Tamil Bayan Points

பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா ?

கேள்வி-பதில்: வியாபாரம்

Last Updated on November 23, 2020 by Trichy Farook

பன்றித்தோல் தொடர்பான வியாபாரம் கூடுமா ?

எந்தப் பிராணியின் தோலானாலும் அது பதனிடப்பட்டுவிட்டால் அது தூய்மையடைந்து பயன்படுத்துவதற்கு ஏற்றதாகி விடுகின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

صحيح مسلم (1/ 277)
105 – (366) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ وَعْلَةَ، أَخْبَرَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا دُبِغَ الْإِهَابُ فَقَدْ طَهُرَ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தோல் பதனிடப்பட்டுவிட்டால் தூய்மை அடைந்துவிடும்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் (596)

தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது ஹராமாக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியதாகத் தான் இருக்க முடியும். முறையாக அறுக்கப்பட்ட ஹலாலான பிராணிகளைப் பொருத்த வரை மலஜலம் தவிர அதன் அனைத்து பாகங்களுமே தூய்மையானவை தான். அதனால் அதை நாம் உண்ணுகிறோம். உண்ண அனுமதிக்கப்படாத பிராணிகள் தூய்மையற்றவையாக உள்ளதால் அதன் தோலும் தூய்மையற்றதாக இருக்கும் என்ற சந்தேகம் ஏற்படும். எனவே தான் தோல் பதனிடப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் விதி விலக்கு அளிக்கின்றனர்.

مسند أحمد مخرجا (3/ 382)
1895 – حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ وَعْلَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَيُّمَا إِهَابٍ دُبِغَ فَقَدْ طَهُرَ»

எந்தத் தோல் பதனிடப்படுகின்றதோ அது தூய்மையடைந்து விடுகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறனார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அஹ்மது (1797)

السنن الكبرى للبيهقي (1/ 32)
68 – أَخْبَرَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْحَرْبِيِّ مِنْ أَهْلِ الْحَرْبِيَّةِ بِبَغْدَادَ، نا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الشَّافِعِيُّ، أنا إِبْرَاهِيمُ بْنُ الْهَيْثَمِ، ثنا عَلِيُّ بْنُ عَيَّاشٍ، ثنا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” طَهُورُ كُلِّ إِهَابٍ دِبَاغُهُ “. رُوَاتُهُ كُلُّهُمْ ثِقَاتٌ

பதனிடப்பட்ட எல்லா தோல்களும் தூய்மையானவை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : பைஹகீ (64) பாடம் (தூய்மை)

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் கூடுதலாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதல் ஹதீஸில் அய்யுமா இஹாபின் அதாவது எந்தத் தோலாயினும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகி விடும் எனக் கூறுகிறார்கள். இரண்டாவது ஹதீஸில் குல்லு இஹாபின் ஒவ்வொரு தோலும் பாடம் செய்யப்பட்டால் அது தூய்மையாகி விடும் என்று கூறுகிறார்கள். எந்த தோலாயினும் எனற் சொற்றொடரும் பாடம் செய்யப்பட்ட எந்தத் தோலையும் தூய்மையற்றவை எனக் கருதக் கூடாது என்ற கருத்தை தெளிவாக சொல்கின்றன.

தானாகச் செத்த பிராணிகளும் பன்றியைப் போல் ஹராம் என்பதை நாம் அறிவோம். இதைத் தடை செய்யும் வசனத்தில் பன்றியை மூன்றாவதாகக் கூறும் இறைவன் தானாகச் செத்த பிராணிகளை முதலாவதாகக் கூறுகிறான். தானாகச் செத்த பிராணியின் மாமிசத்தைத் தடை செய்த இஸ்லாம் அதன் தோலுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது.

صحيح البخاري (3/ 81)
2221 – حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِشَاةٍ مَيِّتَةٍ، فَقَالَ: «هَلَّا اسْتَمْتَعْتُمْ بِإِهَابِهَا؟»، قَالُوا: إِنَّهَا مَيِّتَةٌ، قَالَ: «إِنَّمَا حَرُمَ أَكْلُهَا»

2221 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஒரு செத்த ஆட்டைக் கடந்து சென்றபோது, இதன் தோலை நீங்கள் பயன்படுத்தக் கூடாதா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள், இது செத்த ஆடாயிற்றே! என்றனர். அதற்கு அதை உண்பது தான் தடை செய்யப்பட்டுள்ளது! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி 2221, 1492, 5531, 5532

செத்த ஆடு ஹராமாக இருந்தும் அதன் தோலைப் பயன்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர்.

