Tamil Bayan Points

நபிகளாரின் வாழ்வினிலே…

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

Last Updated on May 30, 2021 by

நபிகளாரின் வாழ்வினிலே…

நமது குடும்பத்திலுள்ள சாதாரணப் பெண்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதுபோன்று தான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் நடந்துள்ளார்கள். கோபப்பட்டுள்ளார்கள்; சந்தேகப்பட்டுள்ளார்கள்; சண்டையிட்டுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நாம் இங்கு சுட்டிக் காட்டுவதன் மூலம் குடும்ப வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எப்படி சமாளிக்க வேண்டும் என்ற பாடத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட இருவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர்” என்று பதிலளித்தார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் உங்கள் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை” என்று சொன்னேன்.

அப்போது “(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறிய உமர் (ரலி) அவர்கள், பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள்: “அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தொடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரியதை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)

(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்த போது என் மனைவி, “நீங்கள் இப்படிச் செய்யலாமே” என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், “உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?” என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், “கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சர்யப்படுகிறேன்.

உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதித்ததால் அன்றைய நாள் முழுக்க அல்லாஹ்வின் தூதர் கோபமாக இருந்தார்கள்” என்று சொன்னார். உடனே நான் எழுந்து, அதே இடத்தில் எனது மேலங்கியை எடுத்துக் கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, “என் அருமை மகளே! நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)” என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு” என்றார்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் தண்டனையையும்  அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை (ஆயிஷாவை)ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே!” என்று (அறிவுரை) சொன்னேன். பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, நபி (ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரானன உம்மு சலமாவிடம் (அறிவுரை கூறச்) சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார்.

இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு சலமா, “கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகின்றேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு சலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடிபிடித்து விட்டார்.

எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்து விட்டார். ஆகவே நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து)விட்டேன். மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் நபி (ஸல்) அவர்களது அவையில் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.

(அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) “ஃகஸ்ஸான்” வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால் அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். “திறங்கள், திறங்கள்” என்று சொன்னார். (கதவைத் திறந்த) நான், “ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?” என்று கேட்டேன்.

அதற்கவர், “அதைவிடப் பெரியது  நடந்துவிட்டது; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விலகிவிட்டார்கள்” என்றார். உடனே நான், “ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!” என்று கூறிவிட்டு, எனது உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும்.

அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், “இந்த உமர் பின் கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!” என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களுடைய துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு சலமாவின் பேச்சு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள்.

அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஏன் அழுகிறீர்கள்?” என்றார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும்  இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?”  என்று கேட்டார்கள்.

நூல்: புகாரி-4913

நாம் ஏதேனும் குடும்ப விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும் போது, வீட்டுப் பெண்கள் ஏதாவது ஒரு கருத்தைச் சொன்னால், உடனே சண்டையிடும் ஆண்களைத் தான் நடைமுறையில் பார்க்கிறோம். ஆனால் நபியவர்கள் அதை அனுமதிக்கிறார்கள். ஆண்கள் பேசும் போது பெண்களுக்கு என்ன வேலை? என்றெல்லாம் ஆண்கள் கேட்பதைப் பார்க்கிறோம். ஆண்கள் பேசும் போது பெண்கள் பேசினால் என்ன தவறு இருக்கிறது? பேசுகிற விசயம் தவறா? சரியா? என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர மற்றபடி உரிமையைப் பறித்துவிடக் கூடாது. இதை நபிகளாரின் வாழ்வில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸாமு அலைக்கும்” (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (சற்றே மாற்றி சலாம்) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்துகொண்ட  நான் அவர்களுக்கு “வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்)” என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்களிலும் நளினத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான்” என்று சொன்னார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான்தான் “வஅலைக்கும்” (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்-விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?)” என்று கேட்டார்கள்.

