Tamil Bayan Points

29) பூதக்கண்ணாடியும் மூக்குக்கண்ணாடியும்

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

பூதக் கண்ணாடிகளால் பிறையைப் பார்த்து முடிவு செய்யலாமா?

பிறை தோன்றி விட்டாலும் நம் கண்களுக்குத் தெரியும் அளவுக்கு வளர்ந்த பிறையையே நாம் தலைப்பிறை என்கிறோம். பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது இந்தப் பிறையைத் தான். கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு இருப்பதைப் பார்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க மாட்டார்கள்.

பூதக் கண்ணாடியைப் பொறுத்தவரை சாதாரண கண்ணுக்குத் தெரிவதையும் அது காட்டும். சாதாரண கண்ணுக்குத் தெரியாததையும் அது காட்டும். சாதாரணக் கண்ணுக்குத் தெரியாத சிறிய அளவிலான பிறையையும் காட்டும்.

கண்ணுக்குத் தெரியாத அளவில் உள்ள பிறையைப் பூதக் கண்ணாடியால் பார்த்து முடிவு செய்யக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத பிறை தலைப்பிறையைத் தீர்மானிக்க உதாவது.

சாதாரணக் கண்களால் பார்க்கும் அளவுக்கு வளர்ந்த பிறையைப் பூதக்கண்ணாடியால் பார்க்கலாமா? என்றால் பார்ப்பதில் தவறு இல்லை.

ஆனால் பூதக் கண்ணாடியிலிருந்து கண்களை விலக்கி நேரடியாகப் பார்த்து நிருபிக்க வேண்டும். பூதக் கண்ணாடியால் தெரிந்தது சாதாரணக் கண்களுக்குத் தெரியாவிட்டால் பார்க்கும் அளவுக்குப் பிறை வளரவில்லை என்று பொருள்.

பூதக் கண்ணாடியால் பிறை இருப்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். அவ்வாறு கண்டுபிடித்த பின் அதே இடத்தில் சாதாரணக் கண்களால் பார்க்கலாம். இதற்கு மட்டும் தான் பூதக் கண்ணாடி உதவும். கண்ணாடி அணிந்து பிறை பார்த்தவரின் சாட்சியத்தை ஏற்கலாமா? என்று குதர்க்கமாகக் கேட்கிறார்கள்.

ஏற்கனவே எழுதப்பட்டவற்றிலேயே இதற்கான விளக்கமும் அடங்கியுள்ளது.

ஒரு பொருளை சாதாரணக் கண்களால் பார்க்கும் போது எப்படி இருக்குமோ அப்படிப் பார்ப்பதற்குத் தான் கண்ணாடி அணிகிறோம். சிறியதைப் பெரியதாகக் காட்டவோ தொலைவில் உள்ளதை அருகில் பார்க்கவோ யாரும் கண்ணாடி அணிவதில்லை. இயல்பான பார்வையைப் பெறுவது தான் கண்ணாடியின் தன்மை. பார்வைக் குறைவு ஏற்பட்டவர் கண்ணாடி அணிந்து பார்ப்பதும் பார்வைக் குறைவு அற்றவர் கண்ணாடியில்லாமல் பார்ப்பதும் சமமானவை தான் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இயல்பான பார்வையின் தன்மையை அடைவதற்காக இல்லாமல் சிறியதைப் பெரிதாகக் காட்டும் கண்ணாடியையோ தூரத்தில் உள்ளதை அருகில் காட்டும் கண்ணாடியையோ அணிந்து பிறை பார்த்தால் அதை ஏற்க முடியாது.