Tamil Bayan Points

நபிகள் நாயகம் மீது நமக்குள்ள கடமைகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on October 21, 2023 by Trichy Farook

முன்னுரை

மனிதனைப் படைத்தப் பிறகு, அவன் மனம்போனப் போக்கிலே வாழ்ந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடாமல் அவனுக்கு முழுமையான வாழ்க்கைக் கலையைக் கற்றுத்தருவதற்காக, அல்லாஹ் தொடர்ச்சியாகப் பல தூதர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினான். அவர்களின் வரிசையில் அல்லாஹ்வின் கிருபையால் நம்மை நிராகரிப்பெனும் காரிருள் பாதையிலிருந்து மீட்டெடுத்து, ஒளி மிக்க நேர்வழியில் அழைத்துச் செல்வதற்காக நபி (ஸல்) அவர்கள் அருட்கொடையாக அனுப்பப்பட்டார்கள்.

وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

(அல்குர்ஆன்: 21:107)

குறிப்பிட்ட இனம், மதம், மொழி, குலம் மற்றும் கோத்திரம் சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, உலகமக்கள் அனைவருக்கும் சொர்க்கத்தை கொண்டு நற்செய்தி சொல்பவராகவும், நரகத்தை கொண்டு எச்சரிப்பவராகவும் நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆகவே அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நம்மிடத்திலே சமர்ப்பித்துச் சென்றுள்ள ஓரிறைக் கொள்கையின் திருக்கலிமாவை முன் மொழிந்து, முஸ்லிம்களாக நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் ஈருலகிலும் வெற்றி பெறுகின்ற வகையில் நாம் வாழவேண்டுமெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றியும், அவர்கள் மீது நமக்குள்ள கடமைகள் என்ன? என்பதை பற்றியும் அறிந்து, அதனடிப்படையில் நமது வாழ்வை அமைத்து கொள்வது அவசியமாகும்.

நபிகளாரை நம்பிக்கைக் கொள்ளுதல்

இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்பவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளாளனாகிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆவார்கள் என்று உறுதியாக நம்பவேண்டும். மேலும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கின்ற அருள்மறையான அல்குர்ஆனைக் கொடுத்து அனுப்பப்பட்டார்கள். அவர்கள் இம்மார்க்கத்தை மக்கள் மன்றத்தில் சுயமாகச் சிந்தித்து முன்வைக்கவில்லை.

மாறாக தனக்கு வழங்கப்பட்ட வஹீயின் அடிப்படையில் தான் தனது தூதுத்துவப் பணியை அழகான முறையில் நிறைவேற்றினார்கள். அவர்களோடு தூதுத்துவம் முற்றுப்பெற்றுவிட்டது. இனிமேல் அவர்களுக்குப் பிறகு எந்த இறைத் தூதரும் வரப்போவதில்லை என்று நம்பிக்கைக் கொள்வதும் மிக முக்கியம். அப்போதுதான் அவர்கள் முழுமையாக நம்பிக்கைக் கொண்டவர்களாக ஆக முடியும். இதைத் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்

فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِىْۤ اَنْزَلْنَا‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

எனவே அல்லாஹ்வையும், அவனது தூதரையும், நாம் அருளிய ஒளியையும் நம்புங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 64:8)

فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهِ النَّبِىِّ الْاُمِّىِّ الَّذِىْ يُؤْمِنُ بِاللّٰهِ وَكَلِمٰتِهٖ وَاتَّبِعُوْهُ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏

அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன்: 7:158)

இஸ்லாத்தின் அடிப்படையே

عَنِ ابْنِ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

 بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ ، وَإِقَامِ الصَّلاَةِ ، وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ ، وَصَوْمِ رَمَضَانَ

இந்த வசனங்களை மெய்ப்பிக்கும் முகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.

2. தொழுகையை நிலைநிறுத்துவது.

3. (கடமையானாவர்கள்) ஸகாத் வழங்குவது.

4. (இயன்றவர்கள் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.

5. ரமளானில் நோன்பு நோற்பது.

