Tamil Bayan Points

4) நடைமுறைப்படுத்தப்படும் சமத்துவம்

நூல்கள்: மனிதனுக்கேற்ற மார்க்கம்

Last Updated on December 12, 2019 by

இப்படி ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை வந்து விட்டால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாடுகள் இந்த உலகத்தில் இல்லாது அழிந்து ஒழிந்து போய்விடும்.

கேட்பதற்கு இனிமையான, நடைமுறைப்படுத்த முடியாத வறட்டு தத்துவம் என்று இதை நினைத்து விடக் கூடாது.

இந்தக் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொண்டால் அவனுடைய ஜாதி, கோத்திரம், பூர்வீகம் என்ன என்பதை முஸ்லிம்கள் கவனிக்கவே மாட்டார்கள். அவனை ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய சகோதரன் என்று கருதி கண்ணியமாக நடந்து கொள்வதைப் பரவலாகக் காணலாம்.

எவ்வளவு பெரிய மதகுருவானாலும், செல்வந்தரானாலும், செல்வாக்கு மிக்கவர்களானாலும் பள்ளிவாசல்களில் அவர்களுக்குப் பரிவட்டம் கட்டப்படுவதில்லை. முதல் மரியாதை செய்யப்படுவதில்லை. எந்த வரவேற்பும் அளிக்கப்படுவதில்லை. இன்னும் சொல்வதானால் அவர்கள் பிரத்தியோகமாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.

பள்ளிவாசல்களுக்கு யார் முதலில் தொழ வருகின்றாரோ அவர் தான் முதல் அணியில் நிற்க முடியும். பின்னால் வந்தால் நாட்டின் ஜனாதிபதியே ஆனாலும் அவர் பின் வரிசையில் தான் நிற்க வேண்டும்.

வருவது ஜனாதிபதியாயிற்றே என்று மக்களும் நினைக்க மாட்டார்கள். அந்த ஜனாதிபதியும் நினைக்க மாட்டார். நான் ஜனாதிபதி என்னை முதல் வரிசையில் நிறுத்துங்கள் என்று அவரும் கேட்க முடியாது. அப்படிக் கேட்டால் வெளியே போ என்று சொல்லும் அளவிற்கு இந்தச் சமுதாயம் தெளிவாக இருக்கிறது.

இந்தத் தெளிவைக் கொடுத்தது எது?

அவர்களை இப்படி உருவாக்கியது எது?

எவனுக்கும் தலை வணங்காமல் எல்லோரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்கும் பக்குவத்தை ஏற்படுத்தியது எது?

லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை – என்ற கொள்கை தான் அவர்களை இப்படி மாற்றியது.