Tamil Bayan Points

6) நிரூபணம்

நூல்கள்: விதி ஓர் விளக்கம்

Last Updated on February 24, 2022 by

விதியை நிரூபிக்கும் அறிவியல்

இறைவனின் படைப்புகளில் மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவு மற்ற படைப்பினங்களுக்கு வழங்கப்படவில்லை. அறிவின் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம். ஆனாலும் அல்லாஹ்வின் ஆட்சியின் இரகசியத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது. விதியைப் பற்றிய முரண்பாடில்லாத சரியான விளக்கத்தை அறியும் ஆற்றலை அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கவில்லை என்று புரிந்து கொண்டால் இதை முரண்பாடாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

இப்படி புரிந்து கொள்வது நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வரை வாழ்ந்த மக்களுக்கு இயலாத ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில் விதி உண்டு என்பது பல விஷயங்களில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகி விட்டது. எந்த பகுத்தறிவுவாதியும் விதியைக் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில் அவர்கள் கேட்கும் கேள்விகள் அவர்களை நோக்கியும் திரும்பும்.

மனிதர்களின் நல்ல செயல்களுக்கும், தீய செயல்களுக்கும் மனிதனிடம் உள்ள மூளையின் அமைப்பும், மரபணுக்களும், அவனிடம் சுரக்கும் ஹார்மோன்களும், மனநிலையில் ஏற்படும் மாற்றங்களும் காரணமாக உள்ளன என்று ஆய்வுகள் பல மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளனர். சில குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் என்னதான் முயன்றாலும் அதில் இருந்து அவர்களால் மீள முடியாமல் அவர்களை மீறிய ஒரு சக்தி கட்டுப்படுத்துகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

6-5-2012 அன்று த ஹிந்து நாளிதழில் “Who am I? my brain or my mind?”  என்ற தலைப்பில் நரம்பியல் துறை நிபுணரான டாக்டர் கணபதி அவர்கள் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார்.

இதில் பல அறிவியல் உண்மைகளை அவர் விளக்கியுள்ளார். ஒருவன் தெரசாவாகவோ பின் லேடனாகவோ இருப்பதற்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட மரபணு அமைப்பு தான் காரணமாகும். pre-determined genetic profile  மனிதனின் மூளைநரம்புகள் எந்த வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பொருத்தும், நரம்புக் கடத்திகள் (neurotransmitters) எவ்வாறு இணைப்புகளில் (synapses) இடம் பெயர்கின்றது என்பதைப் பொருத்தும் மனிதனின் செயல்பாடுகள் அமைகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார்.

நரம்பியல் புகைப்படவியல் (neuroimaging)  என்னும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் மூளையின் கட்டமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளின் மாறுதல்களை அறியலாம்.

எல்லா நாடுகளும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு ஏற்ப சட்டங்களை வகுத்துக் கொண்டுள்ளன. அதன்படி தண்டித்தும் வருகின்றன. எதிர்காலத்தில் இது கேள்விக்குறியாகலாம். ஆம் குற்றம் செய்தவர்கள் நரம்பியல் புகைப்படத்தை எடுத்து வைத்து எனது மூளை அமைப்பு இப்படி உள்ளதால்தான் நான் குற்றம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டேன்; இதோ ஆதாரம் எனக்கூறி குற்றவாளிகள் கருணை மனு போடலாம் என அவர் விளக்குகிறார்.

மனிதனின் சிந்தனை தீய செயலைச் செய்ய அவனைத் தூண்டும் போது தீய செயலைத் தடுக்கும் inhibitory impulses (தடுக்கக்கூடிய பல்ஸ்)  பகுதி சரியாக வேலை செய்து தீய செயல்களில் இருந்து அவனைத் தடுத்து விடுகின்றது. inhibitory cortex (தடுக்கக்கூடிய புறணி) சரியாக வளர்ச்சி அடையவில்லை என்றால் தீய செயலை அவன் செய்தே தீருவான்.

அப்படி இருக்கும் போது அந்தச் செயலுக்கு நான் எப்படி பொறுப்பாவேன்? என்று மனிதன் வாதிடும் காலம் தூரத்தில் இல்லை என்பதை அவர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

அதாவது இஸ்லாம் சொல்வதை சற்று வார்த்தைகளை மாற்றி இன்றைய அறிவியலும் சொல்கிறது.

எல்லாம் விதிப்படி தான் நடக்கிறது என்று கூறும் அறிவியலாளர்கள் தங்கள் வீட்டில் திருடியவனைத் தண்டிக்காமல் விட்டு விட வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். தனது தந்தையை ஒருவன் கொன்று விட்டால் அவனது மூளை அமைப்பின் காரணமாகக் கொலை செய்து விட்டான் என்று கூறி அவனை மன்னிக்க மாட்டார்கள். இதன் மூலம் மூளையில் எந்த புரோக்ராமும் இல்லை என்பது போல் நடக்கிறார்கள். விதி இருப்பது போலவும் இல்லை என்பது போலவும் நடப்பதன் மூலம் இவர்கள் முரண்பட்டாலும் அந்த முரண்பாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். இதன் தத்துவம் எங்களுக்குப் புரியவில்லை என்பது தான் இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலாகும்.

இஸ்லாத்துக்கு எதிராக பகுத்தறிவுவாதம் பேசுவோர் என்ன கேள்விகளைப் பல ஆண்டுகளாகக் கேட்டு வந்தார்களோ அந்தக் கேள்விகளுக்குப் அவர்களே பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டு பதில் சொல்ல முடியாமல் திணறிக்கொண்டு உள்ளனர்.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளும் உண்மை என்ன? விதியின்படிதான் அனைத்தும் நடக்கின்றன; அதன் முழு விளக்கத்தை நாம் அறிந்து கொள்ள முடியாது என்பது தான் அந்த உண்மை.

அனுபவத்தின் நிரூபணம்

விதிப்படிதான் அனைத்தும் நடக்கின்றன என்பதை அறிவியல் நிரூபிப்பது போலவே நம் கண் முன்னே நடக்கும் காட்சிகளும் விதிப்படிதான் எல்லாம் நடக்கின்றன என்பதை நிரூபிக்கின்றன.

பொதுவாக நல்ல அறிவு படைத்தவன் தான் எந்தக் காரியத்தையும் சிறப்பாகவும், திட்டமிட்டும் செய்ய முடியும் என்று நாம் அறிந்து வைத்துள்ளோம்.

ஆனால் நல்ல அறிவாளிகள் பலர் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அவர்களால் பொருளாதாரத்தைத் திரட்ட முடியாமல் உள்ளதையும் எதற்கும் உதவ மாட்டான் என்று தள்ளப்பட்டவன் கோடிகோடியாகச் சம்பாதிப்பதையும் நாம் காண்கிறோம். மிகப்பெரிய அறிவாளிகள் என்று அறியப்பட்டவர்கள் அவ்வாறு இல்லாத செல்வந்தர்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்யும் காட்சியைக் காண்கிறோம். கடந்த காலங்களில் புலவர்கள் எனும் அறிஞர்கள் செல்வந்தர்களிடம் சென்று பாட்டுப்பாடி பணம் சம்பாதிக்கும் நிலை இருந்ததையும் நாம் அறிகிறோம்.

திறமை குறைந்த பலர் பெரும் செல்வந்தர்களாக இருப்பதையும், திறமைமிக்க பலர் வறுமையில் உழல்வதையும் பார்க்கும் போது ஏற்கனவே இறைவனால் திட்டமிட்டபடியே இது நடக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 30:37

தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 39:52

நமக்கு மேலே ஒரு சக்தி இருந்து கொண்டு அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இதையும் திருக்குர்ஆன் எடுத்துக் காட்டுகிறது. அறிவு, உழைப்பு, திறமை, பயிற்சி, அனுபவம் ஆகிய எதன் காரணமாகவும் ஒருவன் செல்வந்தனாவதில்லை. இவற்றில் எதுவும் இல்லாமலும் அதிகமான மக்கள் செல்வந்தர்களாக ஆவதே இறைவன் இருக்கிறான் என்பதற்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

செல்வந்தர்களையும் ஏழைகளையும் ஆய்வு செய்யும் ஒருவர் இறைவனின் ஏற்பாட்டின் காரணமாகவே இது நடக்கின்றது என்பதை நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.