அறி : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி-8 

عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ

أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ وَيُقِيمُوا الصَّلاَةَ وَيُؤْتُوا الزَّكَاةَ فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلاَّ بِحَقِّ الإِسْلاَمِ وَحِسَابُهُمْ عَلَى اللهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்’ என உறுதி மொழியளித்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காதவரை (இணை வைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன்.

இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் (இரகசியமாக குற்றமிழைத்தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.

அறி : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி-25 

இதற்கு நேர்மாற்றமாக இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் காதியான் என்ற ஊரில் பிறந்த மிர்சாகுலாம் காதியான் என்பவனை இறைத்தூதர் எனக் குருட்டுத் தனமாகக் கொக்கரித்துக் கொண்டிருக்கின்ற காதியானிகள், அலீ (ரலி) அவர்களுக்கு வந்த வஹீயை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தட்டிப் பறித்துவிட்டார்கள் என்று கதைப் பேசித்திரிகின்ற ஷியாக்கள், இவர்களெல்லாம் முஸ்லிம்கள் கிடையாது. இவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி வழிகேட்டிலே வீழ்ந்துவிட்ட இறை நிராகரிப்பாளர்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நபிகளாருக்கு முழுமையாகக் கட்டுப்படுதல்

மனித சமுதாயம் எப்படி வாழ வேண்டும்? எப்படியெல்லாம் வாழக் கூடாது? என்பதைத் தெளிவுபடுத்தி, அவர்களை வழி நடத்திச் செல்வதற்காக ஏக இறைவனால் நபி (ஸல்) அவர்கள் இறுதித் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதனடிப்படையில் முஃமின்கள் தங்களது வாழ்நாள்முழுவதும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகள் என்ன? எல்லாக் காலகட்டத்திலும் எச்சரிக்கையாகத் தவிர்ந்து இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்பதை நபி (ஸல்) நமக்கு சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

அந்த மார்க்கச் சட்டங்களில் எதனையும் மறைக்கவோ, மாற்றவோ, மறுக்கவோ எவருக்கும் எந்த உரிமையும் இல்லை. இன்னும் அவற்றை அலட்சியப்படுத்தி வரம்புமீறாமல், அதற்கேற்ப முழுமையாகக் கட்டுப்பட்டு நாம் வாழவேண்டும். இவ்வாறுதான் அல்லாஹ் திருமறையில் கட்டளையிடுகிறான்.

وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا َنَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ ‌ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(அல்குர்ஆன்: 59:7)

தனது கட்டளைகளுக்கு மக்கள் கட்டுப்பட்டு வாழவேண்டும். அப்போது தான் அவர்கள் இறையருளைப் பெற்று சொர்க்கம் செல்ல முடியும் என்பதை பின்வருகின்ற ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ ، وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ ، وَمَنْ يُطِعِ الأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي ، وَمَنْ يَعْصِ الأَمِيرَ فَقَدْ عَصَانِي وَإِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللهِ وَعَدَلَ فَإِنَّ لَهُ بِذَلِكَ أَجْرًا وَإِنْ قَالَ بِغَيْرِهِ فَإِنَّ عَلَيْهِ مِنْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார். எவர் தலைவருக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் தலைவருக்கு மாறுசெய்கிறாரோ அவர் எனக்கு மாறுசெய்தவராவார்.

தலைவர் ஒரு கேடயம். அவருக்குக் கீழிருந்து போரிடப்படும்; அவர் மூலம் பாதுகாப்பு பெறப்படும். அவர் (தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்து கொண்டால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத (தீய) வற்றை அவர் கட்டளையிட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர் மீது(ம்) சாரும்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி-2957 

இந்த செய்தியை சற்றுக் கவனித்துப் பார்த்தால், இன்று தங்களை முஸ்லிம் என்று அழைத்துக் கொண்டு, குர்ஆன் மட்டுமே போதும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுடைய சொல், செயல், அங்கீகாரத்தில் நமக்கு வழிகாட்டுதல் இல்லை என்று வியாக்கியானங்கள் கூறி அலைந்து கொண்டிருப்பவர்கள் முஃமின்கள் இல்லை, அவர்கள் நிரந்தரமான நரக நெருப்பிற்கு தகுதியான இறை நிராகரிப்பாளர்கள்தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

தூதரின் தீர்ப்பின் பக்கம் திரும்புதல்!

