Tamil Bayan Points

பிறர் குறைகளை துருவித் துருவி ஆராயாதீர்கள்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 23, 2023 by Trichy Farook

முன்னுரை

மனிதர்களில் யாரும் தவறுக்கும், குறைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் கிடையாது. இதில் நபிமார்களும் அடங்குவார்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இரண்டு வகையான தவறுகள்

தவறுகளை செய்பவர்கள் இரண்டு வகையாக இருக்கின்றார்கள்.

  • சிலர் தவறுகள் பகிரங்கமாக செய்வார்கள்.
  • இன்னும் சிலர், சில தவறுகளை யாருக்கும் தெரியாமல், மறைமுகமாக செய்வார்கள்.

தவறுகளை காணும்போது செய்ய வேண்டியது

வெளிப்படையாக செய்யப்படும் தவறுகளை நாம் விமர்சனம் செய்யலாம். அதைக்கண்டிக்கலாம். அதை பகிரங்கப்படுத்தலாம்; அவர்களைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்கள் இத்தவறுகளிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்.

இப்படி இல்லாமல் மறைமுகமாக உட்கார்ந்து யாருக்கும் தெரியாமல், அதே நேரத்தில் யாருக்கும் அந்த தவறு பாதிப்பை ஏற்படுத்தாது என்று இருக்குமானால் அதை வெளிப்படுத்தக்கூடாது. அதை பகிரங்கமாக கண்டிக்கக் கூடாது. அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து அவரின் தவறுகளை சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும்.

துருவித் துருவி ஆராயக்கூடாது

இவர் தவறு செய்கிறாரா? என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அவரின் அனைத்து நடவடிக்கைகளை கண்காணித்து ஆய்வு செய்து கொண்டிருக்கக்கூடாது. பொதுவாக எல்லாரையும் நல்லவராகவே எண்ண வேண்டும். தவறு செய்திருக்க முகாந்திரம் இருந்தால் மட்டுமே அதைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اجْتَنِبُوْا كَثِيْرًا مِّنَ الظَّنِّ اِنَّ بَعْضَ الظَّنِّ اِثْمٌ‌ وَّلَا تَجَسَّسُوْا وَلَا يَغْتَبْ بَّعْضُكُمْ بَعْضًا‌ ؕ اَ يُحِبُّ اَحَدُكُمْ اَنْ يَّاْكُلَ لَحْمَ اَخِيْهِ مَيْتًا فَكَرِهْتُمُوْهُ‌ ؕ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ تَوَّابٌ رَّحِيْمٌ‏

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 49:12)

 قَالَ أَبُو هُرَيْرَةَ يَأْثُرُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِيَّاكُمْ وَالظَّنَّ فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الْحَدِيثِ ، وَلاَ تَجَسَّسُوا ، وَلاَ تَحَسَّسُوا ، وَلاَ تَبَاغَضُوا وَكُونُوا إِخْوَانًا.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுகளிலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்களின் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக்கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.

நூல்: புகாரி-5143 

பிறர் தவறு செய்து அது நம்முடைய பார்வைக்கு வருமானால் நேரடியாக அவரை சந்தித்து அவர் செய்யக்கூடிய பாவத்தின் தண்டனையை பற்றி நாம் அவருக்கு விளக்க வேண்டும். மறுமையை பற்றி அவருக்கு நினைவூட்ட வேண்டும். அவ்வாறு செய்யாமல் நாம் அவரின் பாவத்தை வெளிப்படுத்தினால் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை சந்தித்தாக வேண்டும்.

ஏற்படும் விளைவுகள்

عَنْ مُعَاوِيَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ
إِنَّكَ إِنِ اتَّبَعْتَ عَوْرَاتِ النَّاسِ أَفْسَدْتَهُمْ أَوْ كِدْتَ أَنْ تُفْسِدَهُمْ

மக்களின் குறைகளை நீ ஆராய்ந்தால் நீ அவர்களை பாழாக்கிவிட்டாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத்-4888 (4244)

ஒருவர் புகை பிடிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் புகை பிடிப்பதை நாம் பார்த்து விடுகிறோம். இப்பபோது இதை நாம் பகிரங்கப்படுத்தும்போது மறைமுகமாக தவறு செய்தவர் நாளை நம்முடைய முகத்திலேயே அதன் புகையை ஊதித் தள்ளுவார்.

