Tamil Bayan Points

புகைபிடித்தால் நோன்பு முறியுமா?

கேள்வி-பதில்: நோன்பு

Last Updated on November 12, 2022 by Trichy Farook

புகைபிடித்தால் நோன்பு முறியுமா?

குதர்க்கமான கேள்வி.

புகைபிடித்தல் என்பது மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு வீணாண காரியமாகும். இது உடலுக்கு கேடானது மட்டுமல்லாமல் வீண்விரையமாகும். நம்முடைய உடலுக்கு நாம் தீங்கிழைத்துக் கொள்வதை திருக்குர்ஆன் கடுமையாகக் கண்டிக்கிறது.

وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்.

(அல்குர்ஆன் 2:195)

இறைவன் ஒரு செயலைத் தடை செய்து விட்டால் அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். திருடுவது கடுமையான குற்றம் என்று திருமறைக் குர்ஆன் கூறுகிறது. எனவே அதை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர பிஸ்மில்லாஹ் கூறி திருட்டை ஆரம்பிக்கலாமா? என்று கேட்பது கூடாது.

இஸ்லாம் விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள். அது மானக் கேடான காரியம் என்று கூறுகிறது. எனவே நாம் இத்தகைய பாவத்தை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர விபச்சாரம் செய்தால் குளிப்பு கடமையா? என்று கேள்வி கேட்பது கூடாது. இவ்வாறு கேட்பது அதனை அங்கீகரிப்பது போன்றாகி விடும். இது பல மோசமான பின்விளைவுகளைத் தான் ஏற்படுத்தும்.

நாம் நோன்பு நோற்பதன் நோக்கமே மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை விட்டொழித்து, இறையச்சத்தை வளர்த்துக் கொள்வதற்காகத் தான். இப்படிப்பட்ட நோன்பில் நாம் பாவமான காரியங்களை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர இதைச் செய்தால் நோன்பு முறியுமா? என்று கேட்பது நோன்பிலும் அந்தப் பாவமான காரியத்தை அங்கீகரிப்பது போன்றாகி விடும். எனவே புகை பிடித்தல் என்பது ஒரு மோசமான, ஹராமான காரியமாகும். இதனை எல்லாக் காலங்களிலும் கண்டிப்பாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி-19036057 ,

நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.