Tamil Bayan Points

நயவஞ்சகர்கள் தபூக்கில் கலந்து கொள்ளாத போது

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

Last Updated on September 30, 2016 by Trichy Farook

4677 அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்உஸ்ரா (எனும் தபூக்) போர், பத்ருப் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த அறப்போரிலும் ஒரு போதும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.

மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முற்பக-ல் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற் கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும் போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முத-ல் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப் படி அன்றும் தொழுது விட்டு, தபூக் போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களி டமும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.

(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின் தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.

ஆகவே மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்து விட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுவிக்காமல் இருந்து விடு வார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான். அப்போது தான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென மக்களுக்குத் தடை விதித்ததிலிருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்த போது இது நடந்தது. அந்நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முசலமா (ரலி) அவர்கள் என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்முசலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது என்று சொன்னார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், (அல்லாஹ்வின் தூதரே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக் கட்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்து விட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்து விடுவார்கள்என்றார்கள்.

ஆக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டது குறித்து (மக்களுக்கு) அறிவிப்புச் செய்தார்கள். -நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும் போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.

(போருக்குச் செல்லாமல் இருந்து விட்டு) சாக்குப்போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்கு களைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமை யாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

(நம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப்போக்குக் கூறுகின்றனர். (ஆகவே, அவர்களை நோக்கி, நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சாக்குப்போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒரு போதும் நம்பவேமாட்டோம். உங்கள் (வஞ்சக) விஷயங்களை நிச்சயமாக அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட் டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள், மறைவானவை, வெளிப் படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (9:94)23