Tamil Bayan Points

08) புதியவர்களின் சந்தேகமும், சில ஆலோசனைகளும்.

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

Last Updated on February 24, 2022 by

புதியவர்களின் சந்தேகமும், சில ஆலோசனைகளும்.

 

v எனக்கு புது செய்திகள் நினைவிற்கு வருவதில்லையே!

”ஒரு செய்தியை பேசிக்கொண்டிருக்கும் போது, வேறுவேறு செய்திகள் நினைவிற்கு வரும். அதை பயன்படுத்தி பேசுங்கள்” என்பது ஒரு பொதுவான அறிவுரை. அந்தந்த நேரத்தில் நினைவிற்கு வரும் புதுச்செய்திகள் தலைப்பிற்கு தொடர்பு உடையவையாகவும் இருக்கும். உரையை நீட்டவும் உதவும்.

புதிதாக பேசத்துவங்கும் தாயிக்களில் அதிகமானவர்களுக்கு ஏற்படும் சந்தேகம் என்னவென்றால், ”பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு புதுபுது செய்திகள் எதுவும் நினைவிற்கு வருவதில்லை. பேசுவதற்கு எடுத்துக்கொண்டு சென்ற குறிப்புகள் கூட, பலநேரங்களில் மறந்துவிடுகிறது”. என்று கேட்பார்கள்.

கவலையே படவேண்டாம். இது வெறும் நான்கைந்து மாதங்களுக்கு ஏற்படும் பிரச்சனை. அதன் பிறகு இது சரியாகிவிடும். பதட்டமே இதற்கு காரணம்.

எடுத்துச்சென்ற குறிப்புகளை நினைவில் வைப்பதற்குரிய எளிய வழி, உரையை மூன்றாக, நான்காக பிரிப்பது தான். மாற்றுமத உரைகளில் தேவையான நேரங்களில் பாயிண்ட், பாயிண்ட்டாக பேசவேண்டும் என்று முன்னரே பார்த்தோம்.

முஸ்லிம்களுக்கான பயானிலும் எந்த தலைப்பையும் மூன்று, நான்கு பகுதிகளாக பிரித்து பேசுவது, குறிப்புகளை எளிதில் நினைவில் வைக்கஉதவும். உதாரணமாக, பிரார்த்தனையை பற்றி பேசுகிறீர்கள் என்றால், 1.துஆ செய்யும் முறைகள், 2.செய்யக்கூடாத முறைகள் 3.துஆ ஏற்கப்பட நிபந்தனைகள். என மூன்றாக பிரித்து பேசுவதால் குறிப்புகள் மறக்காது.

 

v எல்லா குறிப்புகள் இருந்தும், பேசமுடிவதில்லையே!

இதற்கும் பயமும், பதட்டமும் தான் காரணம். இதுவும் சில மாதங்களில் சரியாகிவிடும். திக்தித்தடுமாறிப் பேசுவதைப் பற்றி கவலைப்படாதீர்கள். ஆங்கிலம் கற்பவர்கள், ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறிப் பேசுவார்கள். ஆனால் வெட்கப்படாமல் பேசிக்கொண்டே இருந்தால் சில மாதங்களில் சரளமாக பேசிவிடுவார்கள். எந்த கலைக்கும் இதுதான் அடிப்படை.

எனக்கு அரபி ஓத வராது, டைப்பிங் வராது, கணக்கு வராது, என்று எந்த கலை பற்றி, யார் சொன்னாலும், இதே விதிதான். பழகினால் வரும். பழகுவதற்கு சோம்பேறித்தனம் இருந்தால் வராது. ஆறு மாதம் பழகியும் வராத கலை இருந்தால், சொல்லுங்கள் பார்ப்போம்!

அதுபோல, புதியவர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று மக்களை நினைத்து, அறிவுள்ளவர்களை நினைத்து தயங்கி தயங்கி பேசுவது. இதனாலும் வார்த்தை தடுமாறும். மேடையில் நின்றுவிட்டால், முன்னால் எவ்வளவு பெரிய அறிஞர் இருந்தாலும் சரி, சொல்லவந்த செய்தியை நண்பரிடம் விளக்குவது போல விளக்கவேண்டும் என்று நினைத்தால், வார்த்தை தடுமாறாது. சரளமாக பேசலாம்.

இருப்பினும், ஆரம்பத்தில் பேசும்போதும் அல்லது இரண்டு ஆண்டுகள் பிறகும் அதிகமான மக்கள் மத்தியில் பேசும் போதும் கண்டிப்பாக பதற்றம் ஏற்படும். இதற்கு பயந்து பேசுவதை விட்டுவிடாதீர்கள். இவற்றை எதிர்கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.
v நான் கடகடவென வேகமாக பேசுவதாக மக்கள் சொல்கிறார்களே!

அப்படி சொன்னால், அவர்கள் சொல்வது சரிதான். புதியவர்கள் செய்யும் தவறுகளில் முதன்மையானது, சம்பவங்களை விவரிக்காமல் அவசர அவசரமாக பேசுவது தான். இதனால் ஒரு மணிநேர பயான் குறிப்புகள் 15 நிமிடங்கள் கூட நிற்பதில்லை. எனவே தான் பெரும்பாலான புதியவர்கள் கடகடவென பேசி முடித்துவிடுகிறார்கள். இவர்கள் கீழ்காணும் அறிவுரைகளை நினைவில் வைக்கவேண்டும்.

ஒரு ஹதீஸையோ, குர்ஆன் வசனத்தையோ விளக்கி, டெவலப் செய்யாமல் அப்படியே வாசித்து பயான் செய்தால், உரை கடகடவென இருக்கும். சீக்கிரமாகவும் முடிந்துவிடும். குறிப்பாக, புதியவர்களின் உரைகளில் குர்ஆன், ஹதீஸ் இருந்தாலும், அவற்றில் இருந்து பெறப்படும் அறிவுரை இருக்காது, அல்லது மிக சுருக்கமாக இருக்கும்.

மக்களுக்கு தெரிந்த செய்தியையே எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருப்பது என்ற சிந்தனையினாலும், நாம் எப்படி பிறருக்கு அறிவுரை சொல்வது என்ற தயக்கத்தினாலும் அறிவுரைகளையும், தத்துவங்களையும் பேசுவதில்லை. இந்த தயக்கம் கண்டிப்பாக தேவையே இல்லை. உண்மையிலேயே தெரிந்த செய்தியையும், நிதானமாக சொல்வதையே மக்கள் விரும்புகிறார்கள். ”புதிதாக வந்த இவர் யார் நமக்கு அறிவுரை சொல்ல?” என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. எனவே, மக்களுக்கு தெரிந்திருந்தாலும் பரவாயில்லை. நான் ஒவ்வொன்றையும் விளக்கித்தான் பேசுவேன் என்ற உறுதி இருந்தால்தான், செய்திகளும் புரியும்படி இருக்கும், அதிக நேரமும் பேசமுடியும்.

