Tamil Bayan Points

நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமிய பாடல்கள்-1

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

Last Updated on February 23, 2022 by

நரகத்திற்கு அழைக்கும் நாகூர் ஹனிஃபா

1980களில் தன்னுடைய ஏகத்துவ பிரச்சாரப் துவக்கிய ஆரம்ப காலம் முதல் இணை வைப்பிற்கு எதிராக வீரியமாகப் பிரச்சாரம் செய்து வருகிறோம். இணை வைப்பின் சாயல் எங்கெல்லாம் வருகிறதோ அந்த இடங்களையெல்லாம் மக்களுக்குத் தெளிவுபடுத்தி அவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கப் பாடுகிறது. ஆரம்பத்தில் இணை வைப்பில் மூழ்கியிருந்த மக்களிடத்தில் தர்கா வழிபாடு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதற்கு சற்றும் குறையாமல் மவ்லிதுகளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது என்று அனைத்து மவ்லிதுகளிலும் மனிதர்களை அல்லாஹ்வின் அந்தஸ்திற்குக் கொண்டு சேர்க்கும் இணைவைப்பு வாசகங்கள் இருக்கின்றன என்று அவற்றை மக்களுக்கு எடுத்து சொல்லி விளக்கினோம். அல்லாஹ்வுடைய அருளால் அதன் தாக்கம் மக்களிடத்தில் குறைந்தது.

அதே போன்று தற்காலத்தில் வாழ்ந்து மறைந்த நாகூர் ஹனிஃபா அவர்களின் பாடல்கள் மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது வெண்கலக் குரலுக்கு மயங்காதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவருடைய உள்ளத்திலும் அவரது பாடல்கள் இடம்பிடித்தது. எந்த ஒரு நிகழ்ச்சியைத் துவக்குவதாக இருந்தாலும் ஹனிஃபாவின் பாடல்களை ஒலிபரப்பித் தான் ஆரம்பிக்கின்றார்கள்.

இன்னும் சொல்லப் போனால், பல ஊர்களில் பள்ளிவாசல்களில் கூட நோன்பு, பெருநாள் நாட்களில் ஒலிபரப்பி வருகின்றனர். இன்றளவும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகள் மற்றும் கடைகளில் நாகூர் ஹனிபாவின் பாடல்களை ஒலிபரப்பாவதைப் பார்க்க முடியும். இதை ஒரு புனிதக் காரியம் என்று நினைத்தே பாமர மக்கள் பலர் செய்து வருகின்றனர். இதற்குக் காரணம் அதில் இஸ்லாமிய கருத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று நினைப்பதுதான்.

அவரது பாடல்களில் ஒரு சிலவற்றில் இஸ்லாமிய சிந்தனை இருந்தாலும் அதிகமானவைகளில் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விஷமக் கருத்துக்கள் தான் நிறைந்துள்ளன. அப்படியிருந்தும் இந்தப் பாடல்களை இஸ்லாத்தின் வேத வரிகள் போல நம்புகின்றவர்கள் இன்றளவும் ஏராளம்.

இந்த நிலையைச் சீர் செய்ய வேண்டும் என்பதற்காக ஏகத்துவம் இதழ் ஹனிஃபாவின் ஒரு சில பாடல்கள் எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக அமைகின்றது என்று இதற்கு முன்னால் தெளிவுபடுத்தியிருந்தாலும் இத்தொடர் கட்டுரையின் வாயிலாக ஒவ்வொரு பாடலையும் தெளிவு படுத்தவிருக்கின்றோம். இவ்வாறு மக்களுக்குத் தெளிவு படுத்துவது தனி நபர் விமர்சனமாக ஆகாது. இணைவைப்பை தெளிவு படுத்தியதாகத் தான் ஆகும் என்பதற்குப் பின்வரும் செய்தி சான்றாக இருக்கிறது.

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்” என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி: 4001

அடியார்க்கு அருள் செய்யும் அம்மா

எதிர்காலத்தை அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அந்த ஆற்றல் அல்லாஹ்வின் தூதருக்கு இருப்பதாகப் பாடும் சிறுமிகளைக் கூட, அவர்கள் அறியாமல் சொல்லி விட்டார்கள் என்று விட்டுவிடாமல் நபி (ஸல்) அவர்கள் கண்டித்து தெளிவுபடுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் முதலாவதாக, “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா” என்று துவங்கும் பாடலில் இடம்பெறும் இணை வைப்புக் கருத்துக்களை இம்மாத இதழில் அறியவிருக்கின்றோம்.

