Tamil Bayan Points

பத்ரு, உஹது படிப்பினை – 3

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

முன்னுரை

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.

பத்ருப் போர் நடப்பதற்கு முந்தைய இரவில்

முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததால் அன்றைய இரவு அழுது அழுது இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) “கிப்லா’வை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டித் தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.

“இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! இஸ்லாமியரில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை (மட்டுமே) வழிபட (இனி) யாரும் இருக்கமாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவி கீழே விழுந்துவிட்டது.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள்மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள்.

(நூல்: முஸ்லிம் 3621)

நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரின் போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, “(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப்போவதில்லை” என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக்கொண்டு, “போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, “இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.

தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்” எனும் (54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (4877)

சிறு தூக்கம்

 

اِذْ يُغَشِّيْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ وَلِيَرْبِطَ عَلٰى قُلُوْبِكُمْ وَيُثَبِّتَ بِهِ الْاَقْدَامَؕ‏

உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது. தண்ணீர் மூலம் உங்களைத் தூய்மைப்படுத்திடவும், உங்களை விட்டும் ஷைத்தானின் அசுத்தத்தைப் போக்கிடவும், உங்கள் உள்ளங்களைப் பலப்படுத்தவும், உங்கள் பாதங்களை அதன் மூலம் உறுதிப்படுத்தவுமே வானத்திலிருந்து தண்ணீரை உங்கள் மீது இறக்கினான்.

(அல்குர்ஆன் 8:11)

நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மரத்தின் அடியில் அழுது கொண்டு காலை வரை தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி).

நூல் : அஹ்மத் (973)

நேருக்கு நேர்

பத்ருப் போர்களத்தில் எதிரிகளை முஸ்லிம்கள் நேருக்கு நேர் சந்தித்தார்கள். அப்போது மக்காவிலிருந்து வந்தவர்களிடம்தான் முதலில் போரிடுவோடும் என்று இணைவைப்பவர்கள் கூறியதால் முஹாஜிர்கள் முதலில் அவர்களிடம் போர் செய்ய சென்றனர்.

உத்பா பின் ரபீஆவும் அவன் மகனும் மற்றும் அவனுடைய சகோதரனும் (போரிட) முன்னர் வந்தனர். (அதில் உத்பா) யார் நேரிடையாக மோதத் தயார்? என்று கேட்டான். அப்போது அன்சாரி இளைஞர்கள் முன் வந்தனர். நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள் (நாங்கள் அன்சாரிகள் என்ற) விவரத்தைத் தெரிவித்தனர். உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் எங்கள் தந்தையின் உடன் பிறந்தவர்களிடம் (முஹாஜிர்களிடம் மோதவே) நாடுகிறோம் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள். ஹம்சா எழுந்திரும். அலீ எழுந்திரும். உபைதா பின் அல்ஹாரிஸ் எழுந்திரும் என்று கூறினார்கள். ஹம்சா அவர்கள் உத்பாவிடமும் நான் ஷைபாவிடமும் மோதினேன். உபைதாவும் வலீதும் மாறிமாறி வெட்டிக் கொண்டனர். ஒருவர் மற்றவரை காயமுறச் செய்தார். பின்னர் நாங்கள் வலீதை தாக்கி கொன்றோம். உபைதாவை சுமந்து சென்றோம்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),

நூல் : அபூதாவூத் (2291)

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறை மறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங்கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான் தான் முதல் நபராக இருப்பேன்

கைஸ் பின் உபாத் அவர்கள் கூறினார்கள்: “இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” என்னும் (22:19) இறை வசனம், பத்ருப் போரின் போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா பின் ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.

நூல் : புகாரி (3965)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர், “அலீ(ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டார்களா?” என்று கேட்டார். (“ஆம். கலந்து கொண்டார்கள்) கவசத்திற்கு மேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்” என்று பராஉ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நூல் : புகாரி (3970)

எதிரிகள் குறைந்த எண்ணிக்கையானார்கள்

எதிரிகளிடம் வீரத்தோடும் தன்னம்பிக்கையோடும் போர் செய்ய வேண்டும் என்பதற்கு அல்லாஹ் எதிரிகளின் எண்ணிக்கை குறைவாக தெரியும்படி ஆக்கினான்.

