Tamil Bayan Points

நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on October 29, 2021 by

முன்னுரை

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். 

1359- حَدَّثَنَا عَبْدَانُ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا يُونُسُ ، عَنِ الزُّهْرِيِّ ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ ، أَوْ يُنَصِّرَانِهِ ، أَوْ يُمَجِّسَانِهِ كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، {فِطْرَةَ اللهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ

“ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (1359)

குழந்தைகள் வளர்ப்பு முறையைப் பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

இதன் காரணமாகத் தான் குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால் இளம் பிராயத்திலேயே அக்குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்பட வேண்டும். இன்றைய கல்வி முறையில் குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்படாத காரணத்தினால் சமுதாயத்தில் நிலவி வரும் சீர்கேடுகளைப் பற்றி தினமணி நாளிதழ் டிசம்பர் 26ல் எழுதிய தலையங்கத்தை மக்களின் பார்வைக்கு தருகிறோம். இதோ அந்த தலையங்கம்:

நல்லவராவதும் தீயவராவதும்

மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில் தான் உருவாகின்றன.

இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.

தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.

இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் “அப்பா-அம்மாவை அழைத்து வா’ என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்று விடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.

இந்த மாணவர்கள் உழைப்பது சரி தான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு “டாப்-அப்’ செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு “டாப்-அப்’ செய்வதிலும் தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது. தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூக விரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.

மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்து கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.

பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது

பெற்றோர்களே பிள்ளைகளின் பொறுப்பாளர்

பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்தவர்களாக நல்லவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றார் தினமணி ஆசிரியர்.

ஆசிரியர்களில் பலர் பொறுக்கிகளாகவும், காமவெறி பிடித்தவர்களாகவும் உள்ள காலகட்டத்தில் பிள்ளைகளைப் பண்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களைச் சார்ந்தது தான் என்று குறிப்பிடுவது வேடிக்கையான ஒன்றாகும்.

பெற்றோர்கள் வேலைப் பழுவினால் பிள்ளைகளைக் கவனிக்க இயலாது என்று தினமணி ஆசிரியர் கூறுவது பிற சமுதாயத்தைக் கவனித்து வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் வாழ்வாதாரங்களைத் தேடும் பொறுப்பை ஆண்களுக்கும் பிள்ளைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பை பெண்களுக்கும் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக்கப்படவேண்டும் என்பது தான் இதன் அடிப்படையாகும். குழந்தைகளைச் சிறந்த குழந்தையாக உருவாக்கும் பொறுப்பை அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்தெடுக்கும் தாயிடம் தான் இஸ்லாம் ஒப்படைத்துள்ளது.

2554- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي نَافِعٌ ، عَنْ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
كُلُّكُمْ رَاعٍ فَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهْوَ مَسْؤُولٌ عَنْهُمْ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهْوَ مَسْؤُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهْيَ مَسْؤُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهْوَ مَسْؤُولٌ عَنْهُ أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِه

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

நூல்: புகாரி (2554)

ஒரு குழந்தையின் தாய்தான் அவனுடைய நல்லொழுக்கத்திற்கு பொறுப்புதாரி ஆவார். குழந்தைகளுக்கு நல்லதொரு ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதும் பெற்றோர்களின் பொறுப்பு தான்.

முஃமின்களின் இலட்சியம்

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.

அல்குர்ஆன் (25 : 74)

ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் எத்தகைய இலட்சியத்தில் வாழ வேண்டும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

மற்றவர்கள் நம்முடைய வாழ்வை ஒரு முன்மாதிரியான வாழ்வாகக் கருதும் அளவிற்கு ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும் திகழ வேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான். நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்கும் முறைகளைப் பார்த்து, இது போன்றல்லவா நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று மற்றவர்கள் எண்ணும் அளவிற்கு ஒவ்வொரு முஃமினும் தன்னுடைய குடும்பத்தை இறையச்சமுடைய குடும்பமாக உருவாக்க வேண்டும் என்பதும் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதும் தான் இறைவனின் வழிகாட்டுதல்.

சிறந்த சமுதாயம் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதற்கு மேற்கண்ட வசனம் தெளிவான ஆதாரமாகும்.

திருமணமே முதல்படி

குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பை இஸ்லாம் தாயிடம் ஒப்படைத்துள்ளது. ஒரு குழந்தை நல்லொழுக்கமுள்ள குழந்தையாக உருவாக வேண்டுமென்றால் அக்குழந்தையின் தாய் நல்லொழுக்கங்களை அறிந்தவளாக இருக்க வேண்டும்.