இதல்லாமல், புதியவர்கள் பீடிகை போடுவது கிடையாது. ஒரு செய்தியை சொல்வதற்கு முன்னால் அதன் முக்கியத்துவத்தை விளங்கும் வண்ணம் எதையாவது 2 நிமிடத்திற்கு பேசி பீடிகை போட்டு பிறகு ஹதீஸை சொன்னால், அதிக நேரம் பேசமுடியும். இதையும் நினைவில் வைக்கவும்.

Ì கடகடவென பேசுவதும், விறுவிறுப்பாக பேசுவதும் வேறுவேறு.

ஒருசில புதிதாக பேசுபவர்களிடம் ”நீங்கள் வேகமாக பேசுகிறீர்கள்” என்று சொன்னால், ”நான் சரியாத்தானே பேசுறேன். என்னைவிட வேகமாக அந்த பேச்சாளர் பேசுகிறார். அதை தவறுன்னு சொல்ல மாட்டேன்றாங்க” என்று சொல்வார்கள். மக்கள் தவறென்று சொல்லாத பேச்சாளரின் வேகமான பேச்சு, கடகடவென்று பேசுவதல்ல. மாறாக விறுவிறுப்பாக பேசுவது.

இரண்டிற்கும் உள்ள வேறுபாடு, கடகடவென பேசும் பேச்சில், ஒரு சம்பவத்தை விளக்கத்தேவையான வரிகள், வார்த்தைகள் இருக்காது. விறுவிறுப்பான பேச்சில் சொல்லவேண்டிய வரிகள், விளக்கவேண்டிய எடுத்துக்காட்டுகள், எதிர்கேள்விகள் என அனைத்துமே இருக்கும். ஆனால் அவை வேகமாக இருக்கும். அவ்வளவு தான்.

எனவே புதியவர்கள் கண்டிப்பாக விறுவிறுப்பாக பேசுவதாக நினைத்துக்கொண்டு வேகமாக பேசக்கூடாது. எந்த சம்பவத்தையும் மெதுவாக விளக்கித்தான் பேசவேண்டும். ஒரு வருடம் அனுபவம் பெற்ற பிறகு விறுவிறுப்பாக பேசிக்கொள்ளலாம். அதுவரை விறுவிறுப்போ, வேகமோ கண்டிப்பாக வேண்டாம்.

இவ்வாறு நிதானமாக விளக்கிப்பேசும் போது, நேரமின்மையால் இறுதியில் ஒரிரு செய்திகள் விடவேண்டியிருக்கலாம். அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். கொண்டு வந்த அல்லது தெரிந்த அனைத்து செய்திகளையும் கொட்டிவிடுவது தான், ”ஒரு பேச்சாளர் தோற்கும் இடம்” என்பார்கள். எனவே கொண்டு வந்த செய்திகளில் ஒரிரு செய்தியை விட்டால் தான், உரை நிதானமாக அமையும் எனில், ஒரிரு செய்தியை விடுவதில் எந்த தவறும் இல்லை. ”கஷ்டப்பட்டு எடுத்து வந்த பாயிண்ட் வீணாகிவிட்டதே!” என்று கவலைப்படக்கூடாது. அதை விட, மக்களுக்கு புரிவது தான் முக்கியம். அந்த செய்தியை வேறு நேரத்தில் சொல்லிக்கொள்ளலாம்.


v
மெதுவாக, சப்தம் குறைவாக பேசுவதாக சொன்னால்…

நீங்கள் மெதுவாக பேசுவதாக மக்கள் கூறினால், நீங்கள் முனகுகிறீர்கள் என்று அதற்கு அர்த்தம். தவறாக பேசிவிடுவோமோ என்ற பயம் தான் இதற்கு காரணம். பயத்தை போக்கும் வழிமுறைகளை ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். சரியான செய்திகளைக் கொண்டு, அதிக பயிற்சி எடுத்து, சப்தமாக கத்திப் பேசுங்கள். ஒருவேளை தவறாக பேசிவிட்டால் தான் என்ன? தண்டனையாக கொடுக்கப்போகிறார்கள்? என்ற நம்பிக்கையோடு பேசுங்கள்.

தவறுகள், தடங்கல்கள் இருந்தால் கூட ஆரம்ப பயான்களில் மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள். ஆனால் முனகல் பேச்சை கண்டிப்பாக யாருமே அங்கீகரிக்க மாட்டார்கள். முனகல் பேச்சு மக்களுக்கு வெறுப்பைத் தான் தரும்.


v
குறைகள் சுட்டிக்காட்டப்படும் போது…

புதிதாக பேசுபவர்களிடம் அவர்களின் பேச்சில் உள்ள குறைகளை சொன்னால், ஒருசிலர் கோபப்படுவதையும், வருத்தப்படுவதையும் பார்க்கிறோம். விமர்சனம் செய்யும் நிர்வாகிகள் சிலநேரம் கடுமையாக பேசிவிடுவதும் தவறுதான். இதன் காரணமாகவே பலஇடங்களில் புது இமாம்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டதுண்டு. இதில் முதல் தவறு, அவமானப்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு, கடித்துக் குதறுபவரிடம் தான் உள்ளது. இறைவனுக்காக தனது உழைப்பையும், நேரத்தையும் தியாகம் செய்யும் ஒருவர், இதுபோன்று நடப்பது அவரது நன்மைகளை பாழாக்கக்கூடியது.

இரண்டாவது, பேச்சாளர்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால், அனுபவம் பெறும் வரை இதுபோன்ற விமர்சனங்களை சந்திக்கவேண்டியிருக்கும், ”சிலகாலம் கழித்து திட்டிய இவரே நம் பேச்சை விரும்பிக்கேட்பார். பலஆயிரம் மக்களுக்கு உரை நிகழ்த்தும் நாள் வெகுதொலைவில் இல்லை” என்ற நம்பிக்கையோடு பொறுமையாக இருங்கள். பெரிய பேச்சாளர்களின் வீடியோக்களை அதிகம் பார்த்து, அவர் சுட்டிக்காட்டிய குறைகளை திருத்திக்கொள்ளுங்கள்.

 

v எனக்கு அரபி வசனங்கள், ஹதீஸ்கள் அதிகமாக தெரியவில்லையே!

உங்களுக்கு மட்டுமல்ல, மதரஸாவில் படிக்க வாய்ப்பு அமையாமல், தனது சுயமுயற்சியால் கல்வி அறிவை வளர்த்துக்கொண்டு பிரச்சாரம் செய்யும் பலருக்கும் உள்ள பிரச்சனை இது. சிலர் விதிவிலக்காக அதிகமான வசனங்களையும், ஹதீஸ்களையும் தெரிந்து வைத்திருக்கலாம். இவர்களன்றி மற்றவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால், தலைப்பிற்கு தேவையான ஆயத்துக்களையும், ஹதீஸ்களையும் மனனம் செய்ய முடியாவிட்டால், 50 பொதுவான குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களை மட்டும் மனனம் செய்துகொள்ளுங்கள்.

