Tamil Bayan Points

நபிகளார் கூறிய நீர் மேலாண்மை!

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

Last Updated on December 31, 2021 by Trichy Farook

நபிகளார் கூறிய நீர் மேலாண்மை!

மனித சமுதாயம் இன்று சந்திக்கும் பிரச்சனைகளுள் தலையாயது தண்ணீர் பற்றாக்குறையாகும். வீதியில் எங்கு பார்த்தாலும் காலிக்குடங்களுடன் தண்ணீருக்காக அலைமோதும் கூட்டத்தை அதிகமாகவே பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் நீரால் நிரம்பியிருந்த ஏரி, குளம், போன்றவை இன்று சிறுவர்களின் விருப்பமான விளையாட்டு மைதானங்களாக மாறிப் போயுள்ளது.

இருக்கின்ற ஏரிகளை எல்லாம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றி, தண்ணீர் லாரிக்குப் பின்னே மக்கள் அலைந்து திரியும் அவலம் நாள்தோறும் நடந்தேறுகிறது. பல பகுதிகளில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போன்ற போராட்டங்களும் வெடிக்கின்றன. போதாக்குறைக்கு தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு சரிந்துள்ளது.

மாநில நில மற்றும் நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம், நிலத்தடி நீர்மட்டம் குறித்துக் கடந்த மார்ச் மாதம் ஆய்வு நடத்தியது. இதே அமைப்பு கடந்தாண்டில் 2016 மார்ச் மாதம் நடத்திய ஆய்வுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பெருமளவு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஐந்தாறு மாவட்டங்களின் நிலையை வைத்து  நிலத்தடி நீர் நிலைமை எவ்வளவு மோசமடைந்துள்ளது என்பதை உணரலாம். நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டுகளில் ஒப்பிடுகையில் எவ்வளவு மீட்டர் குறைந்துள்ளது என்ற விவரம்:

மாவட்டம்                 2016    2017

திருநெல்வேலி       2.92    9.43

ஈரோடு                       7.55    13.19

தர்மபுரி                       5.67    11.04

தேனி                           8.57    13.31

சேலம்                         9.05    14.25

மதுரை                        6.20    10.34

கோவை                     12.81   17.40

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்தாறு மீட்டர் நிலத்தடி நீர் மட்டம் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைந்துள்ளது என நீர்வள ஆதார ஆய்வு மையம் தரும் அறிக்கை குறிப்பிடுகிறது.

ஐ.நா.வின் அறிக்கையோ வேறு விதமாகப் பயமுறுத்துகிறது.

2050ஆம் ஆண்டு வாக்கில் 50 கோடி மக்கள் நீராதாரம் இன்றி பாதிக்கப்படுவார்கள் என்று 1995ல் கணித்த ஐ.நா. அடுத்த பத்தாண்டில் தனது கணிப்பை மாற்றிக் கொண்டது. ஆம்! இந்தக் கணிப்பை 2005ல் ஐ.நா. மறு ஆய்வுக்கு உட்படுத்தி 50 கோடி மக்கள் என்ற எண்ணிக்கையை 400 கோடியாக மாற்றியுள்ளது. தற்போதைய ஆண்டில் ஐ.நா.வின் கணக்கில் எவ்வளவு கோடிகள் அதிகரித்துள்ளது என்று தெரியவில்லை.

இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் மைய காரணம் எது என்றால் நம் நாட்டில் நீரின் அளவு மட்டும் அல்ல நீர் மேலாண்மையும் அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது என்பதே!

நாட்டின் விடுதலைக்கு முன் அதாவது 1947ல் அன்றைய சென்னை மாகாணமான இன்றைய தமிழக நிலப்பரப்பில் மட்டும் 50,000 நீர் நிலைகள் இருந்தன. இன்றைக்கு பாதிக்கும் குறைவாக 20,000 நீர் நிலைகள் இருப்பதாகப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

நீர் மேலாண்மை என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான ஒன்று.

நீரின்றி அமையாது உலகு என்பார்கள். உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் உணவு இல்லாமல் கூட பெருமளவு காலத்தைக் கழித்து விடக் கூடும். (உணவு தயாரிக்கவும் தண்ணீர் தேவை) ஆனால் தண்ணீர் இல்லாமல் காலம் தள்ளுவது கற்பனை செய்ய முடியாத ஒன்று.

இவ்வளவு அத்தியாவசியத் தண்ணீரை நிர்வாகம் செய்யும் முறைகளில் குறைபாடு ஏற்பட்டால் அது மனித வாழ்வை அதிகம் பாதிக்கும் என்பதைச் சொல்லிப் புரிய வேண்டியதில்லை. தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே இன்று அது தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

நம்நாட்டு வரைபடத்தில் பல ஆறுகள் இருந்த போதிலும் அவற்றில் தண்ணீர் இல்லாதது கவலை அளிக்கிறது என ஊர் சுற்றும் பிரதமர் மோடி வெற்று அறிக்கை விடுவதோடு சரி! அதற்கான தீர்வு என்ன? என்று ஆக்கப்பூர்வ நீர் மேலாண்மை நடவடிக்கையில் களமிறங்குவதில்லை.