இந்தக் காரியத்தைச் செய்ய மார்க்கத்தில் அனுமதி இருக்கின்றதா? இல்லையா? இந்த விஷயங்களில் ஈடுபட மார்க்கத்தில் தடை உள்ளதா? இல்லையா? இந்த அமலை எப்படி செய்வது? இந்த அமலை இப்படிச் செய்தால் என்ன? இது போன்ற கேள்விகள், கருத்துவேறுபாடுகள், மற்றும் முரண்பாடுகள் பிரச்சனைகள் மறுமை நாள்வரை மக்கள் மத்தியில் முளைத்துக் கொண்டுதான் இருக்கும்.

அப்போதெல்லாம் மனோ இச்சைக்கு மயங்கி முன்னோர்கள், தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துக்களுக்குக் கண்மூடித்தனமாகக் கட்டுப்பட்டுவிடக் கூடாது. மாறாக அவற்றை நபிகளாரின் தூய்மையான வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து, ஆராய்ந்து அதிலிருந்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவல்லாத வேறு வழியைத்தேடிச் செல்பவர்கள் வழிகேட்டிலே விழுந்துவிடுவார்கள். இவ்வாறே அல்லாஹ் தனது திருமறையில் தீர்ப்பளிக்கிறான்.

اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 24:51)

فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُوْنَ حَتّٰى يُحَكِّمُوْكَ فِيْمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوْا فِىْۤ اَنْفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوْا تَسْلِيْمًا‏

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 4:65)

إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللهِ ، وَأَحْسَنَ الْ هَدْيِ هَدْيُ مُحَمَّدٍ ، وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا ، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ ، وَكُلُّ ضَلاَلَةٍ فِي النَّارِ ،

செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மதின் வழியாகும். காரியங்களில் மிகக் கெட்டது புதிதாக ஏற்படுத்தப்பட்டதாகும். புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். வழிகேடு அனைத்தும் நரகத்திற்குரியவையாகும்.

அறி : ஜாபிர் (ரலி)
நூல் : நஸாயீ-1560 

மேற்கண்ட குர்ஆன், ஹதீஸ்களை சிந்தித்துப் பார்த்தால் இன்று நமக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்களின் போதனைகளுக்கு எதிராக, இது மார்க்கத்தின் ஆதாரம்தான் என்று மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்ற குப்பைகளில் புரண்டுக் கொண்டிருப்பவர்களும், நன்மைகள் கொட்டிக்கொடுக்கப்படும் என்று நினைத்துக் கொண்டு தர்கா வழிபாடு, மீலாதுவிழா, கந்தூரி விழா, மவ்லூது, பாத்திஹா, ஜோதிடம், பால்கிதாபு பார்த்தல் போன்றகேடுகெட்ட காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களும் மறுமையில் கைசேதப்பட்டு, நஷ்டவாளிகளாக நரகத்தில் நுழையக்கூடியவர்கள் தான் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

நபிகளாரை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளுதல்

தூதுத்துவதத்திற்கு முன்னும் பின்னும் பரிசுத்தமாக வாழ்ந்தார்கள், மாமனிதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள். மாற்றார்களே போற்றுமளவிற்கு நற்பண்புகளின் உறைவிடமாக, ஒழுக்கச் சீலராகத் திகழ்ந்தார்கள். எந்தளவிற்கெனில், எதை ஓதிக்காட்டினர்களோ அந்த வேதவரிகளுக்கு விரிவுரையாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருந்தது.

ஒரு அடியான், தனக்கு இறைவன் அளித்த அருட்கொடைகளைப் பயன்படுத்துவது எப்படி? தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தாரிடம் எத்தகைய அணுகுமுறையை அமைத்து கொள்ள வேண்டும்?

