Tamil Bayan Points

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா?

முக்கிய குறிப்புகள்: மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்

Last Updated on September 27, 2022 by Trichy Farook

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா?

பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வது கூடாது என்பது தான் முதலில் நம்முடைய ஜமாஅத்தின் நிலைப்பாடாக இருந்தது. அதற்குப் பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக எடுத்து வைக்கப்பட்டது.

கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களையும் அதை வணங்குமிடமாகவும் விளக்கு ஏற்றுமிடமாகவும் ஆக்கும் பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: திர்மிதீ (294), நஸயீ (2016), அபூதாவூத் (2817), அஹ்மத் (1926, 2472, 2829, 2952)

இச்செய்தியில் பாதாம் என்ற அபூஸாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார். பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்குத் தடையில்லை என்பதே சரியானதாகும்.

மரண பயத்தையும் மறுமைச் சிந்தனையையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

நான் ”அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ”அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹூ பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறை நம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்று விட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக் கூடியவர்களாக உள்ளோம்.) 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1774)

நபியவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கப்ரு ஜியாரத்தின் போது ஓத வேண்டிய துஆவைக் கற்றுக் கொடுத்ததின் மூலம் பெண்கள் கப்ரு ஜியாரத் செய்வதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

“அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (1777)

“அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதீ-1054 (974)

மண்ணறைகளை ஜியாரத் செய்கிறோம் என்று கூறிக் கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணைவைப்பு அரங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம்.