நூல்: புகாரி-6024

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டு விட்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?” என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்” என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்” என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம்-5422

தன்னுடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் மற்ற மனைவியரிடம் சென்று விட்டார்களோ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சந்தேகப்பட்டு, ரோஷம் கொள்வதை இந்த ஹதீஸில் பார்க்கிறோம். எனவே சொர்க்கத்திற்கு நற்செய்தி சொல்லப்பட்ட, அல்லாஹ்வினால் ரலியல்லாஹ் என்று பொருந்திக் கொள்ளப்பட்ட, நமக்கெல்லாம் தாயின் அந்தஸ்தில் இருக்கும் நபியவர்களின் மனைவிமார்கள் கூட சாதாரணப் பெண்கள் எப்படி நடப்பார்களோ அதுபோன்றுதான் நடந்திருக்கிறார்கள்.

அப்படியானால், நம்முடைய வீட்டில் வாழ்கிற பெண்களின் நிலை இன்னும் சாதாரணமாகத்தான் இருக்கும் என்பதில் எந்த வியப்பும் இல்லை. எனவே நிர்வாகம் செய்கிற கணவன்மார்கள் அதை சந்தோஷமாக எடுத்துக் கொண்டு செல்லவேண்டுமே தவிர, அதை வைத்து சண்டை போட்டுக் கொண்டே இருக்கக் கூடாது.

நிர்வாகம் என்பது அடக்குமுறை செய்வதில் கிடையாது என்பதை ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அரவணைக்க வேண்டும். ஒரு குழந்தை செய்யும் தவறுகளை தாய் பொறுத்துக் கொண்டு செல்லமாக எடுத்துக் கொள்வதைப் போன்று கணவன்மார்கள் மனைவியிடம் நடந்துகொள்ள வேண்டும்.

எல்லை மீறாதீர்…

இப்படிப் பெண்களை ஆண்கள் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்வதைப் பெண்களும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. நாம் வேண்டுமென்றே கணவன்மார் களிடத்தில் வம்புச் சண்டை வளர்க்கலாம், இதற்கு ஆயிஷா (ரலி) சம்பவத்தை ஆதாரமாகக் காட்டிக் கொள்ளலாம் என்று பெண்களில் சிலர் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.

பெண்களுக்கு எப்படி இயற்கையான குணம் இருக்கிறதோ அதுபோன்று ஆண்களுக்கென்றே இயற்கையான குணங்களும் இருக்கின்றன. பெண்கள் இப்படிப் பேச ஆரம்பித்தால் பின்னர் ஆண் ஏதாவது தவறைச் செய்துவிட்டு இது எனது இயற்கைக் குணம், நான் எப்படி அதற்குப் பொறுப்பாவேன்? என்று சொல்லிவிடுவான். எனவே இதனை மனதில் வைத்துத்தான் பெண்கள் ஆண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் ஆண்களும் பலதரப் பட்ட நிலையில் இருப்பார்கள். அவர்களுக்கென தனியான குணாதிசயங்களுடன் தான் அல்லாஹ் அவர்களைப் படைத்திருக்கிறான். பொறுமைக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்த பெருமானாருக்கே ஒரு கட்டத்தில் பெண்களிடத்தில் கோபம் வந்துவிடுகிறது. மனைவிமார்கள் செய்கிற சில செயல்களை நபியவர்கள் பொறுத்துக் கொண்டாலும் அளவுக்கு மீறி அவர்கள் நடந்து கொள்ளும் போது நபியவர்கள் கோபப்பட வேண்டியதாயிற்று.

நபியவர்கள் மனைவிமார்களை ஈலா என்ற சட்டத்தின் மூலம் ஒரு மாத காலம் பிரிந்து வாழ்ந்தார்கள். இந்தளவுக்கு நபிகள் நாயகத்திற்கே கோபம் வந்திருக்கின்றது எனும் போது, சாதாரண கணவன்மார்களுக்கு கோபம் மிகக் கடுமையாகத் தான் வரும். எனவே இந்தப் பண்பு ஆண்களிடத்தில் இருக்கும் என்பதையும் சேர்த்தே பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு அணியாகச் செயல்பட்ட நபிகள் நாயகத்தின் மனைவிமார்கள் ஒரே அணியில் ஒன்றுதிரண்டு வந்து, குடும்பச் செலவுக்குக் கூடுதலாகப் பொருளாதாரம் தேவை என்ற கோரிக்கையை வைத்தார்கள். கோரிக்கையாக வைத்திருந்தால் கூட நபியவர்களுக்குக் கோபம் வந்திருக்காது. ஆனால் அவர்களோ தந்துதான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.

