Tamil Bayan Points

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-4

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on October 26, 2022 by

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமியப் பாடல்கள்-4

இஸ்லாமியப் பாடல்கள் என்றழைக்கப்படும் நாகூர் ஹனிஃபா பாடல்களில் நல்ல கருத்துக்கள் இருப்பதை விட இஸ்லாமிய கொள்கைக்கு முரணான நச்சுக் கருத்துக்கள் தான் நிரம்பியிருக்கின்றன என்ற தகவல்களைத் தொடராக அறிந்து வருகின்றோம். அந்த அடிப்படையில் நாம் இந்த தொகுப்பில்  “கண்ணுக்கு இமை போன்ற பெண்ணே” என்று துவங்கும் பாடலின் ஓர் அடியை பற்றிக் காணவிருக்கின்றோம்.

“அன்னை ஆமினாவின் பாதை செல்லம்மா”

“நீயும் மூஃமினாக முந்திக் கொள்ளம்மா”

என்ற அடியில்தான் நரகிற்கு அழைக்கும் நச்சுக் கருத்து குடிகொண்டிருக்கிறது. இந்த பாடல் முழுவதும் பெண்கள் பேண வேண்டிய ஒழுக்கம் தொடர்பான வரிகள் அமைந்திருந்தாலும், மேற்குறிப்பிட்ட வரி மறுமையில் நட்டத்தைப் பெற்றுத்தருகின்ற ஓர் வரியாக இருக்கிறது. நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர்தான் ஆமினா. இவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஆறு வயதிருக்கும் போதே மரணித்து விட்டார்கள்.

அவர்கள், இஸ்லாத்தின் அடிப்படை சித்தாந்தமான ஏகத்துவத்தின் அடிப்படையில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. மாறாக, சிலைகளை வழிபடுகின்ற இணைவைப்பாளராகத்தான் மரணம் வரை இருந்தார்கள்.

அல்லாஹ்வின் இறுதித் தூதரான நபி (ஸல்) அவர்களின் தாயாராக அவர்கள் இருந்தாலும், அவர்கள் இணைவைப்புக் கொள்கையில் இருந்த காரணத்தினால் அவர்களுக்கு எவ்வித பாவமன்னிப்பும் இறைவனால் வழங்கப்படாது. அவர்கள் நரகவாதிதான் என்பதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-1777

நபியவர்களின் தாயார் இணைவைப்பில் இருந்து மரணித்ததுதான் பாவமன்னிப்பு கோர தடை செய்யப்பட்டதற்குக் காரணம். பொதுவாக, இறைவன் ஹராமாக்கிய பெரும்பாவங்களை ஒருவன் செய்துவிட்டால், அல்லாஹ் நாடினால் அவனை மன்னித்துவிடுவான்.

ஆனால், அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்ற காரியங்களில் ஒருவன் ஈடுபட்டுவிட்டால், அவன் அதிலிருந்து மீள்கின்ற வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். ஷிர்க்கிலிருந்து மீளாமலே ஒருவன் இறந்து விட்டால் அவனுக்கு இறைவன் புறத்திலிந்து மன்னிப்பும் கிடையாது. சுவர்க்கமும் நுழைய முடியாது. நிரந்தர நரகம்தான்.

“மர்யமின் மகன் மஸீஹ்தான் அல்லாஹ்’’ எனக் கூறியவர்கள் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’’ என்றே மஸீஹ் கூறினார்.

(அல்குர்ஆன்:5:72.)

“தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்”.

(அல்குர்ஆன்:4:48.)

“தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்”.

(அல்குர்ஆன்:4:116.)

இணைவைப்பாளர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்று திட்டவட்டமாக இறைவன் கூறுவதைப் போன்றே அவர்களுக்காக யாரும் பாவமன்னிப்பு தேடவும் கூடாது என்றும் கூறுகின்றான்.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. (அல்குர்ஆன்:9:113.)

மேலும், இணைவைப்புக் காரியங்களில் ஈடுபட்ட நிலையில் நாம் எவ்வளவு தான் நற்காரியங்களில் ஈடுபட்டாலும் அவை அனைத்துமே அழிந்துவிடும். அதனால் எவ்வித பயனும் மறுமையில் கிடைக்காது என்பதையும் இறைவன் சொல்கின்றான்.

“நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!’’ என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

(அல்குர்ஆன்:39: 65, 66.)

இப்படி நஷ்டத்தின் மொத்த உருவமாக இருக்கின்ற இணைவைப்பில் மரணித்த ஆமினா அவர்களின் பாதை சென்றால் என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாவமன்னிப்பு ரத்து செய்யப்படுகின்ற, மூஃமின்களின் பிரார்த்தனை கிடைக்காத, சுவனம் செல்ல முடியாத ஒரு துர்பாக்கியமான பாதையை நோக்கிச் செல்லுமாறு இப்பாடல் முஸ்லிம் பெண்களை அழைக்கிறது.

இஸ்லாமிய இன்னிசைப் பாடல்கள் என்று மக்களுக்கு மத்தியில் உலா வரும் பாடல்கள் இஸ்லாத்திற்கு முரணாக நரகை நோக்கி அழைத்துச் செல்லும் பாடலாகத்தான் இருக்கிறது என்பதற்கு இப்பாடல் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

நபி (ஸல்) அவர்களைப் பெற்றெடுத்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு இணைவைப்பிலிருந்து மன்னிப்பு வழங்கப்படாது. நபிக்கு எவ்வளவுதான் நெருக்கமானவர்களாக இருந்தாலும், கொள்கை இருந்தால் தான் வெற்றியே தவிர, இரத்த பந்தத்தை வைத்து எவ்விதப் பயனும் இல்லை.

நபி(ஸல்) அவர்களின் தாய்க்கு மட்டும் மறுமையில் இவ்வளவு சேதம் கிடையாது. நபியின் தந்தைக்கும் இதே நிலைமைதான் என்பதை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?’’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நரக) நெருப்பில்’’ என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)’’ என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம்-347

இன்னும் நபி (ஸல்) அவர்களுயை பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் நபியின் இரத்த பந்தம் மட்டுமல்லாது, நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தைத் துவக்கிய ஆரம்பகட்டத்தில் எதிரிகளின் அடக்குமுறைகளிலிருந்து நபியவர்களைக் காத்தவர். அத்தகையை உதவி செய்த அபூதாலிபிற்குக் கூட அவரிடம் ஏகத்துவம் இல்லாததின் காரணத்தினால் மன்னிப்பு வழங்கப்படவில்லை.

முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிவிட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் அல்முஃகீராவையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்’’ என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் “அபூதாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அபூதாலிப் அவர்களிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள்; தாம் முன்பு சொன்னதையே அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது “நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்’’ என்பதாகவே இருந்தது. “லா இலாஹ இல்லல்லாஹ்’’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்’’ என்று சொன்னார்கள். அப்போது தான் கண்ணியமும் மாண்பும் உடைய அல்லாஹ், “இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள்தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் -அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரி – அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை’’ எனும் (9:113ஆவது) வசனத்தை அருளினான்.

அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ், “நீர் விரும்பியவரை  நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்’’ எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம்-39

இன்னும் இது போன்ற ஏராளமான ஆதாரங்கள் நபிக்கு நெருக்கமானவர்கள் என்பதற்காக மாத்திரம் அவர்கள் முஃமின்களாக ஆகிவிடமாட்டார்கள் என்றும் உளப்பூர்வமாக ஏகத்துவத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று நடந்தால்தான் இறுதி வெற்றி கிட்டும் என்றும் தெரிவிக்கிறன. ஆனால் ஹனிபா பாடலின் வரியோ, இணைவைப்பில் மரணித்தவர்கள் நபியின் தாய் என்ற ஒரே காரணத்திற்காக எவ்வித முகாந்திரமுமின்றி அவர்களை முஃமினாக சமுதாயத்துக்கு அறிமுகப்படுத்தி அவர்கள் வழியில் நம்முடைய வாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நரகை நோக்கி நமக்கு அழைப்பு விடுக்கின்றது.