 

وَ اِذْ يُرِيْكُمُوْهُمْ اِذِ الْتَقَيْتُمْ فِىْۤ اَعْيُنِكُمْ قَلِيْلًا وَّيُقَلِّلُكُمْ فِىْۤ اَعْيُنِهِمْ لِيَـقْضِىَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏

நீங்கள் (களத்தில்) சந்தித்துக் கொண்ட போது உங்கள் கண்களுக்கு அவர்களைக் குறைந்த எண்ணிக்கை யினராகவும், அவர்களின் கண்களுக்கு உங்களைக் குறைந்த எண்ணிக்கை யினராகவும் காட்டியதை எண்ணிப் பாருங்கள்! செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் செய்வதற்காக (இவ்வாறு காட்டினான்). காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும். (அல்குர்ஆன் 8:44)

அம்பெய்தல்

பத்ருப் போரின் போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்ற போது நபி (ஸல்) அவர்கள், “(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ உஸைத் (ரலி),

நூல் : புகாரி (2900) (புகாரி)

சுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்

உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களிடம் நபித்தோழர்கள் யர்மூக் போரின் போது, “நீங்கள் (பைஸாந்திய இணைவைப்போர் மீது) தாக்குதல் நடத்தமாட்டீர்களா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்துவோமே” என்று கேட்டார்கள். ஆகவே, ஸுபைர் (ரலி) அவர்கள், இணைவைப்போர் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இணைவைப்பவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களுடைய தோளின் மீது இரண்டு முறை வெட்டினார்கள். அவ்விரண்டுக்கும் இடையே பத்ருப் போரில் ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இன்னொரு காயம் இருந்தது. நான் சிறுவனாயிருந்த போது அந்த காயங்(களால் ஏற்பட்ட துளை போன்ற வடுக்)களுக்கிடையே என் விரல்களை நுழைத்து விளையாடி வந்தேன். நூல் : புகாரி (3721)

வானவர்களின் உதவி

இணைவைப்பவர்களை தோற்கடிக்க அல்லாஹ் வானத்திலிருந்து வானவர்களை இறக்கி உதவி புரிந்தான். வானவர்கள் எதிரிகளை கடுமையாக தாக்கி இறுதியில் முஸ்லிம்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தனர்.

 

اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏

நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடிய போது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்” என்று உங்களுக்குப் பதிலளித்தான்.

(அல்குர்ஆன் 8:9)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது : பத்ருப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (3995)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அன்றைய தினத்தில் முஸ்லிம்களில் ஒருவர் தமக்கு முன் சென்றுகொண்டிருந்த இணைவைப்பாளர்களில் ஒருவரை விரட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது தமக்கு மேலே சாட்டையைச் சுழற்றி அடிக்கும் சப்தத்தையும், ஒரு குதிரை வீரர் “ஹைஸூம்! முன்னேறிச் செல்” என்று கூறியதையும் செவியுற்றார்.

உடனே தமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த இணைவைப்பாளர் மல்லாந்து வீழ்ந்து கிடப்பதைக் கண்டார். அந்த இணைவைப்பாளரின் (அருகில் சென்று) அவர் பார்த்த போது, அவனது மூக்கில் காயமேற்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிபட்டது போல் அவனது முகம் கிழிந்து முகமெல்லாம் பச்சையாகக் கன்றிப் போயிருப்பதையும் கண்டார்.

உடனே அந்த அன்சாரீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அதைப் பற்றித் தெரிவித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீர் சொன்னது உண்மையே. இது மூன்றாவது வானிலிருந்து இறங்கிய (வானவர்களின்) உதவியாகும்” என்று கூறினார்கள். (முஸ்லிம்கள்) அன்றைய தினத்தில் (இணைவைப்பாளர்களில்) எழுபது பேரைக் கொன்றனர்; எழுபது பேரைச் சிறைப்பிடித்தனர்.