உதாரணமாக, ”(குல்லுக்கும் ராயின்) உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்…” என்ற ஹதீஸ் நாம் பேசும் பயான்களில் கிட்டத்தட்ட 90 சதவீத உரைகளுக்கு தேவையான ஹதீஸ். இந்த ஒரு ஹதீஸை அரபியில் மனப்பாடம் செய்தால், பத்தில், ஒன்பது பயான்களுக்கு பயன்படும். அதுபோல, ”(லகத்கானலக்கும்) இந்த நபியிடத்தில் அழகான முன்மாதிரி இருக்கிறது (33.21)” என்ற குர்ஆன் வசனத்தை கிட்டத்தட்ட எல்லா உரைகளுக்குமே பயன்படுத்த முடியும். இதுபோன்ற பொதுவான ஹதீஸ்களையும், வசனங்களையும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். வெறும் 50 அரபு செய்திகளைக் கொண்டே, நம் அனைத்து உரைகளிலும் அரபியில் பேசுகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும்.

உரையின் இறுதியில் கடகடவென பயன்படுத்துதல்: குறிப்பாக, உரையின் ஆரம்பத்திலும் இறுதியிலும் அறிந்த பிரபலமான குர்ஆன் வசனங்களை பயன்படுத்துவது இலகுவானது. உதாரணமாக, ”ஹுவல்லதீ அர்ஸல ரஸுலஹு – மற்ற மார்க்கங்களை மிகைக்க அவன் தான் தன் தூதரை சத்தியத்துடன் அனுப்பினான்(48:28)” என்ற குர்ஆன் வசனத்தை பல உரைகளின் இறுதி நிமிடத்தில் பயன்படுத்தலாம். அதுபோல, ”யா அய்யுஹல்லதீன ஆமனூ லாதுல்கிகும் – ஈமான் கொண்டவர்களே! உங்கள் பிள்ளைகளோ, செல்வமோ…(63:9)” என்ற வசனத்தையும் பல உரைகளின் இறுதி நிமிடத்தில் கடகடவென பயன்படுத்தலாம். இது இறுதி நிமிட பேச்சை பரபரப்பாக்கும். மேலும் அரபி வசனத்தை பயன்படுத்தியதாகவும் அமையும். 

Ì மேற்குறிப்பிட்ட அறிவுரைகள், நீண்டகால தரமான பேச்சுக்கு பயன்படாது. புதியவர்களும், மதரஸாவில் படிக்காதவர்களும் தங்களது உரைகளை மெருகூட்டுவதற்கு சில காலத்திற்கு இந்த வழிமுறையை கையாளலாம். அதன் பிறகு, தலைப்பிற்கு உகந்த ஹதீஸ்களையும், குர்ஆன் வசனங்களையும் நேரத்தை ஒதுக்கி மனனம் செய்து, பயன்படுத்துவது தான் சரியானது. இதில் வேறு கருத்திற்கு இடமே இல்லை.
v பொருள் அறிந்து மனப்பாடம் செய்யுங்கள்

பொதுவாகவே, பொருள் அறியாத மாற்றுமொழியை மனப்பாடம் செய்வதற்கு யாருக்குமே சிரமமாகத்தான் இருக்கும். உதாரணமாக, ”என் தந்தையே ஷைத்தானை வணங்காதீர்கள். ஷைத்தான் அர்ரஹ்மானுக்கு மாறுசெய்பவன்” என்ற வரியை மனப்பாடம் செய்ய இரண்டு நொடி கூடத்தேவையில்லை.

அதை வரியை அரபியில் ”யா அபதீ. லாதஃபுதுஷ் ஷய்த்தான. இன்னஷ் ஷய்த்தான கானலிர் ரஹ்மானி அஸிய்யா” என்று மனனம் செய்வதற்கு பலருக்கு இரண்டு நிமிடமாவது தேவைப்படும். இதற்குக் காரணம், இதன் பொருள் புரியாததேயாகும். எனவே, அரபி வசனங்களை மனனம் செய்ய விரும்புபவர்கள், அந்த வரியில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் விளங்கி, பிறகு மனப்பாடம் செய்யுங்கள். மிக எளிதாக மனப்பாடம் ஆகும்.

குர்ஆனில் மொத்தம் சுமாராக 78,000 வார்த்தைகள் உள்ளன. இவற்றில், திரும்பத்திரும்ப வரும் வார்த்தைகளை கழித்து. மூலவார்த்தையிலிருந்து பெறும் வார்த்தைகளையும் கணக்கில் கொண்டு பார்த்தால் நஸர, கால, ஃபதஹ, மின், அலா போன்ற வெறும் 125 வார்த்தைகளை மனனம் செய்தாலே குர்ஆனில் உள்ள சுமார் 40,000 வார்த்தைகளை விளங்கிக்கொள்ளமுடியும்.

அதாவது 125 வார்த்தைகளுடன், அந்த வார்த்தைகளைக் கொண்டு, பல்வேறு வார்த்தைகளை பெறும் அரபி அணி இலக்கணத்தையும் (ஸர்ஃப் செய்யும் முறையையும்) தெரிந்து கொண்டால், குர்ஆனில் பாதி வார்த்தைகளை உங்களால் எளிதாக புரிந்துகொள்ளமுடியும். பிறகென்ன! குர்ஆன் மனனம் மிகவும் எளிதாகிவிடும். எனவே, மதரஸாக்களில் கல்வி பயில இயலாதவர்கள், இன்றே இதனை படிக்க ஆரம்பியுங்கள். குர்ஆனை மனனம் செய்வதற்கு (1) http://www.aboutislam.eu/upload/93760100.pdf, (2) http://www.quran-st.net/dictionary.htm, (3) http://www.quranexplorer.com/Quran/Default.aspx, போன்ற இணையதளங்கள் உங்களுக்கு மிகவும் பயன்படும்.

 

v அரபி வசனங்களை பேப்பரை பார்த்து படித்துச் சொல்லலாமா?

தாராளமாக சொல்லலாம். தவறே இல்லை. ஒரு உரைக்குத் தேவையான அனைத்து குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் மனனம் செய்து தான் பேசவேண்டும் என்றில்லை. எப்போதாவது பயன்படுத்தும் வசனங்களையும், ஹதீஸ்களையும் மனனம் செய்வது சிரமமாக இருந்தால், அதை பேப்பரில் பிரிண்ட் எடுத்து, வாசித்து சொல்வதும் தவறில்லை. அதை யாரும் மதிப்பு குறைவாக நினைப்பதில்லை.