“அடியார்க்கு அருள் செய்யும் அம்மா

அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா”

அழகிய கடலோரத்தில் இறந்த பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கும் பீமா அம்மா தான் மனிதர்களுக் கெல்லாம் அருள் புரிந்து கொண்டிருக்கின்றார் என்று பாடுவதன் மூலமாக இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் விஷமக் கருத்தினை இந்தப் பாடலில் நாகூர் ஹனிஃபா பதிவு செய்கின்றார். இந்த உலகத்தில் வாழும் எந்த மனிதனாக இருந்தாலும் அவன் மரணித்து விட்டால் அவனுக்கும், இவ்வுலகிற்கும் இடையே உள்ள தொடர்பு அத்தோடு முறிந்து விடுகிறது.

முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும் போது “என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!” என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

(அல்குர்ஆன்:23:99,100.)

அல்லாஹ் மனிதர்களின் உயிரைக் கைபற்றுகின்ற போது இவ்வுலகிற்கே தன்னை திருப்பி அனுப்புமாறு மனிதர்கள் இறைவனிடம் கோரிக்கை வைக்கின்றனர். அதை நிராகரிக்கும் விதமாக “அவர்களுக்குப் பின்னால் (பர்ஸக்) திரை உள்ளது” என்ற வாசகத்தை இறைவன் பதிவு செய்வதன் மூலம் இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை திட்டவட்டமாகக் கூறுகிறான்.

நபிமார்கள் உட்பட அனைத்து மனிதர்களும் இறந்துவிட்டால் பர்ஸக் எனும் புலனுக்குத் தெரியாத திரையால் திரையிடப்பட்டுவிடுவார்கள். அவர்களால் இவ்வுலகைக் காண முடியாது, இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களோடு பேச முடியாது, பேசுவதை கேட்க முடியாது, எவ்விதத் தொடர்பும் கொள்ள முடியாது. அவ்வாறு தொடர்பு கொள்ள முடியும் என்று யாரேனும் நம்பினால் அது அல்லாஹ்விற்கு இணை கற்பித்ததாக ஆகிவிடும்.

ஏனென்றால் அல்லாஹ்தான் தனது அர்ஷில் இருந்து கொண்டு இங்கு வாழும் மனிதர்கள் அனைவரையும் கண்காணிக்கின்றான், அவர்கள் பிரார்த்திப்பதைச் செவியுறுகிறான். ஆனால் ஹனிபா அவர்கள், என்றோ இறந்து போன பீமா என்ற பெண்மணி இன்றளவும் உயிருடன் இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் அடியார்க்கெல்லாம் அருள் புரிகின்றார் என்று அல்லாஹ்வின் வசனத்திற்கு எதிராகப் பாடியது மட்டுமின்றி இவை இஸ்லாமியப் பாடல்கள் (?) என்றும் மக்களுக்கு மத்தியில் பதிவு செய்துள்ளார்.

அல்லாஹ்வின் அடியாரா? பீமாவின் அடியாரா?

மேலும் தனது பாடலில் “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா” என்று பாடுவதன் மூலம் பீமாவிற்குத் தான் நாங்கள் அடியார்கள். அல்லாஹ்விற்கு அல்ல என்பதைப் பதிவு செய்கின்றார்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும் பாமலோ அவனுக்கே பணிகின்றன. அவற்றின் நிழல்களும் காலையிலும், மாலையிலும் பணிகின்றன.

(அல்குர்ஆன்:13:15.)

மனிதன் உட்பட இவ்வுலகில் உள்ள அனைத்தும், அவற்றின் நிழல்களும் தனக்கே பணிகின்றன என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூற, “நாங்கள் உனக்குப் பணிய மாட்டோம் பீமாவிற்குத் தான் பணிவோம்’ என்று இந்தப் பாடல் வரி அல்லாஹ்விற்கு எதிராக பேசுகிறது.

அருள் புரிவது அல்லாஹ்வா? பீமாவா?