நூல் : முஸ்லிம் (3621)

உமைய்யா கொல்லப்படுவான் என்ற முன்னறிப்பு

சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணை வைப்போரின் தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃப் அபூ ஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியபாரத்திற்காக) ஷாம் நாட்டிற்கு மதீனா வழியாகச் செல்லும் போது சஅத் (ரலி) அவர்களிடம் தங்கு(ம் பழக்கம் உடையவன் ஆவான். உமய்யா, “நண்பகல் நேரம் வரும் வரை சற்றுக் காத்திருந்து, மக்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் (அந்த) நேரத்தில் நீங்கள் சென்று (கஅபாவை) வலம் வரலாமே” என்று கேட்டான்.

அவ்வாறே, சஅத்(ரலி) அவர்கள் வலம் வந்து கொண்டிருந்தபோது அபூஜஹ்ல் வந்து, “கஅபாவை வலம் வருவது யார்?” என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், “நான் தான் சஅத்” என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல், “(மதீனாவாசிகளான) நீங்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் (மதீனாவில்) புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “ஆம் (அதற்கென்ன?)” என்று கேட்டார்கள்.

அவ்விருவருக்குமிடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், “அபுல் ஹகமை விட குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்” என்று சொன்னான். பிறகு சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம்வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன்” என்று சொன்னார்கள்.

அப்போது உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், “உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்” என்று சொல்லத் தொடங்கினான்…அவர்களைப் பேச விடாமல் தடுக்கலானான்… ஆகவே, சஅத் (ரலி) அவர்கள் கோபமுற்று, “உம் வேலையைப் பாரும். (அபூஜஹ்லுக்கு வக்காலத்து வாங்காதீர்.) ஏனெனில், நான் முஹம்மது (ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்” என்று உமய்யாவிடம் சொன்னார்கள்.

அதற்கு அவன், “என்னையா (கொல்லவிருப்பதாகச் சொன்னார்?)” என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், “ஆம் (உன்னைத் தான்)” என்று பதிலளித்தார்கள். அவன், “அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பேசினால் பொய் பேசுவதில்லை” என்று சொல்லிவிட்டு தம் மனைவியிடம் சென்று, “என்னிடம் என் யஸ்ரிப் (மதீனா) நகர தோழர் என்ன சொன்னார் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவள், “என்ன சொன்னார்?” என்று வினவினாள்.

“முஹம்மது என்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னதாக அவர் கூறினார்” என்று அவன் பதிலளித்தான். அவள், “அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பொய் சொல்வதில்லை” என்று சொன்னாள். மக்காவாசிகள் பத்ருப் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)த போது உமய்யாவிடம் அவனது மனைவி, “உம்முடைய யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?” என்று கேட்டாள்.

ஆகவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை. அபூஜஹ்ல் அவனிடம், “நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். ஆகவே, (நீயே போரில் கலந்து கொள்ளாமல் போய் விட்டால் நன்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களுக்காவது போ(ய்க் கலந்து கொள்)” என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாட்களுக் காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம் வரை சென்று விட, அங்கே) அல்லாஹ் அவனைக் கொன்று விட்டான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் : புகாரி (3632)

உமைய்யா கொல்லப்படுதல்

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின்படி உமைய்யா பத்ருப் போரில் கொல்லப்பட்டான். இவன் பிலால் (ரலி) அவர்களின் விரோதியாகவும் இருந்தான்.

“மக்காவிலுள்ள என் உறவினர்களையும்க சொத்துக்களையும் உமய்யா பின் கலஃப் (என்ற இறைமறுப்பாளன்) பாதுகாக்க வேண்டும்’ என்றும் “மதீனாவிலுள்ள அவனுடைய உறவினர்களையும் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன்’ என்றும் அவனுடன் எழுத்து வடிவில் ஒப்பந்தம் செய்து கொண்டேன். (ஒப்பந்தப் படிவத்தில்) “அப்துர் ரஹ்மான்’ (ரஹ்மானின் அடிமை) என்று என் பெயரை எழுதியபோது, “”ரஹ்மானை நான் அறியமாட்டேன்; அறியாமைக் காலத்து உமதுபெயரை எழுதும் என்று அவன் கூறினான்.

