Tamil Bayan Points

பத்ரு, உஹது படிப்பினை – 11

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

முன்னுரை

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள்.

(புகாரி 5808)

வழி குறுகலாக உள்ள கத்முல் ஜபல்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் அவ்வாறே செய்தார். தங்களிடமுள்ள கொடிகளுடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் அபூஸுஃப்யானைக் கடந்து சென்றபோதெல்லாம் இவர்கள் யாரென்று அப்பாஸிடம் விசாரிப்பார்.

இது பற்றி புகாரியில் வந்துள்ள அறிவிப்பைக் காண்போம்.

 

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري –

حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ ، عَنْ أَبِيهِ ، قَالَ : لَمَّا سَارَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ فَبَلَغَ ذَلِكَ قُرَيْشًا خَرَجَ أَبُو سُفْيَانَ بْنُ حَرْبٍ وَحَكِيمُ بْنُ حِزَامٍ وَبُدَيْلُ بْنُ وَرْقَاءَ يَلْتَمِسُونَ الْخَبَرَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَقْبَلُوا يَسِيرُونَ حَتَّى أَتَوْا مَرَّ الظَّهْرَانِ فَإِذَا هُمْ بِنِيرَانٍ كَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ فَقَالَ أَبُو سُفْيَانَ مَا هَذِهِ لَكَأَنَّهَا نِيرَانُ عَرَفَةَ فَقَالَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ نِيرَانُ بَنِي عَمْرٍو فَقَالَ أَبُو سُفْيَانَ عَمْرٌو أَقَلُّ مِنْ ذَلِكَ فَرَآهُمْ نَاسٌ مِنْ حَرَسِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَدْرَكُوهُمْ فَأَخَذُوهُمْ فَأَتَوْا بِهِمْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَأَسْلَمَ أَبُو سُفْيَانَ فَلَمَّا سَارَ قَالَ لِلْعَبَّاسِ احْبِسْ أَبَا سُفْيَانَ عِنْدَ حَطْمِ الْخَيْلِ حَتَّى يَنْظُرَ إِلَى الْمُسْلِمِينَ فَحَبَسَهُ الْعَبَّاسُ فَجَعَلَتِ الْقَبَائِلُ تَمُرُّ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم تَمُرُّ كَتِيبَةً كَتِيبَةً عَلَى أَبِي سُفْيَانَ فَمَرَّتْ كَتِيبَةٌ قَالَ يَا عَبَّاسُ مَنْ هَذِهِ قَالَ هَذِهِ غِفَارُ قَالَ مَا لِي وَلِغِفَارَ ثُمَّ مَرَّتْ جُهَيْنَةُ قَال مِثْلَ ذَلِكَ ثُمَّ مَرَّتْ سَعْدُ بْنُ هُذَيْمٍ فَقَالَ مِثْلَ ذَلِكَ وَمَرَّتْ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்ற போது அப்பாஸ் (ரலி) அவர்களிடம், குதிரைப் படை செல்லும் போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூசுஃப்யானை நிறுத்தி வையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும் (அவர்களது படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்) என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரை (அந்த இடத்தில்) நிறுத்தி வைத்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூசுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் அப்பாஸே! இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்டார். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவர்கள் ஃகிஃபாரீ குலத்தினர் என்று பதிலளித்தார்கள். (உடனே,) எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!) என்று அபூசுஃப்யான் கூறினார்.

பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூசுஃப்யான் முன் போலவே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) சஅத் பின் ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அதே போல அபூசுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போலவே அபூசுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் (ரலி) அவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள்.)

கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூசுஃப்யான் பார்த்திருக்கவில்லை. இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்க, இவர்கள் தாம் அன்சாரிகள். சஅத் பின் உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், அபூசுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும் என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு) என்று கூறினார்.

பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற போது அவர், (அல்லாஹ்வின் தூதர் -ஸல்- அவர்களிடம்) சஅத் பின் உபாதா என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் என்ன சொன்னார்? என்று கேட்டார்கள்.