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்திற்கும் அல்லாஹ்தான் அருள் புரிகிறான். அல்லாஹ்வைத் தவிர யாராலும் எவ்வித அருளும் யாருக்கும், எதற்கும் வழங்க முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

“உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர் தவிர (மற்றவருக்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று கொடுக்கப்படும் என்றோ, உங்கள் இறைவனிடம் அவர்கள் உங்களை வென்று விடுவார்கள் என்றோ, நம்பாதீர்கள்!” (எனவும் கூறுகின்றனர்.) “நேர் வழி அல்லாஹ் வின் வழியே” என்று கூறுவீராக! “அருள், அல்லாஹ்வின் கையில் உள்ளது; தான் நாடியோருக்கு அதைக் கொடுப்பான்” என்றும் கூறுவீராக! அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்:3:73.)

ஷைத்தான் வறுமையைப் பற்றி உங்களைப் பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை உங்களுக்குத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்:2:268.)

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்:29:60.)

மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

(அல்குர்ஆன்:2:243.)

திருமறைக் குர்ஆனுடைய இத்தனை வசனங்களும், இன்னும் ஏராளமான வசனங்களும் அருள் அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது என்று கூற, “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா” என்ற இந்த வரி, அருள் புரிவது அல்லாஹ் மட்டுமே என்ற இஸ்லாத்தின் ஆணிவேரைப் பிய்த்து எறியும் விதமாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழந்த காஃபிர்களின் நம்பிக்கை கூட அல்லாஹ்தான் அருள் புரிபவன் என்றிருந்தது.

“அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால் தர்மம் செய்வோம்; நல்லோர்களாக ஆவோம்” என்று அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்தோரும் அவர்களில் உள்ளனர். அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கிய போது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அலட்சியம் செய்து புறக்கணித்தனர்.

(அல்குர்ஆன்:9:75, 76.)

இந்த வசனத்தில் காஃபிர்கள் “அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால்” என்று கூறுவதின் மூலம் அருள் புரிபவன் அல்லாஹ்தான் என்று நம்பியிருந்தனர் என்றும் அதேசமயம் இறைவன் அருள் புரிந்ததற்குப் பிறகு நன்றி கெட்டு நடந்தனர் என்றும் விளங்குகிறது. ஆனால் இந்தப் பாடல், பீமாதான் தன்னுடைய அடியார்க்கு அருள் புரிகின்றார் என்று கூறுகிறது. பீமாவைக் கடவுளாகவும், மக்களை பீமாவின் அடியார்களாகவும் மாற்றி அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் வாசகங்களை ஏந்தி நிற்கும் பாடலுக்கு பெயர் இஸ்லாமியப் பாடலா?

“படி மீது கெதி வேறு உண்டோ

என்னைப் பாராது வாராது இருப்பதும் நன்றோ”

தங்கள் படிகளே கதி என்று இருக்கும் என்னைப் பார்க்க மாட்டீர்களா? என்று பொருள் பட இப்பாடலின் அடுத்த வரி துவங்குகிறது. அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்து இருப்பதுதான் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வைக் கலப்பற்ற முறையில் நம்பியுள்ளான் என்பதற்குத் தக்க சான்றாகும். ஆனால், பீமாவே கதி என்று இருப்பதாகவும், அவரையே எதிர் பார்த்து இருப்பதாகவும் இப்பாடல் கூறுகிறது.

இவர்கள் யாரையெல்லாம் கடவுளின் அந்தஸ்துக்குக் கொண்டு சென்று அவர்களின் அருளை எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்களோ அந்த அவ்லியாக்களே(?) அல்லாஹ்வுடைய அருளைத்தான் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார் களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவைத் தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.

(அல்குர்ஆன்:17:57.)

பீமாவை இவர்கள் கடவுளாகக் கற்பனை செய்கின்றனர். ஆனால் அந்த பீமாவே அல்லாஹ்வின் அருளைத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

  • “என்னை பாராது வாராது இருப்பதும் நன்றோ” என்ற இந்த வரியை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ளலாம்.
  • பீமா அவர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும் என்பது முதல் விதம்.
  • அல்லது, பீமா தனது அருளை வந்து தர வேண்டும் என்பது இரண்டாம் விதம்.

