Tamil Bayan Points

பத்ரு, உஹது படிப்பினை – 10

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

முன்னுரை

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த போரில் முக்கியமான போர்களைப் பற்றியும், போர் நடந்த விதத்தையும் இந்த தொடர் உரையிலே பார்த்து வருகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து அவர்களுக்குச் சோதனை காலம் ஏற்பட்டது. அவர்களில் 13 ஆண்டு கால மக்கா வாழ்க்கையில் அவர்களும், அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றவர்களும் தாங்க முடியாத தொல்லைகளுக்கு ஆளானார்கள்.

கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள சிலர் அபீசீனியாவிற்கு ஹிஜ்ரத் செல்ல நபிகளார் அனுமதி வழங்கினார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள்.

இந்த ஹிஜ்ரத்திற்குப் பின்னர் நபிகளாருக்கு ஓரளவு துன்பங்கள் குறைந்தன. மதீனா வாழ்க்கையில் எட்டு வருடங்கள் இருந்த நிலையில் நபிகளாருக்கு இன்னொரு மகத்தான வெற்றியை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்தான். அதுதான் மக்கா வெற்றி. அந்த வெற்றி பற்றிய விரிவான செய்தியைக் காண்போம்.

மக்காவை நோக்கி படையெடுக்கக் காரணம்

ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு மதீனத்து முஸ்லிம்களுக்கும், மக்கத்து காஃபிர்களுக்கும் இடையே நடந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையில் பனூபக்ர் என்னும் குலத்தார் மக்கத்துக் காஃபிர்களுடனும், பனூ குஸாஆ முஸ்லிம்களுடனும் இணைந்து கொண்டனர். இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன் விரோதம் இருந்தது. இச்சமயத்தில் மக்கத்துக் காஃபிர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையை மீறி தங்களின் குழுவிலுள்ள பனூபக்ர் குலத்தாருக்கு, பனூ குஸாஆ குலத்தாருக்கு எதிராக ஆயுத உதவி செய்தனர். அதுமட்டுமின்றி அவர்களைத் தாக்கவும் செய்தனர்.

உடனடியாக பனூ குஸாஆ குலத்தார் நபி (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் மக்கா இறைமறுப்பாளர்களைத் தட்டிக் கேட்க தங்கள் தோழர்களைத் தயார்படுத்தினார்கள்.

மக்காவை நோக்கி

நபியவர்கள் மக்கா வருகிறார்கள் என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக ஹாதிப் இப்னு அபூ பல்தஆ என்ற நபித்தோழர் கடிதம் ஒன்றை எழுதி ஒரு பெண் மூலம் அனுப்பினார். அதற்குக் கூலியும் கொடுத்தார். அப்பெண் அதைத் தலைமுடியை சடைக்குள் வைத்துக் கொண்டு புறப்பட்டாள். ஆனால், ஹாதிபின் இச்செயலை அல்லாஹ் வஹியின் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவித்து விட்டான்.

 

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ إِدْرِيسَ قَالَ : سَمِعْتُ حُصَيْنَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ عَنْ عَلِيٍّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ بَعَثَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَأَبَا مَرْثَدٍ وَالزُّبَيْرَ وَكُلُّنَا فَارِسٌ قَالَ انْطَلِقُوا حَتَّى تَأْتُوا رَوْضَةَ خَاخٍ فَإِنَّ بِهَا امْرَأَةً مِنَ الْمُشْرِكِينَ مَعَهَا كِتَابٌ مِنْ حَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ إِلَى الْمُشْرِكِينَ فَأَدْرَكْنَاهَا تَسِيرُ عَلَى بَعِيرٍ لَهَا حَيْثُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : فَقُلْنَا الْكِتَابُ فَقَالَتْ مَا مَعَنَا كِتَابٌ فَأَنَخْنَاهَا فَالْتَمَسْنَا فَلَمْ نَرَ كِتَابًا فَقُلْنَا مَا كَذَبَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَتُخْرِجِنَّ الْكِتَابَ ، أَوْ لَنُجَرِّدَنَّكِ فَلَمَّا رَأَتِ الْجِدَّ أَهْوَتْ إِلَى حُجْزَتِهَا وَهْيَ مُحْتَجِزَةٌ بِكِسَاءٍ فَأَخْرَجَتْهُ فَانْطَلَقْنَا بِهَا إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللهِ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَدَعْنِي فَلأَضْرِبْ عُنُقَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ حَاطِبٌ وَاللَّهِ مَا بِي أَنْ لاَ أَكُونَ مُؤْمِنًا بِاللَّهِ وَرَسُولِهِ صلى الله عليه وسلم أَرَدْتُ أَنْ يَكُونَ لِي عِنْدَ الْقَوْمِ يَدٌ يَدْفَعُ اللَّهُ بِهَا عَنْ أَهْلِي وَمَالِي وَلَيْسَ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلاَّ لَهُ هُنَاكَ مِنْ عَشِيرَتِهِ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَدَقَ ، وَلاَ تَقُولُوا لَهُ إِلاَّ خَيْرًا فَقَالَ عُمَرُ إِنَّهُ قَدْ خَانَ اللَّهَ وَرَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَدَعْنِي فَلأَضْرِبَ عُنُقَهُ فَقَالَ أَلَيْسَ مِنْ أَهْلِ بَدْرٍ فَقَالَ لَعَلَّ اللَّهَ اطَّلَعَ إِلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ اعْمَلُوا مَا شِئْتُمْ فَقَدْ وَجَبَتْ لَكُمُ الْجَنَّةُ ، أَوْ فَقَدْ غَفَرْتُ لَكُمْ فَدَمَعَتْ عَيْنَا عُمَرَ وَقَالَ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ.

