Tamil Bayan Points

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on August 15, 2020 by Trichy Farook

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?

இல்லை.

பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம் உரை நிகழ்த்துவார். அதில் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா?

பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் உட்கார்வதற்கோ அல்லது இரண்டு உரைகள் நிகழ்த்துவதற்கோ நபிவழியில் ஆதாரமில்லை.

இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. இந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்லர். எனவே இந்த ஹதீஸ் ஏற்கத்தக்கதல்ல.

سنن ابن ماجه (1/ 409)

1289 – حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَحْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُسْلِمٍ الْخَوْلَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ: «خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فِطْرٍ أَوْ أَضْحَى، فَخَطَبَ قَائِمًا ثُمَّ قَعَدَ قَعْدَةً ثُمَّ قَامَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ் பெருநாளீலோ நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு சற்று உட்கார்ந்து விட்டு எழுந்து நின்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: இப்னு மாஜா-1289

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள அப்துர்ரஹ்மான் பின் உஸ்மான் பின் உமைய்யா என்ற அபூபஹ்ர் என்பவரும், இஸ்மாயீல் பின் அல் கவ்லானி என்பவரும் பலவீனமானவராவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாகாது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆவைப் போன்று பெருநாளிலும் இரண்டு உரைகள் ஆற்றினார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை.

صحيح ابن خزيمة (2/ 348)
1445 – نا سَلْمُ بْنُ جُنَادَةَ، ثنا وَكِيعٌ، عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ الْفَرَّاءِ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ يَوْمَ عِيدٍ عَلَى رَاحِلَتِهِ» قَالَ أَبُو بَكْرٍ: ” هَذِهِ اللَّفْظَةُ تَحْتَمِلُ مَعْنَيَيْنِ، أَحَدُهُمَا أَنَّهُ خَطَبَ قَائِمًا لَا جَالِسًا، وَالثَّانِي أَنَّهُ خَطَبَ عَلَى الْأَرْضِ، كَإِنْكَارِ أَبِي سَعِيدٍ عَلَى مَرْوَانَ لَمَّا أَخْرَجَ الْمِنْبَرَ، فَقَالَ: لَمْ يَكُنْ يُخْرِجُ الْمِنْبَرَ “

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி)
நூல்: இப்னு குஸைமா.

மிம்பர் இல்லாமல் தரையில் நின்று நபியவர்கள் உரையாற்றியதால் இதில் உட்காருவதற்குரிய சாத்தியமில்லை என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பெருநாளன்று ஒரு உரை நிகழ்த்துவது தான் நபிவழியாகும்.