Tamil Bayan Points

02) பிறை ஒரு விளக்கம் பிறை குறித்த மாறுபட்ட கருத்துக்கள்

நூல்கள்: பிறை ஓர் விளக்கம்

Last Updated on October 30, 2022 by

தலைப் பிறையை எவ்வாறு தீர்மானிப்பது என்ற ஆய்வுக்குள் நுழைவதற்கு முன் எத்தனை விதமான கருத்துக்கள் சமுதாயத்தில் நிலை பெற்றுள்ளன என்பதை அறிந்து கொள்வோம்

முதல் கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் தத்தமது பகுதியில் பிறையைப் பார்க்க வேண்டும். தமது பகுதியில் பிறை தென்பட்டால் அப்போது அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும். தமது பகுதியில் பிறை தென்படா விட்டால் அது அம்மாதத்தின் முப்பதாம் நாள் என்றும், மறு நாள் தான் முதல் பிறை என்றும் முடிவு செய்ய வேண்டும்.

இண்டாவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் தத்தமது பகுதியில் பிறையைப் பார்க்க வேண்டும். தமது பகுதியில் பிறை தென்பட்டால் அப்போது அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும். தமது பகுதியில் பிறை தென்படாத போது உலகில் வேறு எப்பகுதியிலாவது பிறை தென்பட்ட தகவல் கிடைக்கப் பெற்றால் அதை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும்.

மூன்றாவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் தத்தமது பகுதியில் பிறையைப் பார்க்க வேண்டும். முப்பதாம் இரவில் பிறை காணப்பட்டால் அப்போது அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும். தமது பகுதியில் பிறை தென்படாத நிலையில் வேறு பகுதிகளில் பிறை காணப்பட்டதாகத் தகவல் கிடைத்தால் அத்தகவலைப் பரிசீலிக்க வேண்டும். அருகில் உள்ள ஊர்களில் பிறை காணப்பட்டால் அதை ஏற்க வேண்டும். தமது ஊரில் பிறை தோன்றுவதற்கு முன்னால் எந்த ஊர்களில் பிறை தோன்றுமோ அந்த ஊர்களில் பிறை காணப்பட்ட தகவல் கிடைத்தால் அதையும் நாம் ஏற்க வேண்டும். 

நமது ஊரில் பிறை தோன்றிய பின்னால் எந்த ஊர்களில் பிறை தோன்றுகிறதோ அந்த ஊரில் காணப்படுவதை நாம் ஏற்கக் கூடாது.

நான்காவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் தத்தமது பகுதியில் பிறையைப் பார்க்க வேண்டும். முப்பதாம் இரவில் பிறை காணப்பட்டால் அப்போது அடுத்த மாதம் பிறந்து விட்டது என்று முடிவு செய்ய வேண்டும். தமது பகுதியில் பிறை தென்படாத நிலையில் வேறு பகுதிகளில் பிறை காணப்பட்டதாகத் தகவல் கிடைத்தால் பிறை காணப்பட்ட நேரத்தில் எந்த ஊர் மக்கள் அன்று சுப்ஹு நேரத்திற்கு முன் உள்ளனரோ அவர்கள் அப்பிறையை ஏற்க வேண்டும். மற்றவர்கள் மறு நாளில் தலைப்பிறை என்று முடிவு செய்ய வேண்டும்.

ஐந்தாவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் பிறையைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நிலவில் சூரிய ஒளி பட்டுப் பிரதிபலிப்பது தான் பிறை எனப்படுகிறது. அமாவாசை என்ற நிலை முடிந்த மறுகணமே சந்திரன் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க ஆரம்பித்து விடும். ஆனாலும் அதைக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்குச் சிறிதாக இருக்கும். அமாவாசை முடிந்து மறு நாள் தான் நாம் பார்க்கும் அளவுக்கு ஒளிவீசும். எனவே அமாவாசை முடிந்து மறு நிமிடமே முதல் பிறை என்று கணித்து முடிவு செய்ய வேண்டும். 

ஆறாவது கருத்து

ஒவ்வொரு பகுதியினரும் முப்பதாம் இரவில் பிறையைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முன் கூட்டியே கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அமாவாசையிலிருந்து முதல் நாளைக் கணக்கிடக் கூடாது. நாம் பார்க்கக் கூடிய அளவுக்கு எந்த நாளில் பிறை தெரியும் என்று கணிக்கப்படுகிறதோ அந்த நாளிலிருந்து முதல் பிறையைக் கணக்கிட வேண்டும்.

ஏழாவது கருத்து

பிறையைத் தீர்மானிப்பதில் மார்க்கம் நமக்கு உரிமை வழங்கியுள்ளது. முன் கூட்டியே கணிப்பதை ஏற்பதாக மக்கள் முடிவு செய்தால் அந்த உரிமை அவர்களுக்குண்டு. கண்ணால் பார்ப்பதைத் தான் ஒப்புக் கொள்வோம் என்று முடிவு செய்தால் அதையும் மறுக்க முடியாது. தகவலை ஏற்க விரும்பினாலும் தடையேதுமில்லை.

எட்டாவது கருத்து

நாம் மக்காவை நோக்கியே தொழுகிறோம். ஹஜ் எனும் வணக்கத்தை நிறைவேற்ற நாம் அங்கு தான் செல்கிறோம். எனவே மக்காவைத் தான் பிறை பார்ப்பதற்கும் அளவுகோலாகக் கொள்ள வேண்டும். எனவே சவூதியில் அறிவிப்பதை உலகம் முழுவதுமே தலைப்பிறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாமறிந்தவரை இப்படி எட்டு விதமான அபிப்பிராயங்கள் உள்ளன. இவை தவிர தனித்தனி நபர்கள் சில கருத்துக்களையும் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு கருத்துடையோரும் தத்தமது வாதங்களை நிலைநாட்ட ஆதாரங்களையும்,சில வாதங்களையும் முன் வைக்கின்றனர். கடந்த காலங்களில் இரண்டு அல்லது மூன்று அபிப்பிராயங்கள் மட்டுமே இருந்தன என்றால் நவீன யுகத்தில் அந்த அபிப்பிராயங்களின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது வேதனைப்பட வேண்டிய உண்மையாகும்.

இந்தக் கருத்துகளில் எது சரியான கருத்து? எந்தக் கருத்து திருக்குர்ஆனுக்கும் நபிவழிக்கும் ஏற்றது? இது குறித்து விரிவாக நாம் ஆராய்வோம். ஆய்வுக்குள் நுழைவதற்கு முன்னால் பிறையுடன் தொடர்புடைய குர்ஆன் வசனங்களையும்,நபிமொழிகளையும் தொகுத்து வழங்குகிறோம்.