மதினாவில் படித்த அறிஞர்களில் பலரும் கூட, தெரிந்த வசனங்கள், ஹதீதுகளாக இருந்தாலும், மறந்து விட்டு தடுமாறக்கூடாது என்பதற்காக, கையில் பிரிண்ட் வைத்துக்கொண்டு வரிசையாக படித்து சொல்கின்றனர். எனவே, இந்த முறையையாவது பின்பற்றி அரபி வசனங்களை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். ஆனால், இந்த முறையில் வசனங்களை படித்துச் சொல்லும் போது, எழுத்துக்கூட்டி படித்துக் கொண்டிருக்கக்கூடாது. சரளமாக படிக்க முடிந்தால் மட்டும் இந்த முறையை கையாளுங்கள்.
v நிறைய சம்பவங்களையும் செய்திகளையும் சொல்லவேண்டுமா?

கூடாது. தகவல்கள் நிறம்ப பேசுவதைப்பற்றி இந்த நூலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதை சரியான முறையில் விளங்கிக்கொள்ளவேண்டும். வர்ணிக்கப்படும் ஓரிரு சம்பவங்களை தகவல் நிறம்ப பேசுவதென்பது வேறு. பயான் முழுவதும் பல்வேறு சம்பவங்கள் மற்றும் தகவல்களால் நிறம்பி இருப்பது என்பது வேறு.

ஒரு மணிநேர உரையில், இருபது முப்பது சம்பவங்களையும், தகவல்களையும் தந்தால் அதை கிரகிப்பதற்கு, பலருக்கு சிரமமாக இருக்கும். குறிப்பாக பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் இருக்கும் சபைகளில் இவ்வாறு பேசினால், எந்த செய்தியையும் அவர்களால் நினைவில் வைக்கமுடியாது.

நம்முடைய பயான்கள் பெரும்பாலும், இறையச்சம், மறுமை சிந்தனை, நல்லது கெட்டது என்பன போன்ற தலைப்பில், அறிவுரை ரீதியான பயான்களாக இருப்பதால், ஒரிரு சமுதாய நிகழ்வுகளுக்கு மேல் தேவைப்படுவதில்லை. அந்த ஒரிரு சம்பவங்களை மட்டும் தான் தகவல்கள் நிறம்ப பேசவேண்டும்.

Ì விதிவிலக்கு:  ”உலக அரங்கில் பேசும் பிரபல இஸ்லாமிய பேச்சாளர்கள், ஒரே உரையில், ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு, ஏராளமான தகவல்களை தருகின்றனரே?” என்று கேட்கலாம். அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புகளே இதற்கு காரணம். ”இஸ்லாமும் தீவிரவாதமும், பத்திரிக்கைத்துறையின் சூழ்ச்சிகள், மதங்கள் மற்றும் அறிவியல் பார்வையில் புலால் உணவு” என்பது போன்ற தலைப்புகளில் பேசும்போதும் நாமும் அவர்களை போன்று, ஏராளமான தகவல்களை தரலாம். ஒட்டுமொத்த உரையே பல்வேறு சம்பவங்களாலும், தகவல்களாலும் நிறம்பி இருக்கலாம். தவறில்லை.

 

v திடீரென்று பேசச்சொன்னால் என்ன செய்வது?

நாம் எதாவது ஜமாஅத் நிகழ்ச்சிக்கு சென்றிருப்போம். அல்லது திருமணத்திற்கு சென்றிருப்போம். அப்போது நம்மைப் பார்த்து ”எதாவது சின்ன பயான் பன்னுங்க” என்று கேட்பார்கள். அப்போது, ”குறிப்பு எடுக்கல” என்றெல்லாம் சொல்லமுடியாது”.

இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ள, இதுபோன்ற சபைகளுக்கு செல்லும்போது, சம்பந்தப்பட்ட ஹதீஸ்களை பார்வையிட்டுச் சென்றால், எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க முடியும். இரண்டு நிமிடமாவது அவகாசம் பெற்றுக்கொண்டு, முதலில் பேசவேண்டிய நேரத்தை தெரிந்துகொண்டு, உரையை இரண்டாகவே, மூன்றாகவே பிரித்து, அதில் சொல்லவேண்டியவற்றை திட்டமிடுங்கள். மறக்காமல், தலைப்பு சம்பந்தப்பட்ட எதாவது ஒரு உலக சம்பவத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். உரையை நீட்டுவதற்கு இது நன்றாக கைகொடுக்கும்.

ஒருவேளை, தரப்பட்ட தலைப்பு சம்பந்தமாக எந்த ஹதீஸும், வசனமும் நினைவில் இல்லாவிட்டால், ”இறைநம்பிக்கை, மறுமை வாழ்க்கை, இப்ராஹீம் நபியின் தியாகம்” என்பது போன்ற தெரிந்த தலைப்பில் பேசிவிடுங்கள். கவனம். இதுபோன்ற ஜந்து தலைப்புகளை எப்போதுமே கையில் வைத்திருக்கவேண்டும். எந்த நொடியில் பேச அழைத்தாலும் உடனே செல்லமுடியும்.

அதுபோல, ஜும்மாவுக்கு சென்றிருப்போம். திடீரென, ஜும்மாவின் சிறப்பை இரண்டாவது உரையில் சொல்லுங்கள் என்பார்கள். எனவே ஜும்மாவின் சிறப்பு, தொழுகையின் அவசியம், தர்மத்தின் அவசியம் போன்ற எதிர்பார்க்கப்படும் தலைப்புகளுக்கு எப்போதுமே தயாராக இருங்கள்.
v பெண்கள் பேச்சாளர் ஆகலாமா?

நன்மையை ஏவி தீமையை தடுப்பது, ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் கடமை என்று அல்லாஹ் கூறுகிறான்.

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ ۚ أُولَٰئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ
”நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன். ஞானமிக்கவன்” (குர்ஆன் 9:71).  எனவே பெண்கள் பிரச்சாரம் செய்யலாம்.

v தனக்கென்று ஒரு பானி – ஸ்டைல் தேவையா?

புதிதாக பேச ஆரம்பிக்கும் சிலருக்கு, தனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்குவதா, வேண்டாமா என்று குழப்பமாக இருக்கும். தானாக உருவாவதை, திட்டமிட்டு உருவாக்காதீர்கள். இது 95 சதவீதம் தோல்வியில் தான் முடியும். தனக்கென்று ஒரு ஸ்டைல் வேண்டுமென்று, அதற்குத் தகுந்தார்போல், பேசஆரம்பித்தால், ஸ்டைலை உருவாக்குவதில் தான் அதிக கவனம் இருக்கும்.