கணவரிடம் செலவுக்குப் பற்றாக் குறை எனில் கூடுதலாகக் கேட்கலாம். கணவனிடத்தில் அதற்கான தகுதியிருந்தால் கேட்கலாம். அதாவது கணவனுக்கு மாதச் சம்பளம் 5 ஆயிரம் எனில் 8 ஆயிரம் ரூபாய்க்கு மனைவி பட்ஜெட் போட்டால் அந்தக் கணவனால் நிச்சயம் தரமுடியாது. இப்படிப்பட்ட நிலையில் மனைவி கணவரிடம் கூட்டித் தா என்று கேட்கக் கூடாது. 5 ஆயிரம் சம்பளத்தில் தாய் தந்தையருக்கும், மருத்துவச் செலவுக்கும், சகோதர சகோதரி களுக்கும் கொடுப்பான்.

இன்னும் பல விஷயங்களுக்கு அந்த ரூபாயைத் தான் பயன்படுத்திட வேண்டும். எனவே அனைத்துக் காசையும் என்னிடத்திலேயே கொடுத்துவிடு என்றெல்லாம் மனைவிமார்கள் கணவனை வற்புறுத்தக் கூடாது. கணவனின் வரவுக்குத் தகுந்த மாதிரி சரியாக நடந்து கொள்பவளே சிறந்த மனைவியாக இருப்பாள். கணவரின் வருமானத்தை விட அதிகமான பொருளாதாரத்தை மனைவிமார்கள் கேட்டால் நிச்சயம் அவர்களால் முடியாது.

எப்போது முடியாது என்று வருகிறதோ அதற்குத் தகுந்த மாதிரி தனது முடிவை மனிதன் மாற்றிக் கொள்வான். நபிகளாரைச் சுற்றி அனைத்து மனைவிமார்களும் அமர்ந்திருக்க, வீடே நிசப்தமாகக் காட்சியளிக்க அபூபக்கரும், உமரும் நபிகளாரின் வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். கோபத்தின் விளைவு நபிகளாரின் முகத்தில் காட்டிக் கொண்டிருக்கிறது. என்ன பிரச்சனை என்று தீர்க்கமாகத் தெரியாவிட்டாலும் உமரும் அபூபக்கரும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அந்த இக்கட்டான நிலையிலிருந்து நபியவர்களை வேறு நிலைக்கு கொண்டு வருவதற்காக நபிக்கு சிரிப்புக் காட்டும் வகையில் உமர் (ரலி) பேசுகிறார்கள்.

சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பேச்சை ஆரம்பிக்கிறார்கள் உமர் (ரலி). “எனது மனைவி என்னிடம் செலவுக்கு அதிகமாகப் பணம் கேட்டால் கழுத்தை நெறித்து விடுவேன்’ என்கிறார். உமர் எதிர்பார்த்தபடியே ரசூலுல்லாஹ் அவர்களும் சிரித்து விடுகிறார்கள். “உமரே! தாங்கள் சொல்வதுதான் தற்போது இங்கே நடந்து கொண்டிருக்கிறது’ என்றார்கள் நபியவர்கள். அப்போது தான் இறைவன் வசனத்தை இறக்குகிறான்.

இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன் என்று நபியே (முஹம்மதே!) உமது மனைவியரிடம் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன்:33:28, 29.)

எல்லோரைப் போன்றும் சொகுசாக வாழ வேண்டும், எல்லோரைப் போன்றும் நகை நட்டுக்கள், அணிகலன்கள் அணியவேண்டும் என்பது போன்று நினைப்பீர்களானால் எல்லோரும் என்னிடமிருந்து அழகிய முறையில் விவாகரத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

அதிகமான நெருக்கடியை நபியவர்களது மனைவிமார்கள் அவர்களுக்குக் கொடுத்துள்ளார்கள் என்பதை இதிருந்து நம்மால் விளங்கிக் கொள்ளமுடிகிறது. எனவே மறுமை வேண்டும் என்றால் என்னுடன் இருங்கள். உலகம்தான் பெரிது என்றால் அழகிய முறையில் கணக்கை முடித்துக் கொள்வோம் என்று நபியைச் சொல்லச் சொல்கிறான் இறைவன். இது நபியின் தீர்ப்பல்ல. இறைவனின் தீர்ப்பு.

