Tamil Bayan Points

பருவ மழையும் பரவும் நோய்களும்

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

Last Updated on January 2, 2022 by Trichy Farook

பருவ மழையும் பரவும் நோய்களும்

‘வாராது வந்த மாமணியே!’ என வடகிழக்குப் பருவமழையை நாம் வரவேற்றுக் கொண்டிருக்கிறோம். வானிலை ஆய்வு அறிவித்தபடி அக்டோபர் 17-2019 அன்று முதல் மழை துவங்கி விட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சியை நீங்கள் அறிவீர்கள். அல்லாஹ்வின் அருளால் வறட்சியைப் போக்கும் விதமாக, பருவமழைக் காலம் நமக்கு முன்னால் வந்திருக்கின்றது.

ஒவ்வொரு பருவமழையின் போதும் ‘சென்ற ஆண்டு பெய்த பருவமழையைக் காட்டிலும்  இந்த ஆண்டு பெய்த மழையளவு சதவிகிதம் குறைவு’ என வானிலை ஆய்வு மையம் புள்ளி விவரம் தருவதைப் பார்க்கிறோம். அணைகள், குளங்கள், குட்டைகள், ஏரிகள், நீர் நிலைகள் ஆகியவற்றில் தேங்கி நிற்கும் நீர் சேமிப்பு  அடுத்தப் பருவமழைக் காலம் வரை போதாது என்பதுதான் அதன் விளக்கம்.

இப்படி, பெய்யும் மழை பற்றாப்படியாகி விடுகின்றது; அல்லது அளவுக்கதிமான மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அது பேரிடராக மாறிவிடுகின்றது. இந்த வெள்ளப் பெருக்கினால் ஆயிரக்கணக்கானோர் இறந்து விடுகின்றனர். ஆயிரக்கணக்கான கால்நடைகள் அழிந்து விடுகின்றன. பயிர்கள் சேதமாகி விவசாயம் பாழாகி விடுகின்றது.

மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு என்று நாட்டின் கட்டமைப்பு நிலைகுலைந்து போய்விடுகின்றது.  பல்லாயிரம் கோடி அளவில் பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டு விடுகின்றது. அரசாங்கமே மீண்டு எழ முடியாத அளவுக்கு அதன் பாதிப்பு அமைந்து விடுகின்றது.

பிரதம அமைச்சர் ஹெலிகாப்டரில் பறந்தபடி கருடப் பார்வையாக ஒரு கருணைப் பார்வை பார்த்து விட்டு, கேட்ட நிவாரணத்தைக் கொடுக்காமல் ஒரு சில கோடிகளை பிச்சை போடுவார். அதிலும் தனது கட்சி ஆளாத மாநிலம் என்றால் போடுகின்ற பிச்சையும்  குறைந்து விடும்.  அதன் பின், பாதிக்கப்பட்ட மாநிலத்தை மறந்து போய் விடுவார். அரசாங்கத்தின் நிலை இதுவென்றால் தனிமனித வாழ்க்கையின் பாதிப்பை நாம் எண்ணிப் பார்க்கவே முடியாது.

இதுவெல்லாம் பெருவெள்ளத்தினால் ஏற்படும் உயிர் மற்றும் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். இதனால் நபி (ஸல்) அவர்கள் மழையைக் காணும் போது,

اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا

(அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆ)

யா அல்லாஹ் (இதை) பயனுள்ள மழையாக  ஆக்குவாயா! என்று பிரார்த்திப்பார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-1132 

பற்றாப்படி இல்லாமலும், அளவுக்கு மிஞ்சி அழிவு ஏற்படாமலும்  மழை பொழிய  நம்பிக்கையுடன் நாம் பிரார்த்திக்கும் போது இந்த மழை, பயனளிக்கும் மழையாக அமைந்திட அல்லாஹ் அருள்பாலிப்பான்.

இந்த மழை அழிவை ஏற்படுத்தினால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا

(அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா)

யா அல்லாஹ்! எங்கள் சுற்றுப் புறங்களில் (பொழியச் செய்வாயாக!) எங்களுக்கு எதிரானதாக (இம்மழையை) ஆக்கிவிடாதே!’  என்று பிரார்த்திப்பார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி-1015 

மழைக் காலத்தின் போது  நபி (ஸல்) அவர்கள் செய்த இந்த துஆக்களை நாமும் செய்யத் தவறக்கூடாது.

மழைக்காலம் வந்ததும் பல்வேறு தொற்று நோய்கள் படை எடுத்து வந்து விடுகின்றன.  அவற்றில் காய்ச்சல்களுக்கே ஒரு பெரிய  பட்டியல் உண்டு. டெங்கு, மலேரியா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், சிக் குன் குனியா, ஜப்பானிய மூளைக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

காய்ச்சல்கள் அல்லாமல் வாந்தி, பேதி, காலரா, கண் நோய், மஞ்சள் காமாலை என்று இதர நோய்களின் பட்டியலும் நீண்டு கொண்டு செல்கின்றது. இதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசும் தனிநபர்களும் எடுக்க வேண்டும்.  (இது குறித்துத் தனியாக விளக்கப்பட்டுள்ளது.)