உதாரணமாக, ஆக்ரோஷமான ஸ்டைலை பழக்கப்படுத்த முயற்சி செய்யும் ஒருவர், சிந்தனையை தூண்டும் கேள்வியை கேட்பதற்கு கூட, காது கிழிய வெறிபிடித்து, கத்தி தான் கேட்பார். இவ்வாறு செய்வது சிந்திக்கத்தூண்டாது, எனினும் ஆதரவாளர்களை மட்டும், கரவோசை எழுப்பச்செய்யும்.

நகைச்சுவையாக பேசி ஸ்டைலை உருவாக்க நினைக்கும் ஒருவர், அடிக்கடி நகைச்சுவையாக பேசுவதில் தான் அதிக கவனம் செலுத்துவார். பாட்டுப்பாடி மக்களை கவரவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளவர், எதற்கெடுத்தாலும் ஒரு பாட்டை பாட ஆரம்பித்துவிடுவார். எனவே இதற்கு அடிமையாகி, ஸ்டைலை உருவாக்கும் முயற்சியில் இறங்கவேண்டாம்.

சில வருடங்களுக்கு முன்னால் ”சிறப்பு பேச்சாளர்(?)” ஒருவரின் உரையை கேட்டேன். உருக்கமாக பேசுவதாக என்று நினைத்துக்கொண்டு, அவர் ஒவ்வொரு வரியையும் அழுதுகொண்டே சொன்னார். கேட்பதற்கு மிகவும் வெறுப்பாக இருந்தது. எனவே உருக்கம், ஆக்ரோஷம், நகைச்சுவை, பாட்டு என குறிப்பிட்ட ஒரு சுவைக்குள் உங்கள் உரையை அடக்கிவிடாமல், அனைத்தையும் கலந்து பேச கற்றுக்கொள்ளுங்கள்.

Ì இதையும் தாண்டி, தனி பாணியில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறது எனில், குறைந்தது நான்கைந்து வருடங்கள் பேசி அனுபவம் பெற்ற பிறகு, சிந்தித்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள். அப்போதும் கூட, இது தேவையற்றது என்பது தான் எனது முடிவு. இயல்பாக பேசுங்கள். அதன் மூலம் உருவாகும் ஸ்டைல் உருவாகிவிட்டு போகட்டும். அதுதான் உங்களுக்கு ஏற்ற பாணியாக, பொருத்தமாக இருக்கும்.


v
பயானில்,  (கருத்துள்ள) பாட்டு பாடலாமா?

பாடலும், நகைச்சுவையும் மக்களை எளிதில் கவரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அவை தடுக்கப்பட்டவையும் அல்ல.

حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا زَفَّتْ امْرَأَةً إِلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَةُ مَا كَانَ مَعَكُمْ لَهْوٌ فَإِنَّ الْأَنْصَارَ يُعْجِبُهُمْ اللَّهْوُ

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்: “நான் ஒரு பெண்ணை அன்சாரி ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து, அவ)ரிடம் அனுப்பி வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? அன்சாரிகளுக்கு பாடலென்றால் மிகவும் பிடிக்குமே” என்றார்கள்” புகாரி (5162)

எனவே இஸ்லாத்தில் பாடல் அனுமதிப்பட்டது தான். நல்ல கருத்துடைய பாட்டையோ, கவிதையையோ பாடி, ஒரு கருத்தை வழியுறுத்துவதில், மார்க்க ரீதியாக எந்த குற்றமும் இல்லை.

ஆனால் பாடல்கள் பாடி பயான் செய்து பழகிவிட்டால், பின்னர் நீங்கள் விட நினைத்தாலும் மக்கள், உங்களை விடமாட்டார்கள் என்பதையும், முன்னர் குறிப்பிட்டது போல, எந்த குறிப்பிட்ட ஸ்டைலுக்கும் அடிமையாகக் கூடாது என்பதையும் சேர்த்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் தாண்டி, பாடல் பாடுவதாக இருந்தால், ஜந்தாறு தடவை பாடிய பிறகு, நீங்கள் பாடுவது, கேட்கும் வகையில் இருக்கிறதா? என்று உறுதி செய்துகொள்ளுங்கள்.  நாம் பாடுவது, கழுதை கத்துவதைப் போல இருந்துவிடக்கூடாது. அக்கம்பக்கத்தில் இருக்கும் ஆடு, மாடுகளையெல்லாம் பீதியடையச்செய்யும் வகையில் உங்கள் குரலோ, பாடலோ இருந்தால் பாடுவதை விட்டுவிடுங்கள். கேலிப்பொருளாக ஆவதைவிட பாடாமல் இருப்பதே மேல்!


v மேடைப்பேச்சு என்றால் என்ன?

ஒருவர் அருகில் இருக்கும் மற்றவரிடத்தில் பேசும் பேச்சை சாதாரண பேச்சு என்றும், கட்டுரை நடையில் மேடையில் பேசும் பேச்சை மேடைப்பேச்சு என்று சொல்வார்கள். சாதாரண பேச்சுக்கும் மேடைப்பேச்சுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னவெனில், மேடைப்பேச்சில், பெயர்உரிச்சொல் மற்றும் வினைஉரிச்சொல் பயன்பாடுகள் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் கட்டுரை நடையில் இருக்கும். எந்த கருத்தையும் கூடுதல் அழுத்தத்துடன் சொல்லவேண்டும். உதாரணமாக,

”பெத்தவங்கள கவனிக்கனும்னு அல்லாஹ் சொல்லியிருக்கான்” என்ற வாட்டார பேச்சை மேடைப்பேச்சாக மாற்றும் முறையை கவனியுங்கள்

சாதாரண பேச்சு
(லோக்கல் பாஷை)
”பெத்தவங்கள கவனிக்கனும்னு அல்லாஹ் சொல்லியிருக்கான்”
வட்டார பேச்சு வழக்கை நீக்கிய பிறகு. ”பெற்றோரை கவனிக்க வேண்டுமென்று அல்லாஹ் கூறியிருக்கிறான்”
உரிச்சொற்களை சேர்த்த பிறகு ”பெற்றோரை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டுமென்று அல்லாஹ் கூறியிருக்கிறான்”
அழுத்தம் கொடுத்த பிறகு ”பெற்றோரை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டுமென்று அல்லாஹ் வழியுறுத்தியிருக்கிறான்”

இதில் இறுதியாக சொல்லப்பட்டுள்ள வரிதான் மேடைப்பேச்சு என்று அழைக்கப்படுகிறது. பொது மேடைகளில், மேடைப்பேச்சு தான் பேசவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனினும், அதிகமான மக்கள் உள்ள சபையில் (Formal ஆன) மேடைப்பேச்சும், குறைவான மக்கள் உள்ள சபையில் (Casual ஆன) சாதாரண பேச்சும், பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

வழக்கத்திற்கு மாற்றமாக பேசும்போது, கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கும். மக்களால் அங்கீகரிக்கப்படாமல் போகலாம். குறிப்பாக ஒரு உரையை ஆரம்பிக்கும் போது, லோக்கல் நடையில் பேசாமல், கட்டுரை நடையில் பேசுவது விரும்பத்தக்கது. இது அனுபவம் உள்ளவர்களின் நடைமுறையாகவும் இருக்கிறது. கவனத்தில் கொள்ளவும்.

 

Ì அழுத்தம் கொடுப்பதன் முக்கியத்துவம்.

அதிரடி பேச்சாளருக்கும், சுறுசுறுப்பில்லாத பேச்சாளருக்கும் உள்ள வேறுபாடுகளில் முக்கியமானது பேச்சில் அழுத்தம் கொடுப்பதாகும். அதாவது, ”தீமைகளை களையவேண்டும்” என்ற வரியை அழுத்தம்கொடுத்து, ”தீமைகளை வெட்டிசாய்க்க வேண்டும்”, என்று பேசும்போது, அந்த வரி முக்கியத்துவம் பெறுகிறது. புரிந்துகொள்வதற்காக இன்னும் சில உதாரணங்களை பாருங்கள்.

சாதாரண மேடைப்பேச்சு அழுத்தம் கொடுக்கப்பட்ட மேடைப்பேச்சு
அல்லாஹ் நமக்கு உதவி செய்வான். அல்லாஹ் கண்டிப்பாக நமக்கு உதவிசெய்வான்.
ஏழைகள் மீது அன்பு செலுத்த வேண்டும். ஏழைகள் மீது கருனை மழை பொழிய வேண்டும்.
நமது பாசத்திற்குரிய நபிகள் நாயகம் நமது உயிக்கும் மேலான நபிகள் நாயகம்

ஒரு உரையின் அனைத்து வரிகளும் இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. சாதாரண வரிகளும் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்போது தான், அழுத்தம் கொடுத்த வரிகள் தனித்து தெரியும். அதுபோல, உப்புச்சப்பில்லாத செய்திகளையெல்லாம் அழுத்தம் கொடுத்து ஆக்ரோஷமாக பேசக்கூடாது. ”(ஆக்ரோஷமாக) நம் உயிரைக் கொடுத்தாவது, தினமும் பற்களை சுத்தப்படுத்த வேண்டும்!” என்று பேசினால் கேலிக்கூத்தாக இருக்கும்!

 

v இலக்கிய நடையில் (எதுகை மோனையாக) பேசலாமா?

கட்டுரை வடிவில் இருக்கும் மேடைப்பேச்சிலும் கூட, எளிய நடை, இனிய நடை, கிராமிய நடை, இலக்கிய நகை, செய்யுள் நடை என பல்வேறு நடைகள் உள்ளன. உதாரணமாக, எழுத்தாளர் வரதராஜன் எளிய நடைக்கும், கலைஞர் இனிய மற்றும் இலக்கிய நடைக்கும் பெயர் போனவர்கள். மன்னர்கள் காலத்தில் இலக்கிய நடையில் கவிதை பாடும் புலவர்களுக்கு அமைச்சர்களுக்கு நிகரான மதிப்பு இருந்தது. கவிஞர்களுக்கு கருத்து பதிலடி தருவதாக இருந்தால், அதே போன்ற இலக்கிய கவிதையில் தான் பதிலடி தருவார்கள். சாதாரண பேச்சில் பதில் தந்தால், மட்டமாக கருதுவார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போதும், சான்றோர்கள் சபையில் இலக்கிய நயத்துடன் பேசுபவருக்கு தனி மதிப்பு உண்டு, என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

சரி, இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். நமது உரைகளிலும் இதுபோன்று இலக்கிய நயத்துடன் பேசலாமா? என்றால், கூடவே கூடாது, என்பது தான் பதில்.

 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ خِرَاشٍ الْبَغْدَادِيُّ حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ حَدَّثَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ وَالْمُتَفَيْهِقُونَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالْمُتَشَدِّقُونَ فَمَا الْمُتَفَيْهِقُونَ قَالَ الْمُتَكَبِّرُونَ قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ الْمُبَارَكِ بْنِ فَضَالَةَ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ وَهَذَا أَصَحُّ وَالثَّرْثَارُ هُوَ الْكَثِيرُ الْكَلَامِ وَالْمُتَشَدِّقُ الَّذِي يَتَطَاوَلُ عَلَى النَّاسِ فِي الْكَلَامِ وَيَبْذُو عَلَيْهِمْ

 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் எனக்கு நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார்” (திர்மிதி 1941)

 

என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இலக்கியம் வெளிப்பட பேச முயற்சிக்கக் கூடாது. பாடல்கள் பாட அனுமதித்த நபி(ஸல்) அவர்கள், பேசும்போது இலக்கியம் வெளிப்பட பேச அனுமதி மறுப்பது, முரண்பாடு போல் தோன்றலாம். அல்லாஹ்வின் தூதரின் வார்த்தையின் எந்த முரண்பாடும் இருக்காது. இருக்கவும் முடியாது.

 

பாடல்கள் ஏற்கனவே சிந்தித்து எழுதிவைத்து பின்னர் படிப்பவை. தவறான கருத்து இருந்தால் அதை நாம் பாடப்போவதில்லை. ஆனால் பேசும் போது, இலக்கியம் வெளிப்பட பேச முயன்றால், பேசும் அந்த தருணத்தில் தான் தவறுகள் ஏற்படும். சரிசெய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. ஏனெனில், இலக்கியம் வெளிப்பட அடுக்குமொழியில் பேச முயற்சிக்கும் போது, எதுகை மோனை சரியாக அமையவேண்டும் என்பதற்காக, வாயில் வருவதையெல்லாம் உளற வேண்டியிருக்கும். கருத்தில் கவனம் செலுத்த முடியாது.

 

எனவே தான், நபி(ஸல்) அவர்கள், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவனை தனக்கு வெறுப்பானவர் என்றும் மறுமை நாளில் தன்னை விட்டு தூரமானவர் என்றும் கண்டிக்கிறார்கள். எனவே, எதுகை மோனையாக பேச முயற்சிக்காதீர்கள்.

 

Ì பழமொழியும் எதுகை மோனை அடங்கிய இலக்கியப் பேச்சுதானே!

பழமொழியும் ஒருவகையான இலக்கியப் பேச்சாக இருந்தாலும், ஏற்கனவே மனனம் செய்யப்பட்ட ஒரேஒரு வரியைத்தான் பேசுகிறோம். அதை சிரமப்பட்டு யோசித்து பேசுவதில்லை. எனவே பழமொழிக்கு அனுமதி உண்டு, அதுபோல ஏற்கனவே மனப்பாடம் செய்த ஒரிரு இலக்கிய வரிகளுக்கும் அனுமதி உண்டு.

