Tamil Bayan Points

நபித்தோழியர் வாழ்வினிலே…

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on November 30, 2020 by

நபித்தோழியர் வாழ்வினிலே…

இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமூகம்தான் கியாமத் நாள் வரை தோன்றும் சமூகங்களிலேயே சிறந்த சமுதாயமாகும்.

இறைத்தூதர் உருவாக்கிய அந்தச் சிறந்த சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பல்வேறு மார்க்க விஷயங்களில் தலைசிறந்தவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அப்படிப் பட்ட நபித்தோழியர் வாழ்விலிருந்து சில வரலாற்றுத் துளிகளை இக்கட்டுரையில் நாம் காணவிருக்கின்றோம்.

ஆயிஷா (ரலி) அவர்களின் குர்ஆன் ஞானம்

அல்லாஹ்வின் தூதரின் அருமை மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் திருக்குர்ஆன் ஞானத்தில் மிகவும் தலைசிறந்து விளங்கியுள்ளனர். அவர்களின் திருக்குர்ஆன் ஞானத்திற்கு பின்வரும் சம்பவம் மிகச் சிறந்த உதாரணமாகும்.

மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:  நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘‘அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்’ என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும், நன்கறிந்தவனும் ஆவான் எனும் (6:103ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், ‘‘எவர் உங்களிடம் ‘முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்’ என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள் என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்’’ என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்… எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி-4855

உம்மு ஹபீபா (ரலி) அவர்களின்  பேணுதல்

நபி (ஸல்) அவர்களின் மனைவியாராகிய உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கடமையான தொழுகைகளைப் பேணியதுடன் சொர்க்கத்தில் ஒரு வீட்டைப் பெறுவதற்காக சுன்னத்தான தொழுகைகளில் மிகவும் பேணுதலாக இருந்துள்ளனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது.

இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

நூல்: முஸ்லிம்-1319

தர்மத்தில் சிறந்து விளங்கிய இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி)

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ, அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். ‘‘மக்களே! தர்மம் செய்யுங்கள்!’’ என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, ‘‘பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்’’ என்றார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை?’’ எனப் பெண்கள் கேட்டதும், ‘‘நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள்’’ என்று நபி (ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள்.

இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார்’’ என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி (ஸல்) அவாகள் வினவ, ‘‘இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்’’ என்று கூறப்பட்டது. ‘‘அவருக்கு அனுமதி வழங்குங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) ‘‘அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்வது?)’’ என்று கேட்டார். ‘‘இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும், உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள்’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி-1462

நற்காரியங்களில் கணவனுக்குத் துணை நின்ற ஸஹாபி பெண்மணி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், ‘‘எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை’’ என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?… அல்லது இவருக்கு விருந்தளிப்பவர் யார்?… என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (விருந்தளிக்கிறேன்) என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார்.

(மனைவியிடம்) ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து’’ என்று சொன்னார். அதற்கு அவருடைய மனைவி, ‘‘நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை’’ என்று சொன்னார்.

அதற்கு அந்த அன்சாரித் தோழர், ‘‘உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு’’ என்று சொன்னார்.

அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும், அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள்.

பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்…அல்லது வியப்படைந்தான் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், ‘தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்’ என்னும் (59:9ஆம்) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி-3798

உம்மு சுலைம் (ரலி) அவர்களின் இறைநம்பிக்கை

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அபூதல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூதல்ஹா (ரலி) வெளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார்.

வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா (ரலி) வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, “அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு’’ என்று பதிலளித்தார். அபூதல்ஹா (ரலி) தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார்.

பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்‘’ என்று கூறினார்கள்.

“அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்’’ என்று சுஃப்யான் கூறுகின்றார்.

 நூல்: புகாரி-1301

இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார். பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூதல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும், “அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?’’ என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா (ரலி), “கூடாது’’ என்று பதிலளித்தார். “(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்’’ என்று சொல்கின்றார்.

அதற்கு அபூ தல்ஹா (ரலி), “என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?’’ என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக’’ என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது. நபி (ஸல்) அவர்களிடம் அந்தச் செய்தி எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 4496

பொதுவாக பிள்ளைகளை இழந்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் (ரலி) தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக, “அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்’’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும், அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

கதீஜா (ரலி)யின் கனிவான ஆறுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதன் முதல் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா (ரலி) உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.

(நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக – அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா (ரலி)யிடம் வந்து, “என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்’’ என்று கூறினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)யிடம், நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி), “அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி-3

உம்மு ஸலமா (ரலி)யின் உயரிய ஆலோசனை

நபி (ஸல்) அவர்களும், தோழர்களும் உம்ரா செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.

இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “எழுந்திருங்கள்! அறுத்துப் பயிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!’’ என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! மக்கள் பலிப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்’’ என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பலிப் பிராணிகளை அறுத்து ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பலிப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி-2732

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மைமிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சாதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

வீரப் பெண்மணி உம்மு சுலைம்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா  (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்.

எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும், (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன்.

அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.

நூல்: புகாரி-4064

போர்க்களத்தில் நீர் புகட்டிய உம்மு சலீத் (ரலி)

மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள்’’ என்று கூறினர்.

அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர். அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்.’’ என்று கூறினார்கள். (மேலும்) “அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாளில் தோலினால் ஆன தண்ணீர்ப் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்’’ என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅலபா பின் அபீ மாலிக்(ரலி)

நூல்: புகாரி-4071

நாயகத்திற்கு மருந்திட்ட அன்னை ஃபாத்திமா

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

 உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்களின் முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களுடைய (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் உடைக்கப்பட்டது. (அவர்களுடைய) தலைக் கவசம் அவர்களுடைய தலை மீதே (வைத்து) நொறுக்கப்பட்டது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மேனியிலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். அலீ -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் ரத்தத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள், இரத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டு தான் போகிறது (நிற்கக் காணோம்) என்பதைப் பார்த்த போது ஒரு பாயை எடுத்துச் சாம்பலாகும்வரை அதை எரித்தார்கள். பிறகு, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். உடனே, இரத்தம் (வெளியேறுவது) நின்று விட்டது.

நூல்: புகாரி-2911

அல்லாஹ்வின் வாக்குறுதி

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன்:33:35.)