மழை நீரைச் சேமிக்கவும், இருக்கும் நீரைப் பாதுகாக்கவும் எந்தத் திட்டமும் இன்றைய அரசிடம் இல்லை. நிலைமையைச் சீர் செய்வதற்கு மாற்றமாக இன்னும் மோசமாக்கும் வகையில் ஆற்று நீரை அயல் நாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் திட்டங்கள் தாம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவர்களும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து விட்டு, தரையை மட்டும் மிச்சம் வைத்துச் செல்கின்றார்கள். அந்தத் தரையிலுள்ள மண்ணையும் நம்மூர் ஆள்கள் விட்டுவைப்பதில்லை.

அள்ளிச் சென்று பள்ளம் ஆக்கி விற்றுத் தீர்த்து விடுகிறார்கள். இவர்களால் எச்சில் இலைகளாக்கப்பட்ட ஆற்றிடங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் கூறு போட்டு விற்பனை செய்யும் கொடுமை சொல்லி மாளாத தனிக்கதை. அணைகள், ஏரிகள் மட்டும் தண்ணீரின்றி பல்லிளிக்கவில்லை. அத்துடன் அரசின் நீர் மேலாண்மையும் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றது என்பதற்கு இவை அழிக்க முடியாத சாட்சியங்கள்.

இதற்கெல்லாம் தீர்வு, தேவை முன்மாதிரியான நீர் மேலாண்மைத் திட்டமாகும்.

1400 ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மை குறித்துப் பல அற்புதமான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்திய பெருமை பெருமகனார் முஹம்மது நபி (ஸல்) அவர்களையே சாரும்.

நீர் மேலாண்மை குறித்து நபிகளார் நவின்றுள்ள போதனைகளை இன்றைய உலகம் செவிதாழ்த்திக் கேட்குமெனில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவதோடு அதனால் விழையும் பல பிரச்சனைகளுக்கும் எளிதாக முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.

இருக்கும் நீரைப் பாதுகாத்திட…

நாட்டில் நிலவும் கடும் வறட்சிக்கு யாரைக் கேட்டாலும் பருவ மழை பொய்த்து விட்டது என்பார்கள். அதெல்லாம் சரிதான். ஏற்கனவே பெய்த மழைகள் மூலம் பெற்ற, ஆறு, குளம், குட்டைகளில் இருக்கும் நீரைப் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பதில் இவர்கள் காட்டும் அக்கறை என்ன?

நீர் பாதுகாப்பு என்பது நீர் மேலாண்மையில் முக்கியப் பங்காற்றும் அம்சமாகும். இதோ நீரைப் பாதுகாத்திட நபிகளார் வழங்கிய நற்போதனைகளைப் பாரர்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தேங்கி நிற்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.

நூல்: முஸ்லிம்-474 

இச்செய்தியின் வாயிலாக மக்கள் பயன்படுத்தும் தண்ணீரை அசுத்தப்படுத்தக் கூடாது என்று கூறி, தண்ணீரைப் பாதுகாக்க நபிகளார் வலியுறுத்துகிறார்கள்.

தேங்கி நிற்கும் தண்ணீர் என்று வந்துள்ளதால் ஓடும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தலாம் என்று பொருளாகாது. பொதுவாகத் தேங்கி நிற்கும் தண்ணீரை இலகுவாக சிறுநீர் கழிப்பதற்குரிய இடமாக மக்கள் தேர்வு செய்து விடுவர். அதனால் இங்கு இது குறிப்பிடப்படுகிறதே ஒழிய ஆறுகளில் மலஜலம் கழிக்கலாம் என்ற அர்த்தத்தில் அல்ல.

ஆற்று நீர் மக்களின் குடிநீராக, குளிநீராக என்று பல வகைகளில் பயன்படுவதால் அதை அசுத்தப்படுத்தும் காரியத்தில் ஈடுபடக்கூடாது. சுருக்குப்பை அளவு தண்ணீராக இருந்தாலும் அதையும் பாதுகாப்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என்பது தான் நபிகளார் முன்வைக்கும் நீர் மேலாண்மைத் திட்டமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் உறங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும், பானத்தையும் மூடிவையுங்கள்’’ என்று சொன்னார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: புகாரி-5624 

மாசடையாமல் தண்ணீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நபிகளாரின் போதனை பின்பற்றப்பட்டால்  எவ்வளவு தண்ணீர் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சேமிக்கப்படும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்றைக்கு பெரும்பாலான ஆறு, குளம் போன்றவைகளில் சாக்கடை, கழிவுநீர் ஆகியவை கலக்கும் வண்ணம் அமைந்திருக்கின்றது. கழிவு நீர்ப் பாதை அமைக்கும் செலவினங்களைக் கவனத்தில் கொண்டு அரசு நிர்வாகமே இந்த வேலையைச் செய்கின்றது.