 

v ரசிக்கத்தகுந்த பேச்சு நடைகள்

இலக்கிய நடையில் தான் பேசக்கூடாது. மற்ற படி (மென்மையான வார்த்தைகளை கொண்ட) இனிய நடையிலோ, மேடைப் பேச்சுக்கே உரிய கட்டுரை நடையிலோ பேசலாம். சிலர், மதுரைத்தமிழ், கோவைத்தமிழ் என அந்தந்த வட்டார பேச்சு நடையில் பேசி அசத்துவார்கள்.

சிலர் இனிய கட்டுரை நடையில் பேசி, ஹதீஸில் வரும் உரையாடல்களை நேரில் நடப்பது போன்று தத்ரூபமாக வர்ணித்து விளக்குவது ரசிக்கும் வகையில் இருக்கும். இனிய கட்டுரை நடையில் மேடையில் பேசினாலும் சரி, இடையிடையே லோக்கல் பாஷையில் பேச மறந்துவிடாதீர்கள்.

சிலரது உரையில் பெரும்பாலான வரிகள் கேள்வி நடையாகவே இருக்கும். ”கத்னாவுக்கு விழா கொண்டாடுவது இஸ்லாமா? மாலை போடுவது மார்க்கத்துல இருக்கா? சிந்திக்கமாட்டிங்களா? சத்தியத்தை சொல்வது குற்றமா?” என்று கேள்வி நடையிலேயே உரை நிகழ்த்துவார்கள். இதுவும் ரசிக்கும்படி இருக்கும்.

ஒரு உரையின் செய்திகள் எந்தஅளவிற்கு முக்கியத்துவம் பெறுமோ, அதே அளவிற்கு பேச்சு நடையும், அதனை வெளிப்படுத்தும் முறையும் (Presentation) முக்கியத்துவம் வாய்ந்தது. பேச்சு நடையை பொறுத்தவரையில் அது எழுத்தால் விளக்கப்பட முடியாதது. எனவே தனித்துவம் வாய்ந்த பேச்சாளர்களின் பேச்சு நடையை கவனித்து பாடம் பெறுங்கள். சில மாதங்கள் அவர்களது பேச்சை கவனத்தாலே, நம்மை அறியாமல் அந்தநடை நமக்கும் வந்துவிடும்.

எந்த நடையாக இருந்தாலும், ”மக்கள்கள் பள்ளிக்கு வரமாட்டேன்றார்கள்.” என்பது போன்ற இலக்கணப் பிழைகளை குறைத்துக்கொள்ளுங்கள் இலக்கண பிழைகள் மக்களின் கவனத்தை திசைதிருப்பும்.

v
புதியவர்களுக்கு, பயத்தை போக்க சில அறிவுரைகள்

புதிதாக பிரச்சாரம் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு மக்கள் முன்னிலையில் பேசுவதற்கு பயம் இருப்பது இயல்பே. இந்த நூலின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல, இந்த மேடைபயம் அனைவருக்கும் இருப்பது தான். மேடை பயத்திற்கு ஆங்கிலத்தில் Glossophobia (குளோசோஃபோபியா) என்று குறிப்பிடுவார்கள்.

பயத்தின் போது மூளையின் ஹைப்போதாளமஸ் பகுதி பரிவுநரம்பு அமைப்பையும், அட்ரினல்-புறணி அமைப்பையும் தூண்டுகிறது. பரிவு நரம்பு அமைப்பு உங்களை உணர்ச்சிவசப்பட வைப்பதோடு, அட்ரீனல் மெடுல்லா(Adrenaline), எபிநெஃப்ரைன் மற்றும் நார்பிநெஃப்ரைன் ஹார்மோன்களை இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்கிறது. இதனால் ஏற்படும் மாற்றங்களே அதிக இரத்தஅழுத்தம் மற்றும் வேகமான இதயத்துடிப்பு, நடுக்கம். பிறகு உடல் சூடாகிறது. உடலை குளிர்விப்பதற்காக வியர்வை வெளியாகிறது.

மேலும், முக்கிய உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜனை தருவதற்காக, ஜீரண அமைப்பு போன்ற முக்கியமற்ற பகுதிகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை மூளை குறைத்துவிடுகிறது. இதனால், வாய் உலந்துபோகுதல். தொண்டை அடைத்துக்கொள்ளுதல், குமட்டல், வயிறு கலக்கல் போன்றவை ஏற்படுகின்றன. ஆனால், ஆச்சர்யத்தக்க வகையில் இவையெல்லம் பயிற்சி மற்றும் குறைந்த அனுபவத்திற்கு பிறகே இல்லாமல் ஆகிவிடுகின்றன.

எனவே, இவையெல்லாம் உங்களுக்கு மட்டுமே ஏற்படுவதாகவும், இவை ஏற்பட்டதால் பேசும் திறன் உங்களுக்கு இல்லை எனவும் நினைத்துக் கொள்ளாதீர்கள். இது ஆரம்பத்தில் அனைவருக்குமே ஏற்படுவது தான், மிகக்குறுகிய காலத்திலேயே இது சரியாகிவிடும். இந்த பயத்தைக்கூட ஒருசில உரைகளிலேயே இல்லாமல் ஆக்குவதற்கு கீழ்காணும் அறிவுரைகளை நினைவில் கொள்ளுங்கள்.

  • தவறாக பேசி மக்களால் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் மேடை பயத்தின் ஒருபகுதியாக இருப்பதால், முதல் உரைக்கு அனைவரும் ஏற்றுக்கொண்ட, அனைவரும் அறிந்திருக்கும் செய்திகளைக்கொண்டு மிகவும் எளிதான தலைப்பை தேர்வு செய்யுங்கள். உதாரணமாக, ஈமான், தொழுகை, பெற்றோர்களை கவனித்தல் போன்றவை. ”செய்திகள் சரியாக இருக்கிறது” என்ற நம்பிக்கையின் காரணமாக, பாதி பயத்தை வெல்லமுடியும். ஆரம்ப பத்து உரைகளுக்கு இதுபோன்ற இலகுவான தலைப்புகளையே தேர்வு செய்யுங்கள்.

 

  • குறிப்பாக, தரமற்ற நூல்களிலிருந்து எதையும் படித்து பேசிவிடாதீர்கள். ஆதாரமற்ற செய்திகளைப்பேசி அதனால் கண்டனத்திற்கு உள்ளானால் ஒட்டுமொத்த நம்பிகையும் மறைந்து, யாரும் திட்டிவிடுவார்களோ என்ற பயம் உள்ளத்தில் நிலைகொண்டுவிடும்!
  • புதியவர்கள் முன்னுரையை பத்து தடவையாவது சொல்லிப்பார்த்து பயிற்சி எடுங்கள். தடையில்லா முன்னுரை கிடைத்துவிட்டால், மீதி பயான் ஓரளவு சீராக சென்றுவிடும்.