இறையருளைப் பெறுவதற்கேற்ப எவ்வாறு மார்க்கத்தில் பேணுதலாக இருப்பது? இன்பங்கள், துன்பங்களின்போது எவ்வாறு இருக்க வேண்டும்? சுருங்கக் கூறின் இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுகின்ற விதத்தில் வாழ்வது எப்படி? என்பதை நமக்கு பிரகடனப்படுத்தி, அதை அப்படியே தமது வாழ்விலும் நெறி தவறாமல் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள் நபி (ஸல்) அவர்கள். ஆதலால்தான் அல்லாஹ் ஈமான்கொண்டவர்களுக்கு இவ்வாறு திருமறையில் அறிவுரையைக் கூறுகிறான்.

لَقَدْ كَانَ لَكُمْ فِىْ رَسُوْلِ اللّٰهِ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ وَذَكَرَ اللّٰهَ كَثِيْرًا ؕ‏

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:21)

 وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ‏

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். 

(அல்குர்ஆன்: 68:4)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை விதம் எவ்வாறு இருந்தது என்பதை, அவர்களுடைய அன்பு மனைவியான ஆயிஷா நாயகி அவர்களே இவ்வாறு விளக்குகிறார்கள்.

فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَنْبِئِينِى عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم
قَالَتْ أَلَسْتَ تَقْرَأُ الْقُرْآنَ قُلْتُ بَلَى. قَالَتْ فَإِنَّ خُلُقَ نَبِىِّ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ الْقُرْآنَ

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குணம், குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள்.

அறி : சஃத் பின் ஹிஷாம்
நூல் : முஸ்லிம்-1357 

நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத்தந்த வாழ்க்கை முறைதான், மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுத்தருகிறது; மனிதனிடத்தில் மறைந்துள்ள மிருகத்தன்மைகளைக் களைந்தெறிந்து அவனைப் தூய்மையானவனாக மாற்றுகிறது.

மகத்துவ மிக்க அறிவை மூடப்பழக்கவழங்களில் அடகுவைத்துத் திரிவதைத் தடுத்து, பகுத்தறிவுமிக்க பண்பாட்டைப் போதிக்கிறது; மனிதனைத் தீண்டுகின்ற அனைத்துவிதமானப் பிரச்சினைகளுக்கும் அற்புதமான தீர்வையளிக்கின்றது என்பதை அறிந்து, இன்று இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணியணியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம்களில் பலர் மார்க்கத்தின் அடிப்படையான விஷயங்களில் நபிகளாருக்கு மாறுசெய்வதோடு, அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாக வதந்திகளைப் பரப்புதல், கோழைத்தனம், பொய்சத்தியம் செய்தல், குழப்பத்தைத் தோற்றுவித்தல், துருவித் துருவி விசாரித்தல், பட்டப்பெயர் சூட்டுதல், கேலிகிண்டல் செய்தல், பெருமையடித்தல், முகஸ்துதி, வீண்விரையம் மற்றும் கஞ்சத்தனம் இதுபோன்ற தவறானப் பண்புகளைத் தாங்கியவர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்பிக்கைக் கொள்கிறேன் என்று உதட்டளவில் மட்டும் கூறிவிட்டு, உலக ஆதாயங்களுக்காக அண்ணலாரின் போதனைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனிமேலாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாக நமக்கு கிடைத்துள்ள இஸ்லாத்தின் இரத்தினக் கருத்துக்களின் மகிமையை உணர்ந்து வணக்க வழிபாடுகள், திருமணம், பொருளாதாரம், நிர்வாகம், இயற்கைத் தேவைகள், பொறுப்புகள் இப்படி வாழ்வின் அனைத்து நொடிகளிலும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ நாம் முற்படவேண்டும். அப்போதுதான் நாம் படைத்தவனை நேசிப்பவர்களாக மாறி அவனது நேசத்தைப் பெறமுடியும். ஏனெனில் இவ்வாறே அருள்மறையில் அல்லாஹ் ஆணையிடுகிறான்.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

(நபியே!) நீர் கூறுக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; மேலும், உங்கள் பாவங்களையும் உங்களுக்காக மன்னிப்பான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன்: 3:31)

நபிகளாரை நேசித்தல்

اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ‌ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ‌ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ مَّعْرُوْفًا‌ ؕ كَانَ ذٰ لِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا‏

நம்பிக்கை கொண்டோருக்கு, தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர். 