இதை பகிரங்கமாக செய்வதால் இதைப்பார்க்கும் மற்றவர்களும் இதைச் செய்வதற்கு துணிவு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த தீமை அவனோடு ஒட்டிக்கொண்டு அடுத்தவர்களையும் ஈர்க்கும் நிலையும் ஏற்படும்.

மறுமையில் ஏற்படும் தண்டனை

பிறருடைய பாவத்தை துருவித் துருவி ஆராய்ச்சி செய்யும் நாமும் கூட தவறுகளுக்கு உட்பட்டவர்கள்தான். அவர்களிடம் ஒரு குறை, ஒரு தவறு இருந்தால் நம்மிடம் வேறொரு குறை, தவறு இருக்கும். இந்த தவறுகள் நாளை மறுமையில் பலருக்கு முன்னால் வெளிப்படுத்தி அவமானப்படாமல் இருக்க வேண்டுமானால் நாம் இம்மையில் நம்முடைய பார்வைக்கு வந்த குறைகளை, தவறுகளை மறைத்தாக வேண்டும். அப்படி மறைக்காத பட்சத்தில் நம்முடைய குறைகளை அல்லாஹ் வெளிப்படுத்துவான்.

 أَنَّ بْنَ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ :
الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ ، وَلاَ يُسْلِمُهُ ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான்.

எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல்: புகாரி-2442 

காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றப்படும்

பிறரின் குறைகளை கேட்பதற்காக மற்றவர்களின் உரையாடலை கேட்பவனுக்கு மறுமை நாளில் அவனின் காதில் ஈயம் உருக்கி ஊற்றி தண்டனை கொடுக்கப்படும்.

وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ ، أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ الْقِيَامَةِ

“தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது “தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்’ யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி-7042 , திர்மிதீ (1673)

அந்தரங்க விஷயங்களில் தலையிடாதே!

பிறரின் குறைகளை ஆராயும் வகையில் அமைந்த விஷயங்களை இஸ்லாம் தடைசெய்துள்ளது. அந்தரங்க விஷயங்களில் தலையிடும் வகையில் உள்ளவற்றை தவிர்க்க இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. இந்த அடிப்படையில் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லும்போது ஸலாம் கூறி அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ۚ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்.

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்வரை அங்கே நுழையாதீர்கள்! “திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 24:27,28)

பிச்சை எடுப்பவர்கள் செய்கிறார்கள்

இந்த அழகிய நடைமுறையை இஸ்லாமியர் பலர் பின்பற்றுவதில்லை. பிச்சை எடுக்கவரும் நபர்கள்தான் ஸலாம் கூறி பிச்சை கேட்கும் நிலை உள்ளது.

ஒருவரின் குறைகள் பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக இட்ட முதல் அணை ஒருவருடைய வீடடிற்கு சென்றால் அவரிடம் முதலில் அனுமதி கேட்டுத்தான் செல்ல வேண்டும்.

 أَنَّ أَبَا مُوسَى الأَشْعَرِيَّ
اسْتَأْذَنَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، فَلَمْ يُؤْذَنْ لَهُ وَكَأَنَّهُ كَانَ مَشْغُولاً فَرَجَعَ أَبُو مُوسَى فَفَرَغَ عُمَرُ فَقَالَ أَلَمْ أَسْمَعْ صَوْتَ عَبْدِ اللهِ بْنِ قَيْسٍ ائْذَنُوا لَهُ قِيلَ قَدْ رَجَعَ فَدَعَاهُ فَقَالَ كُنَّا نُؤْمَرُ بِذَلِكَ فَقَالَ تَأْتِينِي عَلَى ذَلِكَ بِالْبَيِّنَةِ فَانْطَلَقَ إِلَى مَجْلِسِ الأَنْصَارِ فَسَأَلَهُمْ فَقَالُوا لاَ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا إِلاَّ أَصْغَرُنَا أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ فَذَهَبَ بِأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ فَقَالَ عُمَرُ أَخَفِيَ عَلَيَّ مِنْ أَمْرِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَلْهَانِي الصَّفْقُ بِالأَسْوَاقِ يَعْنِي الْخُرُوجَ إِلَى تِجَارَةٍ.

உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் (கலீஃபாவாக இருந்த காலத்தில்) அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, உள்ளே வர அனுமதி கோரினார்கள். உமர் (ரலி) அவர்கள் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூமூசா (ரலி) அவர்கள் திரும்பி விட்டார்கள்.

அலுவலை முடித்த உமர் (ரலி) அவர்கள், “அபூமூசாவின் குரலை நான் கேட்டேனே! அவருக்கு அனுமதி அளியுங்கள்!” என்றார்கள். “அவர் திரும்பிச் சென்றுவிட்டார்!” என்று கூறப்பட்டது. உடனே உமர் (ரலி) அவர்கள் அபூமூசா (ரலி) அவர்களை அழைத்து வரச் செய்தார்கள்.

(“ஏன் திரும்பிச் சென்றுவிட்டீர்?”என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது) அபூமூசா (ரலி) அவர்கள், “இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்!” எனக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், “இதற்குரிய சான்றை நீர் என்னிடம் கொண்டு வாரும்!” எனக் கேட்டார்கள். உடனே, அபூமூசா (ரலி) அவர்கள் அன்ஸாரிகளின் அவைக்குச் சென்று அவர்களிடம் கேட்டார்கள். அதற்கவர்கள், “நம்மில் இளையவரான அபூசயீத் அல்குத்ரீயைத் தவிர வேறு யாரும் இந்த விஷயத்தில் உமக்கு சாட்சியம் சொல்ல மாட்டார்கள்!” என்றனர்.

அபூமூசா (ரலி) அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களை உமர் (ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். (அபூசயீத் (ரலி) அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதை உறுதிப்படுத்தியதும்) உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளை எனக்குத் தெரியாமல் போய்விட்டதா? நபி (ஸல்) அவர்களது காலத்தில் (வெளியே சென்று) கடைவீதிகளில் நான் வியாபாரம் செய்து கொண்டிருந்தது என் கவனத்தை திசை திருப்பிவிட்டது போலும்! என்று கூறினார்கள்.

நூல்: புகாரி-2062 

வீட்டில் பதில் வரவில்லையானால் திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் திரும்பிச் சென்றுவிடவேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக வீட்டில் என்ன நடக்கிறது என்பதை வீட்டின் கதவின் சாவியின் ஓட்டை வழியாக பார்க்கும் மோசமான நிலையையும் பார்க்கிறோம்.

வீட்டினுல் எட்டிப்பார்ப்பது கூடாது

சிலர் யாரும் கதவை திறக்காத பட்சத்தில் கதவின் சாவியின் ஓட்டைக்குள் கண்ணை விட்டு நுழைத்து ஆராய்வதை பார்க்கிறோம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :
قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم لَوْ أَنَّ امْرَءًا اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ فَخَذَفْتَهُ بِعَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ لَمْ يَكُنْ عَلَيْكَ جُنَاحٌ.

அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி-6902 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ رَجُلاً اطَّلَعَ مِنْ بَعْضِ حُجَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَامَ إِلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ ، أَوْ بِمَشَاقِصَ – فَكَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخْتِلُ الرَّجُلَ لِيَطْعُنَهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் “கூர்முனையுடன்’ அல்லது “கூர்முனைகளுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பது போன்று உள்ளது.

நூல்: புகாரி-6242 

வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்கவேண்டும் என்பது வீட்டில் உள்ளவர்களின் அந்தரங்களை பார்த்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ
أَنَّ رَجُلاً اطَّلَعَ مِنْ جُحْرٍ فِي دَارِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يَحُكُّ رَأْسَهُ بِالْمِدْرَى فَقَالَ لَوْ عَلِمْتُ أَنَّكَ تَنْظُرُ لَطَعَنْتُ بِهَا فِي عَيْنِكَ إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ الأَبْصَارِ.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று எனக்கு (முன்பே) தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன்.

(வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப் பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலிருப்பவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால்தான்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-5924 

எனவே பிறரின் (1) குறைகளையும், (2) அந்தரங்க விஷயங்களையும் ஆய்வு செய்யும் காரியங்கள் அனைத்திலிருந்தும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.

 

யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்