இப்படி… இப்படி… எல்லாம் கூறினார் என்று அபூசுஃப்யான் (விவரித்துச்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உண்மைக்குப் புறம்பானதை சஅத் கூறிவிட்டார் என்று சொல்லிவிட்டு, மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கிய மான) நாள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) “ஹஜூன்’ என்னும் இடத்தில் நட்டு வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம், அபூ அப்தில்லாஹ்வே! இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள் என்றார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான கதா’ என்னும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குதா’ வழியாக நுழைந்தார்கள். அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் பின் அல் அஷ்அர் (ரலி) அவர்களும் குர்ஸ் பின் ஜாபிர் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களும் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டனர்.

(புகாரி 4280)

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை, (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணி(களான காலாட் படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள். அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையின் முக்கியப் பகுதியில் இருந்தார்கள். அப்போது அவர்களது பார்வையில் நான் பட்டபோது, “அபூஹுரைரா நீயா?” என்று கேட்டார்கள். நான், “(ஆம்) இதோ, வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். அப்போது அவர்கள், “ஓர் அன்சாரித் தோழரே (இப்போது) என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)” என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காக அன்சாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்சாரிகள் வந்து குழுமினர்”

(முஸ்லிம் 3647)

குறைஷிகளுக்கு அபயமளித்தல்

அன்சாரிகளின் படை நபியவர்களைச் சுற்றிக் குழுமியது. இந்தப் படையைக் கண்டதும் குறைஷியர் கடும் அச்சம் கொண்டனர். இது பற்றி முஸ்லிமில் இடம் பெற்றுள்ள செய்தியைக் காண்போம்.

(எதிரிகளான) குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி, “இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பி வைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால், (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்து கொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால், நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கிவிடுவோம்” என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம் படையினரிடம்) “நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)” என்று கூறிவிட்டு, தமது கையை வெளியிலெடுத்து வலக் கையை இடக் கையின் மீது வைத்து சைகை செய்து காட்டியபடி, “நாளைய தினம் (களத்தில்) அவர்களை நீங்கள் சந்தித்தால் அவர்களை அறுவடை செய்துவிடுங்கள்”

பிறகு “நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை “ஸஃபா’ மலைக்கருகில் வந்து சந்தியுங்கள்” என்று கூறி(விட்டுப் போ)னார்கள்.

அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால், (தடையின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால், எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை. முஸ்லிம்கள் கண்ணில் தென்பட்ட (எதிரிகள்) எவரையும் (ஒரேயடியாகத்) தூங்க வைக்காமல் விடவில்லை.

(முஸ்லிம் 3647, 3648, 3649)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபா மலைமீது ஏறினார்கள். அன்சாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்றுகொண்டனர். அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப்படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்து கொள்கிறாரோ அவர் அபயம் பெற்றவராவார். யார் ஆயுதத்தைக் கீழே போட்டு விட்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார். யார் தமது வீட்டுக் கதவை பூட்டிக் கொண்டாரோ அவரும் அபயம் பெற்றவராவார்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம் 3647, 3648, 3649)

அன்சாரிகளின் குறையும் நபியவர்களின் உரையும்

நபியவர்கள் குரைஷிகளுக்கு அபயம் அளித்தார்கள். அப்போது அன்சாரிகள் ஒருவருக்கொருவர் “இந்த மனிதருக்கு (நபியவர்களுக்கு) தமது ஊர்மீது பற்றும், தம் குலத்தார்மீது பரிவும் ஏற்பட்டுவிட்டது” என்று பேசிக்கொண்டனர்.

அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு “வஹீ’ வந்தால், அது எங்களுக்குத் தெரியாமல் போகாது. அப்போது “வஹீ’ முடிவடையும் வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்த மாட்டார்.