(அல்குர்ஆன்: 33:6)

عَنْ أَنَسٍ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :
 لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறை நம்பிக்கை (ஈமான்) கொண்டவர் ஆகமாட்டார்.

அறி : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-15 

عَنْ أَنَسٍ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
ثَلاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا ، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

அறி : அனஸ் (ரலி)
நூல் : புகாரி-16 

நபிகளாரின் மீதான நேசத்தை வெளிப்படுத்துவது எப்படி?

பாங்கு சொல்லப்படும் போது, அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்பதை செவியுற்றால் இரு கட்டைவிரல்களையும் கண்களில் ஒத்திக்கொள்ளுதல், முஹம்மது என்று அட்டையில் எழுதி வீட்டு முற்றத்தில் மாட்டி வைத்தல் போன்ற காரியங்கள் நபிகளாரை நேசிப்பதின் அடையாளமாக ஆகுமா ? நிச்சயமாக இல்லை.

அண்ணலாரை நேசிக்கிறோம் என்றால், அவர்கள் எந்ததெந்தக் காரியங்களையெல்லாம் கண்டு வெறுத்தார்களோ, சமுதாயத்திலிருந்து அறுத்தெறிய அரும்பாடு பட்டார்களோ அவைகளை நாமும் வெறுத்து ஒதுக்கவேண்டும். அவைகளால் சமுதாயத்தில் தோன்றியிருக்கின்ற தீயவிளைவுகளைத் துடைத்தெறியத் துணிய வேண்டும். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நாம் நேசிப்பதின் உண்மையான அர்த்தமாக இருக்க முடியும்.

இன்னும் நமது வாழ்வின் அனைத்து அசைவுகளிலும் நபிகளாரின் போதனைகளை பிரதிபலிக்க வேண்டும். உலகமே எதிர்த்து நின்றாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வாழ்க்கைத் திட்டத்தைத் தயக்கமின்றி பின்பற்ற வேண்டும். அப்போதுதான் நபிகளாரை நாம் நேசித்தவர்களாக ஆக முடியும்.

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரைவிட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்டமாட்டான்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:24)

வரம்பு மீறி

ஆனால் சிலர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிக்கின்றோம்; அவர்களை புகழ்கின்றோம் எனக் கூறிக்கொண்டு, நன்மைகளை நாசமாக்குகின்ற நரகத்தில் நிரந்தரமாகத் தள்ளுகின்ற, சொர்க்கத்தை ஹராமாக்குகின்ற இணைவைப்பிலே ஈடுபட்டு ஈமானைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எந்தளவிற்கெனில் நபி (ஸல்) அவர்களுக்குப் பாவங்களை மன்னித்தல், நன்மைகளை வாரிவழங்குதல், குழந்தை பாக்கியத்தைத் தருதல், மறைவான ஞானம், நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுகின்ற தன்மைகளெல்லாம் இருப்பதாக புத்தகங்களில் எழுதிவைத்து ஓதிக்கொண்டு, அதை மக்கள் மத்தியில் மார்க்கத்தின் பெயரால் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதரை அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்விற்கு இணையாக வைத்து, ஷிர்க் எனும் பகிரங்கமான வழிகேட்டில் வீழ்ந்துகிடக்கிறார்கள். இவர்களின் கண்மூடித்தனமானக் கருத்துக்களைக் களைந்தெறிந்து, கடுமையாகக் கண்டிக்கின்ற வகையிலே திருமறையில் அல்லாஹ் கூறுகிறான்:

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا

“நான் உங்களைப் போன்ற மனிதன்தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 18:110)

قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ ؕ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ ۖ ‌ۛۚ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ‌ ‌ۛۚ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ

“அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன்: 7:188)

நபிகளார் மீது ஸலவாத் கூறுதல்

இனத்திற்காகப் போராடியவர்கள், தான தர்மங்களை வாரி வழங்கியவர்கள், சமூகக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள், தேசத்தின் விடுதலைக்காக இன்னுயிர் நீர்த்தவர்கள் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களை வெறுத்தவர்கள் இப்படி மக்களின் நலனில் அக்கறைக் காட்டியவர்களைப் பற்றி அவர்களின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே புகழ்மாலைகள் பாடுவதைப் பார்க்கின்றோம்.

அவர்களின் நினைவாக மணிமண்டபங்களையும் நிழற்குடைகளையும் எழுப்பி அவர்களைப் போற்றித் துதிப்பாடுவதையும் கண்கூடாகக் நாம் கண்டுவருகிறோம். ஆனால் இவர்களையெல்லாம்விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பன்மடங்கு மேன்மையானவர்கள் என்பதை அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தைத் தெரிந்து கொண்டவர்கள் நன்றாக உணர்ந்திருப்பார்கள்.

ஆதலால்தான் தூதர் (ஸல்) அவர்கள் மறைந்து 1400 வருடங்களுக்கும் அதிகமாக காலச்சக்கரம் சுழன்றிருந்தாலும், அவர்களின் வாழக்கையின் அடிச்சுவடுகளை வாழையடி வாழையாகப் பின்பற்றி வாழ்கின்ற சமுதாயம் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய மகத்தானத் தாக்கத்தை மாற்றத்தைத் மனித சமுதாயத்தில் தோற்றுவித்த மாமனிதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீது முஃமின்கள் அனைவரும் ஸலவாத் கூறி, அன்றாடம் அவருக்காகப் பிரார்த்தனை புரிந்து அவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்.

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

(அல்குர்ஆன்: 33:56)

عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
« إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ آدَمُ وَفِيهِ قُبِضَ وَفِيهِ النَّفْخَةُ وَفِيهِ الصَّعْقَةُ فَأَكْثِرُوا عَلَىَّ مِنَ الصَّلاَةِ فِيهِ فَإِنَّ صَلاَتَكُمْ مَعْرُوضَةٌ عَلَىَّ ». قَالَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تُعْرَضُ صَلاَتُنَا عَلَيْكَ وَقَدْ أَرِمْتَ يَقُولُونَ بَلِيتَ. فَقَالَ « إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ حَرَّمَ عَلَى الأَرْضِ أَجْسَادَ الأَنْبِيَاءِ

நபி (ஸல்) அவர்கள், நாட்களில் மிகச்சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். எனவே அன்று என்மீது ஸலவாத் அதிகமாகக் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத் என்னிடம் எடுத்துக்காட்டப்படுகின்றது என்று கூறினார்கள்.

இறைத்தூதர் அவர்களே! நீங்கள் மண்ணோடு மண்ணான நிலையில் எங்களின் ஸலவாத் எப்படி எடுத்துக் காண்பிக்கப்படும் என்று நபித்தோழர்கள் கேட்டனர். நிச்சயமாக நபிமார்களின் உடல்களை (சாப்பிட) பூமிக்கு அல்லாஹ் தடை விதித்துவிட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி)
நூல் : அபூதாவூத்-1047 

தன் மீது அதிகமதிகமாக ஸலவாத் சொல்லுங்கள் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், அதை எப்படிச் சொல்லவேண்டும் என்பதையும் கற்றுத்தந்துள்ளார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுவதின் மூலம், மறுமையில் அவர்களுடைய பரிந்துரையைப் பெறுகின்ற பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ
، قِيلَ يَا رَسُولَ اللهِ أَمَّا السَّلاَمُ عَلَيْكَ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ الصَّلاَةُ قَالَ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ ، وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது “சலாம்’ கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். (தங்கள் மீது) “ஸலவாத்’ கூறுவது எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின், வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்” என்று சொல்லுங்கள்!” என பதிலளித்தார்கள்.