இந்த இரண்டு விதங்களில் எப்படிப் புரிந்து கொண்டாலும் அது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்ற வாசக முறை தான். ஏனென்றால், இறந்து விட்ட பீமா நேரடியாக வருதல் என்பதும் முடியாது. அருளும் தர முடியாது. இவற்றைப் பற்றி ஏற்கனவே மேலே குறிப்பிட்டுவிட்டோம்.

“படி வாரும் மலர் பாதம் அன்றோ

ஓடி வர வேண்டும் வர வேண்டும் இது நேரமன்றோ”

இறந்துவிட்ட பீமாவால் படியில் ஓடியும் வரமுடியாது. நடந்தும் வர முடியாது என்பது தெளிவு. பீமாவின் பாதம் மலர் போன்றது என்று இந்த வரியில் வர்ணிக்கின்றார். பீமாவின் பாதம் மலர்போன்ற மென்மையான பாதமா? அல்லது பித்த வெடிப்பால் வறண்ட பாதமா என்பது யாருக்குத் தெரியும்?

வரலாறு நிறை கேரளாவில், வாழும் மறையோர்கள் முறை கேட்கும் தாயே வரலாறு நிறைந்த கேரளாவில் வாழும் மறையோர்கள். மறையோர்கள் என்றால் வேதத்தின்படி நடப்போர்கள் என்று அர்த்தமாகும். அந்த மறையோர்களே பீமாவிடம் தான் பிரார்த்திக்கிறார்கள் என்று இந்த வரி கூறுகிறது.

ஒருவன் திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழியின்படி நடந்தால் அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்திக்க மாட்டார்கள். ஏனென்றால், திருமறைக் குர்ஆனுடைய பல வசனங்கள் அல்லாஹ்வையன்றி மற்றவர்களிடம் பிரார்த்திப்பதை கடுமையாக கண்டிக் கின்றது. நரகத்தை வாக்களிக்கின்றது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? “உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!” என்று கூறுவீராக!

“இவ்வேதத்தை அருளிய அல்லாஹ்வே எனது பொறுப்பாளன். அவனே நல்லோருக்குப் பொறுப் பேற்றுக் கொள்கிறான்” (என்றும் கூறுவீராக!)

அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.

(எதையும்) தெரிவிக்க நீங்கள் அவர்களை அழைத்தால் அவர்கள் செவியுற மாட்டார்கள். அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன்:7:194-198.)

“உங்கள் தெய்வங்களை அழையுங்கள்!” என்று கூறப்படும். அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். வேதனையையும் காண்பார்கள். இவர்கள் நேர் வழி சென்றிருக்கக் கூடாதா?

(அல்குர்ஆன்:28:64.)

“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தவற்றை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் பெற மாட்டார்கள். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்லை” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:34:22.)

இவைகளைப் போன்று இன்னும் ஏராளமான வசனங்கள் அல்லாஹ்  வையன்றி யாரிடமும் கையேந்தக் கூடாது என்று சொல்கின்றன. இந்த வேதத்தின்படி நடக்கும் மறையோர்கள் எப்படி பீமாவிடம் பிரார்த்திப்பார்கள்? இன்னும் சொல்லப் போனால் இதே ஹனிபா அவர்கள், இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை என்று ஏகத்துவ வாசகங்களை ஒரு பாடலில் சொல்லிவிட்டு இந்தப் பாடலில் பீமாவிடம் கையேந்துங்கள் என்று ஏகத்துவத்திற்கு எதிரான வாசகங்களைச் சொல்கின்றார்.

இன்றையை தர்காவாதிகள் இறந்தவர்களிடம் பிரார்த்தித்துவிட்டு, நாங்கள் அல்லாஹ்விடம் நெருங்க வேண்டும் என்பதற்காக இவரின் பொருட்டால் கோரிக்கை வைக் கின்றோம் என்று சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இப்படி காரணம் சொல்பவர்களைத் தான் அல்லாஹ் காஃபிர் (இறை மறுப்பாளன்) என்கின்றான்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின் றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்:39:3.)

“அருளோடு முகம் பார்க்க வேண்டும்

என்னை அன்போடு கண் பார்த்து வந்தாள வேண்டும்”

எனக்கு அருள் புரிந்து, என்னை நீங்களே ஆள வேண்டும் என்று பீமாவை நோக்கி கூறுகிறார்.