அவ்வாறே “வஹீ’ வந்து முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்சாரி சமுதாயமே!’ என்று அழைத்தார்கள். அம்மக்கள் “இதோ வந்தோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். “இம்மனிதருக்குத் தமது ஊர்மீது பற்று ஏற்பட்டுவிட்டது என்று நீங்கள் சொன்னீர்கள்(தானே)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்; அவ்வாறு கூறவே செய்தோம்” என்று (உண்மை) சொன்னார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவ்வாறாயின் (முஹம்மத் – புகழப்பட்டவர் எனும்) என் பெயருக்கு என்ன அர்த்தம்? அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன்’ ‘நான் அல்லாஹ்வை நோக்கியும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடுதான்; என் இறப்பு உங்கள் இறப்போடுதான்” என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகள் அழுதுகொண்டே வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம்” என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்’ என்று சொன்னார்கள். அப்போது மக்களில் சிலர், அபூசுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறுசிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக்கொண்டனர்.

(முஸ்லிம் 3647, 3648, 3649)

கஅபாவைச் சுற்றியிருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது.

 

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع –

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ وَابْنُ أَبِى عُمَرَ – وَاللَّفْظُ لاِبْنِ أَبِى شَيْبَةَ – قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ ابْنِ أَبِى نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ عَنْ أَبِى مَعْمَرٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ دَخَلَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- مَكَّةَ وَحَوْلَ الْكَعْبَةِ ثَلاَثُمِائَةٍ وَسِتُّونَ نُصُبًا فَجَعَلَ يَطْعُنُهَا بِعُودٍ كَانَ بِيَدِهِ وَيَقُولُ « (جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا) (جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ) زَادَ ابْنُ أَبِى عُمَرَ يَوْمَ الْفَتْحِ.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தமது கையிலிருந்த குச்சியால் அவற்றைக் குத்தி (அடிக்கத் தொடங்கி)னார்கள். மேலும் “உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டது. பொய் அழியக்கூடியதாகவே உள்ளது” (17:81) என்றும் “உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக ஒன்றும் செய்துவிடவில்லை; இனியும் செய்யப் போவதில்லை” (34:49) என்றும் கூறிக் கொண்டிருந்தார்கள்.

(முஸ்லிம 3650)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஜருல் அஸ்வத்’ எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து, அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.

அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள். அதை மக்கள் வழிபட்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியை பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும், அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக்கொண்டே “உண்மை வந்துவிட்டது. பொய்மை அழிந்துவிட்டது” என்று கூறலானார்கள்.

இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும் “ஸஃபா’ குன்றுக்கு வந்து, அதன் மீது ஏறி, இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும், அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள்.

(முஸ்லிம் 3647, 3648, 3649)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறிபார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறிபார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள் என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

(புகாரி 1601)

மக்கா வெற்றியின் போது மாநபியின் நிலை

பொதுவாக எந்த வெற்றியின் போதும் எந்தத் தலைவனாக இருந்தாலும் ஆர்ப்பரிப்பதும், கொக்கரிப்பதும்தான் நடைபெறும். ஆனால் அந்த நேரத்தில் நபிகள் நாயகம் அவர்கள் மக்கள் இஸ்லாத்தை நோக்கி வருவதைக் கண்டு இறைவனைப் போற்றிப் புகழும் வகையில் திருக்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.

 

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري

حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا شُعْبَةُ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ قَالَ قَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ فَتْحِ مَكَّةَ سُورَةَ الْفَتْحِ فَرَجَّعَ فِيهَا. قَالَ مُعَاوِيَةُ لَوْ شِئْتُ أَنْ أَحْكِيَ لَكُمْ قِرَاءَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَفَعَلْتُ.

அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) “அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயத்தைத் “தர்ஜீஉ’ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்)அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.

(புகாரி 4835)

இப்னு கதல் கொல்லப்படுதல்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறான்! எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், அவனைக் கொன்று விடுங்கள்! என்று உத்தரவிட்டார்கள்.

(புகாரி 1846)

கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி . . .

மக்கா வெற்றி வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு என்பதை நாம் அறிவோம். காரணம் அரபுலகில் பலரும் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றி எனும் இந்நிகழ்வையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அத்தகைய நிகழ்வு நடைபெற்றதும் அலைஅலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்தனர்.

அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர்தாம் (என்று நிரூபணமாகிவிடும்)” என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்.