ஒரு தாய் அதிகம் சினிமா பார்க்கக் கூடியவளாகவும், தர்ஹா வழிபாடுகள் செய்பவளாகவும், பில்லி, சூனியம், பேய், பிசாசு நம்பிக்கை உடையவளாகவும் இருந்தால் இவள் எப்படி தன்னுடைய குழந்தையை ஒரு நல்லொழுக்கமுள்ள, இறைநம்பிக்கையுள்ள குழந்தையாக உருவாக்குவாள்?

ஒரு சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் குழந்தைகள் நல்லொழுக்கங்கள் உடையவர்களாக உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் நற்சிந்தனையைப் பெற வேண்டும் என்றால் அக்குழந்தையின் தாய் அதற்குத் தகுதியானவளாக இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் நபியவர்கள் திருமணத்தின் போதே நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

5090- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (5090)

3716 – حَدَّثَنِى مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِىُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِى شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِىَّ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (2911)

சிறந்த சமுதாயம் உருவாவதற்கு முதல் அடிப்படை நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்வது தான் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இல்லறமும் இனிய சமுதாயத்திற்கே!

ஒருவன் திருமணம் செய்து தன்னுடைய உடல் இச்சையைத் தணிப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுகின்றான். இந்த இனிய இல்லறத்திலும் இனிய சமுதாயம் உருவாவதற்காக அல்லாஹ்விடம் நபியவர்கள் பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்.

141- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ كُرَيْبٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ
لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يَضُرَّهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்! என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டாரெனில்) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (141)

“எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!” என்ற பிரார்த்தனையின் முக்கிய அடிப்படையே நம்முடைய எதிர்காலச் சந்ததிகள் நல்லொழுக்கமுள்ள சந்ததிகளாக உருவாக வேண்டும் என்பதுதான்.

இஸ்லாம் நல்லொழுக்க சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு எத்தகைய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது என்பதற்கு மேற்கண்ட நபிவழியும் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

குழந்தையல்ல! நல்லொழுக்கமுள்ள குழந்தையே முக்கியம்!

முதுமைப் பருவம் அடையும் வரை குழந்தைப் பேற்றினை வழங்காமல் எத்தனையோ நபிமார்களை அல்லாஹ் சோதித்துள்ளான். அந்த நபிமார்கள் இறைவனிடம் குழந்தை வேண்டிப் பிரார்த்தனை செய்யும் போது, “இறைவா எனக்கொரு குழந்தையைத் தா’ என்று பிரார்த்திக்கவில்லை. மாறாக, “இறைவா எனக்கொரு நல்லொழுக்கமுள்ள குழந்தையைத் தா’ என்றே பிரார்த்தனை செய்துள்ளனர்.

மேலும் தங்களுடைய சந்ததிகளும் நல்லொழுக்கமுள்ள சந்ததியாக உருவாக வேண்டும் என்பதற்காக இறைவனிடம் நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

ஸக்கரிய்யா (அலை) அவர்கள் பரிசுத்தமான குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏

ஸக்கரிய்யா ”இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். அல்குர்ஆன் 3:38

இப்ராஹீம் (அலை) அவர்களும் நல்லொழுக்கமுள்ள குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளனர்.

رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ‏

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.)

 அல்குர்ஆன் 37:100

எதிர்காலச் சந்ததியினரும் நல்லொழுக்கமுடையவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.

 رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்). 

அல்குர்ஆன் 2:128

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.) அல்குர்ஆன் 14:40

 وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 25:74

 وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ

இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 2:124

மேற்கண்ட வசனங்கள் நல்லொழுக்க சமுதாயத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.

மறுமை வெற்றியும் மாசற்ற குழந்தையில் தான்

4310 – حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ – يَعْنِى ابْنَ سَعِيدٍ – وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ – هُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயனளிக்கும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3358

அழகிய முன்மாதிரி

திருந்திய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கு திருமறைக் குர்ஆன் பல வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.

நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.

وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
அல்குர்ஆன் 2:132

 أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினர்.

அல்குர்ஆன் 2:133

 وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 31:13

يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

 يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ

“நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்).

அல்குர்ஆன் 31:16-19

நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு நபியவர்கள் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

சிறுவர்களிடம்

குழந்தைகள் சிறுவயதில் தவறு செய்யும் போதே அவர்களுக்குச் சரியான வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள்.

தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.

மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள்.