நான் அப்து அம்ரு என்று (என் பழைய பெயரை) எழுதினேன். பத்ருப் போர் நடந்த தினத்தில் மக்களெல்லாம் உறங்கிய உடன் அவனைப் பாதுகாப்பதற்காக மலையை நோக்கி சென்றேன். அவனை பிலாலும் பார்த்துவிட்டார். பிலால் உடனே வந்து அன்ஸாரிகள் குழுமியிருந்த இடத்தை அடைந்து, “இதோ உமையா பின் கலப்! இவன் தப்பித்துவிட்டால் நான் தப்பிக்க முடியாது எனக் கூறினார்.

(இவன் பிலாலுக்கு எஜமானனாக இருந்து அவரைச் சித்திரவதை செய்தவன்.) பிலாலுடன் அன்ஸாரிகளில் ஒரு கூட்டத்தினர் எங்களைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் எங்களைப் பிடித்துவிடுவார்கள் என்று நான் அஞ்சியபோது, உமய்யாவின் மகனை முன்னிறுத்தி அவர்களின் கவனத்தைத் திருப்ப முயன்றேன். அவனை அன்ஸாரிகள் கொன்றனர்.

பிறகும் என்னைத் தொடர்ந்து வந்தனர். உமய்யா உடல் கனத்தவனாக இருந்தான். (அதனால் ஓட இயலவில்லை) அவர்கள் எங்களை அடைந்ததும் உமய்யாவிடம், “குப்புறப்படுப்பீராக!’ என்ற கூறினேன். அவன் குப்புற விழுந்ததும் அவனைக் காப்பாற்றுவதற்காக அவன் மேல் நான் விழுந்தேன். அன்ஸாரிகள் எனக்குக் கீழ்ப்புறம் வாளைச் செலுத்தி அவனைக் கொன்றுவிட்டனர். அவர்களில் ஒருவர் என் காலையும் தமது வாளால் வெட்டினார்.

“அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள், தமது பாதத்தின் மேல் பகுதியில் அந்த வெட்டுக் காயத்(தின் வடு இருப்ப)தை எங்களுக்கு காட்டினார்!” என்று அவருடைய மகன் கூறுகிறார்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி).

நூல் : புகாரி (2301)

இணைவைப்பு தலைவர்கள் கொல்லப்படுதல்

பத்ருப் போரில் இணைவைப்பவர்களின் பெரும் பெரும் தலைவர்கள் கொல்லப்பட்டனர். அபூஜஹ்ல் உட்பட நபிகளாரும் பெரும் தீங்கிழைத்த தலைவர்களின் தலைகள் அனைத்தும் பத்ருப் போரில் உருண்டது.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், “(பொது இடத்தில் தொழும்) இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறிவிட்டு, “இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டுவந்து, முஹம்மத் சிரவணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்துவிட வேண்டும். (யார் இதற்குத் தயார்?)” என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படு பாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரவணக்கம் செய்தபோது அவர்களுடைய முதுகின்மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.

(இதைப் பார்த்துக்கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர்மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.

அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும்வரை நபியவர்கள்அப்படியே சிரவணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிரார்த்தித்தார்கள்:

“இறைவா! குறைஷியரை நீ கவனித்துக்கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டு, “அல்லாஹ்வே அம்ர் பின் ஹிஷாம் (அபூஜஹ்ல்), உத்பா பின் ரபிஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத், உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித்துக்கொள்வாயாக!” என்று (ஏழு பேரின்) பெயர் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள்.

தொடர்ந்து அப்துல்லாஹ்பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் எவர்களுக்கெதிராகப் பிராத்தித்தார்களோ ஒருவர் நீங்கலாக) அவர்கள் அனைவரும் பத்ருப்போர் நாளில் (உடல் உப்பி நிறமாறி) உருமாறி மாண்டு கிடந்ததையும் பின்னர் “கலீபு பத்ர்’ எனும் பாழுங் கிணற்றை நோக்கி அவர்களை இழுத்துச் செல்லப்பட்டதையும் நான் பார்த்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்த பாழுங்கிணற்றிலுள்ளோரை (இனியும்) சாபம் தொடரும்” என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),

நூல் :புகாரி (520)

பத்ருப் போர் என்றாலே அபூஜஹ்லைக் கொன்ற இரு வீர சிறுவர்கள் (இளைஞர்களின்) வரலாறு தான் நினைவிற்கு வரும். அவர்களைப் பற்றிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்!