Tamil Bayan Points

பத்ரு, உஹது படிப்பினை – 2

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

முன்னுரை

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான பத்ரு போரைப் பற்றியும், அந்த போருக்கான காரணத்தையும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.

பத்ரை நோக்கி

அபூஜஹ்ல் கூட்டத்தினர் போர் செய்ய வருகிறார்கள் என்பதை அறிந்த நபி (ஸல்) அவர்களும் போருக்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைப் புறப்படச் செய்தார்கள். மக்கள் புறப்பட்டுச் சென்று பத்ர் எனும் இடத்தில் தங்கினர். அப்போது அவர்களிடம் குறைஷியரின் தண்ணீர் சுமக்கும் ஒட்டகக் குழாம் ஒன்று வந்தது. அவர்களில் பனுல் ஹஜ்ஜாஜ் குலத்தாரின் கறுப்பு அடிமை ஒருவனும் இருந்தான்.

நபித்தோழர்கள், அவனைப் பிடித்துக்கொண்டனர். அவனிடம் அபூசுஃப்யானைப் பற்றியும் அவருடைய சக பயணிகள் பற்றியும் விசாரித்தனர். அவன் “அபூசுஃப்யானைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் (ஆகியோர் உங்களை நோக்கிப் படை திரட்டி வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். அவன் இவ்வாறு சொன்னதும் (அவன் பொய் சொல்வதாக எண்ணிக்கொண்டு) அவனை நபித் தோழர்களை அடித்தனர். அப்போது அவன் “ஆம் (எனக்குத் தெரியும்); நான் சொல்கிறேன். இதோ அபூசுஃப்யான் வந்துகொண்டிருக்கிறார்” என்று (பொய்) சொன்னான்.

அடிப்பதை நிறுத்திவிட்டு அவனிடம் கேட்டால் “அபூசுஃப்யான் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இதோ அபூஜஹ்ல், உத்பா, ஷைபா, உமய்யா பின் கலஃப் மக்களுடன் (வந்துகொண்டிருக்கின்றனர்)” என்று சொன்னான். மீண்டும் அவன் இவ்வாறு சொன்னதும் அவனை நபித்தோழர்கள் அடித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) நின்று தொழுது கொண்டிருந்தார்கள். இ(வ்வாறு அவர்கள் நடந்து கொள்வ)தை அவர்கள் கண்டதும் தொழுகையை (சுருக்கமாக) முடித்துத் திரும்பினார்கள். மேலும், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவன் உண்மையைச் சொல்லும்போது அடிக்கிறீர்கள். பொய் சொல்லும்போது அடிப்பதை நிறுத்து விடுகிறீர்களே!” என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது இன்ன மனிதர் மாண்டு விழும் இடம்” என்று கூறி, பூமியில் தமது கையை வைத்து “இவ்விடத்தில் இவ்விடத்தில்’ என்று காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கை வைத்துக் காட்டிய இடத்தைவிட்டு அவர்களில் எவரும் தள்ளி விழவில்லை. (சரியாக அதே இடத்தில் போரில் மாண்டு கிடந்தனர்). அறிவிப்பவர் : அனஸ் (ரலி). நூல் : முஸ்லிம் (3646)

பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை

முஸ்லிம் தரப்பில் 300க்கு சற்று கூடுதலான நபர்களும் இணைப்பு தரப்பில் 1000 க்கு மேற்பட்டவர்களும் கலந்து கொண்டனர். அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.

பத்ருபோரில் முந்நூற்றி பதிமூன்று போர் இருந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : அஹ்மத் (2121)

“முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ருப் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையேயாகும். இறைநம்பிக்கை யாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்.

அறிவிப்பவர் : பரா (ரலி), நூல் : புகாரி (3959)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் பத்ருப் போரின் போது சிறுவர்களாகக் கருதப் பட்டோம். பத்ருப் போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.

அறிவிப்பவர் : பரா (ரலி),

நூல் : புகாரி (3956)

பத்ருப் பகுதியில் பிடிப்பட்ட ஒரு குறைஷியிடம் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் எத்தனை நபர்கள் உள்ளனர்? என்று வினவினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் அதிக நபர்கள். வீரமிக்கவர்களாக இருந்தனர் என்றார். அவர்கள் எத்தனை நபர்கள் என்று (மீண்டும் கேட்டு) முயற்சித்த போது அவர் எண்ணிக்கை கூற மறுத்துவிட்டார். எத்தனை ஒட்டங்களை அவர்கள் அறுக்கிறார்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் ஒரு நாளைக்கு பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள் என்று பதிலளித்தார். அப்படியானால் நூறு நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்ற கணக்கின்படி ஆயிரம் நபர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் (904)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி),

நூல் : முஸ்லிம் (3621)

பத்ருப் போரில் கலந்து கொள்ளாத முஸ்லிம்கள்

பத்ருப் போரில் சில முக்கிய அலுவல் காரணமாக பல நபித்தோழர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நபித்தோழர்கள் யார்? யார் என்பதைக் காண்போம்.