பல்வேறு ஆலை நிறுவனங்களின் ரசாயனம் கலந்த கழிவு நீர் ஆறு, குளம் போன்றவைகளில் கலப்பதால் அந்நீரைப் பயன்படுத்துவது தடுக்கப் படுவதோடு மக்களுக்குப் பெரிய அளவிளான உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதுபோக இத்தகைய கழிவுகளை பாதாள சாக்கடை வழியாக உரிய இடங்களில் செலுத்தாமல் பூமியின் மேற்பரப்பிலும் திறந்த வெளி சாக்கடையிலும் விட்டு விடும் போது சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் மாசடைகிறது.

இப்படி கண்ணுக்குத் தெரியும் நீரையும், கண்ணுக்குத் தெரியாத நிலத்தடி நீரையும் மாசுபடுத்துவது தான் சிறந்த நீர்மேலாண்மையா? கங்கை நதியை எடுத்துக் கொண்டால் பல மூடநம்பிக்கையினால் அது அசுத்தப் படுத்தப்படுகிறது.

கங்கையில் எரியூட்டப்பட்டால் மறுபிறவியிலிருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான உடல்கள் அங்கே எரியூட்டப்படுகின்றன. பிணங்கள் எறியப்படுகின்றன. இச்செயல்களினால் உலகிலேயே அதிக மாசடைந்த நதிகளில் ஒன்றாக கங்கை நதி பெயர் பெற்றிருப்பது அது எவ்வளவு அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு.

தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் இந்தியா போன்ற நாட்டில் நதிகளை, நீர் நிலைகளை இப்படி அசுத்தப்படுத்த விடலாமா?

சுருக்குப்பை அளவு தண்ணீராக இருந்தாலும் அதை மாசடையாமல் பாதுகாத்திட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் என்ற நபிகளாரின் போதனை தண்ணீருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்து விடுகிறது.

சென்னை வெள்ளம் ஏன்?

கையளவு தண்ணீரை எதையாவது கொண்டு மூடி பாதுகாத்து விடலாம். ஆனால் ஆறு, குளம், அணைகள் போன்றவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் செய்வதைப் போன்று தெர்மாகோல் கொண்டு மூடி பாதுகாத்திட முடியாது. அதற்கான வழி தூர்வாருவதாகும். தூர்வாருவது தண்ணீரைப் பாதுகாப்பது மட்டுமல்ல வெள்ளம் போன்ற சந்தர்ப்பங்களில் மக்களைக் காக்கும் வழிமுறையும் கூட!

சென்னையில் வெள்ளம் எப்படி ஏற்பட்டது? வரலாறு காணாத மழை பெய்ததால் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது என்பார்கள். அது உண்மையோ பொய்யோ அதை விடப் பேருண்மை வடிகால்கள், நீர்வழித்தடங்கள் சரியாக தூர்வாரப்படாமல் இருந்ததும் அணைகள், ஏரிகள் சரிவர பேணப்படாமல் இருந்ததுமே சென்னை பெருவெள்ளத்துக்குக் காரணம் என்பதாகும்.

ஏரி, குளங்களின் நீர்வழித்தடங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு தூர்வாரப்பட்டிருந்தால் அதிக மழை பெய்தாலும் தண்ணீர் செல்வதற்கான போக்கிடம் கிடைக்கப் பெற்றிருக்கும்.

கிளைகள் – கசடுகளால் நீர்வழித்தடங்கள் நிரம்பியதால் உரிய இடங்களுக்குத் தண்ணீர் செல்வது தடுக்கப்பட்டு, ஊருக்குள் தண்ணீர் புகும்படி ஆகிவிட்டது. இன்னும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடக்கும் அணைகள், ஆறு, குளம் குட்டைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காதவையாக உள்ளன.

காவிரி நீரைச் சேமிக்­கப் புதிதாக 400 ஏரி, குளங்களைக் கர்­நா­டக அரசு ஏற்­படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஏரிகள் 13,779-ல் 54% ஏரிகள் இன்னமும் தூர் வாரப்படாமல் இருக்கின்றனவாம். அதுமட்டுமா? மேட்டூர் அணையைத் தூர் வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. உலக வங்கி இதற்கென பல கோடிகள் தமிழகத்திற்குக் கடன் வழங்கியும் நிலைமை சீர் செய்யப்படவில்லை என்பது கசப்பான உண்மை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் நற்செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதை, அவர்களின் நற்செயல்களி(ன் பட்டியலி)ல் கண்டேன். பள்ளி வாசலில் (உமிழ்ந்து) மண்ணுக்குள் புதைக்கப் படாமல் இருக்கும் சளியை, அவர்களின் தீய செயல்களில் கண்டேன்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: முஸ்லிம்-959 

வழித்தடங்களில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதை சிறந்த நற்காரியமாக அண்ணல் நபியவர்கள் எடுத்துரைக்கின்றார்கள்.