அலீ (பின் அபீ தாலிப்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூமர்ஸத் (கினாஸ் பின் ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், நீங்கள் “ரவ்ளத்து காக்’ என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில்) இணை வைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணை வைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் பின் அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நமது ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்) என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், கடிதம் (எங்கே? அதை எடு) என்று கேட்டோம். அவள், எம்மிடம் கடிதம் எதுவுமில்லை என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை.

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உனது ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும் என்று நாங்கள் சொன்னோம்.

விடாப்பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்ட போது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹாதிப் பின் அபீ பல்தஆ) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; அவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹாதிப் அவர்களை நோக்கி), ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமில்லாதவனாக நடந்து கொள்ள வேண்டுமென்பது என் நோக்கமல்ல. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்குக் கிடைத்து, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி மக்களையும், என் செல்வத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும், அவர்களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் இருக்கின்றனர் என்று கூறினார்.

(இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே சொல்லுங்கள் என்று (தோழர்களைப் பார்த்துக்) கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் துரோகமிழைத்து விட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று (மீண்டும்) கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டவர் அல்லவா? பத்ரில் கலந்து கொண்டவர்களை நோக்கி அல்லாஹ், நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது’… அல்லது உங்கள் பாவங்களை நான் மன்னித்து விட்டேன்’…. என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா? என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் தமது கண்கள் கண்ணீர் உகுத்துக் கொண்டிருக்க, அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள்.

(புகாரி 3983)

மக்கா வெற்றிக்கான பயணம் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமளான் மாதம் கி. பி. 630 இல் நடைபெற்றது. நபியவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் மக்கா நோக்கிப் புறப்பட்டார்கள். ரமலான் மாதம் என்ற காரணத்தினால் அனைவரும் நோன்பு நோற்றிருந்தனர். மக்காவிற்குச் செல்லும் வழியில் கதீத் என்னும் இடத்தில் நோன்பை விட்ட நபி (ஸல்) அவர்கள், பிறகு அந்த மாதம் முடியும் வரை நோன்பை வைக்கவில்லை. இதிலே நபியவர்களுடன் பல குலத்தவர்களும் சேர்ந்து கொண்டனர். அப்போது, நபியவர்களுக்கு மிக சுலபமான முறையில் மக்கா வெற்றி கிடைத்தது. எதிர்ப்புகள் ஒன்றும் இருக்கவில்லை. பெரும்பாலும் மக்காவாசிகள் அனைவர்களும் பயந்தே இருந்தனர்.

இது பற்றிய விளக்கம் அறிய பார்க்க (புகாரீ 4272, 1948, 1944, 4279, 3983, 4274, 3007, 4286, 4280, 4290, 3171, 4287, 2988, 4305, 4306, 4307, 4308, 6641, 4302, 2434, 2432, 2236, 1176, 1175, 4298, 4299)

பயணத்தில் நோன்பை விடுதல்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். இது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்றது- நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் நோன்பு நோற்றபடி பயணம் செய்தார்கள். இறுதியில் கதீத்’ என்னுமிடத்திற்குச் சென்று சேர்ந்தார்கள். -இந்த இடம் உஸ்ஃபானுக்கும் குதைத்’ எனுமிடத்திற்குமிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்- (அங்கு) நபி (ஸல்) அவர்கள் நோன்பை விட்டுவிட மக்களும் நோன்பை விட்டுவிட்டார்கள்.