 

  • பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, பயான் குறிப்புகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். மறந்தால் என்ன செய்வது என்ற பயமில்லாமல் தைரியமாக பேசமுடியும். முதல் இரண்டு மூன்று பயான்களுக்கு, முடிந்தால் அமர்ந்து உரை நிகழ்த்துங்கள். குளிரிலிருந்து காக்கும் கம்பளி ஆடை போல, பயத்திலிருந்து காக்கும் கேடயமாக போடியத்தை பலர் நினைக்கிறார்கள். எனவே நிற்பதாக இருந்தால், போடியம் இருப்பது நல்லது.

 

  • இதுதவிர, ஆரம்ப காலகட்டங்களில், வீட்டில், நண்பர்களிடத்தில் பேசிப்பழகுங்கள். பிறகு சிறுவர்கள், பெண்கள் பயானில் பயிற்சி எடுங்கள். பிற பேச்சாளர்களின் பேச்சுக்களை கவனித்து, அவர்கள் பேசுவது போலவே பேசியும், தனிமையில் பேசி பயிற்சி எடுக்கலாம்.
  • யாருடைய பேச்சை கவனித்து பேசினாலும், மனப்பாடம் செய்து, ஒப்பிக்காதீர்கள். உங்கள் இயல்பான பேச்சை பேசுங்கள். மனப்பாடம் செய்து, ஒப்பித்தால், அதிகபட்சம் 15 நிமிடம் பேசலாம். அதற்கு மேல் பேசமுடியாது. எனவே மனப்பாடம் செய்து, பேச முயற்சித்து, எனக்கு பேசவரமாட்டேங்குது என்று புலம்பாதீர்கள்.
  • கண்ணாடி முன்னால் நின்று பேசி பழகக்கூடாது, உங்களின் குறைகளை, தோற்றத்தை கண்டு (நாமெல்லாம் ஒரு ஆளா! என்று நினைத்து) அதனால் தன்னம்பிக்கை குறைந்துவிடும், என்பது மனோதத்துவ அறிஞர்களின் அறிவுரை. அதுபோல, நீங்கள் பேசிய பேச்சை, நீங்களே கேட்டு, அதில் நீங்கள் செய்த தவறுகளை அறிந்து கொள்ள விரும்பினால், உங்கள் வீடியோவை பார்க்காதீர்கள். ஆடியோவை மட்டும் கேட்டு, உங்கள் பேச்சை சரிசெய்துகொள்ளுங்கள். உங்களது பாடிலாங்குவேஜ் தேவையான அளவு உள்ளதா என தெரிந்துகொள்வதற்கு தேவைப்பட்டால் மட்டும், நீங்கள் பயான் செய்த வீடியோவை பாருங்கள்.

 

  • பதட்டத்தையும், பயத்தையும் குறைக்க, பயான் செய்யும் போது, கால்களை நெருக்கமாக வைக்காதீர்கள். முக்கியமாக, பயான் நடக்கும் இடத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே சென்று, அங்கு இயல்பாக இருங்கள். அங்கு உள்ள மக்களிடத்தில் எதையாவது பேசிக்கொண்டிருங்கள். இது பயத்தை குறைக்க உதவும்.

 

  • இதுதவிர மருத்துவ ரீதியாக, Deep breathing (ஆழ்ந்த சுவாசம்) என்பது திடீர் பயம் மற்றும் அதிர்ச்சிக்கு தரப்படும் சிகிச்சை. அதாவது, மூச்சை மெதுவாக உள்இழுத்து, ஜந்து வினாடி தாமதித்து, மெதுவாக மூச்சை விடுவது. நாம் சுவாசிக்கும் காற்றின் ஆக்ஸிஜனில் 80 சதவீதத்தை மூளை எடுத்துக்கொண்டு, வெறும் 20 சதவீதத்தை மட்டுமே பிறபகுதிகளுக்கு தருகிறது. மூளைக்கு தேவையான அதிகப்படியான ஆக்ஸிஜனை இந்த Deep breathing தருகிறது. மேலும், இதய படபடப்பையும், தலைவலி மற்றும் பிறவலிகளை ஏற்படுத்தும் தசை இறுக்கத்தையும் பெருமளவு குறைக்கிறது. (Naturalnews dec/2010 and Sciencedaily news)

 

  • ஆரம்பத்தில் எல்லோருமே இப்படித்தான் பேசுவார்கள். சில மாதங்கள் கழிந்துவிட்டால் என்னாலும் சிறப்பாக பேசமுடியும். என்பதை விளங்கிக்கொண்டால், பயம் குறையும், தன்னம்பிக்கை வரும். தவறு வரும் என்று தெரிந்தே பேசுங்கள். ”ஆரம்பம் தான் இப்படி! போகப்போக நன்றாக பேசுவேன்” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வதையும், பிறர் நம்மை பாராட்டுவதைப் போலத்தான் நமது மூளை எடுத்துக்கொள்கிறது!

 

  • பயத்தை வெல்வதற்கு இன்னொரு பயன்தரும் யோசனை, ”சாதிக்க வேண்டும் என்ற வெறி”. உதாரணமாக, ”இந்த மக்களிடத்திலிருந்து ஷிர்க்கை ஒழிக்கவேண்டும். நரகிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்பது போன்ற லட்சியத்தின் பக்கம் உங்கள் கவனத்தை திருப்பினால் பயம் மறைந்து விடும்.

 

  • அதுபோல, வரிகளின் அமைப்பில் கவனம் செலுத்தாமல், சொல்லும் கருத்தில் கவனம் செலுத்தினால், வார்த்தை தடுமாறாது. அதாவது, நண்பரிடத்தில் பேசும் போது, கருத்தை வெளிப்படுத்த முயற்சிப்போமே தவிர வார்த்தை அமைப்பில் கவனம் செலுத்தமாட்டோம், எனவே தான் அந்த நேரங்களில் பேச்சு, மடை திறந்த வெள்ளமாக வருகிறது.
  • பயத்தை போக்க எனக்குத் தெரிந்த ஆயுதங்களில் மிகப்பெரியது, பயிற்சி தான். அதாவது குறிப்புகளை எடுத்து வரிசைப்படுத்திய பிறகு, ஜந்தாறு தடவை தனிமையில் பேசி பயிற்சி எடுங்கள். இது பயத்தை பெருமளவு குறைத்துவிடும். பிறகு, உங்களைப் போன்று பிரச்சாரம் செய்ய விரும்பும் நபர்கள் மத்தியில் அல்லது நண்பர்கள் மத்தியில் பேசிப்பழகுங்கள். ஜந்தாறு தடவை இவ்வாறு செய்துவிட்டாலே மக்கள் மத்தியில் எளிதாக பேசிவிடலாம்.