1485- حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ الأَسَدِيُّ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ
كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُؤْتَى بِالتَّمْرِ عِنْدَ صِرَامِ النَّخْلِ فَيَجِيءُ هَذَا بِتَمْرِهِ وَهَذَا مِنْ تَمْرِهِ حَتَّى يَصِيرَ عِنْدَهُ كَوْمًا مِنْ تَمْرٍ فَجَعَلَ الْحَسَنُ وَالْحُسَيْنُ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَلْعَبَانِ بِذَلِكَ التَّمْرِ فَأَخَذَ أَحَدُهُمَا تَمْرَةً فَجَعَلَهَا فِي فِيهِ فَنَظَرَ إِلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَأَخْرَجَهَا مِنْ فِيهِ فَقَالَ أَمَا عَلِمْتَ أَنَّ آلَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم : لاَ يَأْكُلُونَ الصَّدَقَةَ

ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (1485)

முத்தான உபதேசங்களை நபியவர்கள் இளம் பிராயத்தினருக்குப் போதித்தார்கள்.

சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தையும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.

2706 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ وَابْنُ لَهِيعَةَ عَنْ قَيْسِ بْنِ الْحَجَّاجِ قَالَ وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ حَدَّثَنِى قَيْسُ بْنُ الْحَجَّاجِ الْمَعْنَى وَاحِدٌ عَنْ حَنَشٍ الصَّنْعَانِىِّ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ
كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- يَوْمًا فَقَالَ « يَا غُلاَمُ إِنِّى أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَىْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَىْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَىْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَىْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ ». قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

“சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

“நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய்.

நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.

நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதி 2440

முதலில் ஸலாம்

சிறுவர்களுக்குக் கூட நபி (ஸல்) அவர்கள் தாமே முதலில் ஸலாம் சொல்லி பணிவைப் போதித்தார்கள்.

6247- حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ ، أَخْبَرَنَا شُعْبَةُ ، عَنْ سَيَّارٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْعَلُهُ

(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்)

நூல்: புகாரி 6247

இடையூறு தரும் விளையாட்டுகள்

இளைஞர்கள் பிறருக்கு இடையூறு தரும் விளையாட்டுகளை விளையாடுவதற்குத் தடைவிதித்தார்கள்.

5479- حَدَّثَنَا يُوسُفُ بْنُ رَاشِدٍ ، حَدَّثَنَا وَكِيعٌ وَيَزِيدُ بْنُ هَارُونَ – وَاللَّفْظُ لِيَزِيدَ – عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ
أَنَّهُ رَأَى رَجُلاً يَخْذِفُ فَقَالَ لَهُ لاَ تَخْذِفْ فَإِنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْخَذْفِ ، أَوْ كَانَ يَكْرَهُ الْخَذْفَ – وَقَالَ إِنَّهُ لاَ يُصَادُ بِهِ صَيْدٌ ، وَلاَ يُنْكَى بِهِ عَدُوٌّ وَلَكِنَّهَا قَدْ تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأُ الْعَيْنَ ثُمَّ رَآهُ بَعْدَ ذَلِكَ يَخْذِفُ فَقَالَ لَهُ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الْخَذْفِ ، أَوْ كَرِهَ الْخَذْفَ وَأَنْتَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ كَذَا وَكَذَا

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று சொன்னார்கள்” எனக் கூறினேன்.

அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல்: புகாரி 5479

ஆபாசங்கள் குழந்தைகள் மனதில் பதிந்து விடாமல் இருப்பதற்காக குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு ஒழுங்குமுறைகளை மார்க்கம் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

அந்தரங்க உறுப்புக்களைச் சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ

உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 24:58, 59

மறுமைக்கு அஞ்சுவோம்

பெற்றோருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும்? உறவினர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவற்றைச் செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது? போன்ற அனைத்தையும் மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது.

மார்க்க போதனைகளை குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மட்டுமே மிகச் சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். அதுவே கொடிய நரகத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.

அல்குர்ஆன் 66:6

2409- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ قَال ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ
كُلُّكُمْ رَاعٍ وَمَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالإِمَامُ رَاعٍ وَهْوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ وَهْوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ ، وَهْيَ مَسْؤُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَهْوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ قَالَ فَسَمِعْتُ هَؤُلاَءِ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَأَحْسِبُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ : وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ رَاعٍ وَهْوَ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْؤُولٌ عَنْ رَعِيَّتِهِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2409

பெற்றோர்களின் அலட்சியப் போக்கினால் பிள்ளைகள் தவறான பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராகப் பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனை தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.

وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا  رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا

“எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 33:67

சிறுவர்கள் மார்க்கம் தடுத்த காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.

ஆரம்பித்ததிலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல், செயல்பாடு ஆகியவற்றில் கலந்து விடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக் கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும். எனவே நல்ல குழந்தைகள் உருவாவது பெற்றோரின் கையில் தான் இருக்கின்றது.

கே.எம். அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்