மழைக்காலங்களில் வீடுகள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் நீர் காரணமாக அவை கொசு வளர்க்கும் பண்ணைகளாகி விட்டன என்று அபராதம் விதிக்கும் அரசாங்கம், சாலைகளில் வடியாமல் வழியாமல் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இத்தனையும் தாண்டி நாம் இந்த நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் இது அல்லாஹ் ஒருவனால் தான் முடியும்.

6:64 قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْـتُمْ تُشْرِكُوْنَ‏

“உங்களை இதிலிருந்தும், மற்ற எல்லாத் துன்பங்களிலிருந்தும் அல்லாஹ்வே காப்பாற்றுகிறான். பின்னரும் நீங்கள் இணை வைக்கிறீர்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:6:64)

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க அல்ஆஃபியத்த ஃபித்துன்யா வல்ஆகிரா

(யா அல்லாஹ்! இவ்வுலகிலும் மறுமையிலும் எனக்கு சுகத்தைத் தருவாயாக!) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: அஹ்மத்-4785 (4554) (சுருக்கம்)

اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ

“அல்லஹும்ம! கலக்த்த நஃப்சீ, வ அன்த்த தவஃப்பாஹா, லக்க மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லஹும்ம இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியா”

(இறைவா! நீயே என் உயிரைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றிக் கொள்கிறாய். அதன் இறப்பும் வாழ்வும் உனக்கே உரியன. அதை நீ உயிரோடு விட்டுவைத்தால் அதை நீ காப்பாற்றுவாயாக! அதை நீ இறக்கச் செய்து விட்டால் அதற்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்) என்று ஒருவர் உறங்கச் செல்லும்போது கூறுமாறு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், “இதைத் தங்கள் தந்தை உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்களை விடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ்

நூல்: முஸ்லிம்-5253 

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி-5017 

இதுபோல் நாமும் படுக்கைக்குச் செல்கின்ற போது, குல்ஹுவல்லாஹு அஹத் என்ற அத்தியாயத்துடன் சேர்த்து ஃபலக், நாஸ் ஆகிய அத்தியாயங்களையும் ஓதிக் கொள்ள வேண்டும். உண்மையில் இவ்விரு அத்தியாயங்களும், இறைவனின் படைப்புகளால் ஏற்படுகின்ற தீங்குகளை விட்டும் அவனிடமே பாதுகாப்பு இருக்கின்றது என்று தெளிவுபடத் தெரிவிக்கின்றன.

இந்த பருவமழைக் காலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வருமுன் காக்கும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள், அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி துஆச் செய்தல் போன்ற காரியங்களை நாம் கடைப்பிடிப்போமாக! இத்தனைக்குப் பிறகும் ஒருக்கால் இதுபோன்ற நோய்களுக்கு நாம் ஆட்பட்டுவிட்டோம் என்றால் அவனே முழு சுகத்தையும் நிவாரணத்தையும் தருவதற்குத் தனி ஆற்றல் பெற்றவன்.

26:80 وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ

நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

(அல்குர்ஆன்:26:80)

அல்லாஹ்விடத்தில் மேற்கண்ட துஆக்களைக் கொண்டு பிரார்த்திப்போமாக! அதைத் தாண்டி நமக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது அவனது சோதனை என்று பொறுத்துக் கொண்டு மறுமையில் அதற்குரிய பகரத்தைப் பெறுவோமாக!

பரவும் நோய்களும் தடுக்கும் வழிமுறைகளும்

மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களும் காலரா, மஞ்சள் காமாலை என்று இதர நோய்களும் ஏற்படுகின்றன. இந்த நோய்கள் மூன்று விதங்களில் பரவுகின்றன.

1) Air borne diseases – காற்றின் மூலம் பரவும் நோய்:

ஃப்ளூ போன்ற வைரஸ் காய்ச்சல் தான் பன்றிக் காய்ச்சலாகும். இந்த நோய் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினாலோ அல்லது இருமினாலோ அல்லது மூக்கை சிந்தினாலோ போதும். காற்றின் மூலம் அடுத்தவருக்குத் தொற்றி விடும்.

2) Water borne diseases  – குடிநீர், உணவு போன்ற திரவம் மற்றும் திடப்பொருட்களால் பரவும் நோய்கள்

மழை நேரத்தில்  குடிநீருடன் கழிவு நீர் கலப்பதால் குடி தண்ணீர் மாசுபட்டு விடுகின்றது.  அது போல் உணவும் மாசுபட்டு விடுகின்றது. அசுத்தம் நிறைந்த இது போன்ற நீர், உணவுகளை உட்கொள்வதால்  டைஃபாய்ட் காய்ச்சல், மஞ்சல் காமாலை, வாந்தி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

3) Vector borne diseases – கொசு, ஈ போன்ற முகவர்கள் மூலம் பரவும் நோய்கள்

கொசுக்கள், ஈக்கள், எலிகள் மூலமும் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற கிருமிகள் மூலமும் டெங்கு, மலேரியா, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல்கள் பரவுகின்றன.

