Tamil Bayan Points

04) பிறை குறித்த நபிமொழிகள்

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1906

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1907

நீங்கள் பிறையைக் காணும் போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும் போது நோன்பு விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம்

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?” என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்” என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்” என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்” என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப்

நூல்: முஸ்லிம்

உங்களில் ஒருவர் ரமளான் மாதத்திற்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னால் நோன்பு பிடிக்க வேண்டாம். அவர் வழக்கமாகப் பிடிக்கும் நோன்பு அந்நாளில் அமைந்து விட்டால் தவிர” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1914

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது தம் கைகளைத் தட்டி மாதம் இப்படித்தான் இப்படித்தான் இப்படித்தான் என்று கூறினார்கள். மூன்றாவது தடவை தமது கட்டை விரலை மடக்கிக் காட்டினார்கள். எனவே பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம்

நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது ஒரு தடவை 29 ஒரு தடவை 30 என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 1913

நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)

நூல்: நஸயீ

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமைர்

நூல்கள்: இப்னுமாஜா, அபூதாவூத்,, நஸயீ, பைஹகீ, தாரகுத்னீ, அல்முன்தகா, இப்னு ஹிப்பான், அஹ்மத்

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்

நூல்: அபூதாவூத்

நாங்கள் தாதுஇரக் எனும் இடத்தில் ரமளான் பிறை பார்த்தோம். இது பற்றி விளக்கம் பெறுவதற்காக ஒருவரை இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் அனுப்பினோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிறையைப் பார்ப்பது வரை (முந்தைய) மாதத்தை அல்லாஹ் நீட்டி விட்டான். எனவே மேகமூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முழுமையாக்குங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபுல்பக்தரீ

நூல்: முஸ்லிம்

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம். (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர். நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிக் கூறினோம். அதற்கவர்கள் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்?” என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம் என்று விடையளித்தோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியது தான்” என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபுல்பக்தரீ

நூல்: முஸ்லிம்

….அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ஒரு வருடம் போன்றும், மற்றொரு நாள் ஒரு மாதம் போன்றும்,அடுத்த நாள் ஒரு வாரம் போன்றும், ஏனைய நாட்கள் இன்றைய நாட்களைப் போன்றும் இருக்கும்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஒரு வருடத்தைப் போன்ற அந்த நாளில் ஒரு நாள் தொழுகை எங்களுக்குப் போதுமா?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், போதாது; அதற்குரிய அளவை அதற்காக (தொழுகைக்காக) கணித்துக் கொள்ளுங்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: நவ்வாஸ் பின் ஸம்ஆன் (ரலி)

நூல்: முஸ்லிம்

எவரது மரணத்திற்காகவோ, பிறப்புக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் சூரிய, சந்திர கிரகணங்களைக் கண்டால் அது விலகும் வரை தொழுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

நூல்: புகாரி 1042

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ

நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள்” என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். (அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு பிடிக்காததன் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாள் தினமாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே”என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள்” என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: பைஹகீ

நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களும் நோன்பு நோற்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1864

சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.

அறிவிப்பவர்: அம்மார் (ரலி)

நூல்: ஹாகிம்

இவை தாம் பிறை சம்பந்தமாக குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் கிடைக்கும் ஆதாரங்கள். எந்தக் கருத்துடையவர்களானாலும் பிறை குறித்து இவற்றிலிருந்தே தவிர வேறு ஆதாரங்கள் எதனையும் காட்டுவதில்லை. ஒவ்வொரு கருத்துடையவர்களும் தங்களுக்குச் சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவைகளைக் கண்டு கொள்ளாது விட்டு விடுவது தான் கருத்து வேறுபாடுகள் நீடித்து வருவதற்குக் காரணமாகும்.

நாம் எடுக்கும் முடிவு எதுவானாலும் மேலே காட்டப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களுக்கும் ஏற்புடையதாகவும், எதிராக அமையாமலும் இருக்க வேண்டியது அவசியம்.

சிலவற்றை ஏற்று சிலவற்றை மறுப்பதும், இது என்னுடைய ஆதாரம் அது உன்னுடைய ஆதாரம் என்று கூறி மார்க்கத்தைக் கூறு போடுவதும் குற்றமாகும். இந்த ஆதாரங்களில் ஏதோ ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக் கொண்டு வாதிட்டால் ஒவ்வொரு சாராரும் தத்தமது வாதத்தை அதிலிருந்து நிலை நாட்டிட இயலும். ஆனால் அவ்வாறு வாதிடுவது ஏற்புடையதாக ஆகாது. மேலே எடுத்துக் காட்டியுள்ள ஆதாரங்களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு நாம் ஆராய்வோம்.