Tamil Bayan Points

பிரார்த்தனை விதியை மாற்றிவிடும்!

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on April 4, 2017 by Trichy Farook

பிரார்த்தனை விதியை மாற்றிவிடும் என்ற கருத்தில் ஒரு செய்தி ஹதீஸ் நூற்களில் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான செய்தி இல்லை.

87حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِخَطِيئَةٍ يَعْمَلُهَا رواه إبن ماجه

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

(பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரகத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

நூல் : இப்னு மாஜா 87

இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் அபில் ஜஃது என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சான்று அளிக்கவில்லை. இமாம் இப்னுல் கத்தான் அவர்கள் இவருடைய நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

இமாம் இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை நம்பகமானவர்களின் பட்டியலில் குறிப்பிடும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று முடிவு செய்ய முடியாது.

இவருடைய நம்பகத்தன்மைக்கு மற்ற அறிஞர்கள் யாரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே இவர் பலவீனமானவானர். பலவீனமான இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது.