Tamil Bayan Points

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

கேள்வி-பதில்: தொழுகை

Last Updated on December 31, 2016 by Trichy Farook

நாற்காலியில் அமர்ந்து தொழலாமா?

சிலர் மிகவும் குண்டாக, தரையில் உட்கார முடியாத நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா?

 

حَدَّثَنَا عَبْدَانُ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ طَهْمَانَ قَالَ حَدَّثَنِي الْحُسَيْنُ الْمُكْتِبُ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَتْ بِي بَوَاسِيرُ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلَاةِ فَقَالَ صَلِّ قَائِمًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَقَاعِدًا فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَعَلَى جَنْبٍ

எனக்கு மூல நோய் இருந்தது. ‘எவ்வாறு தொழுவது?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘நீ நின்று தொழு! இயலாவிட்டால் உட்கார்ந்து தொழு! அதற்கும் இயலாவிட்டால் படுத்துத் தொழு’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரீ 1117

 

أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْتِرْ بِخَمْسٍ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِ إِيمَاءً أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ الْأَوْزَاعِيِّ عَنْ الزُّهْرِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ

‘நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி)

நூல்: தாரமீ 1536

‘உட்கார்ந்து தொழ முடியாவிட்டால் படுத்துத் தொழு, அதற்கும் முடியாவிட்டால் சைகை மூலம் தொழு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். முடியாத பட்சத்தில் சைகை செய்து கூட தொழலாம் எனும் போது, தரையில் உட்கார முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதில் தவறில்லை என்பதை விளங்கலாம்.

எவரையும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.

திருக்குர்ஆன் 2:286