத்திற்க்காக அடிக்கடி பயணம் செய்பவை பாதிக்கப்படலாம்.

டாக்டர். முஹம்மது கிஸார்.