புகாரி 4302

கஃபாவின் சாவியை வேண்டுதல் –

நபித்தோழர்களுடன் தொழுகை

மக்காவில் நுழைந்ததும் கஃபாவின் சாவியைக் கேட்டு வாங்கி, தாமே கஃபாவைத் திறந்தார்கள். பிறகு உள்ளே தொழுதார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது “கஸ்வா’ எனும் (தமது) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உஸாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் “(கஅபாவின்) சாவியை எம்மிடம் கொண்டு வாருங்கள்” என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்காகக் கதவைத் திறந்தார். நபி (ஸல்) அவர்களும் உஸாமா, பிலால், உஸ்மான் (பின் தல்ஹா) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக்கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கி, பிறகு வெளியேறினர்.

மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக் கொண்டு(உள்ளே நுழைந்து) விட்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “அந்த இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்” என்று சொன்னார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாசல் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரு தூண்களுக்கிடையே நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்.

அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும்போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?” என்று கேட்க மறந்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக் கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது

(புகாரி 4400)

மக்காவின் புனிதம் பற்றி பொது அறிவிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நிகழ்ந்த நாளில், “இனி ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மேலும் (அதே) மக்கா வெற்றி நாளில், “(மக்களே!) அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அவன் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள் வரை புனிதமானதாகவே இருக்கும். மேலும், எனக்கு முன்னர் (வாழ்ந்த) யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (இந்த மக்கா வெற்றி நாளில்) பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது.

அல்லாஹ் இந்த நகரத்தை புனிதமாக்கியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். இங்கு அதன் முட்கள் வெட்டப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணி விரட்டப்படக் கூடாது. இங்கே கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்(து உரியவரிடம் சேர்ப்)பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைப் பறிக்கக்கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! “இத்கிர்’ புல்லைத் தவிரவா? ஏனெனில், அது அவர்களுடைய உலோகத் தொழிலாளர்களுக்கு (உலை மூட்டவு)ம், அவர்களுடைய வீடுக(ளின் மேல்கூரை)களுக்கும் பயன்படுகிறதே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஆம்) “இத்கிரை’த் தவிர” என்று விடையளித்தார்கள்.

(முஸ்லிம் 2632)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹுதஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்டஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், இத்கிர் புல்லைத் தவிர என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.

(புகாரி 2434)

உயர் குலப் பெண்ணின் திருட்டும் நபியவர்களின் உத்தரவும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டாள். ஆகவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம்) அவளுக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது.

அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்தி விடும்படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்? என்று கேட்டார்கள். உடனே உஸாமா (ரலி) அவர்கள், எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான(பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும் போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும்தான்.

முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளது கையையும் நான் வெட்டியிருப்பேன் என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டாள்;- மேலும் மணம் புரிந்தும் கொண்டாள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.

(புகாரி 4304)

அதன் பிறகு சில நாட்கள் நபிகள் நாயகம் மக்காவில் தங்கி முக்கிய போதனைகளைச் செய்தார்கள். இதுதான் மக்கா வெற்றியின் சுருக்க நிகழ்வுகளாகும். இணை வைப்பு எனும் அசத்தியம் அழிந்து ஏகத்துவம் எனும் சத்தியம் வெற்றி வாகை சூடியது.

இந்த வெற்றி முஸ்லிம்களுக்கு வலிமையையும் கண்ணியத்தையும் அளித்தது. அது நாள் வரையிலும் மக்காவில் அடிமைப்பட்டுக்கிடந்த முஸ்லிம்கள் கண்ணியத்தைப் பெற்றார்கள்.

முழு அரபுலகமும் இஸ்லாமின் வசமானது. முஸ்லிம்களின் நற்பண்புகளால் இஸ்லாம் மென்மேலும் வளர்ச்சியை அடைந்தது.

 

இந்த தொடர் உரையை முடித்துக் கொள்கிறோம்!

நம் அனைவரையும், முஸ்லிமாக வாழ்ந்து,  முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக, அந்த ஏக இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!