Tamil Bayan Points

பத்ரு, உஹது படிப்பினை – 8

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

முன்னுரை

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான உஹுத் போர் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.

தாக்கப்பட்ட நபிகளார்

உஹுத் போரில் எதிரிகள் வேறு வழியில் திடீரென தாக்கியதால் நபித்தோழர்கள் பலர் கொல்லப்படும் நிலை ஏற்பட்டது.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி)

நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களில் ஒருவரான ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களும் மிக கடுமையாக தாக்கப்பட்டு உஹுத் போரில் கொல்லப்பட்டார்கள்.

ஜாபிர் (ர) அவர்கள் கூறியதாவது : (உஹுதுப் போரின் போது) என் தந்தை, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்தி-ருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் குலத்தார் என்னைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரி வைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ரு (ரலி) அவர்களின் மகள் என்றோ – அவர்களுடைய சகோதரி என்றோ கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறாய்?” நீ அழுதாலும் அழாவிட்டாலும் வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

யமான் (ரலி)

நபி (ஸல்) அவர்களின் ரகசிய தோழர் என்று அழைக்கப்பட்ட ஹுதைஃபா (ரலி) அவர்களின் தந்தை யமான் (ரலி) அவர்களும் இந்தப் போர்க்களத்தில் நபித்தோழர் என்று தெரியாமல் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள்.

ஆயிஷா (ர) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போரின் (தொடக்கத்தின்) போது இணை வைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்ம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ர), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்ம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, “அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பு தான் அவர்கள் (அவரை விட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள். நூல் : புகாரி (4605)

ஹம்சா (ரலி)

உஹுத் போரில் கொல்லப்பட்ட நபித்தோழர்களில் முக்கியமானவர்களில் நபிகளாரின் பெரிய தந்தை ஹம்சா (ரலி) அவர்களும் ஒருவர். இவர்கள் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திகளும் பலவீனமான செய்திகளும் ஹதீஸ் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றை காண்போம்.

ஜஅஃபர் பின் அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு வந்து சேர்ந்த போது என்னிடத்தில், உபைதுல்லாஹ் பின் அதீ அவர்கள், “(உஹுதுப் போரின் போது ஹம்ஸா -ரலி- அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!” என்று கூறினார்கள். நான், சரி என்றேன். வஹ்ஷீ அவர்கள் ஹிம்ஸில் வசித்துக் கொண்டிருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். “அவர் தமது அந்த கோட்டைக்குள் இருக்கிறார். அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல் பை போன்று (பருமனாக) இருப்பார்” என்று எங்களிடம் கூறப்பட்டது.

பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு, அவருக்கு நாங்கள் சலாம் சொன்ன போது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் சொன்னார்.

உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தலைப்பாகைத் துணியினால், தம் இரு கண்களையும் கால்களையும் தவிர வேறெதையும் வஹ்ஷீ அவர்கள் பார்க்க முடியாத அளவிற்கு சுற்றிக் கட்டியிருந்தார்.

அப்போது, உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், “வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டார்கள். அப்போது வஹ்ஷீ, உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அதீ பின் கியார் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார். அவருக்கு, “உம்மு கித்தால் பின்த் அபில் ஈஸ்’ என்று சொல்லப்படும். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்கு பாலூட்டும் செவிலித்தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டு பிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன்.

(அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது நான் பார்த்தேன்.) உன் இரு பாதங்களைப் பார்த்தால் அது போலவே இருக்கிறது” என்று கூறினார். அப்போது உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, “ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். வஹ்ஷீ, “சரி’ (சொல்கிறேன்)” என்று கூறினார்.

(பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:) ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ருப் போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா பின் அதீ பின் கியார் என்பாரைக் கொலை செய்திருந்தார். எனவே, என் எஜமான் ஜுபைர் பின் முத்இம் என்னிடம், “என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ(அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்” என்று கூறினார். ஆகவே, அய்னைன் (உஹுது) ஆண்டில் -அய்னைன் என்பது உஹுது மலைக் கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரு மலைகளுக்குமிடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு – (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்ற போது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன்.

மக்கள் போருக்காக அணிவகுத்து நின்ற போது சிபாஉ பின் அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியை விட்டு) முன்னால் வந்து, “(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?” என்று கேட்டான்.

அவனை நோக்கி ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் (பகைத்துக் கொண்டு) மோத வந்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள். பிறகு ஹம்ஸா (ரலி) அவர்கள் அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள்.

அவன் கழிந்து போய் விட்ட நேற்றைய தினம் போல் (மடிந்தவனாக) ஆகி விட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (கவனிக்காமல்) நெருங்கி வந்த போது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெüயேறியது. அது தான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன் திரும்பினேன்.

மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப்வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.

அப்போது, என்னிடத்தில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)” என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்ட போது, “நீ வஹ்ஷி தானே?” என்று கேட்டார்கள். நான், “ஆம்” என்று கூறினேன். “நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?” என்று கேட்டார்கள்.

நான், “உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மை தான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “(உன்னைக் காணும் போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டு விட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட போது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலமா கிளம்பினான்.

(அவன் நபித்தோழர்களிடம் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), “நிச்சயம் நான் முஸைலமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன்.

அவனை நான் கொல்ல(வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம்” என்று கூறிக் கொண்டேன். (அபூபக்ர்-ரலி அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன்.

