Tamil Bayan Points

நீதிபதிகள் மூன்று வகை

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on March 20, 2017 by Trichy Farook

3102 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ عَنْ أَبِي هَاشِمٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ قَالَ أَبُو دَاوُد وَهَذَا أَصَحُّ شَيْءٍ فِيهِ يَعْنِي حَدِيثَ ابْنِ بُرَيْدَةَ الْقُضَاةُ ثَلَاثَةٌ رواه أبو داود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று வகையான நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் ஒருவர் சொர்க்கத்திற்கும் மற்ற இருவர் நரகத்திற்கும் செல்வர். உண்மையைப் புரிந்து அதனடிப்படையில் தீர்ப்பளிப்பவர் சொர்க்கத்திற்குச் செல்வார். உண்மையைப் புரிந்தபின் அநியாயமாகத் தீர்ப்பளித்தவர் நரகத்திற்குச் செல்வார். (உண்மையை) அறியாமல் மக்களுக்குத் தீர்ப்பளிப்பவர் நரகத்திற்குச் செல்வார்.

இதை புரைதா பின் ஹஸீப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இமாம் அபூதாவுத் அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு பின்வருமாறு கூறுகிறார்கள்.

இமாம் அபூதாவுத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

இந்தச் செய்தி பல வழிகளில் வந்துள்ளது. அனைத்து தொடர்களிலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்தத் தொடர்களில் புரைதா (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட தொடரே சிறந்ததாக அமைந்துள்ளது என இமாம் அபூதாவுத் கூறுகிறார்கள்.

இமாம் அபூதாவுத் கூறுவதைப் போன்று இந்த ஹதீஸ் வந்த வழிகள் அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். மேற்கண்ட அறிவிப்பிலும் ஹலஃப் பின் ஹலீஃபா என்ற பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.

இருக்கக்கூடிய அறிவிப்புகளில் மேற்கண்ட அறிவிப்பு பரவாயில்லை என்பதைத் தான் இமாம் அபூதாவுத் தெளிவுபடுத்தியுள்ளார். அதாவது குறைந்த அளவு பலவீனம் உள்ளது என்பது இதன் கருத்தாகும். சரியான ஹதீஸ் என்பது இதன் கருத்தல்ல.

ஹலஃப் பின் கலீஃபா நேர்மையானவர் என்பதில் அறிஞர்களுக்கிடையே மாற்றுக் கருத்தில்லை. இறுதிக் காலத்தில் இவருடைய நினைவாற்றல் பாதிப்படைந்தது என்பதே இவர் மீதுள்ள குறையாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

எனவே இமாம் அஹ்மது பின் ஹம்பள் அவர்கள் இவர் நல்ல நிலையில் இருக்கும் போது இவரிடமிருந்து அறிவித்தவர்களின் அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமானைவ என்று கூறியுள்ளார்கள்.

ஹலஃப் பின் ஹலீஃபா மேற்கண்ட ஹதீஸை நல்ல நிலையில் அறிவித்தாரா? அல்லது நினைவாற்றல் பாதிக்கப்பட்ட பின் அறிவித்தாரா? என்று முடிவு செய்ய சான்றுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனவே இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது. இது பலவீனமான செய்தியாகும்.