கொசுக்களைக் கொல்லும் மீன்கள்:

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டில் இந்த அளவுக்கு அதிகமாகக் கொசுக்கள் இல்லை. காரணம், ஏரிகள், குளங்கள் நிறைய இருந்தன. அவற்றில் மீன்கள் வளர்ந்தன. நீரில் மிதக்கும் கொசுக்களின் ‘லார்வா’க்கள், மீன் குஞ்சுகளுக்கு உணவாகின. இதனால் கோடிக்கணக்கான கொசுக்கள் இயற்கையாகவே அழிக்கப்பட்டன.

இப்போதோ ஏரி, குளங்கள் இருந்த நீர்நிலைகளைக் குடியிருப்புகளாக மாற்றி விட்டோம். இயற்கை வழியில் கொசுக்கள் அழிவதை தடுத்து விட்டோம். நமது அழிவுக்கு நாமே காரணமாகி விட்டோம். இன்றைக்கும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குளம், குட்டை இன்னும் பிற நீர்நிலைகளில் ‘கம்பூசியா அபினிஸ்’ எனும் மீன்களை வளர்த்து, கொசுக்களை ஒழிக்கிறார்கள். இந்த முயற்சி இப்போது நமக்கும் தேவை.

தடுக்க என்ன வழி?

வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ஜன்னல்களில் கொசுவலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச் சீலைகளைத் தொங்க விடலாம். கொசுவர்த்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே, கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசுதல் போன்றவையும் பலன் கொடுக்கும். எனினும் இவற்றால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்.

வீட்டைச் சுற்றி சாக்கடை மட்டுமல்ல, சாதாரண தண்ணீர் கூடத் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சுகாதாரப் பணியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ அல்லது ‘மாலத்தியான்’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் ‘டெல்டா மெத்திரின்’ மருந்தைத் தெளிக்க, கொசுக்கள் மடியும். தேங்கிய நீர் நிலைகள் அனைத்திலும் இந்தக் கொசு மருந்தை அடிக்க வேண்டியது முக்கியம்.

மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் ‘கிரிசாலை’ புகைத்தால் கொசுக்கள் இறக்கும். குடிநீர்த் தொட்டிகளில் ‘டெமிபாஸ்’ மருந்தைத் தெளிக்க வேண்டும்.

தண்ணீரை, மூடி உள்ள பாத்திரங்களில் ஊற்றி வைப்பது பாதுகாப்பானது. வீட்டிலுள்ள பழைய பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் பாழடைந்த கிணறுகள் இருந்தால் மூடிவிட வேண்டும். வீட்டிலுள்ள தண்ணீர்த் தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காய வைக்க வேண்டும்.

தண்ணீர்த் தொட்டிகள், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள், குளியலறைத் தொட்டிகள், பால்கனி, ஜன்னல்களின் ‘சன்ஷேடு’, ஏர்கூலர், பூந்தொட்டிகள், அழகுஜாடிகள், உடைந்த ஓடுகள், தகர டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், டயர்கள், பிளாஸ்டிக் வாளிகள், கப்புகள், பேப்பர் டம்ளர்கள், ஆட்டு உரல் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொசுவலை கட்டுதல்:

கொசுவலை கட்டுதல் மூலம் கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம். படுக்கப்போகும் போது கொசுவலை கட்டினால் முழுப்பலன் கிடைக்காது. இருட்ட ஆரம்பிக்கும் போது தான் கொசுக்கள் தெருக்களிலிருந்து வீட்டின் மூலை முடுக்குகள், படுக்கைகள் ஆகியவற்றை வந்தடையும். ஆகவே அவை வீட்டிற்குள் வருவதற்கு முன்பாகவே மாலை 5 மணிக்கே படுக்கை அறையில் கொசுவலையைக் கட்டிவிட வேண்டும். அல்லது அப்போதே கதவு, ஜன்னல்களை மூடி விட வேண்டும். எட்டு மணிக்குப் பிறகு, ஜன்னல்களைத் திறந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் 20 கோடிக்கும் அதிகமான மக்களை மலேரியா தாக்குகிறது. 6 லட்சத்துக்கும் அதிகமான பேர் இதனால் உயிரிழக்கின்றனர். மலேரியாவும் டெங்கு காய்ச்சலும் கொசுக்களாலேயே ஏற்படுகின்றன. இந்த இரண்டு நோய்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், டெங்கு கொசு பகலில் கடிக்கும். மலேரியா கொசு இரவில் கடிக்கும்.

நம்மால் முடிந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்வதுடன் படைத்த இறைவனிடம் பாதுகாவல் தேடவேண்டும். அவனது பாதுகாப்பு இல்லையென்றால் இவற்றிலிருந்து எந்த மனிதனும் தப்பிக்க இயலாது.