Tamil Bayan Points

நபிகளார் மகிழ்ந்து சிரித்த சம்பவங்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

Last Updated on September 23, 2023 by Trichy Farook

முன்னுரை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் அவர்களை சிரிக்க வைத்துள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்த நிகழ்வுகள் பிறர் மனதைத் துன்புறுத்தும் வண்ணம் ஒருபோதும் அமைந்ததில்லை.

சிரிப்பிற்குரிய சரியான காரணமுள்ள சந்தர்ப்பங்களில் தான் சிரித்திருக்கிறார்கள். அவர்கள் சிரிப்பில் சில சமயங்களில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்கு சிரித்திருக்கிறார்கள் அப்படிப்பட்ட சில நிகழ்வுகளை பார்ப்போம்.

மதீனாவில் என்னை விட ஏழை இல்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார்.

தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார்.

அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி-1936 , 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711

குதிரைக்கு இறக்கை உண்டு?

 عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ
قَدِمَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِى سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ « مَا هَذَا يَا عَائِشَةُ ». قَالَتْ بَنَاتِى. وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ « مَا هَذَا الَّذِى أَرَى وَسْطَهُنَّ ». قَالَتْ فَرَسٌ. قَالَ « وَمَا هَذَا الَّذِى عَلَيْهِ ». قَالَتْ جَنَاحَانِ. قَالَ « فَرَسٌ لَهُ جَنَاحَانِ ». قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلاً لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ.

நபி (ஸல்) தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து (வீட்டிற்கு) முன்னோக்கினார்கள். (ஆயிஷா (ரலி)) அவர்களின் அலமாரியின் மீது ஒரு திரைச் சீலையிருந்தது. (அதில் ஆயிஷாவிற்குரிய பெண் குழந்தைகளின் உருவம் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் இருந்தன.) அப்போது காற்றடித்து ஆயிஷாவின் விளையாட்டுப் பெண் குழந்தை பொம்மைகளை விட்டும் திரைச்சீலையின் ஒரு ஓரத்தை விலக்கியது. அப்போது நபியவர்கள், “”ஆயிஷாவே இது என்ன?” என்று கேட்டார்கள்.

என்னுடைய பெண் (பொம்மை) குழந்தைகள் என்று அவர் கூறினார். அவைகளுக்கு மத்தியில் இலை அல்லது தோலால் ஆன இரு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரையை நபியவர்கள் பார்த்தார்கள். உடனே நபியவர்கள், “அவைகளுக்கு மத்தியில் நான் காண்கின்றேனே, அது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கவர், குதிரை என்று கூறினார். “அதன் மீது என்ன?” என்று நபியவர்கள் கேட்டார்கள். “இரண்டு இறக்கைகள்” என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். “குதிரைக்கு இரண்டு இறக்கைகளா?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “”சுலைமான் நபிக்கு குதிரை இருந்ததாகவும், அதற்கு இறக்கைகள் இருந்ததாகவும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டார்கள். உடனே நபியவர்கள் தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள்.

அறி : ஆயிஷா (ரலி),
நூல் : அபூதாவூத்-4932 (4284) 

பாவத்திற்கு நன்மை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:

சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அப்போது, “இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்” என்று கூறப்படும்.

அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, “”நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்’ என்று கூறப்படும். அவரும் “ஆம்’ என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார். இந்நிலையில் அவரிடம், “நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு” என்று கூறப்படும். அப்போது அவர், “”இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!” என்று கேட்பார். (இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறி : அபூதர் (ரலி),
நூல் : முஸ்லிம்-310 , 314

அல்லாஹ்வின் வல்லமையை மெய்ப்பித்த யூதர்

عَنْ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ

جَاءَ حَبْرٌ مِنَ الأَحْبَارِ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّا نَجِدُ أَنَّ اللَّهَ يَجْعَلُ السَّمَاوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ وَالْمَاءَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ وَسَائِرَ الْخَلاَئِقِ عَلَى إِصْبَعٍ فَيَقُولُ أَنَا الْمَلِكُ فَضَحِكَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ تَصْدِيقًا لِقَوْلِ الْحَبْرِ ثُمَّ قَرَأَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ}

யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! அல்லாஹ்,வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதர படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம் என்று சொன்னார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன் எனும் (அல்குர்ஆன்: 39:67) ஆவது வசனத்தை ஓதினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி-4811 

சொர்க்கவாசிகளின் விருந்துணவு

عَنْ أَبِي سَعِيدٍ الْخَدْرِيِّ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
تَكُونُ الأَرْضُ يَوْمَ الْقِيَامَةِ خُبْزَةً وَاحِدَةً يَتَكَفَّؤُهَا الْجَبَّارُ بِيَدِهِ كَمَا يَكْفَأُ أَحَدُكُمْ خُبْزَتَهُ فِي السَّفَرِ نُزُلاً لأَهْلِ الْجَنَّةِ فَأَتَى رَجُلٌ مِنَ الْيَهُودِ فَقَالَ بَارَكَ الرَّحْمَنُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ أَلاَ أُخْبِرُكَ بِنُزُلِ أَهْلِ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ بَلَى قَالَ تَكُونُ الأَرْضُ خُبْزَةً وَاحِدَةً كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَنَظَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلَيْنَا ثُمَّ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ثُمَّ قَالَ أَلاَ أُخْبِرُكَ بِإِدَامِهِمْ قَالَ إِدَامُهُمْ بَالاَمٌ وَنُونٌ قَالُوا وَمَا هَذَا قَالَ ثَوْرٌ وَنُونٌ يَأْكُلُ مِنْ زَائِدَةِ كَبِدِهِمَا سَبْعُونَ أَلْفًا.

நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமைபடைத்த(இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான் என்று கூறினார்கள்.

அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் செர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சரி’ என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும் என்று கூறினார். அபபோது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள்.

பிறகு உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா? என்று அந்த யூதர் கேட்டுவிட்டு, அவர்களின் குழம்பு பாலாம், மற்றும் நூன் என்றார். மக்கள் இது என்ன? என்று கேட்டார்கள். அந்த யூதர் (அவை) காளைமாடும், மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள் என்று கூறினார்.

அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி-6520 

நரகத்திலிருந்து தவழ்ந்தபடி சொர்க்கத்திற்குச் செல்பவர்

عَنْ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
إِنِّي لأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً رَجُلٌ يَخْرُجُ مِنَ النَّارِ كَبْوًا فَيَقُولُ اللَّهُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى فَيَقُولُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلأَى فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلأَى فَيَقُولُ اذْهَبْ فَادْخُلِ الْجَنَّةَ فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا ، أَوْ إِنَّ لَكَ مِثْلَ عَشَرَةِ أَمْثَالِ الدُّنْيَا فَيَقُولُ تَسْخَرُ مِنِّي ، أَوْ تَضْحَكُ مِنِّي وَأَنْتَ الْمَلِكُ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ ، وَكَانَ يُقَالُ ذَلِكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً.

நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ் நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்பான்.

அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பி வந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவே, அவர் திரும்பிவந்து என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன் என்று கூறுவார். அதற்கு அவன் நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்.

ஏனெனில், உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு’ அல்லது உலகத்தைப் போன்று பத்து மடங்கு’ (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு என்று சொல்வான். அதற்கு அவர் அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?’ அல்லது என்னை நகைக்கின்றாயா?’ என்று கேட்டார். (இதைக் கூறிய போது) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தம் கடைவாய்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.

அறி : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி-6571 

இடி மின்னலுடன் மழை

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் மக்கள் மழை பெய்யாததை முறையிட்டனர். உடனே அவர்கள் மேடை ஏற்படுத்த உத்தரவிட்டார்கள். அதன்படி தொழும் திடலில் மேடை வைக்கப்பட்டது. மக்கள் (மழைத் தொழுகைக்கு) புறப்பட்டு வரவேண்டிய நாளை நிர்ணயித்தார்கள். அன்னை ஆயிஷா (ரலி) (தொடர்ந்து) அறிவிக்கின்றார்.

சூரியன் வெளிப்பட்டதும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து மிம்பரில் அமர்ந்தார்கள். தக்பீர் கூறி அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். பிறகு, “உங்கள் நகரம் பஞ்சத்தால் வாடுவதையும், உரிய காலத்தில் மழை பெய்யாது (பிந்தி) விட்டதையும் நீங்கள் முறையிடுகின்றீர்கள். அல்லாஹ், உங்களை அவனிடமே பிரார்த்திக்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றான். மேலும் அவன் உங்களுடைய பிரார்த்தனையை ஏற்பதாகவும் உங்களுக்கு வாக்களித்து இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

பிறகு,”அகிலத்தாரையெல்லாம் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் தீர்ப்பு நாளின் அதிபதி. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அல்லாஹ் தான் நாடியதையே செய்வான். யா அல்லாஹ்! நீதான் அல்லாஹ்! உன்னைத்தவிர வணங்கப்படுவதற்கு வேறு கடவுள் இல்லை. நீ தேவையற்றவன். நாங்கள் தேவையுள்ளவர்கள்.

எங்கள் மீது மழையை இறக்குவாயாக! நீ எங்களுக்கு இறக்கியதை வலிமையளிக்கக் கூடியதாகவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போதியதாகவும் ஆக்குவாயாக!” என்று கூறினார்கள். பிறகு தனது இரு கைகளையும் உயர்த்தினார்கள். அவர்களின் அக்குள்களின் வெண்மை தெரிகின்றவரை விடாது கைகளை உயர்த்தினார்கள். பிறகு தனது முதுகை மக்கள் பக்கம் திருப்பிக் கொண்டு (கிப்லாவை முன்னோக்கி) தனது மேலாடையை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.

(தொடர்ந்து) கைகளை உயர்த்தி வைத்துக் கொண்டு தான் இருந்தார்கள். பிறகு மக்களை நோக்கினார்கள். பின்னர் கீழே இறங்கி இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அல்லாஹ் மேகத்தை தோன்றச் செய்ததும் இடி இடித்து, மின்வெட்டி அல்லாஹ்வின் உத்தரவைக் கொண்டு மழை பெய்தது.

தனது பள்ளிக்குள் (அவர்கள்) வந்திருக்கமாட்டார்கள். ஆனால் (அதற்குள்) மழை நீர் பெருக்கெடுத்து ஓடத்துவங்கியது. (மழைக்கு ஒதுங்குவதற்காக) மக்கள் வீடுகளை நோக்கி விரைவதை அவர்கள் கண்டதும் தனது கடைவாய்ப்பற்கள் தெரியும் வரை சிரித்தார்கள். பிறகு “நிச்சயமாக அல்லாஹ் அனைத்திலும் ஆற்றல் பெற்றவன் என்றும், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியாராகவும், அவனது திருத்தூதராகவும் ஆவேன் என்றும் சாட்சி சொல்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறி : ஆயிஷா (ரலி),
நூல் : அபூதாவூத்-1173 

எதற்கெடுத்தாலும் சிரிக்காமல், பிறரை ஜால்ரா தட்டுவதற்கு சிரிக்காமல்,  நாமும் நபியவர்களைப் போன்று சிரிக்கும் பண்பை ஏற்படுத்திக் கொள்வோமாக! அல்லாஹ் அருள்புரிவானாக!