Tamil Bayan Points

பார்வையைப் பாதுகாப்போம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 23, 2023 by Trichy Farook

முன்னுரை

உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம், ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான் இறை நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் தன் திருமறையில் கட்டளையிடுகின்றான்.

இறைவனின் கட்டளை

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ 

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

(அல்குர்ஆன்: 24:30,31)

தங்களின் பார்வையைப் பாதுகாத்துக் கொள்வதுதான் இறைநம்பிக்கையாளர்களுக்கு பரிசுத்தமானது என மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் இன்றைக்கு விபச்சாரம், கற்பழிப்பு போன்ற பல்வேறு பெரும்பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வது பார்வைதான்.

இன்றைய உலகில் பத்திரிக்கைகள் வாயிலாகவும், ஆபாசப் புத்தகங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவும், இணையதளங்களின் மூலமாகவும் பல்வேறு விதமான ஆபாசக் காட்சிகள் வெளியிடப் படுகின்றன. அழகிய பெண்களின் அறைகுறை ஆடையுடன் கூடிய காட்சிகள் காட்டப்படுகின்றன.

சாதாரண செய்திப் பத்திரிக்கைகள் முதல் வார இதழ், மாத இதழ் போன்ற எந்த ஒரு பத்திரிக்கையும் இதற்கு விதிவிலக்கல்ல, அனைத்து இதழ்களிலும் இது போன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுகின்றன. ஆபாசப் படங்களை வெளியிடாத பத்திரிகைகளின் விற்பனை கூட, குறைந்து விடுவதால் விற்பனைக்காகவே இது போன்ற காட்சிகளை அதிகம் வெளியிடுகின்றனர்.

கிரிக்கெட் என்ற விளையாட்டை சாதரணமாகப் பார்ப்பதில் தவறில்லை என்று நமக்கு நாமே ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு அதனை பார்த்து வருகின்றோம். ஆனால் அந்த விளையாட்டின் மத்தியில் அரை குறை மங்கைகளை ஆடவிட்டு காட்டுகின்ற காட்சிகளும் அதிகம் இடம்பெறுகின்றன. இடைஇடையே காட்டப்படும் விளம்பரங்களில் கூட ஏராளமான அரைகுறை காட்சிகள் காட்டப்படுகின்றன. இவற்றைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை.

இளைஞர்கள் பலர் இது போன்ற தவறான காட்சிகளின் காரணமாக தங்களுடைய மனதை அலைபாய விடுகின்றனர். இதனால் அவர்களுடைய கல்வித் தரம் குறைகிறது. வாழ்க்கையில் எந்த ஒரு துறையிலும் ஈடுபாடில்லாமல் தவறான பாதையில் சென்று தங்களுடைய எதிர்கால வாழ்வையே சீரழித்து விடுகின்றனர். இன்றைய உலகில் மிக வேகமாகப் பரவி வரும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தவறான உடலுறவுதான். என்றாலும் அத்தகைய தவறான உறவைத் தூண்டக்கூடிய மிக முக்கிய காரணி ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதுதான்.

மார்க்கத்தின் எச்சரிக்கை

இதனால்தான் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் தவறான காட்சிகளை பார்ப்பதைக் கூட விபச்சாரம் என்கிறது.

 قَالَ أَبُو هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறது இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-6243 

மனதைக் கெடுக்கக்கூடியது தவறான பார்வைதான் என்பதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்கள். தவறான பார்வைதான் அதிகமான பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வதால் நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய அனைத்து வாசல்களையும் அடைப்பதற்கு நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

உரிய வயதில் திருமணம் செய்தல்

ஆண்களோ பெண்களோ அவர்கள் பருவ வயதை அடைந்து பாலியல் ரீதியான நாட்டங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோர்கள் மீது கடமையாகும். இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் திருமணம் என்பது ஒரு பாரதூரமான காரியமாக ஆக்கப்பட்டுவிட்டது. வரதட்சணை போன்ற கொடுமைகளின் காரணமாக பெண்களுக்குரிய திருமண காலம் தாமதமாகின்றது. அது போன்று பல ஊர்களில் ஆண்களுக்கு வேண்டுமென்றே திருமணகாலம் தாமதிக்கப்படுகிறது.

அண்ணன் திருமணத்தில் நாட்டமில்லாதவறாக இருந்தால் அவருக்கு திருமணமாகின்ற வரை அவருடன் பிறந்த சகோதரர்களுக்கும் திருமண காலங்கள் பிற்படுத்தப்படுகின்றன. இதனால் பலர் மன நோய்களுக்கு ஆளாகின்றனர். தவறான பல காரியங்களைச் செய்வதற்குத் துணிகின்றனர்.
இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடக்கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கட்டளையிடுகின்றார்கள்.

مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இளைஞர்களே உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறி : இப்னு மஸ்வூத் (ரலி),
நூல் : புகாரி-1905 

மேற்கண்ட செய்தியில் உரிய வயதில் தகுதியுடையவர்கள் திருமணம் செய்வதும், அதற்கு இயலவில்லையென்றால் இறையச்சத்தை வளர்க்கும் நோன்பை நோற்பதும் நம்முடைய தவறான பார்வைக்குத் திரையாக அமையும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்துதல்

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட வசனங்களில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் வீதிகளில் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்தியவர்களாத்தான் செல்ல வேண்டும் என்ற இறைக்கட்டளையை நாம் பார்த்தோம். பார்வையைத் தாழ்த்தி வீதிகளில் நடந்து செல்வது வீதிக்கும் செய்ய வேண்டிய கடமை என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.

இன்றைய காலங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்களில் ஒரு பகுதியினரும் மிக அதிகமாக மாற்று சமுதாயப் பெண்களும் தங்களுடைய அலங்காரங்களையும், அங்கங்களையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் வீதியில் நடமாடுகின்றனர். பல இஸ்லாமிய நாடுகளிலும் இது போன்ற அவல நிலைதான் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் உண்மையான முஃமின்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டால் தான் தங்கள் மனதை அசுத்தத்திலிருந்து பரிசுத்தப்படுத்த முடியும். தங்களுடைய பார்வைகளை உலாவ விடுபவர்கள் நிச்சயம் பல விதமான மனோ இச்சைகளுக்கு அடிமையாவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. பின்வரக்கூடிய, நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை நாம் பின்பற்றி நடந்தால் நம்முடைய மனதை வழிகெடுவதிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْىٌ ، عَنِ الْمُنْكَرِ.

”நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” மக்கள் ”எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக்கொள்கின்ற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ” அப்படியென்றால் நீங்கள் அந்த சபைகளுக்கு வந்துதான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

மக்கள் ” பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ” பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும் , தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்” என்று கூறினார்கள்.

அறி : அபூஸயீத் (ரலி),
நூல் : புகாரி-2466 

قَالَ « إِمَّا لاَ فَأَدُّوا حَقَّهَا غَضُّ الْبَصَرِ وَرَدُّ السَّلاَمِ وَحُسْنُ الْكَلاَمِ ».

மற்றொரு அறிவிப்பில் ” அழகிய பேச்சைப் பேசுதலும்” பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.

அறி : அபூதல்ஹா (ரலி),
நூல்: முஸ்லிம்-4365 ( 4020 )

அந்நியப் பெண்களை விட்டும் பார்வையைத் திருப்புதல்

இஸ்லாம், எந்த முறையில் எதற்காக அந்நியப் பெண்களை பார்ப்பதற்கு அனுமதியளிக்கிறதோ அதுவல்லாத முறைகளில் அந்நியப் பெண்களை நாம் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள், யார் யார் முன்னிலையில் பர்தா அணியாமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்கிறதோ அவர்களைத் தவிர மற்ற அனைத்து ஆண்கள் முன்னிலையிலும் தங்களை மறைத்துதான் இருக்க வேண்டும்.

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْ

”அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல்குர்ஆன்: 24:30,31)

பர்தாவைப் பேணாத பெண்கள் முன்னிலையில் நாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அது போன்று தனிமையில் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

 عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَظْرَةِ الفُجَاءَةِ «فَأَمَرَنِي أَنْ أَصْرِفَ بَصَرِي»

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரென, படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல் : திர்மிதீ-2776 (2700)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ :
كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ

(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது ”கஸ்அம்” கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி-1513 

 فَقَالَ العَبَّاسُ: يَا رَسُولَ اللَّهِ، لِمَ لَوَيْتَ عُنُقَ ابْنِ عَمِّكَ؟ قَالَ: «رَأَيْتُ شَابًّا وَشَابَّةً فَلَمْ آمَنِ الشَّيْطَانَ عَلَيْهِمَا»

(இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் ” அல்லாஹ்வின் தூதரே! எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” ஒரு இளைஞனையும், இளம்பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷைத்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன் என்று கூறினாரகள்.

நூல் : திர்மிதீ-885 

இறைவனை அஞ்சி வாழ்தல்

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தனிமையில் இருக்கும் போதும், கூட்டாக இருக்கும் போதும் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். தவறான பத்திரிக்கைகள், தொலைக்காட்சி காணொளிகள், இணையதளங்கள் போன்றவற்றை பார்ப்பதை விட்டும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வைகளுக்காகவும் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வைகளும் நமக்கெதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பயம் இருந்தால்தான் நாம் நம்முடைய பார்வையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا‏

உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.

(அல்குர்ஆன்: 17:36)

தோல்கள் சாட்சி சொல்லும்

وَيَوْمَ يُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَى النَّارِ فَهُمْ يُوْزَعُوْنَ
حَتّٰٓى اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا‌ ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏ ‏

அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.

”எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். ”ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!” என்று அவை கூறும்.

(அல்குர்ஆன்: 41:20,30)

يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

(அல்குர்ஆன்: 40:19)

لَا تُدْرِكُهُ الْاَبْصَارُوَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ۚ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 6:103)

இறைவன் எந்நேரமும் நம்முடைய கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கின்ற இறையச்சம்தான் தவறான பார்வைகளை விட்டும் நம்மை பாதுகாக்கும் திரையாகும்.

 

கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்.