அப்போது தான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது.

அப்(போரின்) போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலை மீது ஓங்கி வெட்டி விட்டார். (அவன் தான் முஸைலமா.)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (முஸைலமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, “அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்து விட்டான்” என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.

(நூல் : புகாரி 4072)

ஹம்சா (ரலி) கொல்லப்பட்டது தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகள்

1. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றுவிட்டு அவர்களின் ஈரலை வெட்டி எடுத்துக் கொண்டு ஹிந்த் அவர்களிடம் கொண்டு சென்றார். அவர் அதை கடித்து விழுந்த முயற்சித்து தோற்றுப் போனார் என்ற ஒரு செய்தி இப்னு கஸீர் அவர்களின் அல்பிதாயா வந்நிகாயா என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இமாம் இப்னு கஸீர் அவர்கள் அறிவிப்பாளர் தொடர் குறிப்பிடாததால் இந்த செய்தி பலவீனம் அடைகிறது.

2. ஹம்சா (ரலி) அவர்களின் ஈரலை ஹிந்த் அவர்களே வெட்டி எடுத்தார்கள் என்றும் உஹுத் போரில் கலந்துகொண்ட முஸ்லிம் ஆண்களின் காதுகளையும் மூக்குகளையும் வெட்டி கால் சலங்கைகளாக மாற்றிக் கொண்டார்கள் என்ற செய்தி இப்னு ஹிஷாம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியும் முழு அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் இடம் பெற்றுள்ளதால் இதுவும் பலவீனம் அடைகிறது.

3. ஹம்சா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷீ அவர்கள் தம்முடைய எஜமான், ஜுபைர் பின் முத்இம் அவர்களிடம் காட்டுவதற்காக ஹம்சா (ரலி) அவர்களின் ஈரலை மக்காவிற்கு எடுத்துச் சென்றார் என்று வாகிதி அவர்களின் மகாஸீ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாஸீ என்ற நூலை எழுதி வாகிதி என்பவர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றது உண்மை, ஆனால் அவர்களின் உடலை வெட்டி ஈரலை எடுத்த ஹிந்த் அவர்கள் கடித்து துப்பியதாக வரும் மூன்று செய்திகளும் ஆதாரமற்றது.

வஹ்ஷீ அவர்களும், ஹிந்த் அவர்களும் பின்னர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர் என்பது முக்கிய செய்தியாகும்.

உஹுத் போரில் கொல்லப்பட்ட சில நபித்தோழர்கள் பெயர்கள்

ஹன்ளலா பின் அபீ ஆமிர் (ரலி),

(நூல் : அல்இஸாபா பாகம் : 2, பக்கம் : 137),

ஸஅத் பின் அபீ ரபீவு (ரலி)

(நூல் : அல்இஸாபா பாகம் :3, பக்கம் : 58),

அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி),

(நூல் : அல்இஸாபா பாகம் : 4, பக்கம் : 616),

கைஸமா பின் அல்ஹாரிஸ் (ரலி),

(நூல் : அல்இஸாபா பாகம் : 2, பக்கம் : 30)

ஆகியோர் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.

கொல்லப்பட்ட நபித்தோழர்களின் எண்ணிக்கை

உஹுத் போரில் அன்சாரிகளில் மட்டும் சுமார் எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். முஹாஜிர்களில் நான்கு நபர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போரில் அன்சாரிகüல் எழுபது பேர் கொல்லப்பட்டனர். “பிஃரு மஊனா’ போரின் போது எழுபது பேரும், யமாமா போரின் போது எழுபது பேரும் கொல்லப்பட்டனர்.

நூல் : புகாரி (4078)

நபித்தோழர்கள் அடக்கம்

உஹுத் போரில் கொல்லப்பட்ட நபித்தோழர்கள் அடக்கம் செய்வதற்கு போதிய துணிகள் கூட இல்லாமலும் ஒரே குழியில் இருவராகவும் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

ஒருநாள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் அவரது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது -அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார்- அவரது உடலில் சாத்துவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா (ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்ட போது -அன்னாரும் என்னை விடச் சிறந்தவரே- அவரது உடலில் சாத்துவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன்கூட்டியே கொடுக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்!” எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

அறிவிப்பவர் : இப்ராஹீம் பின் அப்திர்ரஹ்மான்,

நூல் : புகாரி (1274),

“உஹுதுப் போரில் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து(க் கஃபனிட்டு) இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரது உடலை உட்குழியில் முதலில் வைப்பார்கள். மேலும், “மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாவேன்” என்று கூறிவிட்டு, அவர்களுடைய இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழுகை) தொழவுமில்லை; அவர்கள் நீராட்டப்படவுமில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : புகாரி (4079)

எட்டு ஆண்டுக்கு பின்னர் ஜனாசா தொழுகை

உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகளார் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொழுவித்தார்கள்.

உக்பா பின் ஆமிர் (ர) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் மேடை மீது ஏறி, “நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன்.(என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (எனது மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது.

நூல் : புகாரி (4042)

உஹது இத்துடன் முடிவடைகிறது. அடுத்தது அஹ்ஸாப். 

முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள், மற்றும் பல்வேறு குலத்தினரை ஒன்று திரட்டுவதில் யூதர்கள் வெற்றி கண்டனர். அதில் நபியவர்கள் தீட்டிய திட்டம், அதில் வெற்றியா? தோல்வியா? என பல முக்கியமான  செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்!