இப்படி இறைவன் சொன்னதும் அனைத்து மனைவிமார்களுக்கும் ஒன்றும் பேசமுடியாமல் ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் தமது மகள் ஆயிஷாவின் கழுத்தை நெறித்துக் கொண்டு, கடுமையாக ஆயிஷாவைத் திட்டுகிறார்கள். அதுபோன்றே உமர் (ரலி) அவர்களும் தமது மகள் ஹப்ஸாவின் கழுத்தை நெறிக்க ஓடுகிறார். நபியவர்களின் வாழ்வில் இப்படி யொரு சம்பவமும் நடந்துள்ளது.

எனவே மனைவிமார்களுக்குச் சாதகமான ஹதீஸ்கள் நிறைய இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, கணவனை எடுத்தெறிந்து பேசலாம், அளவுக்கு அதிகமாக நெருக்கடியை ஏற்படுத்தலாம், எதற்கெடுத்தாலும் சண்டையிடலாம் என்று செயல்பட்டால் அப்போது நபியவர்கள் அளவுக்கு கோபப்படுகிற ஆண்களும் நம்மில் இருக்கலாம். அபூபக்கர் அளவுக்கும், உமர்  அளவுக்கும் கோபப்படுகிற ஆண்களும் நம்மில் இருக்கலாம். இப்படி ஆண்கள் பலமாதிரி இருப்பார்கள் என்பதையும் கவனித்துத் தான் செயல்பட வேண்டும்.

நாமும் அளவோடு தான் கணவனிடத்தில் நடந்து கொள்ள வேண்டும் என்று முன்னால் கூறப்பட்ட செய்திகளின் நிலையை மனைவிமார்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பெண்களுக்கு இறைவன் செயல்திட்டங்களை வைத்து படைத்திருப்பதைப் போன்று ஆண்களுக்கும் சில தனித்துவம் மிக்க செயல்திட்டங்களை வைத்துத் தான் படைத்திருக்கிறான் என்பதைப் பெண்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆக குடும்ப வாழ்க்கை என்பது இருதரப்பு அனுசரணையில் தான் சுழலும் என்பதைப் புரிய வேண்டும்.

கணவனுக்கு மார்க்கம் எல்லை வகுத்திருப்பதைப் போன்று மனைவிமார்களுக்கும் இறைவன் எல்லையை வகுத்து வைத்துள்ளான் என்பதையும் சேர்த்து விளங்குகிற தம்பதிகள்தான் சரியாக குடும்பத்தை இயக்கமுடியும் என்ப துதான் இஸ்லாமிய குடும்பவியல்.

இன்னும் சொல்லப் போனால், மக்காவிலிருந்து நபிகள் நாயகம் அவர்களும், ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருகிறார்கள். மக்காவிலுள்ள குடும்ப அமைப்பிற்கும், மதீனாவிலுள்ள குடும்ப அமைப் பிற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருந்தன. மக்காவிலுள்ள குடும்ப அமைப்பில் பெண்களுக்கு பெரிய அளவுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண்கள் என்றாலேயே அடி உதைக்கு ஆளாக வேண்டியிருந்தது. மக்காவிலுள்ள ஆண்களின் நிலையும் அப்படித்தான். எதற்கெடுத்தாலும் அடிஉதை, வெட்டு குத்து என்றுதான் இருந்தார்கள். இதுதான் மக்காவிலுள்ளவர்களின் தன்மை.