உஸ்மான் (ரலி)

உஸ்மான் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம், அவரது மனைவியாக அல்லாஹ்வின் தூதருடைய மகள் (ருகைய்யா (ரலி) அவர்கள்) இருந்தார்கள். மேலும், அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ருப் போரில் கலந்து கொண்டவருக்குரிய நற்பலனும் (போர்ச் செல்வத்தில்) அவருக்குரிய பங்கும் உங்களுக்கு உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் :புகாரி (3130)

நான் பத்ருப் போர்க்களத்தில் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் நபிகளாரின் மகள் (எனது மனைவி) ருகைய்யா அவர்கள் (நோயிற்றிருந்தார்கள்) அவர்கள் இறக்கும் வரையிலும் நான் அவருக்கு மருத்து சேவை செய்து கொண்டிருந்தேன்.

அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி), நூல் : அஹ்மத் (525)

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் பத்ருப் போரின் போது சிறுவர்களாகக் கருதப் பட்டோம். அறிவிப்பவர் : பரா (ரலி), நூல் : புகாரி (3956)

எனவே இவ்விருவரும் பத்ருப்போரில் கலந்து கொள்ளவில்லை.

 

பத்ருப் போரில் கலந்து கொள்ளாத முஸ்லிம்கள்

கஅப் பின் மாலிக் (ரலி)

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. அதில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வாணிபக் குழுவை (வழி மறிக்க) எண்ணியே போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் எண்ணம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்து விட்டான்.

அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி),

நூல் : புகாரி (3951)

அனஸ் பின் நள்ர் (ரலி) என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் நள்ர்-ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), “(இணை வைப்பவர்களுடன்) நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெற வைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த் திருப்பான்” என்று சொன்னார்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் :புகாரி (4048)

ஹுதைஃபா(ரலி), அல்யமான் (ரலி)

நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்” என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம். அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது’ என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டனர்.

நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி),

நூல் : முஸ்லிம் (3661)

வாகனங்கள்

இணைவைப்பவர்களிடம் இருந்த அளவுக்கு வாகன வசதிகள் நபிகளாரிடம் இருக்கவில்லை. ஒரு நபருக்கு ஒரு ஒட்டகம் என்றளவுக்குக் கூட வாகனங்கள் இருக்கவில்லை. மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் என்றளவுக்கே வாகனங்கள் இருந்தன. எனவே மூன்று நபர்களுக்கு ஒரு ஒட்டகம் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட தூரம் இரண்டு நபர்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வருவார்கள். பின்னர் ஒருவர் இறங்குவார். நடந்து வந்தவர் ஏறிக் கொள்வார். இப்படி முறைவைத்து பத்ரை நோக்கி பயணம் செய்தனர்.

நாங்கள் பத்ரு நாளன்று மூன்று நபர்கள் ஒரு ஒட்டகத்தில் பயணித்தோம். அபூலுபாபா (ரலி), அலீ (ரலி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுடன் செல்பவர்களாக இருந்தனர். அப்போது அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம். (நீங்கள் ஒட்டகத்திலேயே அமர்ந்து கொள்ளுங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இருவரும் என்னைவிட வலிமை வாய்ந்தவர்களும் அல்ல. நான் உங்களைவிட நன்மை பெறுவதில் தேவையற்றவனாகவும் இல்லை என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),

நூல் : அஹ்மத்(3706)

பத்ருப் போர் அன்று மிக்தாத் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரும் குதிரை வீரராக இல்லை.

அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல் : அஹ்மத் (973)

பத்ருப் போர் நடப்பதற்கு முந்தைய இரவில்

முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாகவும் எதிரிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்ததால் அன்றைய இரவு அழுது அழுது இறைவனிடம் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இருக்கும் எண்ணிக்கையை எப்படி போருக்கு தயார் படுத்தினார்கள் என்பன போன்ற பல்வேறு செய்திகளை இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் காண்போம்!