(புகாரி 4275)

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்ஃபான்’ எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள பாத்திரம் கொண்டு வரச் செய்து (ரமளானின்) பகற்பொழுதில் மக்கள் காணவேண்டுமென்பதற்காக அதை அருந்தி நோன்பை முறித்துக் கொண்டார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை.

(புகாரி 4279)

அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

நபி (ஸல்) அவர்கள் மக்காவை நோக்கிப் படையெடுத்து வரும் செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூசுஃப்யான் பின் ஹர்ப், ஹகீம் பின் ஹிஸாம், புதைல் பின் வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு மர்ருழ் ழஹ்ரான்’ என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது (அங்கே பல இடங்களில் மூட்டப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன.

அப்போது அபூசுஃப்யான், இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு புதைல் பின் வர்கா, இது (குபா’வில் குடியிருக்கும் குஸாஆ’ எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள் என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் (பனூ)அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை) என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்து விட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

(புகாரி 4280)

 

سنن أبي داود ـ محقق وبتعليق الألباني

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ عَنِ الزُّهْرِىِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- عَامَ الْفَتْحِ جَاءَهُ الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ بِأَبِى سُفْيَانَ بْنِ حَرْبٍ فَأَسْلَمَ بِمَرِّ الظَّهْرَانِ فَقَالَ لَهُ الْعَبَّاسُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ يُحِبُّ هَذَا الْفَخْرَ فَلَوْ جَعَلْتَ لَهُ شَيْئًا. قَالَ « نَعَمْ مَنْ دَخَلَ دَارَ أَبِى سُفْيَانَ فَهُوَ آمِنٌ وَمَنْ أَغْلَقَ عَلَيْهِ بَابَهُ فَهُوَ آمِنٌ

அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் : அல்லாஹ்வின் தூதரே ! அபூ சுஃப்யான் (மதிப்பு, மரியாதை என்ற) இந்தப் பெருமிதத்தை விரும்பக் கூடியவர். எனவே அவருக்காக ஏதாவது ஆக்குங்கள்! என்று கூறினார். அதற்கு நபியவர்கள் ஆம் ! (குரைஷிகளில்) யார் அபூ சுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொள்கிறார்களோ அவர்கள் அபயம் பெற்றவர்களாவர். யார் தன்னுடைய வீட்டின் கதவினைத் தாழிட்டுக் கொள்கிறார்களோ அவர்கள் அபயம் பெற்றவர்களாவர் என்று கூறினார்கள்.

(அபூதாவூத் 2626)

மக்காவிற்குள் இஸ்லாமியப் படை நுழைதல்

அன்றைய காலைப் பொழுதில், அதாவது ஹிஜ்ரி 8, ரமழான் மாதம் பிறை 17 செவ்வாய்க்கிழமை காலையில் நபி (ஸல்) மர்ருள் ளஹ்ரானிலிருந்து மக்கா நோக்கிப் புறப்படலானார்கள்.

 

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ ، حَدَّثَنَا مَالِكٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ ، وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத் தொப்பி அணிந்தபடி மக்காவினுள் நுழைந்தார்கள்.

(புகாரி 5808)

வழி குறுகலாக உள்ள கத்முல் ஜபல்’ என்ற இடத்தில் அபூஸுஃப்யானை நிறுத்தி வை. அல்லாஹ்வின் படை அவரைக் கடந்து செல்வதைப் பார்க்கட்டும் என்று நபி (ஸல்) அப்பாஸுக்கு ஆணை பிறப்பித்தார்கள். அப்பாஸும் அவ்வாறே செய்தார். தங்களிடமுள்ள கொடிகளுடன் ஒவ்வொரு கோத்திரத்தாரும் அபூஸுஃப்யானைக் கடந்து சென்றபோதெல்லாம் இவர்கள் யாரென்று அப்பாஸிடம் விசாரிப்பார்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த உரையில் மீதி உள்ள செய்திகளை காண்போம்!