அறி : கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல் : புகாரி-4797 

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ
مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பாங்கு சப்தத்தைக் கேட்(டு முடிக்)கும்போது “அல்லாஹ்ம்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா.

(பொருள்:இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலை நிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரித்தான (சொர்க்கத்தின்) உயரிடத்தையும் தனிச் சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)”

என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.

அறி : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல் : புகாரி-614 

மாறாக தன்னுடைய பெயர் சொல்லப்பட்டும் தன்மீது ஸலவாத் கூறாமல் அலட்சியமாக இருப்பவர்களை நபி (ஸல்) அவர்களே கடுமையாக எச்சரித்துள்ளர்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْتَقَى الْمِنْبَرَ فَقَالَ: ” آمِينَ آمِينَ آمِينَ ”  فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللهِ مَا كُنْتَ تَصْنَعُ هَذَا؟ فَقَالَ: ” قَالَ لِي جَبْرَائِيلُ عَلَيْهِ السَّلَامُ: رَغِمَ أَنْفُ عَبْدٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: رَغِمَ أَنْفُ عَبْدٍ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَقُلْتُ: آمِينَ، ثُمَّ قَالَ: رَغِمَ أَنْفُ عَبْدٍ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ فَقُلْتُ: آمِينَ

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது ஏறினார்கள். ஆமீன் ஆமீன் ஆமீன் என்றுக் கூறினார்கள். ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் எந்தவொரு அடியான் ரமலானை அடைந்தும் அவனது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்றுக் கூறினேன்.

பிறகு எந்த அடியானிடத்தில் என்னை பற்றி சொல்லப்படும் போது அவன் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள். அதற்கு ஆமீன் என்றுக் கூறினேன்.

எந்த அடியான் தனது தாய் தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரையோ பெற்றிருந்தும் சொர்க்கம் செல்லவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்றுக் கூறினேன் என்று பதிலளித்தார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : பைஹகீ-8504 (8767)

அபூதாவூத்-1047 ஹதீஸிலுள்ள என் மீது ஸலவாத் சொல்லப்பட்டால் அது எனக்கு எடுத்துக்காட்டப்படும் என்ற நபிகளாரின் கூற்றைச் சற்று நாம் சிந்துத்துப் பார்க்கவேண்டும். இங்கு நீங்கள் சொல்லுகின்ற ஸலவாத்தை தானாகவே கேட்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறவேயில்லை. மாறாக அல்லாஹ்வின் அனுமதியோடு மலக்குமார்களின் மூலமாக தனக்கு எடுத்துக்காட்டப்படும் என்பதையே இங்கு கூறுகிறார்கள்.

ஆகவே அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் இறந்தபின்னால், அவர்களுக்கும் இந்த உலகத்திற்குமுள்ள தொடர்பு துண்டிக்கப் பட்டுவிடும். இங்கு நிகழ்கின்ற விஷயங்களை அவர்களால் ஒருபோதும் அறிய முடியாது எனும்போது, இறைநேசர்கள் என்ற பெயரில் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களால் இங்கு நிகழ்வதை எப்படி அறிந்து கொள்ளமுடியும்?. தர்காக்களில் மண்டியிட்டுக் கதறக்கூடியவர்களின் கோரிக்கைகள், பிரார்த்தனைகள் மற்றும் வேண்டுதல்களை எவ்வாறு அவர்களால் செவியேற்க முடியும்? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஆகவே குர்ஆன், ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதை போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சரியான முறையில் நம்பிக்கைக் கொண்டு, அவர்களை நமது வாழ்வின் முன்மாதிரியாக முழுமையாக ஏற்று, அவர்களின் அடிச்சுவடுகளை அப்படியே அழகான முறையில் பின்பற்றி, உலகமக்கள் அனைவரைவிட அவர்களை அதிகமாக நேசித்து, அவர்கள் மீது ஸலவாத் கூறி ஈருலகிலும் வெற்றிபெறக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை மாற்றி அருள்புரிவானாக.

எம். முஹம்மத் சலீம், மங்களம்