صحيح مسلم (1/ 278)
106 – (366) حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ، – قَالَ: أَبُو بَكْرٍ، حَدَّثَنَا وَقَالَ ابْنُ مَنْصُورٍ: – أَخْبَرَنَا عَمْرُو بْنُ الرَّبِيعِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ قَالَ: رَأَيْتُ عَلَى ابْنِ وَعْلَةَ السَّبَئِيِّ، فَرْوًا فَمَسِسْتُهُ، فَقَالَ: مَا لَكَ تَمَسُّهُ؟ قَدْ سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ قُلْتُ: إِنَّا نَكُونُ بِالْمَغْرِبِ. وَمَعَنَا الْبَرْبَرُ وَالْمَجُوسُ نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ، وَنَحْنُ لَا نَأْكُلُ ذَبَائِحَهُمْ، وَيَأْتُونَا بِالسِّقَاءِ يَجْعَلُونَ فِيهِ الْوَدَكَ، فَقَالَ: ابْنُ عَبَّاسٍ، قَدْ سَأَلْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ؟ فَقَالَ: «دِبَاغُهُ طَهُورُهُ»

அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் அல்யஸனீ கூறுகிறார் :

நான் அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். நான் அதைத் தடவிப் பார்த்தேன். அப்போது அவர்கள், “ஏன் இதைத் தடவிப் பார்க்கிறீர்கள்? நான் இதை (அணிவது) பற்றி அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நாங்கள் மேற்கே வசித்து வருகிறோம். எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் அக்னி ஆராதகர்(களான மஜூசி)களும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டு வரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல் பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டு வருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?)’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலிலி) அவர்கள், “நாங்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அதற்கு அவர்கள், “அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கி விடும்’ என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.

முஸ்லிம் (597)

ஆடு மாடு போன்ற உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பொறுத்த வரை அது பதனிடப்பட்டாலும் பதினடப்படாவிட்டாலும் அவற்றை பயன்படுத்துவது ஆகுமானதாகும். எனவே மேற்கண்ட ஹதீஸ்கள் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றி பேசவில்லை. மாறாக உண்பதற்கு தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோலைப் பற்றியே பேசுகின்றன.

பதனிடுவதற்கு முன்பு தடை செய்யபட்டதாக உள்ள பிராணிகளின் தோல் குறித்தே அது பதனிடப்பட்டு விட்டால் பயன்படுத்தலாம் எனக் கூற முடியும். எனவே மேற்கண்ட ஹதீஸ் உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணிகளின் தோல் பதனிடப்பட்டு விட்டால் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கின்றன.

பன்றி உண்பதற்குத் தடை செய்யப்பட்ட பிராணியாக இருந்தாலும் அதன் தோல் பதனிடப்பட்டு விட்டால் அதை பயன்படுத்திக்கொள்ள இந்த ஹதீஸ்கள் அனுமதிக்கின்றன.

சிலர் பன்றிக்கு மட்டும் இதிலிருந்து விதிவிதிலக்கு அளித்து அதன் தோல் பதனிடப்பட்டாலும் துய்மையாகாது; பயன்படுத்தக் கூடாது என்று கூறுகின்றனர். ஆனால் இச்சட்டத்திலிருந்து பன்றிக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு இவர்கள் வைக்கும் வாதங்களும் ஏற்புடையதாக இல்லை.

பன்றியின் மீதுள்ள எல்லையில்லாத வெறுப்பால் பன்றி விஷயத்தில் இச்சட்டத்தைக் கூற பலருடைய மனம் இடம் கொடுப்பதில்லை. ஆனால் ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இது போன்று நமது மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்வதே சரியானது.

எனவே பன்றித் தோலால் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தலாம். மார்க்கம் அனுமதித்துள்ளது.