மதீனாவைப் பொறுத்த வரை, ராஜ்ஜியமே பெண்கள் ராஜ்ஜியம்தான். மதிக்கிறோம் என்ற பெயரில் பெண்கள் சொல்வதை ஆண்கள் அப்படியே கேட்பார்கள். ஆனால் இஸ்லாம் என்ற மார்க்கம் இரண்டுக்கும் நடுவில் அமைந்துள்ளது. மக்காவாசிகள் போன்று எதற்கெடுத்தாலும் அடி, உதை, மிரட்டல் என்பதும் தவறு. அதேபோன்று மனைவிமார்கள் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று மதீனாவாசிகள் போனதும் தவறு. மக்காவாசிகள் அறவே பெண் களின் உரிமையை பறித்தனர். மதீனாவாசிகள் பெண்கள் தான் ஆண்கள் போன்று ஆகிவிட்டிருந் தனர். இதைப் பின்வரும் சம்பவத்தில்  உமர் (ரலி) அவர்கள் கூறுவதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபியவர்கள் பெண்களை அடிக்காதீர்கள் என்று கட்டளை யிட்டிருந்தார்கள். இந்நிலையில், உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து, பெண்கள் கணவன்மார்களை எதிர்த்துப் பேசுகிறார்கள். எல்லா விஷயத்திலும் எல்லை மீறுகிறார்கள் என்று முறையிட்டதும், நபியவர்கள் பெண்களை இலேசாக அடித்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கினார்கள். (மனைவிமார்களை அடிப்பதற்கு அனுமதி வழங்கிய பிறகு) நபியவர்களின் வீட்டிற்கு அதிகமான பெண்கள் வந்து, கணவன்மார்கள் தங்களை அடிப் பதாகப் புகார் செய்தனர். உடனே நபியவர்கள், அதிமான பெண்கள் தங்களது கணவன்மார்கள் அடிப் பதாகப் புகார் கூறினார்கள். எனவே உங்களில் தனது மனைவியை அடிப்பவர் சிறந்தவரில்லை என்று சட்டம் சொன்னார்கள்.

(பார்க்க: அபூதாவூத் 1834, சுனனுத் தாரமீ 2122)

வலிக்காத அளவுக்கு அடிப்பதற்கு அனுமதி வழங்கிய அடுத்தடுத்த நாட்களிலேயே, கணவன்மார்கள் அடிக்கிறார்கள் என நபியவர்களிடம் அதிகமான பெண்கள் புகார் அளித்தனர். அதன் பிறகு, நபியவர்கள் ஆண்களைக் கண்டிக்கிறார்கள். உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவிமார்களிடத்தில் சிறந்தவரே என்று கூறினார்கள்.

உங்களது குடும்பத்தினரில் (மனைவியிடத்தில்) சிறந்தவரே உங்களில் சிறந்தவர், நான் எனது குடும்பத்தில் (மனைவியிடத்தில்) சிறந்தவன் என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: திர்மிதீ-3830

இந்த ஆதாரங்கள் எதைக் காட்டுகிறது எனில், உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகையில் இருப்பார்கள். பலதரப்பட்ட குணாதிசயங்கள் உடையவர்களாக ஆண்களோ பெண்களோ இறை வனால் படைக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே முள் மீது போடப்பட்ட சேலைத் துணியைப் போன்று குடும்ப உறவுகளை, கணவன் மனைவி உறவுகளைப் பேணிக் கொள்ள வேண்டும்.

அதாவது முள் மேல் கிடக்கின்ற சேலைத்துணி கிழிந்துவிடாமல் பக்குமாக எடுப்பதைப் போன்று பக்குமாக உறவை வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களிடம் எல்லை தாண்டி நடந்து கொண்டால் குடும்ப உறவு முறிந்துவிடும் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று நாம் கொடுக்கும் தொந்தரவுகளை ஓரளவுக்குத்தான் ஆண்கள் சகித்துக் கொள்வார்கள், அளவுக்கு மீறி தொந்தரவு கொடுப்பதை எந்த ஆண்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் சேர்த்தே பெண்களும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஆக கணவன், மனைவி என்ற இரு தரப்பும் ஒருவரை ஒருவர் மன்னித்து, ஒருவர் உணர்வை மற்றவர் புரிந்து குடும்ப வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும்.