இந்தச் சிறப்புமிக்க நன்மை, நீரோட்டங்கள் செல்லும் வழித்தடங்களை தூர்வாருவதையும் குறிக்கும். அரசாங்கத்தால் தான் இதைச் செய்ய முடியும். முஹம்மது நபியின் இந்த போதனை அதிகாரிகளால் பின்பற்றப்பட்டால் நீர் மேலாண்மையில் சிறந்த நிலையை எளிதாக எட்டி விடலாம்.

விற்காதே – தடுக்காதே

இன்றைக்குத் தண்ணீரை மையப்படுத்தி ஒரு நாட்டில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் தண்ணீரைப் பங்கிடுவதில் தான் சூழ்ந்துள்ளது. அருகருகே அமைந்திருந்தும் கூட கேரளம் தமிழத்திற்குத் தண்ணீர் தர மறுக்கிறது.

கர்நாடகமும்  தன் பயன்பாட்டுக்குப் போக மேலதிக தண்ணீரை தன் அண்டை மாநிலமான தமிழகத்திற்குத் தராமல் மல்லுக்கட்டுகிறது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தண்ணீர் வழங்க மனிதாபிமானம் இருந்தாலே போதும். நதிநீர் பகிர்வு திட்டம் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலம் மேலதிகத் தண்ணீரைப் பெறுவதற்கு பல சட்டங்கள், திட்டங்கள் இருந்தும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வந்த பின்னும் தண்ணீர் தர மறுப்பவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

ஒரு அரசு இயந்திரத்தை மீறி தன் அண்டை மாநிலத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் மாநில அரசுகளை மத்திய அரசு கண்டு கொள்ளாததன் பின்னணியில் பல அரசியல்.

இன்றைக்கு தண்ணீர் மக்கள் தாகம் தீர்க்கும் குடிபானம் என்பது மாறி அரசியல்வாதிகளின் வெறி தீர்க்கும் அரசியல் பொருளாக மாறிப்போயுள்ளது.

இந்தப் பிரச்சனைக்கு நபிகள் நாயகம் தீர்வளிக்கின்றார்கள்.

தண்ணீரைப் பங்கிடுவது பற்றி நபிகளார் முன்வைக்கும் முத்தான அறிவுரைகள் இரண்டு உள்ளது.

தேவை போகவுள்ள தண்ணீரை விற்காதே!

தேவை போகவுள்ள தண்ணீரை தடுக்காதே!

இவையிரண்டும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படத் தகுந்த, எக்காலத்திலும் மனித சமுதாயத்திற்குத் தேவையான அறிவுரையாகும்.

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை விற்பது கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம்-3186 (2925)

தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி-2353 , 2354, 6962

தனிநபரோ, குழுவோ யாராக இருந்தாலும் தனக்குத் தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு மிதமிஞ்சிய தண்ணீரை யாருக்கும் விற்கக் கூடாது, அதாவது இலவசமாக வழங்கி விட வேண்டும். அதேவேளை மேலதிகத் தண்ணீரை உனக்குத் தரமாட்டேன் என்று யாருக்கும் தண்ணீரைச் செல்லவிடாமல் தடுக்கக் கூடாது. தன் பயன்பாட்டுக்குப் போகவுள்ளதை பிறர் பயன்பாட்டுக்குச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இது நபிகளார் முன்வைக்கும் நீர் பங்கீட்டு திட்டமாகும்.

நபிகளார் நவின்றபடி மேலதிகத் தண்ணீரை தடுக்கவோ விற்பனை செய்யவோ கூடாது என்ற அறிவுரையை எந்த அரசு கடைப்பிடிக்குமோ அங்கே தண்ணீர் அரசியலுக்கு இடமிருக்காது. மாநிலங்களுக்கான சண்டைகளுக்கு முடிவு கட்டப்படும்.

நமது நாட்டில் தண்ணீருக்காக சண்டை போடுவதைப் போன்று அரபு நாடுகளுக்கிடையே தண்ணீர் சண்டை இருப்பதை நாம் எந்தப் பத்திரிக்கையிலும் படிக்க இயலாததற்கு காரணம் நபிகளாரின் இந்தத் தீர்வு தான்.

தண்ணீர் பிரச்சனைக்கு முஹம்மது நபியிடம் தீர்வு உண்டு. செவி சாய்ப்போர் உண்டா?