  • அருள் புரிவது அல்லாஹ் ஒருவனே என்பதைத் தெளிவுபடுத்தி விட்டோம். அனைத்து மனிதர்களையும் ஆள்பவன் அல்லாஹ் ஒருவனே.

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.

(அல்குர்ஆன்:51:56.)

இந்த வசனத்தில் “என்னை வணங்குவதற்காக” என்ற இடத்தில் யஃபுதூனீ என்று அரபிச்சொல் இடம்பெற்றுள்ளது. இது அப்து – அடிமை என்ற மூலச் சொல்லிலிருந்து வந்ததாகும். அதாவது, அல்லாஹ்வாகிய நான் எஜமானனாக இருந்து, அடிமைகளான மனிதர்களையும், ஜின்களையும் நான் ஆள வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களைப் படைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான்,

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

(அல்குர்ஆன்:3:83.)

ஆனால் இந்த வரியில், பீமா வந்து ஆள வேண்டும் என்று எஜமானியத்தை அல்லாஹ்விற்கு வழங்காமல் பீமாவிற்கு வழங்கி, தன்னை பீமாவின் அடியானாக ஆக்கி அல்லாஹ்விற்கு இணையாக பீமாவை நிறுத்துகின்றார்.

“வீர மரணத்தை முகப்பாக பாடி

வந்த உயர்வான மாதா நீர் துணை செய்ய வேண்டும்”

வீர மரணமடைந்த உயர்ந்த தாயாகிய பீமா அவர்களே! நீங்கள் தான் எங்களுடன் துணை நிற்க வேண்டும் என்று இந்த வரி கூறுகிறது. பீமா ஷஹீதாக வீர மரணமடைந்தார்களா? அல்லது இயற்கை மரணம் வந்தடைந்ததா? என்பது தெரியவில்லை. அடுத்து, தனக்கு என்ன தீங்கு ஏற்பட்டாலும் அதை நீக்குபவன் அல்லாஹ் தான் என்பதை மறுத்து பீமாதான் தனக்கு ஏற்படும் தீங்கைத் தடுத்து பக்கபலமாக நிற்க வேண்டும் என்று கூறுகின்றார்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!” என்று கேட்பீராக! “அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்:39:38.)

அல்லாஹ்வைத் தவிர தீங்கைத் தடுக்கும் ஆற்றலோ அருளை வழங்கும் ஆற்றலோ யாருக்கும் இல்லை. என்ன தீங்கு ஏற்பட்டாலும் இறைநம்பிக்கையாளர்கள் அவனையே சார்ந்திருக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுகிறது. ஆனால், இந்தப் பாடல் வரியோ பீமாவே துணை என்று கூறுகிறது.

மாற்று மதத்தவர்கள் தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தங்களது கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களது வாகனங்களில் காளிகாம்பாள் துணை, அம்மன் துணை, முருகன் துணை என்று சொல்வதற்கும் பீமா துணை என்று இப்பாடல் சொல்வதற்கு என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

அல்லாஹ்வையன்றி மற்றவர்களைப் பாதுகாவலர்களாக ஏற்படுத்திக் கொண்டோருக்குத் திருக்குர்ஆன் உதாரணம் கூறுகின்றது.

அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (இதை) அவர்கள் அறியக் கூடாதா?

(அல்குர்ஆன்:29: 41.)

இந்த வசனத்தில் அல்லாஹ்வை யன்றி மற்றவர்களைப் பாதுகாவலர் களாக ஏற்படுத்திக் கொண்டோர் சிலந்திப் பூச்சியை போன்றோர் என்றும் அவர்களின் பாதுகாவலர்கள் சிலந்தி வலையைப் போன்ற பலவீனமானவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

மொத்தத்தில் “அடியார்க்கு அருள் செய்யும் அம்மா! அழகான கடலோரம் வாழ்கின்ற பீமா!” என்ற இந்தப் பாடலின் மூலம் அருள் புரியும் அதிகாரம் பீமாவின் கையில் தான் இருக்கின்றது என்றும் பீமா உயிருடன் தான் இருக்கின்றார் என்றும் இணைவைப்புக் கொள்கையை திரும்பத் திரும்ப விதைத்து இஸ்லாத்தின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். இத்தகைய இந்தப் பாடல் இஸ்லாமிய கருத்துக்களைச் சொல்லும் பாடலா? என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.